Thursday, December 30, 2010

ஜனநாயக சமையல்

 
ஜாலங்காட்டி நடக்குது ஜன
நாயக சமையல்-பல
காய்கறிகள் கலந்துபோட்டு
கூட்டணி அவியல்
கேழ்வரகின் நெய்பிசைந்து
கசகச துகையல்
கடுகுபோல படபடக்கும்
கோபத்தின் பொரியல்

உப்புபோலத் தொட்டுக்கிட
ஜாதி ஒழிப்பு-அட
ஊறுகாயப் போல்பழசு
ஊழல் ஒழிப்பு
அப்பளம் போல் நொறுங்குதுங்க
மக்கள் நெனப்பு-கறி
வேப்பிலையப் போலொதுங்கும்
ஏழை பொழப்பு

ஆறிப்போன வாக்குறுதி
சோறுவைக்கலாம்
வேகாத பருப்பக்கூட
வேக வைக்கலாம்
ஊசிப்போன கொள்கையோட
கூட்டு வைக்கலாம்
ஊருக்கெல்லாம் இலையின்கீழ
நோட்டு வைக்கலாம்

பந்தியெல்லாம் பதைபதைக்க
குழம்ப ஊத்தறான்
பாவிமக்க குழம்பத்தானே
தேர்தல் வைக்கறான்
முந்தாநாள் வச்சரசம்
மொண்டு ஊத்தறான்
முணுமுணுத்தா எலயவிட்டு
மடியில் ஊத்துறான்

பாரத விலாஸிலிப்போ
பந்தி போடலாம்
பாயசத்தில் முந்திரிபோல்
பண்பைத் தேடலாம்
மானமில்லா மக்களெல்லாம்
பாயில் அமரலாம்
கோபம் ரோஷம் உள்ளவங்க'
கையக் கழுவலாம்

தின்ன எலையை கழுவிக் கழுவி
திரும்பப் போடுறான்-அவன்
தின்னு முடிச்ச மிச்சத்தைத்தான்
தேசம் என்கிறான்
இன்னயநாள் வரை நடந்த
பந்தி எத்தினி?-அட
இலையில் அமரும் இந்தியன்தான்
என்றும் பட்டினி!!

Thursday, December 23, 2010

நாஞ்சில்நாடன் ஒரே ஆளெனில் நக்கீரரும்தான்


சிவபெருமானுடன் மோதிய நக்கீரரும்,திருமுருகாற்றுப்படை பாடிய
நக்கீரரும்,திருஈங்கோய்மலை எழுபது பாடிய நக்கீரதேவ நாயனாரும்
ஒருவர்தானா,வெவ்வேறு ஆட்களா என்கிற கேள்வி காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு வருகிறது.

பக்திப்பெருக்கெடுக்கும் நக்கீரரும் பயங்கர கோபக்காரரான நக்கீரரும் ஒரே
ஆளாக இருக்க முடியாது என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம்.நாஞ்சில்
நாடனின் படைப்புகளைப் பார்க்கும்போது நக்கீரர் ஒரே ஆளாக இருக்கக்கூடும்
என்றே தோன்றுகிறது .

பழகும்போது பரிவும் பண்பும் மிக்க மென்மையான மனிதரான நாஞ்சில்
அறம்சாராதவற்றைச்சாடும்போது வேகம் கொள்ளும் விதம்
வியப்பளிக்கிறது. செவ்விசை,செவ்விலக்கியங்களின் தீராக்
காதலர் நாஞ்சில்.நல்ல இசையோ கவிதையோ கேட்டால் சூழல் மறந்து
கரைந்துபோவார்.அண்ணாச்சி நெல்லைகண்ணன் பழம்பாடல்களையும் தமிழின் செம்மாந்த கவிதைகளையும் நுட்பமாக எடுத்துரைக்கும் போதெல்லாம், ஒவ்வோர் ஈற்றடியிலும் கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்துக் கொள்வார் நாஞ்சில். நான்கூட ஒருமுறை விளையாட்டாகச் சொன்னேன், "சார்! நீங்க பேசாம மூக்குக் கண்ணாடியிலேயும் கார்க்கண்ணாடி மாதிரி ஒரு வைப்பர் போட்டுக் கொள்ளலாம்"என்று.

