Saturday, February 27, 2010

இப்படித்தான் ஆரம்பம்-8

"ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோவொரு தருணத்தில் என்னுடைய பாடல் எதிரொலிக்கும்"என்றார்
கவியரசு கண்ணதாசன்.தன் வாழ்வின் எல்லாத்தருணங்களிலும் கண்ணதாசனின் பாடல் ஒலிப்பதாய் உணர்ந்த பலரை நான் பார்த்திருக்கிறேன்.
இலக்கிய அமைப்புகள் சார்பாகக் கண்ணதாசன் விழாக்கள் நடத்துவதில் ஆரம்பித்து,சசி போன்ற நிறுவனங்கள் துணையுடன் நடத்திய கண்ணதாசன் விழாக்கள்,மற்றும் உலகின் பல நாடுகளில் கண்ணதாசனைப் பற்றிப் பேசிய அனுபவங்கள்,அனைத்துமே எனக்கோர் உண்மையை உணர்த்தின.

தமிழ்மக்கள்,தங்கள் அந்தரங்கத்தில் நுழைந்த கவிஞராகக் கண்ணதாசனைக் கான்கிறார்கள்.
தங்கள் தனிவாழ்வின் அனுபவங்களை,வளமான தமிழால் பாடிய கவிஞராக மட்டுமின்றி,வாழ்வு பற்றிய தெளிவைத் தந்த கவிஞராகவும் கண்ணதாசனைக் காண்கிறார்கள்.என்னுடைய கணிப்பில் வெகுமக்கள் அப்படி நெருக்கமாக தங்களுடன் அடையாளப்படுத்திக் கொண்ட இன்னொரு கவிஞர் இல்லை.
ரீ மிக்ஸ் என்ற பெயரில் கண்ணதாசனின் வரிகளைக் கற்பழிக்கும் இன்றைய வன்கொடுமைச் சூழலில்
கூட கண்ணதாசன் வீடுகள் தோறும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கண்ணதாசனின் ஒரு பாடலைக்கூட முழுதாகக் கேட்டிராத இன்றைய சிறுவர்களும் இளைஞர்களும்
கூட "அது கழுத்தில்லை கழுத்தில்லை கண்ணதாசன் எழுத்து"என்று பாடுவதைக் கேட்கும்போது சின்ன சந்தோஷம் பற்றிக் கொள்கிறது.

கண்ணதாசனை நேரடியாக அறிந்து கொள்ளும் இசைச்சூழல் இல்லாமல் போனாலும்கூட,தமிழ் சினிமாவின் கடைசிப் பாடலாசிரியன் இருக்கும்வரை கண்ணதாசனின் பெயர் திரும்பத் திரும்ப
சொல்லப்படும் என்றே தோன்றுகிறது.

"காளிதாசன் கம்பன் நாளை வாழ்த்தும் தலைமுற-நாங்க
கண்ணதாசன் தொடங்கிவச்ச பாட்டுப் பரம்பர"

"காளிதாசன்,கண்ணதாசன்,கவிதைநீ..நெருங்கிவா"

"மீன்செத்தா கருவாடு நீசெத்தா வெறுங்கூடு கண்ணதாசன் சொன்னதுங்க"

"கண்ணதாசன்போல தண்ணியடித்தால் கவிதை வருமா கழுதைக்கு"

"கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு-என்
காதல் கவிதை வரிகளைக் கொஞ்சம் திருத்திக் கொடு"

"சொன்னான் நம்ம கண்ணதாசன் பாட்டுலெ-ஒருசேதி
அது தேவையிப்ப நாட்டுலெ"

போன்ற பாடல்கள் கண்ணதாசனின் இடத்தை உறவுணர்வோடும்,உரிமையோடும் நினைவுகூரும் கவிஞர்களின் பிரியத்தை உணர்த்துபவை.
"கண்ணதாசன் காரக்குடி"போன்றவை விதிவிலக்குகள்.

