Tuesday, March 24, 2015

முதுபெரும் தமிழறிஞர் ல.ச. மறைந்தார்

தேர்ந்த தமிழறிஞரும்,ரசிகமணி டி.கே.சி. அவர்களின் அணுக்கச் சீடருமான வித்வான் ல.சண்முகசுந்தரம் சென்னையில் மறைந்தார். அவருக்கு வயது 94. தன் குருநாதரைப் போலவே மாபெரும் ரசிகராய் வாழ்வாங்கு வாழ்ந்த அவர் பல நூல்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாதெமிக்காக ரசிகமணி வாழ்வு குறித்து எழுதிய நூல் முக்கியமானது.

ரசிகமணி பாணியில் செய்யுட்களை இசையுடன் பாடி விவரிக்கும் இவரின் பாணி வித்தியாசமானது.கோவை திரு.ரவீந்திரன் அவர்கள் ஏழெட்டு ஆண்டுகள் முன்னர் கோவையில் ஓர் ஒலிப்பதிவுக் கூடத்தில் அவரை அழைத்துச் சென்று 7-8 மணி நேரங்கள் ஒலிப்பதிவு செய்தார்.

மூதறிஞர் ராஜாஜி போன்றவர்களுடன் நெருங்கிப் பழகியவர் இவர். ஒருமுறை டி.கே.சி. இல்லத்தில் இருவரும் தங்கியிருந்தனர்.விடியலில் எழுந்த ல.ச. ராஜாஜி விழித்துவிடக் கூடாதென்பதால் ஓசையில்லாமல் பின்பக்கம் போயிருக்கிறார். திரும்ப வரும்போது ராஜாஜி,தன் படுக்கையையும், லச.வின் படுக்கையையும் கர்மசிரத்தையாய் மடித்து வைத்தாராம்.

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரை பார்க்கப் போனாராம் ல.ச. அப்போது அவர் முதலமைச்சர். வாசலில் ஒரேயொரு காவலர்.இவரைக் கண்டதும், "புலவரா!! வாங்க வாங்க! வைரவா புலவருக்கு மோர் கொண்டா!" என்று உபசரித்து வந்த விஷயத்தை விசாரித்திருக்கிறார்.

"அய்யா! தென்காசியில திருவள்ளுவர் கழகம் வைச்சிருக்கோம்.ஆண்டு விழா வருது!"

"சரி!"

"நீங்க வந்து தலைமை தாங்கிப் பேசணும்"

சொல்லி வாய் மூடும் முன் காமராஜர் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்.
"புலவரே! திருக்குறளைப் பத்தி நீங்கல்லாம் பேசி நான் கேட்கறதா, நான் பேசி நீங்க எல்லாம் கேட்கறதா! நல்ல கூத்தா இருக்கே!"

93 வயதில் தலையில்நடந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும்,திடகாத்திரமாகவும்  உற்சாகமாகவும் இருந்தவர்,திரு.ரவீந்திரன் இல்லத் திருமணத்திற்கு மார்ச் 15 விமானத்திலேயே வருவதாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில் மார்ச் 24 நள்ளிரவில் தூக்கத்திலேயே மறைந்தார்.

தமிழும் தாவரமும், வாழையடி வாழை உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் எப்போ  வருவாரோ தொடர் நிகழ்வில் திரு.ம. கிருஷ்ணன் " ஞானச்செம்மல்" விருது வழங்கிச் சிறப்பித்தார்.

ல.ச. என்றாலே வாய் கொள்ளாச் சிரிப்பும் வெற்றிலை மணக்கும் பேச்சும் நிபந்தனையில்லாத அன்பும் நினைவிலே நிற்கும்.அவர் புகழ் வாழ்க
ல.ச. அவர்களுடன் திரு.ரவீந்திரன்   




      http://nagapattinam.tnopac.gov.in/cgi-bin/koha/opac-search.pl?q=au:%E0%AE%B2.%20%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

Sunday, March 22, 2015

உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு





காடு திருத்திய மானிடர்கள்-ஒரு
காலத்தில் நாடுகள் அமைத்தளித்தார்
வீடுகள் வீதிகள் சமைத்தவரோ-பல
வாழ்க்கை முறைகளும் வகுத்தளித்தார்
தேடும் வசதிகள் பெருகியபின்-நல்ல
தேசங்கள் வளர்ந்து பொலிகையிலே
ஏடு புகழ்ந்திட சிங்கையினை-புகழ்
ஏற்றி வளர்த்தார் லீகுவான் இயூ