நெருங்கிய நண்பர்களின் கேலி கிண்டல்களை மிகவும் ரசித்துச் சிரிப்பவர்
நாஞ்சில்.அவரே மிகவும் கூர்மையான நகைச்சுவையாளர்.மற்றவர்கள் போல்
நடித்துக் காட்டுவதில் வல்லவர்.எல்லோரிடமும் கேட்க இவருக்கு ஏராளமான
கேள்விகள் உண்டு. எல்லாவற்றையும் அறிந்து கொள்வதில் சின்னஞ்சிறுவனின் ஆர்வமுண்டு. படிப்பு,பாட்டு,பயணம்,ஆகியவற்றின் தீராக்காதலர் நாஞ்சில்.அவர் ஏறக்குறைய எல்லா நாட்களும் சொல்லும் சொற்கள்:
"எவ்வளவு அன்பான மனுஷங்க"
"எனக்குக் கண் நெறஞ்சுடுச்சு"

உறவுகளை நண்பர்களை நிபந்தனையில்லாமல் நேசிக்கும் நாஞ்சில்நாடன், சாகித்ய அகாதமிக்குத் தேர்வானபோது எல்லோர் மனதிலும் பெருகிய மகிழ்ச்சியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கரைகிடைக்காமல் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் அவர்.

காலந்தாழ்ந்து தரப்பட்ட விருது என்பது எவ்வளவு உண்மையோ
காலமறிந்து தரப்பட்ட விருது என்பதும் அவ்வளவு உண்மை. நவீன
எழுத்தின் பலத்தை நேர்பட உணரும் வாய்ப்பை தன் ஒவ்வொரு படைப்பிலும் தந்து வரும் நாஞ்சில்நாடனின் குரலை எல்லோரும்
கவனித்துக் கேட்கும் சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இன்னும் பல விருதுகள்,இன்னும் பல வெற்றிகள் என்று,தன் உழைப்பின்
விளைச்சல் அறுவடையாகி வீடு தேடி வருவதை
அடிக்கடி பார்ப்பார் அவர்

Wednesday, December 15, 2010

விஷ்ணுபுரம் விருதின் விஸ்வரூபம்

சிறுகதைகள்,நாவல் ஆகிய இரட்டைக் குதிரைகளிலும் வெற்றிச் சவாரி
செய்யக்கூடியவர்கள் மிகச்சிலர். அந்த மிகச்சிலரில் குறிப்பிடத்தக்க மூத்த
எழுத்தாளர் திரு.ஆ.மாதவன்.

ஆழ்ந்த உறக்கத்தில்,இரண்டு கனவுகளின் இடைவெளியில் மனதில் மின்னலிடக்கூடிய வரிகள் அவருடையவை. பேறு காலத்தில் ஒரு பூனையுடன் நெருங்கிப் பழகுகிற பெண்ணொருத்திக்கு,தனக்குப் பிறக்கப்
போவதே ஒரு பூனைதான் என்று தோன்றிவிடுகிறது. குழந்தை பிறந்ததும்,தாதி,"மஹாலட்சுமிபோல் ஒரு பெண்குழந்தை" என்பது
இவள்செவிகளில் "மஹா லட்சணமாய் ஒரு பூனைக்குழந்தை" என்பதாக விழுந்து விடும்.இவள் ஒரு கதையின் நாயகி

இறந்த தன் தாயாருக்காக அயல்நாட்டிலிருந்து தருவித்த அழகான
சேலையை அவள் பிரேதத்துடன் சேர்த்து எரிப்பதில் "வெற்றி" கண்ட பப்பநாவன், திரையரங்கில் வெட்டியான் மனைவி அதே சேலையுடன் நிற்பதைப் பார்க்கும் போது நடந்து கொள்கிற விதம் இன்னொரு கதையில் சொல்லப்பட்டிருக்கும்.