கண்ணதாசனின் எழுத்துக்களால் தங்கள் வாழ்வில் மலர்ச்சி கண்ட மனிதர்கள்,
அவர்பால் கொண்ட நன்றியுணர்வின் காரணமாக தமிழகமெங்கும் எத்தனையோ
அமைப்புகளை அவர் பெயரால் தொடங்கினர்.கோவை,ஈரோடு,சேலம் போன்ற
பகுதிகளில் இத்தகைய உணர்வும் அமைப்புகளும் அதிகம்.

பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப்பேரவை வலிமையாக வளர்ந்தது.
பக்கத்திலுள்ள சிற்றூர்களில் கிளை அமைப்புகள்,கிளை அமைப்பு தொடங்க முடியாத இடங்களில் கண்ணதாசன் விழாக்கள் என்று பட்டையைக் கிளப்பினார்கள்.
இவர்களைப் பெரிதும் ஊக்குவித்தவர்களில் எல்.சோமு குறிப்பிடத்தக்கவர்.

செட்டிநாட்டுக்காரரான இவர் அசப்பில் கண்ணதாசனைப் போலவே இருப்பார்.இதை யாராவது சொன்னால் உடனே முகம்மலர்ந்து கண்ணதாசன் போலவே சிரிப்பார்.
கண்ணதாசன் கலை இலக்கியப்பேரவை சார்பில் மகளிர் அணி தொடங்கப்பட்டது.விஜயசாந்தி,ஜெயந்தி என்று பலரும் மகளிர் அமைப்பை வலிமையாக இயங்க வைத்தர்கள்.
இந்தக் காலகட்டத்தில்தான் கவிஞர் வைரமுத்து அவர்களுடனான என் அறிமுகமும் அரும்பியது.கோவையில் அவருடைய 'சிகரங்களை நோக்கி' நூல் வெளியீட்டு விழாவை நடத்தினோம். அதற்கடுத்த நாள் கண்ணதாசன் விழாவில் அவர் சிறப்புரை நிகழ்த்துவதாக அமைத்திருந்தோம்.

பட்டுக்கோட்டையா கண்ணதாசனா?,கண்ணதாசனா வைரமுத்துவா என்பது போன்ற
கோழிச்சண்டைகள் தமிழக மேடைகளில் பட்டிமன்றம் என்ற பெயரில் அதிகமாக அரங்கேறிக் கொண்டிருந்த காலம் அது.பட்டுக்கோட்டைக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த சகோதர பாசத்தை,கண்ணதாசன் வைரமுத்து இடையிலான குருசிஷ்ய பாவத்தை இத்தகைய மேடைகள் கொச்சைப்படுத்துகின்றன என்பது என் அபிப்பிராயம்.

கண்ணதாசனைப்பற்றி தரக்குறைவாய் எழுதிய பத்திரிகையாளர் ஒருவரை பட்டுக்கோட்டை அடிக்கப் போனார்.பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் முதல் ஃபோன் கண்ணதாசனுக்குத்தான்.அங்கே முதலில் வந்தவரும் அவரே.பட்டுக்கோட்டை இறந்ததும்,"தன்னுயிரைத் தருவதனால் தங்கமகன் பிழைப்பானா?என்னுயிரைத் தருகின்றேன் எங்கே என் மாகவிஞன்"என்று எழுதியவர் கண்ணதாசன்.

அதேபோல் கண்ணதாசன் மீது வைரமுத்து கொண்டிருக்கும் அளப்பரிய பக்தி பற்றி
"ஒரு தோப்புக் குயிலாக'புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்.தமிழ் மக்களுக்கு,கவிஞர்கள் மத்தியிலான இந்தப் பாசம்தான் சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு.

கண்ணதாசன் விழாவில் வைரமுத்து கலந்து கொள்கிறார் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.மேளதாளம் முழங்க வரவேற்பு தரப்பட்டது.
"வானத்தின் நீலத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.அருவியின் ஆலோலத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்
கேட்டுக் கொண்டிருக்கலாம்.கண்ணதாசனின் பெருமையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம்" என்று அவர் தொடங்கிய போது
அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது.

