பஞ்சபூதங்களும் ஒரு பறவையும்-5 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து..)சக்தி ஜோதியின் கவியுலகம் முழுவதுமே பெண்ணின் அகவுலகம் சார்ந்ததுதானா எனில்,இல்லை. சங்க இலக்கிய வாசிப்பின் வழி அவர் புனைந்து கொண்ட அகவுலகம் ஒரு பகுதியெனில், நிகழ்காலத்தின் கனலாக நிற்கும் பெண்ணியம் சார் புறவுலகம் மற்றுமொரு பகுதி.
சக்திஜோதியின் அகவுலகில் சிறகடிக்கும் பறவை, வனத்தையும் வானம் முதலாகிய ஐம்பூதங்களையும் அளாவிப் பறக்கிற அசுணமா எனில் புறவுலகம் சார்ந்த அவரின் பறவை நகர நெரிசலில் தத்திப் பறக்கும் குஞ்சுக் கிளியாய் கூண்டுக் கிளியாய், வாயாடிக் கிளியாய், ஊமைக் கிளியாய் ஆங்காங்கே தென்படுகிறது.  
ஒரு கணம் எதுவும் அசையாது
நின்று போமெனில்
நான் கடந்துவிடுவேன்

இந்தச் சாலை வழி
இந்த நகரைவிட்டு

இந்த நெரிசலைக் கடந்து
மற்றொரு நகரத்தின் சாலையில்
சிக்கிக்கொள்வதற்காக
என்பதை அறியாதவாறு.”
பறவை தினங்களை பரிசளிப்பவள்  என்றெழுதும் போது தெறிக்கும் மிரட்சியில்  தெரிகின்றன, பறவையொன்றின் பரிதாபக் கண்கள். வனவெளியிலும்,பஞ்சபூதங்களின் மடியிலும்,  யாதுமாகி நிற்கும் பெண், யாது செய்வேன் என்கிற தவிப்பில் நிலைகொள்ளாது கால் மாற்றித் தத்தளிக்கும் காட்சி சக்திஜோதியின் நகர்சார் சித்தரிப்புகளில் தென்படுவது வியப்பைத் தருகிறது.

இந்த வரிசையில் முக்கியமான ஒரு கவிதையை எடுத்துக் கொள்ளலாம். பறவைக்கு கூடு இயல்பானது. கூண்டு சிறையானது. மண்கலயங்கள், காப்பிச் செடியின் காய்ந்த கிளைகள் பொருத்தப்பட்ட கூண்டுகள் ஆகிய இடங்களில் பிடிபட்டிருக்கும் பறவைகள், சிறு துவாரங்கள் வழி மட்டுமே உலகை எட்டிப் பார்க்கின்றன. இந்தச் சிறைக்குள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உணர வேண்டிய பறவைகள், ஏனோ, பூனை வந்துவிடுமோ என்னும் அச்சத்தில் தவிக்கின்றன. நெருப்பின் நாவுகளைத் தாண்டிப் பறக்கும் பறவைகளை சக்தி ஜோதியின் வனாந்திரத்தில் பார்த்துப் பழகிய நமக்கு,கூண்டினை பாதுகாப்பாகப் பார்க்கும் மனோபாவமும் அதையும் மீறி ஆபத்து வந்துவிடுமோ என்று நடுங்கும் நடுக்கமும் அதிர்ச்சி தருகின்றன.
மண்கலயங்களின் சிறிய துவாரங்களின் வழி
தங்கள் உலகை
மெல்ல எட்டிப் பார்த்தன சில பறவைகள்

மஞ்சள்
பச்சை
நீலம்
இன்னும் பல வண்ணங்களில்
கூண்டினுள் பறவைகள்
காப்பிச் செடியின்
காய்ந்த கிளைகளில்
காதலைப் பரிமாறிக் கொண்டிருந்தன.

வெயிலும்
பனியும்
கம்பிகளைக் கடந்து உள்நுழைகிறது

கூண்டுக் கம்பிகள்
மண்கலயங்கள்
காப்பிக் கிளைகள்
பறவைகளைப்
பருந்துகளிடமிருந்து பாதுகாக்கின்றன.

பறவைகளின் இருப்பினை
வாசனையால் உணர்ந்து கொள்ளும் பூனைகள்
எங்கிருந்த போதிலும்
அவைகளை அச்சப்படுத்திக் கொண்டேயிருந்தன.

