தொழில்நுட்ப சாமிக்கொரு நாமாவளி

                                

 இது நடந்து நான்காண்டுகள் இருக்கும். கல்லூரி ஒன்றின் தமிழ் மன்றத் தொடக்கவிழாவிற்குக் கூப்பிட்டிருந்தார்கள். மேடையேறுவதற்கு முன்பே பேராசிரியர் ஒருவர் தன் படைப்பாக்கம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார்.
தலைப்பைப் பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது."சிஎன்சி 108 போற்றி" என்பது அந்தத் தலைப்பு.

எந்திர உற்பத்தித் துறையில் பயன்படும் கம்ப்யூட்டர் நியூமெரிகல் கண்ட்ரோல் பயன்படும் விதங்களை,போற்றி எழுதப்பட்டிருக்கும் துதி நூல் இது.அறிவியல் அறிவும் ஆங்கில அறிவும் இதைப் பாராயணம் செய்வோருக்கு உடனே சித்திக்கும் விதமாக ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இந்நூல் உருவாகியுள்ளது.
   உயர்வற உயர்நலம் உடைய சிஎன்சியின் கல்யாண குணங்களை இதில் அணுவைத் துளைத்து அதில் அணுசக்தி ஒப்பந்தத்தைப் புகுத்தினாற்போலப் படைத்திருக்கிறார் ஆ சிரியர்.

    Good structural rigidity என்பது உறுதியான கட்டமைப்பு உள்ளாய் போற்றி என்றும்,    Ball screw application என்பது குண்டு மரைத் தண்டின் குணமே போற்றி   என்றும்  CNC Lathe என்பது கடைசல் எந்திரமாய் ஆனாய் போற்றி      என்றும் நீள்கிறது.

ஆசிரியரின்படைப்பாற்றல் இயங்குகதி,பக்திப்பரவசத்தின் சுழல் கதி ஆகியன உச்சம் கொண்ட நிலையில்    Vertical machining center         என்பது, குத்து வசத்தில் குடைவாய் போற்றி என்றும்       Horizontal machining center      என்பது படுக்கை வசத்தில் பன்முகம் போற்றி  என்றும் பிரவாகம் எடுக்கையில் வாசகர் அறிவியல் தரிசனம் பெற்று மெய்தானரும்பி விதிர்விதிர்ப்பதும் .கண்மலர்களில் ஆனந்த பாஷ்பம் அரும்புவதும் நிச்சயம்.

இனி,இந்த எந்திரத்தின் அனைத்துமறி அற்புதத்தை விளக்கப் போந்த ஆசிரியர்,  Master datum seting,Offset datum setting        ஆகியவற்றை "ஆதிப் புள்ளியை அறிவாய் போற்றி,அருகாமை புள்ளிகளும் அறிந்தாய் போற்றி" என்னுமிடம் வருங்காலத்தே இந்த திவ்யசுலோகங்களுக்கு பாஷ்யம் எழுதப் போகிறவர்களுக்கு மிகவும் வாய்ப்பான பகுதி.அறிவாய் அறிந்தாய் ஆகிய பிரயோகங்கள் காட்டும் கால வேற்றுமை,இக்கணினி எந்திரமானது,காலமும் கணக்கும் நீத்த காரணீயாய்த் திகழ்வதைச் சுட்டுகிறது.

ஆக்கல் அளித்தல் காத்தல் அருளல் மறைத்தல் ஆகிய ஐந்தொழில் வல்ல சி என்சியை பலவாறாய்ப் புகழ்ந்தேத்தி பனுவல் பாடி, Emergency stop-அபாய நிறுத்த அமைப்பே போற்றி என்றரற்றிச்சரண்புகும் போது அதன் அரும்பேராற்றல் ]தெள்ளிதின் விளங்குகிறது.

இனி இதனை ஒரு துதிநூலாக மட்டுமின்றி,காவியமாகவும் கண்டுணரும் விதமாக ஆக்கப்பட்டிருக்கிறது.
பாவிகம் என்பது காவியப் பண்பே என்பதற்கேற்ப சிஎன்சி,பலதேசத்துப் பெண்களாகவும் உருவகிக்கப்பட்டிருப்பது சக்தி வழிபாட்டின் புத்தம் புதிய பரிமாணமாகவும்-இலக்கிய மதிப்பீட்டில் இந்நூலுக்குக் காவிய வகைமையில் இடம்பெற்றுத் தரத் தக்கதாகவும் திகழ்கிறது.

    High cost investment  அதிகச் செலவு வைக்கும் அமெரிக்கப் பெண்ணே போற்றி
   Can be operated for 3 shifts  சலியாது உழைக்கும் சீனப்பெண்ணே போற்றி
   Smooth table movements நளினமாய் நகரும் கெய்சா பெண்ணே போற்றி(ஜல்சா அல்ல)   Strong construction   கட்டான உடல்கொண்ட கருப்பு பெண்ணே போற்றி
   Command obidiant operation           விதிமுறையில் இயங்கும் ஆங்கில பெண்ணே போற்றி  Touch sensitive features  தொட்டாலுணரும் பிரெஞ்சு பெண்ணே போற்றி
  All good quality/features   நற்பண்பு யாவும் கொண்ட இந்திய பெண்ணே போற்றி
என்றெழுதியிருப்பதைக் காணும் போது சிஎன் சி,சப்த கன்னியர் வடிவில் உபாசிக்கப்படுவதாக நாம் உய்த்துணர முடிகிறது.பிரதி செவ்வாய் வெள்ளிகளில்  திருவிளக்கு வழிபாட்டிற்குப் பயன்படும் விதமாக"உற்பத்தி கூடத்தின் ஒளிவிளக்கே போற்றி போற்றி" என்றிவ்வருட் பனுவல் நிறைவு பெறுகிறது

தனியாய் நூற்பலன் எழுதப்படாவிடினும் இதன் பராயணத்தால் விளையும் இக பர சௌபாக்கியங்கள் வெள்ளிடை மலையன்றோ!!

இதனை அருளிச் செய்தவர் பேராசிரியர் வி.இராமச்சந்திரன் என்று தெரிகிறது.32 ஆண்டுகள் தொழில்நுட்பப்
பேராசிரியராய்ப் பணிபுரிந்த இவர் தன்னை ஒரு தமிழ் அடிப்பொடி என்று தெரிவிக்கிறார்.


நெ 6 முதல் மெயின்ரோடு அண்ணாநகர் பீளமேடு கோயமுத்தூர் 641004 என்னும் சந்நிதானத்திற்கு விண்ணப்பிப்போர் இதன் பிரதி ஒன்றினைப் பெறும் பாக்கியசாலிகள் ஆவார்கள் .இதன் விலை மதிப்பிலாத்தன்மையினை உணர்த்தும் முகத்தான் விலை ஏதும் குறிப்பிடப்படவில்லை