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டதால் இரண்டு நன்மைகள் நிகழ்ந்தன.கவிஞர் வைரமுத்து சமூக இலக்கியப்பேரவை கோவயில் கிளைபரப்பிய போது கண்ணதாசன் இயக்கம் அதனைத் தோழமையுடன் அரவணைத்தது.அதேபோல அடுத்தடுத்த ஆண்டுகளில் கோவையில் கண்ணதாசன் விழா நடந்தபோதெல்லாம்,கவிஞர் வைரமுத்துவின் கட் அவுட்டும் விழா அரங்கில் பிரதானமாக வைக்கப்பட்டிருந்தது.

கவிஞர் வைரமுத்துவை குறை கூறுவதன் மூலமே கண்ணதாசன் விழாவில் கைத்தட்டல் பெறலாம் என்ற உத்தியை ஊரெங்கும் கடைப்பிடித்து வந்த ஒருசில பேச்சாளர்கள்,இந்த அரங்கத்தில் தடுமாறினார்கள். கண்ணதாசனை உணர்வுபூர்வமாகப் பேசுகிற பேச்சாளர்கள் அந்த அரங்கினை ஆட்சி செய்தார்கள்.
கண்ணதாசனைக் கேட்டும் கற்றும் தேறிய பார்வையாளர்கள் ஆளுகையில் அந்த
அரங்கம் இருந்தது. ஊடகங்களின் துணையால் விளம்பரம் பெற்ற பல பட்டிமண்டபப் புலிகள்,இந்த அரங்கை வெற்றி கொள்ள முடியாமல் மண்ணைக் கவ்வியதும் நிகழ்ந்தது."என்னடா இது! மதுரைக்கு வந்த சோதனை!"என்று அவர்கள் வருத்தத்துடன் விடைபெற்றனர்.

பேச்சுக்கலைக்கு ஆதாரம்,பாரதி சொன்ன அடிப்படை வரையறைதான்:
"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்" என்பது,
கண்ணதாசன் மேடைகளில் மீண்டும் நிரூபணமானது.

(தொடரும்)

Tuesday, February 23, 2010

இப்படித்தான் ஆரம்பம்-7

பீளமேடு, தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.கண்ணதாசன் பேரவையிலிருந்த பலரும் தொழிலாளர்களே.அவர்கள் வாழ்க்கைமுறை எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று.ஹாஃப் நைட்,ஃபுல் நைட் என்றெல்லாம் பலதும் சொல்வார்கள்.சிங்கை முத்து,பேரவைக்காக அறை ஒன்றைக் கொடுத்திருந்தார்.அதுவரை பைந்தமிழ் அச்சகத்தில்தான் பேரவை நண்பர்கள் கூடுவார்கள்.நான் வாரம் ஒருமுறையாவது அங்கே செல்வதுண்டு.
காலையில் மில்லுக்குப் போகும்முன் காளிதாஸ் சைக்கிளை உருட்டிக் கொண்டே பேரவைக்கு வருவார்.அவர் வருகிற போது பேரவை நண்பர்கள் யாரும் இல்லாவிட்டால்
பிரச்சினையில்லை"பொட்டாட்டம்" மில்லுக்குப் போவார்.பேரவை உறுப்பினர் ஒருவரைப்பார்த்தாலும் காளிதாசுக்குள் கண்ணதாசன் இறங்கி விடுவார்.கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலைமாடசாமி எதிர்ப்படுபவரை அறைகிற கதைதான்.
"ஒரு பாட்லீங்க ராஜேந்திரன்.." என்று தொடங்கினால் ராஜேந்திரன்,காளிதாஸ்,இருவருமே அன்றைக்கு லீவுதான்.தினசரி சந்திப்புகள்,வாராந்திர இலக்கிய அமர்வுகள் ஆண்டுக்கொரு விழா என்று உற்சாகமாக இயங்கியது பேரவை.
இதற்கிடையே கோவை சசி அட்வர்டைசிங் உரிமையாளர் திரு.சுவாமிநாதன் வாழ்வில் ஓர் அசம்பாவிதம் நடந்தது.கோவையில் ஏழாம் வகுப்பு வரை ஏ.எல்.ஜி. மெட்ரிகுலேஷன் பள்ளியிலும்.எட்டாம் வகுப்பிலிருந்து மணிமேல்நிலைப்பள்லியிலும் படித்தேன்.மணி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்,பி.வி.பத்மநாபன் என்னைப் பெரிதும் ஊக்குவித்தவர்களில் ஒருவர்.நான் படிப்பில் வெகுசுமார் என்றும் அவருக்குத் தெரியும்.கவிதைகள் எழுதுவேன் என்றும் தெரியும்.இவை இரண்டுமே என் பலங்கள் என்று அவர் நினைத்தார்...என்னைப் போலவே!
மற்ற ஆசிரியர்களிடம்,"விடுங்க சார்! நூறு மார்க் எல்லாரும்தான் வாங்கறான்.இவனுக்கு மரத்தைப் பார்த்தா வித்தியாசமாத் தோணுது,பறவையைப் பார்த்தா பேசனும்னு தோணுது" என்று பரிந்து பேசுவார்.