புத்தம் புதிய குடியரசின் -வெகு
புகழ்முகம் இவரெனும் வரலாறு
நித்தம் அதிசயத் திட்டங்கள்-தரும்
நிகரில் வல்லமை பலவாறு
தத்தம் கடமைகள் புரிந்தாலே-ஒரு
தேசம் துலங்கும் என்பதற்கு
வித்தக சான்றாய் விளங்குகிறார்-இந்த
வையம் புகழும் லீகுவான் இயூ

அடிப்படை வசதிகள் பெருக்குவதில்-பல
அறிவியல் நன்மைகள் புதுக்குவதில்
படிப்படியாய் நலம் செதுக்குவதில்-நிதி
பார்த்துப் பார்த்து ஒதுக்குவதில்
குடிமகன் கடமை உணரும்படி-நெஞ்சில்
கனவுகள் விதைத்துப் பெருக்குவதில்
நடையில் நின்றுயர் நாயகனாய்-இன்று
நிமிர்ந்து நிற்பவர்லீகுவான் இயூ

எங்கள் மகாகவி பாரதிதான் -அன்று
எழுதிய கவிதை ஏட்டினிலே
இங்கு வானகம் தென்படுக-என
எழில்நிலை சிங்கை நாட்டினிலே
பொங்கும் புகழ்நிலை எட்டியவர்-நலம்
பொலிந்து தொடுவார் தொண்ணூறு
தங்கக் கவிகண்ணதாசனின் சொல்-ஆயுள்
தொண்ணூறு என்றும் பதினாறு!!

Wednesday, March 18, 2015

தொட்டதுமே பட்டவினை தூள்


(இசைக்கவி ரமணன் , விசாகப்பட்டினம் அருகிலுள்ள பீமுனிப் பட்டினத்தில் பீடம்கொண்டிருக்கும் தன் குருநாதரை தரிசித்த அனுபவங்களைப் படங்களாய் பகிர்ந்திருந்தார்.அந்தப் படங்கள் பார்த்த உவகையில் இந்த வெண்பாக்கள் எழுதினேன்.....பாம்பறியும் பாம்பின் கால்!!!)
நெருப்பின் குளுமை நிழலை, இமயப்
பொருப்பின் சிகரப் பொலிவை-இருப்பை
தவானந்தம் பூத்த தருவைகை கூப்பி
சிவானந்த மூர்த்தியென்றே சாற்று

காவி இடைமறைக்க காருண்யம் கண்நிறைக்க
மேவு முகில்துகிலாய் மேனியிலே-பீமுனிப்
பட்டினத்தில் வாழும் பரஞ்சுடரின் பொன்னடிகள்
தொட்டதுமே பட்டவினை தூள்.

கைகட்டும் சீடன் கவிகட்டக் காரணமே
பொய்முட்ட ஏலாத பூரணமே-மெய்முட்டும்
ஆவியிலே நின்றொளிரும் அற்புதமே!நின்பெயரைக்
கூவியதே இந்தக் குயில் 


வேதம் வருடும் விரலால் இசைக்கவியின்
காது திருகும் கருணையே-தீதேதும்
கேளாச் செவிகளாய் கேட்க அருளினையோ
வாளாங் கிருக்கும் வினை


காதுவழி சேர்த்தவினை கொஞ்சமா நஞ்சமா
ஏதுவழி  மேலும் இதுசேர- நாதன்
கரம்வந்து பற்றியே கொஞ்சும் தருணம்
வரமுண்டோ இங்குனக்கு வேறு

Tuesday, March 17, 2015

ஈஷாவில் இருக்கின்ற மாயம்




 இல்லாது போதெலெனும் பொல்லாத போதைதான்
  ஈஷாவில் இருக்கின்ற மாயம்
நில்லாத வினைகளெலாம் செல்லாது போக குரு
நாதனவன் நிகழ்த்துகிற ஜாலம்
சொல்லாத வலிகளையும் கிள்ளாமல் கிள்ளிவிட
சுட்டுவிரல் கட்டைவிரல் சேரும்
கல்லாத கல்வியினைஎல்லாரும் அடைந்திடவே
குன்றின்கீழ் ஒளிர்கின்ற கூடம்


வார்த்துவைத்த மாதிரிகள் வாழ்க்கையினை ஆக்ரமிக்க
வாட்டத்தின் வலிகனிந்த பிறகு
பார்த்துவந்த மானிடர்கள் சேர்த்தளித்த சுமையிறக்க
பரமநிழல்தேடுகிற பொழுது
தீர்த்தத்தில் தலைமுழுகி தீர்ப்புக்குத் தலைவணங்கி
திரும்புகையில் முளைக்குமிரு சிறகு
வேர்த்தநடை தகிப்பாற வேண்டிநின்ற கனல்மேவ
வைத்திருந்த அகந்தையெலாம் விறகு