கடை சார்த்துகிற நேரத்தில் தங்கள் முதலாளியுடன் "கதை" பேச
வரும் பிள்ளை சாரின் தொல்லை பொறுக்காமல் கடை சிப்பந்திகள் எடுக்கிற
ஒழுங்கு நடவடிக்கையின் சாயலில் ஒரு காட்சியை அங்காடித்தெருவில்
பார்க்கலாம்.

நெடுங்காலமாய் எழுதிவரும் ஆ.மாதவனின் கைகளை,அவருடைய நாவலிலேயே வரும் கபட வாசகன் போல் கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூட இலக்கிய அமைப்புகள் துணியாத போது, ஜெயமோகனின் வாசக நண்பர்கள் சேர்ந்து அமைத்திருக்கும் "விஷ்ணுபுரம் இல்க்கிய வட்டம்" அவருக்குத் தங்கள் முதல் விருதை வழங்கிச் சிறப்பிக்கிறது.

19.12.2010 மாலை 5 மணிக்கு கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரிக் கலையரங்கில் விருதும்ரூ.50,000 பணமுடிப்பும் வழங்குகிறார்கள். வாசகர்களின் அங்கீகாரம் என்பதே விஷ்ணுபுரம் விருதின் விஸ்வரூபம் என்று சொல்லத் தோன்றுகிறது.ஆ.மாதவன் இனி பெறப்போகும் எந்த விருதும் இந்த விருதின் அன்புக்கு நிகராகாது.

கோவை ஞானி, இயக்குநர் மணிரத்னம், புனத்தில் அப்துல்லா, நாஞ்சில்நாடன், ஜெயமோகன் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளைக் கொண்டு ஆ.மாதவனுக்குக் கோலமிடப் போகிறது கோவை.

மணிரத்னம் முன்னிலையில்,ஜெயமோகனும் நாஞ்சில்நாடனும்
தளபதி படத்தின் "காட்டுக்குயிலு மனசுக்குள்ளே..." பாடலை,
ரஜினி-மம்முட்டி ரேஞ்சுக்குப் பாடப்போவதாகவும் ஒரு வதந்தி......

Thursday, December 9, 2010

எடை கூடிய கவிதைகள்-யாழியின் என் கைரேகை படிந்த கல்

 படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த மும்முரத்தில் தான் காணத் தவறிய பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறிய கடவுள் செய்த ஏற்பாடு,கவிதை. கவிதையின் கண்கள் வழியாக கவிஞனுக்கு நிகழும் தரிசனங்கள் அசாத்தியமானவை.அத்தகைய பதிவுகளுக்கேற்ப ஒவ்வோர் எழுத்து வகையும் ஒவ்வொரு வசதியைக் கொண்டிருந்தன.குறியீடுகளாலும் படிமங்களாலும் சங்க இலக்கியம் காட்டிய காட்சிகள் ஒருவகை.

கடவுள் என்னும் பெருந்தூணில் சாய்ந்து, தன்னுள் ஆழ்ந்து-ஆய்ந்து, சமய இலக்கியங்கள் கண்டவையும் காட்டுவித்தவையும் ஒருவகை. இந்த சங்கிலிக் கண்ணியில் நவீன கவிதை வாழ்க்கையின் பகிரங்க வெளிகளினூடாக ஊடுகதிர்போல் பரவி உணரப்படாத பிரதேசங்களையும் உணர்த்துகிறது.

அப்படி ஊடுருவும் உன்னத வரிகளுடன் வெளிவந்திருக்கிறது, யாழி எழுதிய "என் கைரேகை படிந்த கல்"என்னும் கவிதைத் தொகுப்பு.

"நானிடறி வீழ்ந்த இடம்
  நாலாயிரம்-அதிலும்
   நான்போட்ட முட்கள் பதியும்" என்றார் கண்ணதாசன்.

"என்னை
காயப்படுத்தும் நோக்கில்
விழுந்த கற்களை
அப்புறப்படுத்தும்போது
சிக்கியது
யார்மீதோ
வீசப்பட்ட
என் கைரேகை
படிந்த கல்"  என்கிறார் யாழி.