நான் முதுகலை மாஸ் கம்யூனிகேஷன் படித்தபோது,அவர் ஓய்வு பெறுவதாகவும்,அவருக்கான வழியனுப்பு நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க வேண்டுமென்றும் பள்ளியிலிருந்து அழைத்திருந்தார்கள்.மணிமேல்நிலைப்பள்ளி
முன்னாள் மாணவர் சங்கம் அந்த விழாவை நடத்தியது.

பத்மநாபன் நல்ல கல்வியாளர்.சுவாரசியமான மனிதர்.சிறந்த ஆசிரியர்களுக்கு தண்டிக்கத் தெரியாது என்பது அவர் விஷயத்திலும் உண்மையானது.ஆனால் தலைமையாசிரியராக இருந்ததால் அவர் தண்டிக்க வேண்டியிருந்த நேரங்கள்,அவருக்குத் தரப்பட்ட தண்டனைகளாகவே இருந்தன.நல்ல உயரம்.கண்ணாடிக்குள் தெரியும் போலீஸ் கண்கள்.மழிக்கப்பட்ட முகம்.தலைமையாசிரியர்களின் தலையாய இலக்கணமாகிய வழுக்கை.

சரளமாகப் பேச வரும்.திட்டும்போது மட்டும் தடுமாறுவார்.ஒரு வாக்கியத்தைத் தொடங்கும் போதும்,வாக்கியத்தை முடிக்கும் போதும்,வாக்கியத்தின் நடுவிலும் தோராயமாக ஐந்தாறு பழமொழிகள் சொல்வார்.

இங்கே ஒருஃபிளாஷ் பேக்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது,எங்கள் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரும்,பள்ளித் தாளாளருமான
திரு,சின்னசாமி நாயுடு இறந்திருந்தார்.நான் அவருக்கு ஓர் இரங்கல் கவிதை எழுதியிருந்தேன்.
"விடிவெள்ளி விடைபெற்றுச் சென்றதோ-இனி
வாழுங்கள் என்வழியில் என்றதோ
அடிவேரும் அடியோடு சரிந்ததோ
அரியதொரு சரித்திரமே முடிந்ததோ"
என்று தொடங்கிய அந்தக் கவிதையை என் தமிழாசிரியர் க.மீ.வெங்கடேசனிடம்
காட்ட,அவர் தலைமையாசிரியரிடம் காட்ட,ஓவிய ஆசிரியர் தண்டபாணியைக் கொண்டு
அந்தக் கவிதையை ஒரு கறுப்பு சார்ட்டில் வெள்ளை வண்ணத்தில் தீட்டி,கூடவே சின்னசாமி நாயுடுவின் உருவத்தையும் வரைந்து பள்ளியில் பெரிதாக மாட்டி வைத்தார்கள்.அன்று நடந்த இரங்கல் கூட்டத்தில்,பள்ளி அறங்காவலர்,திரு.ஜி.கே.சுந்தரம்,தலைமையாசிரியர் பத்மநாபன் ஆகியோர் பேசியபிறகு நான் அந்தக் கவிதையை வாசித்தேன்.