கைநிறைய வேம்புதரும் பைரவியின் பார்வையிலே
கண்கலங்கி நின்றிருக்கும் தருணம்
பொய்மனதின் கூச்சலெலாம் போயடங்க தியானலிங்கப்
பெருமௌனம் பருகுகிற தருணம்
வையகத்தில் வாழ்ந்தபடி வேறுநிலை எய்தும்படி
வித்தகனார்  ஆக்கிவைத்த தருணம்
நைந்தநிலை மாற்றிமிக நன்மையெல்லாம் கூட்டுகிற
நாயகனார் திருவடிகள் சரணம்


Friday, March 13, 2015

குறும்பாய் சில குறும்பாக்கள்



 (ஆங்கில வடிவமான லிமரிக்கின் தமிழ் வடிவம் குறும்பா.அதனாலோ என்னவோ ஆங்கிலச் சொற்களுக்கு அனுமதி உண்டு..)



காலையில நடக்குறாரு அப்பன்
கேழ்வரகு இட்டிலிதான் டிப்பன்
வேலைக்கு இடையே
வச்சுதின்ன வடையே
மூலையில முடக்கிடுச்சே சுப்பன்

பன்றிக்கும் பறவைக்கும் போட்டி
பரவுகிறகாய்ச்சலின்பேர் சூட்டி
இவ்வுலகை வாட்டி
இன்றுவரை லூட்டி
அன்றைக்கே மருந்துதந்தாள் பாட்டி


கோழிக்குஞ்சு தேடிவந்த கோபாலா
குருமா உன் பொண்டாட்டி செய்வாளா
ஏழுகிலோ எடைகூடி
இடுப்பு பெருத்துதுன்னு
ஆழாக்கு அரிசியில சஃபோலா

வாட்ஸப்பில் வந்ததொரு தகவல்
விநாயகர் பேரில்நல்ல அகவல்
கீட்ஸோடு தழுவல்
கிப்ரானுடன் உலவல்
பாட்டியின் பா பாராமல் நழுவல்

அரிசிமுதல் அந்தனையும் இலவசம்
ஆட்களுக்கோ டாஸ்மாக்கில் பரவசம்
வருமானம் யார்வசம்
வாக்குப்பெட்டி சாகசம்
அரிவாளில் ஆட்டுக்கு ஆர்கஸம்



தப்பாக காசுபணம் அள்ளி
தலைகாலு புரியாம துள்ளி
மப்பேத்தும் மில்லி
குப்புறவே தள்ளி
அப்புறமா கோயிந்தா கொள்ளி


பேசியதை குப்பையிலே போட்டு
பணமள்ள பெருந்திட்டம் தீட்டு
ஏசியவர் கூட்டு
ஏற்படுத்திக் காட்டு
வீசியெறி ஓட்டுக்கு நோட்டு

ஜாப்னாக்கு போறாரு மோடி
ஜனநாயக சீதை தேடி
கேட்பாரைத் தேடி
கலங்கிமனம் வாடி
கூப்பாடு போடுபவர் கோடி

தப்பான ஆளில்லே தலீவரு
ஒப்புக்கு அப்போது பிரதமரு
இப்போது நெலக்கரி
இதிலிவரு வடகறி
எப்போதும் எங்காளு சைபரு

 விசாரிக்க கமிஷனொண்ணு வந்து
விசாரிச்சு அறிக்கையொண்ணு தந்து
விசிறிவிட்ட பந்து
சுவரில்பட்டு வந்து
விசயம்தீர்ந்து போச்சுதடா சுந்து

Wednesday, March 11, 2015

மகாசிவராத்திரியும் சில தேநீர்க் கோப்பைகளும்-யாழி


கைரேகை படிந்த கல்வழியே அறிமுகமான கவிஞர் யாழி,கவிதையின் ரேகை படிந்த தேநீர்க் கோப்பைகளுடன் வந்திருக்கிறார்.பத்துத் தலை கொண்டவன் இராவணன் என்பார்கள்.இன்று நவீன கவிதைக்கு பலநூறு முகங்கள்.யாழியின் இந்தக் கவிதைகளில் நான் காணும் முகம், மரபின் ஆழத்தில் வேரூன்றி நிற்கும் நவீன கவிதைகளின் முகம்.

பல்லாயிரம் ஆண்டுகள் பின்புலம் கொண்ட தொன்மத்தில் ஊடாடி உருண்டோடி வரும் சொற்கள் நவீன கவிதைகளை மேலும் நவீனமாக்குகின்றன என்பதே அதிசயமான உண்மை.

யாழியின் கவிமனம் அத்தகைய தொன்மங்களில் ஊடாடியும் வாழ்வியலின் புத்தம் புதிய தளங்களில் பயணம் செய்தும் வித்தைகள் காட்டுகின்றன.இதை வித்தை என்றும் கொள்ளலாம்.வித்தகம் என்றும் சொல்லலாம்.

