பஞ்சபூதங்களும் ஒரு பறவையும் -1 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து..)                  
        

ஐவகை நிலங்களை ஆழ உழுது பெயர்த்தெடுத்த கிழங்குகளை ஐம்பூதங்களுக்கும் படையலிடும் விதமாய் வேர்மணம் வீசும் கவிதைகள், சக்தி ஜோதியின் கவிதைகள்.

மண்மணம்,பண்மணம், பெண்மணம் ஆகியமூன்று சொற்களின் எல்லைகள் கடலாய் விரிய அவற்றிடையே இந்தக் கவிதைகள் தூய வெண்சங்காய்த் துலங்குகின்றன. தமிழின் பண்ணியல்புகள் பழகி வரும் சொற்கள் கொண்டு, பெண் மனதின் நுண்ணியல்புகள் காட்டி அதன்வழியே இந்த மண்ணின் நெடுமரபை அறிய வாய்க்கும் விதமாய் கவிதைகள் மலர்வது மிகவும் அரிது.

அந்த வகையில் சக்திஜோதியின் கவிதைகள் முக்கியமானவை.சங்கப் பின்புலத்தில் ஒரு பெண்ணின் அகம் எல்லையில்லாக் காத்திருப்பில் நிலைகொண்டிருப்பது.  பிரிதலால், ஊடலால் ஏன் புணர்தலால் கூட ஒருவகையில் பெண் காத்திருக்கிறாள். இன்னொரு வகையில் காத்திருக்கச் செய்கிறாள்.அந்தக் காத்திருப்பின் அதிர்வுகளால் ஆன ஒலிக்கோர்வை என்று சக்திஜோதியின் கவிதைகளை சுட்டலாம்.
சங்ககாலப் பெண்ணொருத்தி,  தன் திணைசார் இயல்புகளுடன் மஞ்சள் நிற ஒளியுமிழும் வாகனங்களும் செல்லிடப் பேசிகளும் அரவமெழுப்பும் நவீன யுக வீதிகளிடையே நடமாடும் காட்சியை சக்திஜோதி தன் வரிகளினூடே வரைந்து காட்டுகிறார். 

சக்திஜோதி காதலை அதிகம் எழுதுகிறார் என்றோர் அவதானிப்பு உண்டு.ஆனால் அவர் காதலினூடாகக் கொணர்ந்து சேர்ப்பது பிரம்மிப்பூட்டும் தாய்மையை..
 காதல் கடந்த கனிவை இவரின் கவிதைகள் மலர்த்துகின்றன.

"என் இதழ்கள்
 உன்னைத் தீண்டுகையில்
என் தந்தை
என் சகோதரன்
என் நண்பன் ஆகியோரின்
அன்பையும்
உன்னிடமே சேர்க்கிறேன்'
(நிலம் புகும் சொற்கள் ப-21)

சக்தி ஜோதியின் "காற்றில் மிதக்கும் நீலம்"நூலுக்கு முன்னுரை எழுதிய கவிஞர் சுகுமாரன்,"சங்க இலக்கியக் காதலன்கள் ஒன்று ஏமாற்றுக்காரர்கள், அல்லது  பெண்ணை ஏங்கச்செய்பவர்கள். இந்த இரண்டுமில்லாத  சம மதிப்பினை சக்திஜோதியின் கவிதைகளில் காணலாம். இரு பாலும் ஒன்றையொன்று நிறைவு செய்யும் கட்டாயத்துக்கு 
உட்பட்டவையாகச் சித்தரிக்கப்படுவது, சங்கக் கருத்திலிருந்து இவர் விலகும் இடம்என்கிறார் (-6)

இதில் சங்க இலக்கிய நாயகிகள் தங்கள் உணர்வெழுச்சியால் காதலன் தன்னைக் கைவிடுவானோ எனப் பாடுகின்றனரேயன்றி அது அவநம்பிக்கையல்ல. தலைவன் இற்புறத்தானாயிருக்க  தலைவியும் தோழியும் உரையாடுபவை பெரும்பாலும் காதலின்  பெருக்கத்தைக் காட்டுவனவேயன்றி வேறல்ல.

சக்தி ஜோதியின் கவிமொழி காதலனை அவன் சூழலில் வைத்துப்  புரிந்து கொள்ளும் மொழிஇயலாமையாலோ விரக்தியாலோ ஒலிக்கும் குரல் அல்ல.பிரிவில் வருந்தும் பெருமூச்சில் வாடுகிற தலைவியின் குரலை நினைவூட்டும்  கவிதைகள் உள்ளன. ஆனாலும்  புரிதலின் பலம் பூத்துக் குலுங்கும் கவிதைகளாய்  இவை திகழ்கின்றன. எனவே  அவை  சங்ககால  அகவியலை  ஆழ  உள்வாங்கி அதன் விளைவாய் கிளைத்த கவிதைகளே தவிர 
 சங்கக் கருத்திலிருந்து விலகுபவையல்ல என்பது என் எண்ணம்.

