இப்படித்தான் உலகத்தமிழ் மாநாட்டின்போது எம்.ஜி.ஆர்.தனித்தமிழ் ஆர்வலர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். அவருக்கு தமிழறிஞர்களுடன் நெருங்கிய தொடர்பும் பற்றும் இருந்தது.
சில தமிழ்ச்சொற்களைப்பற்றி அவர் வேடிக்கையாகக் கேட்டதையும்
அதற்கு முதல்வர் மனம் புண்படாமல் தான் விடைதந்த விதம் குறித்தும்
அவ்வை நடராசன் அவர்கள் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஓட்டுநரை "காரோட்டி"என்று சொல்வதை எம்.ஜி.ஆர். ஒருமுறை கிண்டல்
செய்தாராம்."அது என்ன காரோட்டி கா..ரோட்டி" என்று கேலி செய்ய உடனே அவ்வை நடராசன்,"எனக்கென்னங்க தெரியும்? எனக்கு படகோட்டிதான் தெரியும்" என்று சொல்ல, ஒருகணம் திகைத்த எம்.ஜி.ஆர்,
வெடித்துச் சிரித்திருக்கிறார்.
அவர் முதல்வராக இருந்த காலத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாவதில் காட்டிய அக்கறை,பாரதியார் நூற்றாண்டு கொண்டாடிய
விதம் இவையெல்லாம் மொழி ஆர்வலர்களின் மனங்களில் அவர்மீது
மிகுந்த மதிப்பை ஏற்படுத்தின.
மொழியுணர்வும் இனவுணர்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.
ஆட்சியாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆர்.மொழிக்கொள்கையில் காட்டிய
உறுதி குறித்தெல்லாம் அரசியல் உலகில் ஆழமாய் அகலமாய் விவாதங்கள் நடந்துள்ளன. இந்தி எதிர்ப்பில் தமிழகத்தில் எழுந்த
கொந்தளிப்பின் பின்னால் இருந்த உணர்ச்சு மதிப்பளித்த எம்.ஜி.ஆர்.
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் எடுத்த நிலைப்பாடுகளையும்
தமிழகம் நன்கறியும்.
சமீபத்தில் "நாடாளுமன்றத்தில் வைகோ"என்ற நூலைப் படித்தபோது,
முதலமைச்சராக இருந்தபடி எம்.ஜி.ஆர்.எடுத்த ஒரு முக்கிய நிலைப்பாட்டை நூலாசிரியர் திரு.மு.செந்திலதிபன் மிக செறிவாகப்
பதிவு செய்திருப்பதைப் பார்த்தேன்.
இராமேஸ்வரத்திலிருந்து ஈழத்திற்கு ஆயிரம் இளைஞர்களுடன் படகில்
செல்லப்போவதாய் திரு.பழ.நெடுமாறன் அறிவித்தார். அவர் புறப்படும்
இடத்தில் கைதாவார் என்றும் இராமேஸ்வரத்தில் கைதாவார் என்றும்
வதந்திகள் உலவின. இராமேஸ்வரம் கடற்கரைக்கு நெடுமாறன் குழுவினர்
சென்று நின்றபோது கரையில் ஒரு படகைக்கூட காணோம். போராட்டக்
குழுவினர் திரும்ப நேர்ந்தது.
இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தபோது எம்.ஜி.ஆர் தந்த
பதில் இது: " அன்னை இந்திராகாந்திக்கு ஓர் ஆபத்து நேர்ந்தபோது,
அவர் உயிரைக் காத்தவர் மாவீரர் நெடுமாறன்.ஆனால் கடலில் போகும்
வேளையில் அவர் உயிருக்குப் பாதுகாப்பு உண்டா?எதிரிகள் வந்து சுட்டால் அவரால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியுமா? ஒரு நெடுமாறனை இழந்தால் இன்னொரு நெடுமாறனை உருவாக்க முடியுமா?
அதனால்தான் படகுகளை அப்புறப்படுத்தச் சொன்னேன்.
ஆனால் மக்கள் நடுவே இனவுணர்வை மேம்படுத்த அவர் செய்து வரும்
பிரச்சாரம் விலைமதிப்பில்லாதது.ஒரு முதலமைச்சராக இருப்பதால் நான்
செய்ய முடியாத பிரச்சாரத்தை அவர் செய்கிறார். எனவே அவரைக் கைது
செய்ய வேண்டாமென்று சொன்னேன்"என்றாராம் எம்.ஜி.ஆர்.
படகோட்டிகளை அப்புறப்படுத்தியதிலும் அந்தப் படகோட்டி
வித்தியாசமாகத்தான் சிந்தித்திருக்கிறார்.