"பழைய பைத்தியம் படீரெனத் தொலையுது"என்று பாடியபடியே வருகிற பாரதியின் புதிய கோடங்கியை நாம் அறிவோம்.அவன் அடுக்கடுக்காய் சில உறுதிமொழிகளை சொல்ல வந்த கோடங்கி.நல்ல காலம் ஏற்கெனவே பிறந்து விட்டதாக உறுதியாய் நம்புகிற கோடங்கி அவன்.


யாழி உயிர்ப்பித்து உலவ விட்டிருக்கும் சாமக்கோடங்கி,இரவின் கரிய பக்கங்களை உணர்த்த மட்டுமே வருகிற கோடங்கி.ஞானக்கூத்தனின் கவிதையொன்றில் காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான் வீசிய எச்சில் இலைக்கு சண்டையிடுகிற நாய்களின் குரைப்பொலி கேட்டு வரிசையாய் குரைக்கத் தொடங்கும் நாய்களின் சங்கிலி வரிசை போல  இந்த சாமக் கோடங்கியின் வருகை அப்படியொரு குலைப்பு வரிசையைத் தொடங்கி வைக்கிறது.


அந்த வரிசையில் கலந்து கொண்டு எஜமானியின் அதட்டலுக்கு ஆளாகி வாலைச் சுருட்டிக் கொள்ளும் மணியையும்,நாய்களின் குரைப்பொலியில் தூக்கம் கலைந்து குளிருக்கிதமாய் இன்னொரு கோணிச்சாக்கைப் போர்த்திக் கொள்ளும் கிறிஸ்துவ நடைபாதை வாசியையும் பேரம் பேசுவதில் கலம் கடத்தும் வாடிக்கையாளனை நிராகரித்து காறி உமிழ்ந்து போகும் பெண்ணொருத்தியின் எரிச்சலையும் இனம் காட்ட இந்தக் கோடங்கியின் வருகை உதவுகிறது.


" இரவின் நிசப்தத்தை உடைக்கிறது
   சாமக் கோடங்கியின் குடுகுடுப்பை சத்தம்
    மெல்ல தலைதூக்கி
    சத்தம் வந்த திசைநோக்கி
     குரைக்கிறது ஒரு நாய்....
      குரைப்புச் சத்தம் கேட்டு
       தங்களையும் அத்துடன் இணைத்துக் கொள்கின்றன
        பிற நாய்கள்.."


----------------------------------------------
---------------------------------------------
"மேலும் ஒரு கோணிப்பையை
  போர்த்திக் கொள்கிறான்
  நடைபாதை வாசி
 இந்த மார்கழிப்பனி
  அவனை முணுமுணுக்கச் செய்கிறது..
அவன் கீர்த்தனையைக் கேட்டு
 எந்த தேவனும் இதுவரை
  இறங்கி வந்ததில்லை..

..................................
பேரம் பேசுவதில்
அவகாசமெடுப்பவனை
எச்சிலால் நிராகரித்து நடக்கிறாள்
அழகியொருத்தி
நட்சத்திரம் உதிக்கப் போகும் திசை பார்த்து
இப்போது
இன்னும் உரக்கக் கேட்கிறது
குடுகுடுப்பைக்காரனின் சப்தம்
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது..."
(ப-6/7)
 

  

ஒரு படைப்பாளி தன்னைக் கடவுளுக்குப் பக்கத்தில் வைத்தோ அல்லது கடவுளாகவோ கருதுகிற கணங்கள் அதிகம். இந்தக் கடவுள் கூட்டத்தில் தான் மட்டுமே கடவுள் என்று கருதி கொம்பு சீவப்பட்டு கொம்புடைந்து நிற்கும் ஒரு கடவுளை அந்தக் கடவுள் அளவு அறியப்படாத ஒரு சிறுதெய்வமாக நின்று கேலி செய்கிறார் யாழி.
"தான் பெரும் ஆளுமை மிக்கவன்
 தன்னால் பெரும் காப்பியங்கள்
 சிருஷ்டிக்க முடியுமெனவும்
அதனாலேயே தன்னை கடவுளென
அறிவித்துக் கொண்டவர் அவர்'
------------------------------------------------------
-------------------------------------------------------

எதிர்ப்படுபவர்களெல்லாம்
தன்னை வணங்க வேண்டுமென
ஆசைப்படும் அவரின் கனா
பல நேரங்களில் பலிப்பதேயில்லை.
கோபம் கொண்டு மண்ணில்
கொம்பால் குத்துகிறார்.
அவரின் கொம்பு தேய்ந்தபடியிருக்கிறது.
---------------------------------------------------
----------------------------------------------------