அந்தக்கூட்டம் முடிந்து கீழே வந்ததும் எல்லோரும் பாராட்ட,12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அம்பலவாணன் மட்டும் காதுக்கருகே வந்து,"யார் எழுதிக் கொடுத்தாங்க" என்று ரகசியமாக விசாரித்தான்.செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்பது போல எனக்கு புகழையும் புதுவாழ்க்கைக்கான திறவுகோலையும், செத்தும் கொடுத்தார் சின்னச்சாமி என்பது எனக்கு அப்போது தெரியாது.

இந்த சம்பவத்தால் பத்மநாபன் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான மாணவனாக ஆகியிருந்தேன்."விளையும் பயிர் முளையில் தெரியும்"என்ற பழமொழியை அவர் அடிக்கடி என்மேல் பிரயோகித்து வந்தார்.
அவருக்கான வழியனுப்பு விழாவை நான் தொகுத்து வழங்கியதும்,முன்னாள் மாணவர் சங்கத் தலைவரான சசி அட்வர்டைசிங் சுவாமிநாதன்,தன்னுடைய விசிட்டிங்கார்டை என்னிடம் தந்து,"நாளைக்கு வந்து எங்க ஆபீஸ்லே ஜாய்ன் பண்ணிக்கங்க" என்றார்.
"சார்! நான் படிச்சுகிட்டிருக்கேன் சார்!" என்றதும்,"பரவாயில்லை!சாயங்காலத்திலே ரெண்டு மணிநேரம் வந்தீங்கன்னா போதும்" என்றார்.

எனக்கிருந்த விளையாட்டுப்புத்தியில் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு."இன்னைக்கு ஆபீசுக்கு வாங்களேன்" என்றார்.
சென்றேன்.அப்போதே நவீனமாக இருந்தது அலுவலகம்.வரவேற்பறையில் காத்திருந்தேன் மிக அழகான
தட்டச்சிகள் இருந்தனர்..
"எந்திரத்தில் உள்ள எழுத்தாய்ப் பிறந்திருந்தால்
வந்தென்னைத் தீண்டும் விரல்"
என்று மனசுக்குள் எழுதிக்கொண்டிருந்தபோது உள்ளே போகச் சொன்னார்கள்.
உற்சாகமாக வரவேற்றார் சுவாமிநாதன்.பேசிக்கொண்டிருந்தபோதே
காபி வந்தது.அலுவலக மேலாளர் சங்கரிடம் சொல்லி எனக்கான பணிநியமன உத்தரவைத் தயார் செய்யச் சொன்னார்.தினமும் மாலை 4-6 வேலை நேரம்.சங்கர் தயார் செய்த பணிநியமன உத்தரவில் மாதச் சம்பளம் 500/ என்றிருந்தது.சுவாமிநாதன் அதை அடித்து விட்டு 750/ என்று திருத்தினார்.1990ல் தினம் இரண்டுமணிநேரம்
வந்து போக 750/ரூபாய் என்பது என் ஆசையையும் தூண்டியது.வேலையில் சேர்ந்தேன்.ஆறே மாதங்களில் சம்பளத்தை 1250ரூபாய்களாக உயர்த்தினார்.

பாரதிதாசன் நூற்றாண்டுவிழாவிற்கு சசி விளம்பர நிறுவனம் வாயிலாக பாரதிதாசனின் வாசகங்கள்
அடங்கிய ஸ்டிக்கர்கள் வெளியிடச் செய்தேன்.பாவேந்தர் நூற்றாண்டு விழாவையும் நடத்தினோம்.சசி
விளம்பர நிறுவனம் சார்பாக நாங்கள் நடத்திய அடுத்த விழா என்னவென்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.... ஆமாம்! கண்ணதாசன் விழாதான்!!