உயிரின் வாதையை படபடக்கும் சிறகுகள்-
அறிவதில்லை.
ஒருபோதும் கூண்டுப் பறவையை
பூனையால் பிடித்துவிட இயலாதென்பதை..  
(எனக்கான ஆகாயம் 16/17)

இந்த மனநிலையில் சில பெண்கள் இருப்பதை பதிவு செய்தாலும் இத்தகைய மனநிலை பற்றிய தன் விமர்சனத்தையே இந்தக் கவிதைக்கு சக்திஜோதி தலைப்பாக்குகிறார். சிறைமீட்டல்”. பிணைக்கும் சிறையிலிருந்து பெண்களை மீட்பது அவர்களின் மனோபாவத்தை மாற்றுவது என்பதெல்லாமே இந்தத் தலைப்பில் அடங்கி விடுகிறது.

நிர்ப்பந்தங்கள்,பாதுகாப்பின்மை,மனச்சிதைவு ஆகிய இன்றைய நிதர்சனங்களை சக்திஜோதி நிராகரித்துவிட்டுப் போகிறவராய் இருந்தால் அவர் கவிதைகள் கனவுலகம் சார்ந்தவை என்று முத்திரை குத்தப்படுவதற்கான அபாயங்கள் அதிகம்.ஆனால் இவரின் கவிதைகள் அவற்றை கணக்கிலெடுக்கின்றன.

இந்த அழுத்தங்களின் நெரிசலில் முற்றாகத் தோற்ற ஒரு பெண்ணையும் இவரின் கவிதை காட்டுகிறது.

எந்தச் சேலையைத் தேர்வு செய்வது
சற்றுக் குழம்பினாள்

இந்த தொடக்க வரிகள் நமக்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.ஆனால் அடுத்தடுத்த வரிகளை வாசிக்கும் பொழுதுதான் எவ்வளவு துல்லியமான இடத்தில் இந்தக் கவிதை தொடங்குகிறது என்பது நமக்குப் புரிகிறது

எந்தச் சேலையைத் தேர்வு செய்வது
சற்றுக் குழம்பினாள்
வெளியே கிளம்பும் பொழுது
வழக்கமான நிகழ்வு தான்
என்றபோதும்
இன்று வேறுமாதிரி உணர்வு

பார்த்துப்பார்த்து தெரிவு செய்தாள்

இயங்கும் உலகம் மறந்து உறங்குகிற
இரண்டு குழந்தைகளையும் முத்தமிட்டாள்
வெள்ளைக் காகிதத்தைத் எடுத்து
இரவு விளக்கின் ஒளியில் கடிதம் எழுதி
நான்குபுறமும் பிசிறின்றி மடித்தாள்
துளியும் சிதறாத செயல்களைச் செய்வதில்
விருப்பமுடையவள் அவள்
அறையின் சூழல் உணராது உறங்கும்
கணவனைப் பார்த்தாள்
அன்னியமாக உணர்ந்தாள்
குழந்தைகளைப் பார்த்தாள்
சுழலும் மின்விசிறியை நிமிர்ந்து பார்த்தாள்
காற்றுத் தடைபட
குழந்தைகள் விழிக்க வாய்ப்பிருக்கிறது
போதையின் வாசனை சூழ்ந்த அவன் விழிப்பது
சந்தேகம்தான்
கோடையில் வற்றும் நீர்நிலைபோல
ஆவியாகி மறையாத
தங்களுக்கிடையேயான அடர் மௌனங்களை
நினைத்துக்கொண்டாள்
உடலின் கனம் தாங்கும்
நிச்சயமற்ற பழைய மின்விசிறி நினைத்து
மனம் தடுமாறினாள்
சிறிது பிசகினால் எல்லாம் கெட்டுவிடும்
ஒரே ஒரு முடிச்சு
ஒருமுறை கால் இழுத்து
எல்லாம் முடிந்துவிட்டால் நல்லது
இதுவரையில் அவன் கவனிக்காதிருந்த
தான் முடிந்துவிட வேண்டும்
என்று நினைத்தவள்
விடியலுக்குக் கொஞ்சம் முன்பாக
மின்விசிறியை நிறுத்தினாள்.”