தேய்ந்த கொம்போடு
ஒளியிழந்த அவரை
பார்க்கப் பாவமாகத்தான் இருக்கிறது
எல்லோரிடத்திலும்
கடவுளிருப்பதையறியாத அந்தக் கடவுளை"
(ப-12)
அதேநேரம் தனக்குப் பிரியமான ஒருவரை கன்னத்தில் அறைந்து விட்டு,அதற்குக் காரணம் தனக்குள் இருக்கும் கடவுள் தூங்கப் போனதுதான் என்றும் சொல்கிறார் யாழி.
(ப-58)
எப்போதும் விழித்திருக்கும் கடவுள் யாருக்குத்தான் வேண்டும்?

தொன்மங்களை திருப்பிப் போடுதல் என்பது நவீன கவிதையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று.இராமாயணம்,மகாபாரதம் ஆகிய இதிகாசங்களின் உயிர்ப்புத்தன்மைக்கு முக்கியக் காரணம்,ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வின் ஏதொவொரு கணத்திலேனும் தன் வாழ்வின் சூழல்களை அந்த இதிகாச நிகழ்வுகளுடன் இணை வைத்துப் பார்ப்பதற்கு இடமிருப்பதால்தான்.

அத்தகைய நுட்பமான உணர்வுகள் இந்தத் தொகுப்பிலும் இடம்பெறுகின்றன.  
 "அம்புப் படுக்கையில் இப்போது முனகி என்ன பயன்
   நீங்கள் தொடுத்த கணைகளை ரசித்தவன் நான்"
என்று தொடங்கும் இந்தக் கவிதை இன்று பல இளைஞர்களுக்கு தொழில் கற்றுத் தந்து பின் பகைத்துக் கொண்ட பிதாமகர்களைப் பற்றிப் பேசுகிறது.

"இங்கே குவிந்திருக்கும் அம்புகளில்
 என் வில்லிலிருந்த் வந்தவையும் இருக்கின்றன.
ஒரு ஓட்கா அல்லது மேன்சன் ஹவுஸ்
அல்லது இன்னும் எனக்குத் தெரியாத
ஒரு உற்சாகப் பாண(ன)த்திற்கான உங்கள் விசுவாசமே
என்னையும் தொடுக்க வைத்தது.
சுட்டுவிரல் உங்கள் வசமிருந்த
ஒரே காரணத்தால் உங்களை
சூழ்ந்த கூட்டத்திற்கு தெரிந்திருக்கிறது
உங்களின் பலவீனம்
அவர்களின் சக்கர வியூகத்தில் சிக்கி
இதோ அம்புப் படுக்கையில் நீங்கள்"


ஆனால் இந்த அர்ச்சுனன் பீஷ்மரை அம்புப் படுக்கையில் அம்போ என விட்டுப் போகிறவனில்லை.


"இன்னும் எனக்கு நம்பிக்கையிருக்கிறது
உங்கள் வித்தையில்
எழுந்து வாருங்கள்
காத்திருக்கிறேன் களத்தில்"
(ப-61)


மஹாசிவராத்திரியன்று திருட வந்து தப்பிக்க முயன்ற திருடன் ஒருவன் மரத்தின் மீது ஏறியமர்ந்து தூக்கம் வராதிருக்க இலைகளை பறித்து போட்டுக் கொண்டெயிருந்தானாம். விடிந்த பின்புதான்,அது வில்வ மரமென்றும்,கீழே ஒரு சிவலிங்கம் இருந்ததும் தெரிய வந்தது.அடுத்த பிறவியில் அவன் பேரரசனாகப் பிறந்தான் என்று தொன்மத்தில் ஒரு கதைஉண்டு.


"பருத்த இரையை விழுங்கிய அரவமென
 நெளிகிறது இரவு
  எத்தனை முறை புரண்டாலும்
  வர இயலாத் தொலைவிலிருக்கும்
  உறக்கத்தைக் கோரும் மனநிலை அற்று
  கோப்பையில் நிறைக்கிறேன் இரவினை
 புத்துணர்வு கொண்ட அச்சம்
 மீண்டும் மீண்டும்
 புரளச் செய்கிறது

-----------------------
----------------------
கோப்பைகள் மாறியபடியே இருக்கின்றன
இரவை நிரப்பிக் குடித்தபடியே இருக்கிறேன்
"சிவராத்திரி அதுவுமா தூங்கல போல
  உனக்கு மோட்சம்தான்"
சொல்லிப் போகிறான் நண்பனொருத்தன்
நான் கோப்பைகளை பார்க்கிறேன்
அவை வில்வ இலைகளாய் தெரிந்தன"
(ப-48)
தொன்மம் நிரம்பிய கோப்பையாய் தெரிகிறார் யாழி.

