அற்புதருக்கு வாகனங்கள் ஓட்டப் பிடிக்கும். கரடுமுரடான சாலைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் அடிக்கடி பயணம் செய்யும் முரட்டு சாலையொன்றில் ஒருநாள் ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது.." ஆட்கள் வேலை செய்கிறார்கள்"என்று.அந்தப்பலகையைப் பார்த்ததும் அற்புதரின் இதழ்களில் குறுநகை அரும்பியது.
அடுத்த சில மாதங்களில் கண்ணாடிபோல் வழுக்கிக் கொண்டு போன அதே சாலையில் அற்புதர் வெகுவேகமாக சென்று கொண்டிருந்தார். அந்த நெடுஞ்சாலையில் அவருடைய விரல்கள் மானசீகமாய் ஒரு வரியை எழுதிப் பார்த்தன," ஆட்கள் வேலை செய்தார்கள்".
சிறிது தொலைவிலேயே இன்னொரு சாலை தெரிந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவு குண்டும் குழியுமாய் இருந்த சாலையைக் கண்ட அற்புதரின் இதழ்களில் மீண்டும் முறுவல் மலர்ந்தது. இப்போது மற்றொரு வரியை அவருடைய விரல்கள் மானசீகமாய் எழுதிப் பார்த்தன, "ஆட்கள் வேலை செய்வார்கள்".
அன்றிரவு அற்புதர் தன் நாட்குறிப்பில் எழுதினார். "கரடுமுரடான பாதைகள் சரிசெய்யப்பட வேண்டியவை. யாரோ என்றோ வேலை செய்வார்கள். எல்லா சாலைகளும் சரியாகும். வேலைசெய்யும் விருப்பம் இருப்பின் வாழ்க்கைப்பாதை நேராகும். நீங்களாக செய்ய முடியாவிட்டால் வேலை செய்ய வருபவரை செய்ய அனுமதியுங்கள். உங்கள் வாழ்வை நேர்ப்படுத்தவே ஞானிகள் காலங்காலமாய் வேலை செய்கிறார்கள்.
உங்கள் பாதையின் குழிகளை மூடி சமன்செய்வதுபோல் உங்கள் மனதின் கோணல்களை நேர் செய்யுங்கள். வாழ்வில் நேர்ந்த வலிகளை யாரோ தந்த விருதுபோல் பொத்தி வைக்காதீர்கள். சாலை மோசமாக ஆக விரைந்து சீர்செய்யும் விவேகம் இருப்பவர்களே!வாழ்க்கை மோசமாக ஆக விரைந்து விழித்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களால் முடியாதென்றால் கண்மூடிக் கேளுங்கள். உள்ளுக்குள் தேடுங்கள்.அறிவிப்புப் பலகை இல்லாமலேயே ஆட்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள்" என்றெழுதினார் அற்புதர்.
எழுதுகோலைக் கீழே வைத்த அற்புதரின் கண்களில் எழுதி முடித்த களைப்பல்ல...எத்தனையோ சாலைகளில் வேலை செய்யும் களைப்பு!!