Monday, December 31, 2012

இறைவன் விரும்பினால்...



என்முன் வருகிற காலங்களை
இன்னும் திடமாய் எதிர்கொள்வேன்
பொன்னினும் விலைமிகு பொருளென்றே
பொழுதுகள் தம்மை மதித்திருப்பேன்
இன்னமும் செய்ய ஏராளம்
என்பதை உணர்ந்தே உழைத்திருப்பேன்
இன்னொரு மனிதரை எண்ணாமல்
என்னை நானே ஜெயித்திருப்பேன்

எவர்க்கும் தந்தது போலேநான்
எனக்கும் நேரம் ஒதுக்கிடுவேன்
கவிதைக் கணங்களை சேகரித்து
கருவூலத்தில் காத்திடுவேன்
தவங்கள் முயல்கையில் வாழ்விங்கே
தளிர்க்கும் என்பதை உணர்ந்திடுவேன்
தவறுகள் செய்தால் பதறாமல்
தாண்டி வரவே முயன்றிடுவேன்

உள்ளம் பதறும் போதெல்லாம்
உயிர்ப்பூ வாடும் என்றுணர்வேன்
வெள்ளம் போலே உணர்வெழுந்தால்
வேகத் தடுப்புகள் எழுப்பிடுவேன்
கள்ளம் இன்றிப் புன்னகைப்பேன்
கபடுகள் இன்றிப் பேசிடுவேன்
அள்ளிக் கொடுக்கா விட்டாலும்
ஆன வரையில் கொடுத்திடுவேன்

எல்லோரிடத்திலும் குறையுண்டு
என்பதை உணர்ந்தே வாழ்ந்திடுவேன்
சொல்லால் செயலால் முடிந்தவரை
சிரமங்கள் நீக்க முனைந்திடுவேன்
இல்லாத ஒன்றுக் கேங்காமல்
இருப்பவை எதையும் இழக்காமல்
எல்லாம் அறிந்ததாய் எண்ணாமல்
என்னைப் பொறுப்பாய் இயக்கிடுவேன்

ஆற்றல்,திறமை எல்லாமே
ஆண்டவன் தந்தது என்றறிவேன்
காற்று வீசும் பொழுதறிந்து
கைவசம் உள்ளவை விதைத்திருப்பேன்
நேற்றின் தவறுகள் தொடராமல்
நேசத்தின் தீபம் அணையாமல்
மாற்றங்கள் நிகழ்வதை மதித்திருப்பேன்
மகிழ்ச்சிகள் மலர்த்த முனைந்திருப்பேன்