பட்டினத்தார் மனித வாழ்க்கை என்றால் என்னவென்று சொல் கிறார்.
"   வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதே !"


கவிழ்த்த குடத்தின் நீருக்கு நிகராக விசித்திரப் பாதையில் விருப்பம் போல் நகர்கிறது வாழ்க்கை.
யாழி சொல்கிறார்,
"பயணித்துக் கொண்டிருக்கும் நான்
இளைப்பாறுதலில்
திரும்பிப் பார்க்கிறேன்
ஓடியபடி இருக்கும் மாடு
கழிக்கும்
சிறுநீர் தடமாய் வாழ்க்கை
(ப-69)

தீபாவளிப் பண்டிகையில் ஒரு கையில் சாட்டை கொளுத்தியபடியே பேருந்து நிலையத்தில் பழக்கூடையுடன் திரியும் சிறுவன் போல மின்னல் வரிகளை சொடுக்கியபடியே வாழ்வின் வெளிகளில் திரியும் யாழிக்கு என் இனிய வாழ்த்துகள்

  

Thursday, March 5, 2015

பஞ்சபூதங்களும் ஒரு பறவையும்-5 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து..)



சக்தி ஜோதியின் கவியுலகம் முழுவதுமே பெண்ணின் அகவுலகம் சார்ந்ததுதானா எனில்,இல்லை. சங்க இலக்கிய வாசிப்பின் வழி அவர் புனைந்து கொண்ட அகவுலகம் ஒரு பகுதியெனில், நிகழ்காலத்தின் கனலாக நிற்கும் பெண்ணியம் சார் புறவுலகம் மற்றுமொரு பகுதி.
சக்திஜோதியின் அகவுலகில் சிறகடிக்கும் பறவை, வனத்தையும் வானம் முதலாகிய ஐம்பூதங்களையும் அளாவிப் பறக்கிற அசுணமா எனில் புறவுலகம் சார்ந்த அவரின் பறவை நகர நெரிசலில் தத்திப் பறக்கும் குஞ்சுக் கிளியாய் கூண்டுக் கிளியாய், வாயாடிக் கிளியாய், ஊமைக் கிளியாய் ஆங்காங்கே தென்படுகிறது.  
ஒரு கணம் எதுவும் அசையாது
நின்று போமெனில்
நான் கடந்துவிடுவேன்

இந்தச் சாலை வழி
இந்த நகரைவிட்டு

இந்த நெரிசலைக் கடந்து
மற்றொரு நகரத்தின் சாலையில்
சிக்கிக்கொள்வதற்காக
என்பதை அறியாதவாறு.”
பறவை தினங்களை பரிசளிப்பவள்  என்றெழுதும் போது தெறிக்கும் மிரட்சியில்  தெரிகின்றன, பறவையொன்றின் பரிதாபக் கண்கள். வனவெளியிலும்,பஞ்சபூதங்களின் மடியிலும்,  யாதுமாகி நிற்கும் பெண், யாது செய்வேன் என்கிற தவிப்பில் நிலைகொள்ளாது கால் மாற்றித் தத்தளிக்கும் காட்சி சக்திஜோதியின் நகர்சார் சித்தரிப்புகளில் தென்படுவது வியப்பைத் தருகிறது.

இந்த வரிசையில் முக்கியமான ஒரு கவிதையை எடுத்துக் கொள்ளலாம். பறவைக்கு கூடு இயல்பானது. கூண்டு சிறையானது. மண்கலயங்கள், காப்பிச் செடியின் காய்ந்த கிளைகள் பொருத்தப்பட்ட கூண்டுகள் ஆகிய இடங்களில் பிடிபட்டிருக்கும் பறவைகள், சிறு துவாரங்கள் வழி மட்டுமே உலகை எட்டிப் பார்க்கின்றன. இந்தச் சிறைக்குள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உணர வேண்டிய பறவைகள், ஏனோ, பூனை வந்துவிடுமோ என்னும் அச்சத்தில் தவிக்கின்றன. நெருப்பின் நாவுகளைத் தாண்டிப் பறக்கும் பறவைகளை சக்தி ஜோதியின் வனாந்திரத்தில் பார்த்துப் பழகிய நமக்கு,கூண்டினை பாதுகாப்பாகப் பார்க்கும் மனோபாவமும் அதையும் மீறி ஆபத்து வந்துவிடுமோ என்று நடுங்கும் நடுக்கமும் அதிர்ச்சி தருகின்றன.
மண்கலயங்களின் சிறிய துவாரங்களின் வழி
தங்கள் உலகை
மெல்ல எட்டிப் பார்த்தன சில பறவைகள்

மஞ்சள்
பச்சை
நீலம்
இன்னும் பல வண்ணங்களில்
கூண்டினுள் பறவைகள்
காப்பிச் செடியின்
காய்ந்த கிளைகளில்
காதலைப் பரிமாறிக் கொண்டிருந்தன.

