பஞ்சபூதங்களும் ஒரு பறவையும்-2 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து..)
 மெல்லிய வடிவழகும் அதனினும் மெல்லிய இயல்புகளும் கொண்டவளாய் காட்டப்படும் சங்க இலக்கியத் தலைவியரின் குரல், கனமானது. குழைவையும் கனிவையும் தாண்டிய கம்பீரம் ஒளிர்வது.

இறைஞ்சுதலாய்,ஏங்குதலாய் ஒலிக்கும் அதே குரல் நுண்ணுணர்வின் உச்சப் பொழுதுகளில் காட்டும் கணநேர விசுவரூபங்களை சங்கப் புலவர்களின் சூரியத் தூரிகைகள்
கனல் சித்திரங்களாய் தீட்டிச் செல்வதுண்டு.அவளே அறியாத அவளின் பெற்றிமைமீது ஒளிபாய்ச்சும் சங்கச் செவ்வியை சக்திஜோதியின் கவிதைகளில் காணலாம்.

இங்கு சக்திஜோதி காட்டும் பெண் தன் காதலுக்குத் தூது செல்ல பிரபஞ்சத்தையே இறைஞ்சுகிறாள்.

எவ்விதமாயும் வெளிப்படுத்தவியலாக் காதலோடு
நதியிடம் வேண்டினாள்,
தலைவனிடம்
தன் சொற்களைக் கொண்டு சேர்ப்பிக்கும்படி..
கடந்து சென்றது நதி
நதியோடு பேசாத பெண்ணுண்டோ? சீதை கடத்தப்படும் பொழுது கீழே தெரியும் நதியிடம் முறையிடுகிறாள்.உதவி கேட்கிறாள்.

கோதாவரியே குளிர்வாய் குழைவாய்
 மாதா அனையாய்; மனனே தெளிவாய்
 ஓதாது உணர்வார் உழை ஓடினைபோய்
 நீதான் வினையேன் நிலை சொல்லலையோ

என்கிறாள். இந்தக் கவிதைவரி கம்பனை நினைவுபடுத்தியது.


காற்றிடம் கேட்டாள்
தன் காதலை கொண்டு சேர்ப்பிக்கும்படி..
விலகிச் சென்றது காற்று

பறவைகள் வெகுதொலைவில்
பறந்தபடியிருந்தன

நதியின் கூழாங்கற்களாய்
காலம் உருண்டோடிக் கொண்டிருக்கிறது.

இங்கு காத்திருப்பின் அலைவீசும் காதல் நதி நீண்டு பெருகிய பெருக்கத்தில் காலம் கூழாங்கல்லாகி விடுகிறது. கணப்பொழுதில் ஒருபெண் தன் காதலின் பெயரால் விசுவரூபம் கொள்ளும் இடம் இது.

இந்தக் கவிதை முற்றுப் பெறும் விதம் இன்னுமொரு புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது.

வடிவமற்ற சொற்களில்
காதல் சிதறிக் கிடக்கிறது...
வனத்தில் தனித்தலையும்
பறவையைப் போல....
(எனக்கான ஆகாயம்-20/21)

நதியும் காற்றும் கொண்டு சேர்க்க மறுத்த, பறவைகளுக்கு வெகுதொலைவில் பூமியில் ஒரு புள்ளியாய் தவித்த ஓர் எளிய பெண்ணின் காதல் தானே ஒரு பறவையாய் வனமளாவி வானளாவிப் பறக்கிற இடம்,கம்பீரமான இடம். பிரிவுத் துயரில் தவித்த மனமே பிரபஞ்சம் அளக்கும் சிறகுகள் பெற்றெழுகிற இடம்.

 பிரபஞ்சப்பேராற்றலின் அங்கமாய் தன்னை உணர்தல், அல்லது பிரபஞ்சத் தோழமை பெண்மைக்கு காலங்காலமாய் போதிக்கப்பட்ட ஒன்று. இந்தப் பிரபஞ்சத்தை ஒரு பறவைபோல் துய்த்து,தன்னை அதன் அங்கமாகவே பெண் உணர்கிறாள். பூமியின் கருவில் பிறந்த சீதை,நெருப்பில் தோன்றிய பாஞ்சாலி,கடலில் தோன்றிய திருமகள்,காற்றை மணந்த அஞ்சனை, பிள்ளையின் வாயினுக்குள் பிரபஞ்சம் பார்த்த யசோதை எல்லாமே இதன் பிரதிநிதிகள்தாம்.    
காதலோ, பக்தியோ,எந்த உணர்வு தீவிரம் பெற்றாலும் அந்தத் தீவிரம் பெண்ணில் தொழிற்பட்டு அவளின் பேராற்றலை வெளிக் கொணர்கிறது. இது பெண் சுதந்திரத்தின் வேறொரு பரிமாணம்.

சக்திஜோதி கவிதைகளில் நாம் காணும் பெண் எப்போதும் இயற்கைக்கு பக்கத்திலிருப்பவள். இவள் பூக்கள் மலர்வதை வைத்தே பருவகால மாற்றங்களை உணர்ந்த சங்கப் பெண்மையின் நவீன வார்ப்பு.
  