இன்றைய நவீன வாழ்வின் போராட்டங்களை ஒரு போர்க்களமாக
உருவகித்தால்தொழில்வெற்றி நிமித்தமான பிரிவை ஒரு 
போர்ப்படைத் தளபதியின் புறப்பாடாக மனதில் வரைந்து 
கொள்ளவியலும்புறவாழ்வின் தவிர்க்கவியலாத இந்தப் போராட்டத்தில் தனித்திருக்கும் தலைவியின் குரலை கனிவாகவும் 
கம்பீரமாகவும் ஒலிக்க விடுகிறார் சக்திஜோதி.

"நூறாயிரம் வீரர்கள் தொடர
சென்றிருக்கிறாய்
குதிரைகளோடும்
யானைகளோடும்
வீரர்கள்
வாட்களையும் வேல்களையும்
ஏந்தி பின் தொடர்கிறார்கள்
உன் உடல் கவசங்களால்
பாதுகாக்கப்பட்டிருக்கிறது
உன் கண்களில்
நிலத்தின் மீதான வெறி சுடர்கிறது
புழுதியால் காற்று நிரம்புகிறது
எதிரிகளின் நிலம் அதிர்கின்றன"

இந்த வரிகளைபல நூறு பேர்களை வைத்து வேலை வாங்குகிற, தொழிலை விரிவாக்கிக் கொண்டே போகிறஓர் இளம்  
தொழிலதிபருடன் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

''நான் அறிவேன்
நீ விரும்பிய நிலத்தை வென்று திரும்புவாயென
உனது நிலத்தில்
உன்னுடையவள்
மண்வாசனை பூக்க விரிந்திருக்கிறாள்
மழையற்று
வறண்ட நிலம் பிளந்திருக்கிறது''
பிரிவின் பெருஞ்சூட்டை உணர்த்திதன் தவிப்பையும் புலப்படுத்தி
மீண்டும் ஒன்றிணையும் நாள் குறித்த எதிர்பார்ப்புடன் இக்கவிதை 
நிறைவடைகிறது.
"இந்த மண்வாசனை
நீ நுகர்கையில்
இந்த நிலத்தின் சுனை பெருகத் தொடங்கும்
அதில் பேச மறந்த நாம்
மிதந்து கொண்டிருப்போம்"(-24&;25-காற்றில் மிதக்கும் நீலம்)


"செல்லாமை உண்டேல் எனக்குரை"என்பது போன்ற மிகைவிருப்பும்  முரட்டுப் பிடிவாதமும் இல்லாத இந்தப் பக்குவம் பிரிந்து சென்றிருக்கும் தலைவனுக்குள் வெல்லும் வேகத்தையும் தீரா மோகத்தையும் வளர்க்க வல்லது.

  "பாலை நிலத்தைக் கடந்து கொண்டிருக்கிறேன்என்று தொடங்கும் 
கவிதையும் அத்தகைய பிரிவைக் குறித்த கவிதைதான்பிரிவின்
  நீண்ட பொழுதே பாலைநிலமாய்ச் சுடுகிறது.

"தனிமை,மணலில் புகும் பாம்பாய் நெளிகிறது"
என்னும் வரிகளின் வலியில் கூட முறையீட்டின் தொனி 
தென்படவில்லை
(மேலது-23)

மகிழ்வுந்துப் பயணங்களில் ஓட்டுநர்கள் பலரையும் 
கவனித்திருக்கிறேன்வாகனத்தை ஓட்டும்போது மனைவியர் 
அழைப்பை அவர்கள் விரும்புவதில்லைபதில் சொல்லாமல்
அணைப்பதும்தொடர்ந்து அழைத்தால்,"வண்டி ஓட்டறேன்என்று 
சீறுவதும் உண்டுபணியிலிருக்கையில் பலரும் வீட்டழைப்புகளை 
விரும்புவதில்லைஇதை இன்று பல குடும்பத்தலைவிகளும் 
புறக்கணிப்பாய் புரிந்து கொள்வதில்லை.

"வெற்றுப் பாதங்களால்
நிலத்தையளந்தபடி வெகுதூரம் சென்றிருப்பாய்;
அதற்குப் பின்பும் கூட
நூற்றுக்கணக்கான படிகளை
ஏறிக் கடந்திருப்பாய்
உன் மனம் குன்றுகளில் மிதந்திருக்க
ஒரு விளக்கினை ஏற்றிவைத்து
அதன் ஒளியில் உன்னைப் பார்த்தபடியிருக்கிறேன்.

.............................................................
உனக்கு
என் நினைவு இருக்காதென்பதை நானறிவேன்
போதிலும்
உன் மனது எந்தச் சுடரை அடைய விரும்பியதோ
அதை
அணையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்"
(மேலது-31&;32)
இந்த விளக்கு பிரார்த்தனையாய் இருக்கலாம்.பிரியமாய் இருக்கலாம்.
நம்பிக்கையாய் இருக்கலாம்.மூன்றுமாகவும் இருக்கலாம்.

சக்திஜோதியின் கவிதைகளினூடாக பயணம் தொடங்குமுன் கவியுளம் உணர
இந்த அவதானிப்புகள் நமக்குத் துணை புரியும்
(பறவை வரும்)