(தொடரும்)

Sunday, February 21, 2010

இப்படித்தான் ஆரம்பம்-6

கனவுகளுடன் தொடங்கப்படும் அமைப்புகள் காற்றில் கலைவதும்,காற்றில் கட்டப்படும் சீட்டுக்கட்டு மாளிகைகள் காலூன்றி எழுவதும்,புதிதல்ல.பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை
தொடங்கப்பட்ட நாட்களில் எனக்கு அதன்மேல் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை.
முதல்காரணம்,அதற்குத் தலைவர்,உள்ளூர் அரசியல் பிரமுகர்.இரண்டாவது காரணம்,அந்த அமைப்பில் பெரும்பங்கு வகித்த ஆலைத்தொழிலாளர்கள்.

அரசியல் பிரமுகர்கள் ஏற்கெனவே தங்களை ஓர் அரசியல் அமைப்பில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள்.
ஆலைத் தொழிலாளர்கள் ஏதேனுமோர் அரசியல் சித்தாந்தத்தின் ஆளுகைக்குள் இருப்பார்கள். எனவே
கலை இலக்கிய அமைப்பொன்றைத் தொடங்கிவிட்டார்களே தவிர தொடர்வார்களா என்கிற கேள்வி எழுந்தது உண்மை.ஆனால் மிக வலிமையான அமைப்பாக அந்தப்பேரவை உருவாக அவர்களுக்குக்
கண்ணதாசன் மீதிருந்த களங்கமில்லாத பக்தியே காரணம்.

அமைப்பின் தலைவர்,சிங்கை முத்து.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர்.அமைப்பின் செயலாளர்,காளிதாஸ்.ஆலைத் தொழிலாளி.சிங்கை முத்துவிற்கு ஹோப்காலேஜ் பகுதியில் ஒரு திரையரங்கம்,ஒரு திருமணமண்டபம்,ஒரு பேக்கரி ஆகியவை சொந்தம்.அரிமா இயக்கத்திலும்,
அவர் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.

கண்ணதாசன் மீது வெறிகொண்ட பக்தர் காளிதாஸ்.ஒர் இயக்கத்தை உருவாக்கி வழிநடத்தும் பண்புகள்
அவரிடம் இயல்பாகவே இருந்தன.பேச்சாற்றல் போன்ற அம்சங்கள் அவரிடம் பெரிதாக இல்லை.ஆனால்
மிகக் குறுகிய காலத்தில் கண்ணதாசன் பேரவையை வலிமையாக வளர்த்தெடுத்தார் அவர்.சிவந்த உருவம்.சிரித்த முகம்.பூனைக்கண்கள்.அப்போது பேரவை,பைந்தமிழ் அச்சகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.பைந்தமிழ் அச்சக உரிமையாளர் திரு. கந்தசாமி.அவருடைய புதல்வர்கள் கணேசன்,ஆனந்தன் இருவருமே பேரவையின் தீவிர உறுப்பினர்கள்.குணசேகரன்,கனராஜ்,ராஜேந்திரன்,பாலச்சந்திரன்,வேலுமணி,தேவ.சீனிவாசன் என்று பலரும் அந்த அமைப்பில் இருந்தார்கள்.

கோவையின் பிரதான சாலைகளாகிய அவினாசி ரோட்டையும் திருச்சி ரோட்டையும் இணைக்கும் முக்கியமான சாலை காமராஜ் ரோடு.காமராஜ் ரோட்டின் மீதே மணீஸ் தியேட்டரும்,சற்றே உள்ளடங்கி
மணிமகால் என்கிற திருமண மண்டபமும் இருந்தன. சொந்தமாக ஒரு மண்டபம் இருப்பது ஓர் அமைப்பிற்கு எவ்வளவு பெரிய பலம் என்று அப்போதுதான் தெரிந்தது.