எல்லா மனிதருக்குள்ள்ளும் தொட்டால் மலரும் குணமும் தொட்டால் சுருங்கும் குணமும் இருக்கத்தான் செய்கிறது.மனித உறவுகளின் பாற்பட்ட விசித்திரங்களை யாழி இவ்விதம் சொல்கிறார்:

"அவனைப் பற்றிய
அபிப்பிராய பேதங்களை
அடுக்கத் தொடங்கினேன்
இவனிடம்
சற்றூம்
எதிர்பார்க்காத
படி
இவன்
அவனாகியிருந்தான்"

வாழ்க்கை தரும் ஒவ்வொரு வலியும் அந்த நேரத்துக்கான வலிதான்.ரணம்தான்.ஆனால் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்கான பக்குவம், ஒவ்வொரு வலியிலும் பரிசாகக் கிடைக்கிறது.இந்த நுட்பமான உண்மையை மிக அழகாக எழுதிச் செல்கிறார் யாழி.

"கவசமானது
காலம்
என்மீது
அறைந்த ஆணிகள்.
கேட்டுப்பார்
உன்
முனைமுறிந்த
அம்பை."

பலரும் காலச்சக்கரம் மிக வேகமாய் உருண்டோடுவதாகத்தான் சொல்கிறார்கள். யாழி இதனை ஏற்கவில்லை. "நத்தையைப் போலவே காலச்சக்கரம்" என்கிறார். காலச்சக்கரத்தை ஒழுங்காய் இயங்காத கடிகாரமாகக் காட்டுவது கவிதை நிகழ்த்தும் அற்புதங்களில் ஒன்று.

அதனால்தான் யாழியின் பார்வையில் வாழ்க்கை என்பது புரியாத புதிராகவோ விடையில்லா விடுகதையாகவோ இல்லை.

"ஆழ்கிணற்றின்
நீர்ப்பரப்பில் விழுந்த
உடைந்த பானையின் சில்லாய்
பயணிக்கிறது
எனதிந்த வாழ்க்கை
அறியப்பட்ட
முடிவொன்றை
முன்வைத்து "

என்கிற வரிகளில் ஒலிக்கிறது அவரவர் பயணம்.

யாழியின் எழுத்துமுறை மிகக் கூர்மையானது.கூடுதல் குறைச்சலில்லாமல் சொல்ல வந்ததை சரியாக சொல்லும் நடை அவருக்கு வாய்த்திருக்கிறது.அதனாலேயே அவருடைய வரிகள் குறிபார்த்து எய்யப்பட்ட கணைபோல் தைக்கின்றன.

சில நுட்பமான விஷயங்களை கவிதை சொன்னாலும் அதன் எடையைக் கூட்டுகிற காரியத்தை கவிதையின் தலைப்புகள் செய்வதுண்டு.சிலநேரம் தலைப்புகளே சுமையாகிப்போவதும் உண்டு.

"ஏச்சுகளைப்
புறந்தள்ளி
ஏந்திப் பெற்ற உணவினை
கொஞ்சம்
அள்ளி வைக்கிறாள்
அவள்.
வாலை ஆட்டி
பின்
உண்ணத் துவங்கியது
நாய்"

இந்தக் கவிதைக்கு யாழி தந்திருக்கும் தலைப்பு ஈகை.இது எடையைக் கூட்டுகிற தலைப்பு.

உணவை இரந்து பெற்ற அந்தப் பெண்ணின் ஈகை,நாய்க்கு மட்டும்
உணவிடவில்லை.பசித்த இரண்டு வயிறுகளுக்கு
உணவிட்ட புண்ணியத்தை திட்டிக் கொண்டே உணவு போட்டவர்களுக்கும் ஈந்த
வள்ளலாகவும் அவளே ஆகிறாள்.
உணவுக்கு நன்றி சொல்லும் எந்தப் பிரார்த்தனைகளுக்கும்
குறைந்துவிடவில்லை,அந்த நாயின் வாலாட்டல்.