வாழ்வின் பெருஞ்சுமை தாங்காமல் உயிர்விட நினைக்கும் ஒருத்தியின் உயிர்ச்சித்திரம் இந்தக் கவிதை.ஆனால் சக்திஜோதி காண விரும்பும் பெண் இவளல்ல. சிரமங்கள்,கசப்புகள் தற்கொலை முயற்சிகளை எல்லாம் தாண்டி கையூன்றி எழுகிற பெண்தான் இவர் காண விரும்பும் பெண்.

கசப்பின் மொழியை
அவன் வழியாகவே
முதன்முதலாக அறிந்தாள்

மௌனத்திற்குள்
பயணிக்கத் தெரியாமல்
சொற்களை இறைத்த கணமொன்றில் 
அந்தக் கசப்பை உணர்ந்தாள்
தற்கொலை முயற்சியின்
விளிம்பில் சென்று திரும்புகிறவளாகவும்
கருச்சிதைவுக்கு உட்பட்ட மனமாகவும் “....
 என்று நீளுமிந்த கவிதையின் நிறைவுவரி
மிகவும் முக்கியமானது.
தன்னுடைய கண்ணீருக்கு தன்னிடமே மன்னிப்பை கோருகிறாள்”.

தளர்ந்தமைக்காக, துணிவைத் தொலைத்தமைக்காக, ஏங்கியழுதமைக்காக தன்னிடம் தானே மன்னிப்பு கேட்டுக் கொண்டு முனைந்தெழும் பெண்மையின் காயங்களை வடுவாக்கும் மூலிகைகளை வனமெங்கும் சேகரிக்கும் பண்டுவச்சியாய் தெரிகிறார் சக்திஜோதி.

அப்படி வலிதாங்கி நிமிர்ந்த பெண்மை வாழ்வின் விளிம்புவரை கால்தேய நடந்து காயங்கள் உதிர்ந்து, மூத்து முதிர்ந்த கிழவியாய் கால்நீட்டி அமர்கிற பொழுது அவளுக்கு ஒரு கை வெற்றிலை மடித்துக் கொடுக்கும் கையாகவும் சக்திஜோதியின் வலது கை நீள்கிறது.    

எந்தக் காற்றுப் பற்றிக்கொள்ளும்
எந்த நெருப்பு தன்னை ஏற்கும்
எந்த நீரில் தான் கரைவோம்
என்றிருக்கும் ஒருத்தி
முதுமையின் தளர்வில்
நினைவின் நூல் கொண்டு
தன்னை நெய்கிறாள்

மாதாந்திரத் திறப்பின் எல்லை கடந்த பிறகு
அத்தனை சுவாரசியம் இல்லை இந்த உடலில்

பறவையாய் சிறகு விரிந்து
வானம் கொண்டாடி
காற்றுக்கும் கானகத்துக்கும் குழந்தைகளுக்கும்
முலையூட்டிய அந்த நாட்களின் கனல் சூடி
ஆதித் தாயின் தனிமையில் காத்திருக்கிறாள்
காலத்தின் முன் ."

பஞ்ச பூதங்களை நட்பு கொள்கிற பறவை உயரப் பறக்கிற பறவை தனித்தலையும் பறவை, தண்ணுமைக் குரல்கொண்ட பறவை தேடுவதென்ன?திசைகளை அளந்துவரும் இந்தப் பறவையின் எதிர்பார்ப்பும் ஏக்கமுமென்ன?இதற்கு விடைசொல்லும் கவிதை இது

விரிந்த ஆகாயத்தில் சிறகுலர்த்தும்
நனைந்த பறவை
சர்ற்றும் தளராத தன் சிறகசைப்பில்
வானளந்து
வானளந்து
அடிபெருத்த மரம்தேடி அமர்கையில்
அடிவயிற்றின் இளம்சூட்டினை
உணர்ந்து கொள்கிற சிறியவிரல்களுக்கு
பெருகும் வேட்கையுடன்
காத்திருக்கிறது .
பிரபஞ்சம் அளந்து பறந்தாலும் அன்பின் தொடுகையும் ஆசுவாசம் தரும் உள்ளங்கைச் சூடும் தேடும் பறவை கனிவின் சிறகுவிரித்துப் பறக்க ஒரு கவிதை வனத்தை வளர்த்துக் கொண்டேயிருக்கும் சக்திஜோதிக்கு என் வாழ்த்துகள்.