வெயிலும்
பனியும்
கம்பிகளைக் கடந்து உள்நுழைகிறது

கூண்டுக் கம்பிகள்
மண்கலயங்கள்
காப்பிக் கிளைகள்
பறவைகளைப்
பருந்துகளிடமிருந்து பாதுகாக்கின்றன.

பறவைகளின் இருப்பினை
வாசனையால் உணர்ந்து கொள்ளும் பூனைகள்
எங்கிருந்த போதிலும்
அவைகளை அச்சப்படுத்திக் கொண்டேயிருந்தன.

உயிரின் வாதையை படபடக்கும் சிறகுகள்-
அறிவதில்லை.
ஒருபோதும் கூண்டுப் பறவையை
பூனையால் பிடித்துவிட இயலாதென்பதை..  
(எனக்கான ஆகாயம் 16/17)

இந்த மனநிலையில் சில பெண்கள் இருப்பதை பதிவு செய்தாலும் இத்தகைய மனநிலை பற்றிய தன் விமர்சனத்தையே இந்தக் கவிதைக்கு சக்திஜோதி தலைப்பாக்குகிறார். சிறைமீட்டல்”. பிணைக்கும் சிறையிலிருந்து பெண்களை மீட்பது அவர்களின் மனோபாவத்தை மாற்றுவது என்பதெல்லாமே இந்தத் தலைப்பில் அடங்கி விடுகிறது.

நிர்ப்பந்தங்கள்,பாதுகாப்பின்மை,மனச்சிதைவு ஆகிய இன்றைய நிதர்சனங்களை சக்திஜோதி நிராகரித்துவிட்டுப் போகிறவராய் இருந்தால் அவர் கவிதைகள் கனவுலகம் சார்ந்தவை என்று முத்திரை குத்தப்படுவதற்கான அபாயங்கள் அதிகம்.ஆனால் இவரின் கவிதைகள் அவற்றை கணக்கிலெடுக்கின்றன.

இந்த அழுத்தங்களின் நெரிசலில் முற்றாகத் தோற்ற ஒரு பெண்ணையும் இவரின் கவிதை காட்டுகிறது.

எந்தச் சேலையைத் தேர்வு செய்வது
சற்றுக் குழம்பினாள்

இந்த தொடக்க வரிகள் நமக்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.ஆனால் அடுத்தடுத்த வரிகளை வாசிக்கும் பொழுதுதான் எவ்வளவு துல்லியமான இடத்தில் இந்தக் கவிதை தொடங்குகிறது என்பது நமக்குப் புரிகிறது

எந்தச் சேலையைத் தேர்வு செய்வது
சற்றுக் குழம்பினாள்
வெளியே கிளம்பும் பொழுது
வழக்கமான நிகழ்வு தான்
என்றபோதும்
இன்று வேறுமாதிரி உணர்வு

பார்த்துப்பார்த்து தெரிவு செய்தாள்

இயங்கும் உலகம் மறந்து உறங்குகிற
இரண்டு குழந்தைகளையும் முத்தமிட்டாள்
வெள்ளைக் காகிதத்தைத் எடுத்து
இரவு விளக்கின் ஒளியில் கடிதம் எழுதி
நான்குபுறமும் பிசிறின்றி மடித்தாள்
துளியும் சிதறாத செயல்களைச் செய்வதில்
விருப்பமுடையவள் அவள்
அறையின் சூழல் உணராது உறங்கும்
கணவனைப் பார்த்தாள்
அன்னியமாக உணர்ந்தாள்
குழந்தைகளைப் பார்த்தாள்
சுழலும் மின்விசிறியை நிமிர்ந்து பார்த்தாள்
காற்றுத் தடைபட
குழந்தைகள் விழிக்க வாய்ப்பிருக்கிறது
போதையின் வாசனை சூழ்ந்த அவன் விழிப்பது
சந்தேகம்தான்
கோடையில் வற்றும் நீர்நிலைபோல
ஆவியாகி மறையாத
தங்களுக்கிடையேயான அடர் மௌனங்களை
நினைத்துக்கொண்டாள்
உடலின் கனம் தாங்கும்
நிச்சயமற்ற பழைய மின்விசிறி நினைத்து
மனம் தடுமாறினாள்
சிறிது பிசகினால் எல்லாம் கெட்டுவிடும்
ஒரே ஒரு முடிச்சு
ஒருமுறை கால் இழுத்து
எல்லாம் முடிந்துவிட்டால் நல்லது
இதுவரையில் அவன் கவனிக்காதிருந்த
தான் முடிந்துவிட வேண்டும்
என்று நினைத்தவள்
விடியலுக்குக் கொஞ்சம் முன்பாக
மின்விசிறியை நிறுத்தினாள்.”