பெரும் உயரங்களைக் கனவு கண்ட மனிதன் வாழ்க்கை சறுக்கி விடுகிற தருணங்களில்,விழுந்த பள்ளங்களில் இருந்தெழுந்த பிறகு,தன் கனவுகளைக் கைவிடுகிறான்.அடிப்படை உத்திரவாதங்களை மட்டுமே தேடிச் செல்கிறான்.இந்த நிதர்சனத்தின் அழகான உருவகம்,"பதவி"என்ற கவிதை.

இருக்கைக்கு
ஆசைப்பட்டு
ஆடிய ஆட்டத்தில்
பாம்புகளால்
விழுங்கப்பட்டவன்
செய்து கொள்ள
முற்படுகிறான்
ஏணிகளின் கால் முறித்து
தனக்கான
நாற்காலி ஒன்றை.

மிகவும் சுகமான வாசிப்பு அனுபவத்தை வழங்குபவை யாழியின் கவிதைகள்."வலி" என்ற கவிதையை இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதை என்று சொல்லலாம்:

"குளம்புகளின்
தேய்மானங்களுக்காக
அடிக்கப்பட்ட லாடம்
ஒன்றிலிருந்து
தெறித்து விழுந்தது
ஆணி
மாறுபட்ட
தாளலயங்கள்
உணர்த்தியது
உயிர்வலியை"

யாழியின் இயற்பெயர் கிரிதரன்  என்பதும்,திருஞானசம்பந்தர் முக்தியடைந்த திருத்தலமாகிய,நல்லூர் எனப்படும் ஆச்சாள்புரம் அவருடைய சொந்த ஊரென்பதும் கூடுதல் தகவல்கள்.
முனைவர்.போ. மணிவண்ணனின் தகிதா பதிப்பகம் இதனை வெளியிட்டிருக்கிறது.அனந்தபத்மநாபனின் அழகான முகப்பு வடிவமைப்புடன் நம்பிக்கைதரும் விதமாக வெளிவந்துள்ளது
யாழியின் "என் கைரேகை படிந்த கல்".

வெளியீடு: தகிதா பதிப்பகம்,4/833,தீபம் பூங்கா,கே.வடமதுரை,
கோயம்புத்தூர் 641017 விலை :ரூ.50/

Monday, December 6, 2010

ராஜ ராஜ சோழன்......தந்தையாக!!

தஞ்சை பெருவுடையார் கோயிலில் 14.11.2010.அன்று நடைபெற்ற 1025ஆவது ஆண்டு சதய விழா கவியரங்கில், "கவிஞர்கள் பார்வையில் இராசராசன்
'என்னும் பொதுத்தலைப்பில்-தந்தையாக என்னுந் தலைப்பில் பாடிய கவிதை.
தலைமை :இசைக்கவி ரமணன்.



சிந்தையெலாம் சிவபக்தி செழித்திருக்க
செயலெல்லாம் மக்கள்நலம் சிறந்திருக்க
விந்தையெலாம் வியக்கின்ற விந்தையாக
வாழ்ந்திருந்த புவியரசன் ராஜராஜன்
தந்தையென்று வாழ்ந்திருந்த தகவு பற்றி
தடந்தோளில் வளர்த்திருந்த மகவு பற்றி
சந்தமிகு செந்தமிழில் சொல்ல வந்தேன்
சரித்திரத்தின் தகவுகளை சேர்த்து வந்தேன்

தன்னைப்போல் வையகத்தைக் காப்பதற்கு
திருமகனாம் ராஜேந்திரன் தன்னைப்பெற்றான்
பொன்னைப்போல் தனைவளர்த்த தமக்கை பேரால்
பாசமுடன் குந்தவையைப் பெற்றெடுத்தான்
மின்னைப்போல் சரித்திரத்தில் தோன்றிச் செல்லும்
மாதேவ அடிகளையும் மகளாய்ப் பெற்றான்
இன்னுமொரு பெண்பிள்ளை இவனுக்குண்டு
இவள்பெயரை நடுப்பிள்ளை என்பார் உண்டு