 தன்னை விட்டுச் சென்றவனின்
வழித்தடம்
காட்டுப்பாதை என்றறிந்திருந்தாள்

நடு இரவில் மின்னல் ஒளியில்
அந்த வழித்தடம் தோன்றி மறைகிறது
அவளது நினைவுகளில்

காட்டு மரங்களின் ஊடே
காளான்கள் பூத்திருந்தன
(மேலது-50)
என்று பாடுகிற பெண். உருகி உருகிக் காதலித்தாலும் தனக்குப் பின்புலமாய் பக்க பலமாய் பேரியற்கையை பெற்ற பெண். இந்தப் பார்வையை இன்னும் சரியாய் உணர சக்திஜோதியின் இன்னொரு கவிதையே நமக்கு உதவுகிறது.


ஓர் எளிய சூரியகாந்தி.சூரியனையே சார்ந்திருக்கும் தாவரம். மாலையில் வாடிக்கிடக்கும் அதன் பெருஞ்சக்தியை எழுதிக்காட்டுகிறார் சக்திஜோதி

பகலில்
சூரியனை
துளித்துளியாக பருகிய அது
தனித்து விடப்பட்ட இரவில்
துவண்டு கிடக்கிறது

வான்வெளி
நட்சத்திரங்கள்
குளிர்நிலா என
எதனாலும் இயலவில்லை
அந்தப் பூவின் மடலை
விரியச் செய்ய..இது உள்ளே ஒரு பெண் பொத்திக் காக்கும் தீவிரம் தந்த திடம்.
தன்னை ஒரு பெண் பிரபஞ்சமாய் உணர்கையில் ஓர் அதிசயம் நிகழ்கிறது. அவள் மனதுக்கு மிக அண்மையாய் இருக்கும் அந்தக் காதலனையும் அவள் ஒரு சராசரி ஆணாய் எளிய மானுடனாய் உணர்வதில்லை. தன்னை எப்படியெல்லாம் உணர்கிறாளோ அதற்குச் சமமான உயரத்தில் தன் மனவெளியில் அவனை தருவிக்கிறாள்.

விரைந்து செல்கையில்
முகத்தில் படும் குளிர்காற்றென
உன்னை உணர்கிறேன்

நீ
பனிப்பிரதேசம்
அப்பொழுது நான் கோடைநிலமாக இருந்தேன்
என்னைக் காண மேகமாய் மாறுகின்றாய்
பின்
ஆலங்கட்டி மழையாய் பொழிகின்றாய்

உன் அன்பு பெருகியோடிய நிலத்தில்
காய்கனிகள்
அடிபட்டு உதிர்கின்றன

நான்
உள்வாங்கி மலர்கிறேன்
பட்ட விதையிலிருந்த பூக்களாய்

---------------------
---------------------
தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில்
என்முகம் பார்க்கின்றேன்
நீ
தெரிகின்றாய்
(மேலது-64/65)

ஒரு பெண் தன் உதிரத்தையும் கண்ணீரையும் குழைத்து பாவை நோன்புக்கான பொம்மை செய்கிறாள். அதனிடம் மன்றாடுகிறாள். அதன் சந்நிதியில் நோன்பு நோற்கிறாள். பின்னர் தன் சுயமுணர்ந்து அதற்கு சக்தியூட்டுகிறாள். தன் விருப்பங்களை நிறைவேற்ற முத்தங்களாலான ஆணையைப் பிறப்பிக்கிறாள்.

வாசிப்பின் வழி நமக்குள் ஏற்படும் இந்தப் புரிதலை சக்திஜோதியின் வரிகளைக் கொண்டே உறுதி செய்து கொள்ளலாம்

இசையென்றாய்
பாடலென்றாய், நல்லமுது என்றாய்,
நிலவு என்றாய்
நீங்காத கனவு என்றாய்
கனவின் தேவதையென்றாய்
மலை என்றாய்
மலை முகடு என்றாய்
மலைமுகட்டை உரசிச் செல்லும் மேகமென்றாய்
மேகம் குளிர்ந்து பெய்யும் மழைஎன்றாய்
மழை பெருகி ஓடும் நதி என்றாய்
கடல் என்றாய்
கடலின் அலை என்றாய்
காதலின் நெருப்பு என்றாய்
என்றாய் என்றாய் என்றாய்
நான் மயங்கிச் சரிந்தேன்
பெண் என்பதை மறந்தேன்
நான் ஆதிசக்தி என்பதையும் மறந்தேன்
(மேலது-46)

இதுதான் ஒரு பெண்ணின் பலம். ஆதிசக்தியின் அதிர்வுகளை தன்னகத்தே கொண்டு,ஆசை,அமைதி,ஆவேசம் ஆளுதல்,ஆளப்படுதல் என எத்தனையோ நிலைப்பாடுகளில் நின்று ஜொலிக்கிறாள் பெண்.

ஓர் ஆண் இந்த உண்மையை எதிர்கொள்ள அஞ்சி அகங்காரத்தை இழுத்துப் போர்த்திக் கொள்வதை ஒரு புன்னகையுடன் வேடிக்கை பார்த்த வண்ணம் பணிந்தும் போகிறாள். 

எல்லாமே நீ என்னும் பணிவும் எல்லாமாய் ஆகும் பிரவாகமும் கூடி நிகழ்த்தும் மாயையின் மகத்துவமே பெண்மனம் என்பதை பஞ்சபூதங்களின் மடியிலமர்ந்து பேசுகின்றன சக்திஜோதியின் கவிதைகள்

(பறவை வரும்)