வாழ்வின் பெருஞ்சுமை தாங்காமல் உயிர்விட நினைக்கும் ஒருத்தியின் உயிர்ச்சித்திரம் இந்தக் கவிதை.ஆனால் சக்திஜோதி காண விரும்பும் பெண் இவளல்ல. சிரமங்கள்,கசப்புகள் தற்கொலை முயற்சிகளை எல்லாம் தாண்டி கையூன்றி எழுகிற பெண்தான் இவர் காண விரும்பும் பெண்.

கசப்பின் மொழியை
அவன் வழியாகவே
முதன்முதலாக அறிந்தாள்

மௌனத்திற்குள்
பயணிக்கத் தெரியாமல்
சொற்களை இறைத்த கணமொன்றில் 
அந்தக் கசப்பை உணர்ந்தாள்
தற்கொலை முயற்சியின்
விளிம்பில் சென்று திரும்புகிறவளாகவும்
கருச்சிதைவுக்கு உட்பட்ட மனமாகவும் “....
 என்று நீளுமிந்த கவிதையின் நிறைவுவரி
மிகவும் முக்கியமானது.
தன்னுடைய கண்ணீருக்கு தன்னிடமே மன்னிப்பை கோருகிறாள்”.

தளர்ந்தமைக்காக, துணிவைத் தொலைத்தமைக்காக, ஏங்கியழுதமைக்காக தன்னிடம் தானே மன்னிப்பு கேட்டுக் கொண்டு முனைந்தெழும் பெண்மையின் காயங்களை வடுவாக்கும் மூலிகைகளை வனமெங்கும் சேகரிக்கும் பண்டுவச்சியாய் தெரிகிறார் சக்திஜோதி.

அப்படி வலிதாங்கி நிமிர்ந்த பெண்மை வாழ்வின் விளிம்புவரை கால்தேய நடந்து காயங்கள் உதிர்ந்து, மூத்து முதிர்ந்த கிழவியாய் கால்நீட்டி அமர்கிற பொழுது அவளுக்கு ஒரு கை வெற்றிலை மடித்துக் கொடுக்கும் கையாகவும் சக்திஜோதியின் வலது கை நீள்கிறது.    

எந்தக் காற்றுப் பற்றிக்கொள்ளும்
எந்த நெருப்பு தன்னை ஏற்கும்
எந்த நீரில் தான் கரைவோம்
என்றிருக்கும் ஒருத்தி
முதுமையின் தளர்வில்
நினைவின் நூல் கொண்டு
தன்னை நெய்கிறாள்

மாதாந்திரத் திறப்பின் எல்லை கடந்த பிறகு
அத்தனை சுவாரசியம் இல்லை இந்த உடலில்

பறவையாய் சிறகு விரிந்து
வானம் கொண்டாடி
காற்றுக்கும் கானகத்துக்கும் குழந்தைகளுக்கும்
முலையூட்டிய அந்த நாட்களின் கனல் சூடி
ஆதித் தாயின் தனிமையில் காத்திருக்கிறாள்
காலத்தின் முன் ."

பஞ்ச பூதங்களை நட்பு கொள்கிற பறவை உயரப் பறக்கிற பறவை தனித்தலையும் பறவை, தண்ணுமைக் குரல்கொண்ட பறவை தேடுவதென்ன?திசைகளை அளந்துவரும் இந்தப் பறவையின் எதிர்பார்ப்பும் ஏக்கமுமென்ன?இதற்கு விடைசொல்லும் கவிதை இது

விரிந்த ஆகாயத்தில் சிறகுலர்த்தும்
நனைந்த பறவை
சர்ற்றும் தளராத தன் சிறகசைப்பில்
வானளந்து
வானளந்து
அடிபெருத்த மரம்தேடி அமர்கையில்
அடிவயிற்றின் இளம்சூட்டினை
உணர்ந்து கொள்கிற சிறியவிரல்களுக்கு
பெருகும் வேட்கையுடன்
காத்திருக்கிறது .
பிரபஞ்சம் அளந்து பறந்தாலும் அன்பின் தொடுகையும் ஆசுவாசம் தரும் உள்ளங்கைச் சூடும் தேடும் பறவை கனிவின் சிறகுவிரித்துப் பறக்க ஒரு கவிதை வனத்தை வளர்த்துக் கொண்டேயிருக்கும் சக்திஜோதிக்கு என் வாழ்த்துகள்.