நாட்குறிப்பு எழுதுகிற வழக்கம் அந்த
நாட்களிலே கிடையாது-ராஜ ராஜன்
ஆள்கறுப்பா சிவப்பா நாம் அறிந்ததில்லை
ஆதாரம் கல்வெட்டில் பெரிதாய் இல்லை
நாம்படைத்துக் காட்டுகிற கற்பனைக்குள்
நிஜம்போலத் தீட்டுகிற வரிகளுக்குள்
வாழத்தான் வேண்டுமந்த ராஜராஜன்
வேறுவழி அவனுக்கும் ஏது பாவம்

எப்படித்தான் பிள்ளைகளை வளர்த்திருப்பான்
என்னென்ன பேர்சொல்லி அழைத்திருப்பான்
அப்பா என்றழைக்கையிலே ராஜராஜன்
ஆனந்த வெள்ளத்தில் திளைத்திருப்பான்
செப்புப்போல் பிள்ளைகள் சண்டையிட்டால்
சிரித்தபடி எவ்வாறு தீர்த்துவைப்பான்
இப்படியாய் கற்பனைகள் எழும்போதெல்லாம்
இதயத்தில் முறுவலிப்பான் ராஜராஜன்

போர்நாடிப் போகின்ற பொழுதில் கூட
பிள்ளைகளின் ஞாபகங்கள் கசிந்திருக்கும்
தேரேறி விரைகையிலே தீண்டும் தென்றல்
தழுவவரும் பிள்ளைகளை நினைக்க வைக்கும்
போர்க்காயம் மீதினிலே பிள்ளைச் செல்வம்
பூவிதழ்கள் மருந்தாகப் படிந்திருக்கும்
ஆகாயம் தனில்தவழும் பூமேகம்போல்
அவன்மடியில் பிள்ளைகள் தவழ்ந்திருக்கும்

பெற்றவர் பலருக்கும் பிள்ளைகள் தங்கள்
கனவுகள் கொட்டி வைக்கிற பாத்திரம்
மற்றவர் சிலருக்கோ பிள்ளைகள் தங்கள்
மன்மத லீலையின் சாட்சி மாத்திரம்
உற்ற செல்வங்கள் நிறைந்தவருக்கோ
உருப்பெறும் பிள்ளைகள் சொத்துப் பத்திரம்
கொற்றவனாம் ராஜ ராஜனுக்கோ
பெற்ற பிள்ளைதான் வெற்றிச் சூத்திரம்

எஞ்சும் பகைவர்கள் எவருமில்லாமல்
இடிக்க வல்லவன் இளவல் இராஜேந்திரன்
விஞ்சும் புகழுடன் வாழ்ந்து வந்திருந்தான்
வீரத் தளபதி எனத் திகழ்ந்திருந்தான்
தஞ்சை மண்ணுக்கு சோழன் அதிபதி
தந்தை காலத்திலேயே பிள்ளை தளபதி
கொஞ்ச நாட்களுக்குள் இணைச்சக்ரவர்த்தியாய்
கோலங்கூட்டிக் கொலுவில் அமர்த்தினான்

மாதொருபாகங்கொண்ட ஈசனுக்கு
சதயத்தில் பிறந்ததந்தை கோயில்கண்டான்
ஆதிரையில் பிறந்தமகன் அடுத்த ஊரில்
அதேபோல அழகான கோயில் கண்டான்
மோதுகிற போரினிலே கங்கை கொண்டான்
மேன்மையுடன் கடாரத்தை வெற்றி கொண்டான்
ஈதனைத்தும் வெல்லுகிற விதமாகத்தான்
ஈழத்தில் போர்புரிந்து பகையை வென்றான்

