Tuesday, December 4, 2012

அற்புதர்-17

                                           

அற்புதரின் வீட்டு முற்றத்தில் அதிர்ந்து கொண்டிருந்தன கால்சதங்கைகள்.பதங்களுக்கேற்ற அபிநயத்தில் அசைந்தாடிக்
கொண்டிருந்தன பிஞ்சுப் பாதங்கள். அற்புதரின் பாகம்பிரியாள் விதைத்த விதைகளில் இதுவும் ஒன்று. வான்முகிலாய் மாறி அவர் வார்த்த அமுதத்தில் மலர்ந்திருந்தது அந்த ஆனந்த மலர்.

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்த காலங்களில்
மேற்கொண்ட சங்கல்பங்களில் ஒன்று இன்று கண்ணெதிரே
களிநடம் புரிந்ததில் அற்புதருக்கு மகிழ்ச்சி.

தன்னுள் ஒலிக்கும் தாண்டவ அதிர்வுகளையே வருபவர் மூச்சில்
வைத்து அவரவர் உயிரையே பொன்னம்பலமாக்கித் தந்து கொண்டிருக்கும் அற்புதரின் முற்றத்தில் அருள்மணம் பரப்பியது ஆனந்த நடனம்.

இசையில் கசியும் இதயம் அற்புதருக்கு. அமர ஸ்வரங்களில் சஞ்சரிக்கும் அசுணமாவைப் போன்றதே அவரின் ரசனை.ஒவ்வொரு தாயின் கருவிலும் ஒலிக்கும் ஓங்காரத்தின் பாலை குழந்தைகள் அருந்திப் பிறக்கின்றனர். அவர்களில் ஒருசிலரே கலைகளில் சிறக்கின்றனர்.

கருவில் அருந்திய கலைமுலைப்பாலின் சுவையை நினைவின் நாவுகளில் மீட்டுக் கொள்பவர்கள் தங்களையே மீட்டி உயிரின்
பாடலைக் கண்டெடுக்கிறார்கள்.

தெய்வீகத்தின் கசிவுகளே இசை,தெய்வீகத்தின் அசைவுகளே நடனம் என்பதை நன்குணர்ந்த அற்புதர் வைபவங்கள் ஒவ்வொன்றிலும் கலைகளையே கொலுவில் இருத்துவார்.

கடவுளிடம் மனிதன் பேசுவது பிரார்த்தனை.கடவுள் மனிதனுடன்
பேசுவது தியானம். கடவுளும் மனிதனும் கலந்து பேசுவதே கலை.
அற்புதருக்கு கானமும் தாளமும் வானுக்குப் போடும் பாலம்தான்.
வெற்று மூங்கிலில் இருக்கும் வெளி காற்றிலிருக்கும் கடவுளின்
குரலை ஒலிபரப்புவதுபோல், தேகமே மூங்கிலாய் அசைந்தசைந்து
தேவ முத்திரைகளை வெளிப்படுத்துகிறது.


கீர்த்தனையின் கீற்றிலிருக்கும் ஸ்வரங்கள் தேகமெனும் விருட்சத்தைத் தென்றலாய் உலுக்க,,அதிலிருந்து ""பொலபொல"வென உதிரும் அபிநய மலர்களே அர்ச்சனை மலர்கள்.

நாத ஆராதனையும் நாட்டிய ஆராதனையும் உள்ளிருக்கும் தெய்வத்திற்கு உகப்பானவை என்பதை உணர்ந்த அற்புதரின் வீட்டு முற்றத்தில் அசைந்து கொண்டிருக்கிறது நாட்டியக் கொடிமுல்லை.