மண்டபம் கொடுக்க சிங்கை முத்து,அழைப்பிதழ் அடிக்க பைந்தமிழ் அச்சகம்,விழா ஏற்பாடுகளை
துல்லியமாகச் செய்ய காளிதாஸ்,தீவிரமாக உழைக்க உறுப்பினர்கள்,தலைப்புகள் தேர்ந்தெடுக்கவும்,பேச்சாளர்களைத் தெரிவு செய்யவும் தொடர்பு கொள்ளவும் நான் .போதாதா!

கண்ணதாசனுக்குக் கோலாகலமான விழாக்களை எடுத்துத் தள்ளியது பேரவை.ஆலைத் தொழிலாளர்களின் வேலைப்பளு,சம்பந்தப்பட்ட மற்றவர்களின் வெவ்வேறு பணிகள் ஆகியவற்றுக்கிடையே,இது வெறும் ஆண்டுவிழா அமைப்பாக அருகிப் போயிருந்தாலும் யாரும்
கண்டுகொண்டிருக்க மாட்டார்கள்.ஆனால் முதலில் வாரம் ஒருமுறை என்று தொடங்கி,பிறகு பேரவை உறுப்பினர்கள் தினம்தினம் சந்தித்துக் கொள்ளும் அமைப்பாக உருவானது கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை.

சுகிசிவம் அவர்கள் தலைமையில் பட்டிமண்டபம்,சுழலும் சொற்போர் என்று விதம்விதமான நிகழ்ச்சிகள் இங்கே நடந்தன. மேடையில் பேசியவர்களைவிட பேரவை உறுப்பினர்கள் கண்ணதாசனை மிக நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்கள்.

கண்ணதாசன் பேரவையில் இருந்தவர்களில் ஒருவரான கனகராஜ்,வித்தியாசமான மனிதர்.
கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகளைச் சொல்லி புதிர்போட்டு புதிய விடைகளைக் கண்டுபிடிப்பார்.

"பட்டகடன் தீர்ப்பேனா?பாதகரைப் பார்ப்பேனா?பாவலர்க்கு மேடையிலே பரிந்துரைக்கப் போவேனா?
கொட்டுகிற தேளையெல்லாம் கும்பிட்டு நிற்பேனா?கொல்லும் கவலைகளைக் குடித்து மறப்பேனா?"
என்பது கவிஞரின் கவிதை வரிகள்.

தயங்கித் தயங்கித்தான் ஆரம்பிப்பார் கனகராஜ்."சார்! இந்தக் கவிதையிலே கவிஞர் " கொட்டுகிற தேளையெல்லாம் கும்பிட்டு நிற்பேனா?" அப்படீன்னு ஏன் பாடினார் தெரியுங்களா?"என்று ஆரம்பிப்பார்.

"தெரியலீங்களே கனகராஜ்"

'அதாவதுங்கோ..இந்தத் தேளு பார்த்தீங்கன்னா,ஒருத்தர கொட்டோணும்னு வைங்க..கொடுக்கைத் தூக்குமுங்க.அப்போ அதோட காலு ரெண்டு பார்த்தீங்கன்னா,கும்புடற மாதிரி குவிஞ்சிருக்குமுங்கோ.
நம்ம கவிஞரு அப்பிராணியாச்சுங்களா....அது கும்புடுதாக்கும்னு இவுருங் கும்புட அது போட்டுத் தள்ளீருமுங்கோ.நம்ம கவிஞரு கூடப் பழகினவிய பலபேரும் அப்படி தேளாத்தான் இருந்திருக்காங்கோ.."

கவிஞரின் கவிதைகளுக்கு கனகராஜ் போலப்பல பாமரப் பரிமேலழகர்கள் பேரவையில் இருந்தார்கள்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டுக்கு பலியாகியிருந்த சமயம்.

"நம்ம கவிஞரு சொன்ன மாதிரியே நடந்து போச்சுங்கோ"என்றார் கனகராஜ்.
"என்ன கனகராஜ்"? என்றதும்,நேரு மறைந்த போது கண்ணதாசன் எழுதிய ஏராளமான கவிதைகளிலிருந்து
மிகச்சரியாக மூன்று வரிகளை எடுத்துக் காட்டினார் .