தகுந்தபடி இளவரசன் படைநடத்தி
தென்னிலங்கை நாட்டினிலே போர்நடத்தி
விதந்தெவரும் போற்றும்படி வெற்றி கொண்டான்
வீழ்த்திவிட்ட இலங்கைமன்னன் பேரைச் சொன்னால்
மகிழ்ந்துவிடும் செந்தமிழர் இதயம்-ஆமாம்
மகிந்த எனும் அரசனைத்தான் வென்று வந்தான்;
மகிந்த எனும் ராஜனையே பக்ஷமின்றி
மாவீரன் ராஜேந்திரன் வீழ்த்தி விட்டான்

வானத்தில் விரிசலொன்று விழுவதில்லை
விழுந்தாலும் வெளியினிலே தெரிவதில்லை
கானத்தில் சுரபேதம் புதியதில்லை
கதிரோடு நிலவொன்றாய்த் திரிவதில்லை
ஊனமிலா ராஜராஜன் வாழும்போதே
ஒதுங்கிப்போய் தனியாட்சி தனயன் கண்டான்
ஏனென்று வரலாற்றில் விளக்கமில்லை
இதுவொன்றும் தமிழர்க்குப் புதியதில்லை

கணைபோல இளவரசன் பாய்ந்து சென்றான்
களமறவன் ராஜராஜன் வில்லாய் நின்றான்
துணையான பிள்ளைக்கு இளமை தொட்டே
தளபதியாய் இடங்கொடுத்தான் -காலப்போக்கில்
இணையாக முடிசூடி ஆட்சி செய்ய
எப்படியோ வழிவிடுத்தான் -சரித்திரத்தில்
அணையாத சுடரான தந்தை பிள்ளை
ஆளுமையினைப் போற்றுகிறேன்! வணக்கம் ! வாழ்க!

Friday, December 3, 2010

உண்ணாமுலை உமையாள்




சின்னஞ் சிறியவளை-ஒளிச்
சுடராய்த் தெரிபவளை
பென்னம் பெரியவனின்-இடப்
பாகம் அமர்பவளை
மின்னல் கொடியழகை-உண்ணா
முலையாம் வடிவழகை
உன்னும் பொழுதிலெலாம்-அவள்
உள்ளே மலருகிறாள்

கன்னங் கரியவளை-அருட்
கனலாய் ஒளிர்பவளை
இன்னும் புதியவளை-கண்கள்
இமையா திருப்பவளை
பொன்னில் பூணெழுதும்-முலை
பொலியும் பேரருளை
என்னென்று காணவந்தேன்-அவள்
என்னில் நிறைந்து நின்றாள்

மூலக் கனலினுள்ளே-புது
மோகம் வளர்ப்பவளாம்
காலக் கணக்குகளை-ஒரு
கணத்தில் எரிப்பவளாம்
சோலைப் புதுமலராம்-அவள்
ஜோதித் திருவடிவாம்
மேலென்ன சொல்லுவதோ-உண்ணா
முலையாள் மகிமையெல்லாம்

அண்ணா மலைத்தலமே -எங்கள்
அன்னையின் இருப்பிடமாம்
பண்ணார் கலைகளுக்கோ-அவள்
பாதங்கள் பிறபிடமாம்
பெண்ணாள் நிகழ்த்துவதே-இந்தப்
பிரபஞ்சப் பெருங்கனவாம்
எண்ணா திருப்பவர்க்கும்-அவள்
எதிர்வந்து தோன்றிடுவாள்

உயிர்களின் இச்சையெலாம்-எங்கள்
உத்தமி படைத்த நலம்
பயிர்களின் பச்சையெலாம்-எங்கள்
பைரவிகொடுத்த நிறம்
துயரங்கள் இன்பங்களும்-அவள்
திருவுளம் வைத்த விதம்
முயல்தவம் அத்தனையும்-உண்ணா
முலையாள் கருணையடா

எத்தனை ஞானியரோ-அவள்
எதிர்வந்து தொழுதிருப்பார்
பித்தனை உணர்ந்தவரும்-இந்தப்
பிச்சிமுன் அழுதிருப்பார்
வித்தென விழுந்தவளாம்-விளை
வினைகள் அறுப்பவளாம்
முத்தியைக் கொடுப்பவளாம்-உண்ணா
முலையம்மை தாள்பணிவோம்