'அம்மம்மா என்ன சொல்வேன் அண்ணலைத் தீயிலிட்டார்!
அன்னையைத் தீயிலிட்டார்! பிள்ளையைத் தீயிலிட்டார்!"

"பாருங்கோ! அண்ணல்னு காந்தியைத்தானேங்க சொல்வோம்.காந்தியவும் கொன்னாங்கோ.'அன்னையைத் தீயிலிட்டார்! பிள்ளையைத் தீயிலிட்டார்னு பாடுனாரு.இந்திரா காந்தியயுமு
இப்போ ராஜீவையுமு கொன்னுட்டாங்கோ" என்று தயங்கித் தயங்கிச் சொல்லி விட்டு மெல்ல நகர்ந்து விட்டார் கனகராஜ்.
சுகிசிவம் அவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் கண்ணதாசனை,"ஆறடி வளர்ந்த அப்பாவித்தனம்"என்று வர்ணித்திருந்தார்அவர்.

கண்ணதாசன் பேரவை உறுப்பினர்கள் பலருடைய வீடுகளில் கவிஞர் படம் மாட்டப்பட்டிருக்கும்.உறுப்பினர்களின் சகோதரிகளுக்கோ,உறுப்பினர்களுக்கோ நடைபெற்ற
திருமண அழைப்பிதழ்களில் கவிஞரின் படமும்,அவருடைய மங்கல வரிகளும் கண்டிப்பாக
இடம்பெற்றிருக்கும்.

இன்று நடுத்தர வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள் பலர்.அவர்களில் பெரும்பாலோர் இன்னும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.கனகராஜைத் தவிர..

தீவிர கடன்சுமை காரணமாய் சில ஆண்டுகளுக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டார் கனகராஜ்.

(தொடரும்)

ஓசை எழுப்பும் உள்மனமே

வீசிய பந்தின் விசைபோலே                                   
வெய்யில் நாளின் திசைபோலே
ஏசிய வார்த்தையின் வலிபோலே                        
எழுதி முடியாக் கவிபோலே
பேசிட முடியாத் தீவிரமாய்
பேறுகாலத்தின் ஆத்திரமாய்
ஓசை எழுப்பும் உள்மனமே



 உண்மைகள் தூங்கட்டும் உன்னுடனே
 எல்லாச் சொல்லையும் சொல்வதெங்கே
எல்லாக் கனவையும் காண்பதெங்கே
நில்லாப் பொழுதுகள் மீள்வதெங்கே
நினைவுகள் அனைத்தையும் வாழ்வதெங்கே
கல்லால் எறிந்த காயங்களே
கண்ணைக் கட்டிய மாயங்களே
பொல்லா விடுகதைப் பொழுதுகளே
போதிக்க என்னென்ன பாடங்களே

உலகை வெல்வதும் ஒருபொழுது
உவகை மிகுவதும் ஒருபொழுது
நிலைகள் குலைவதும் ஒருபொழுது
நிஜங்கள் உணர்வதும் ஒருபொழுது
மலராய் மலர்வதும் ஒருபொழுது
மெழுகாய் உருகவும் ஒருபொழுது
மலையாய் எழுவதும் ஒருபொழுது
மனவான் காண்பது பலபொழுது

காட்சிப் பொருளாய்இருக்கும்வரை
காண்பவை எல்லாம் போராட்டம்
சூழ்ச்சிக் கிரையாய் ஆகும்வரை
சோர்வு கொடுக்கும் திண்டாட்டம்
சாட்சிப் பொருளாய் ஆனபின்னே
சட்டென்று விலகும் பனிமூட்டம்
ஆட்சி புரிகிற அமைதியிலே
ஆனந்தம் பருகிடு வண்டாட்டம்

Saturday, February 20, 2010

இராமனிடம் சில கேள்விகள்




சித்திர மாடத்தின் மேலிருந்து-அந்தச்
சீதைதன் தாய்மடி பார்த்திருந்தாள்
எத்தனை நெஞ்சுரம் காகுத்தனே-உன்
அத்தை மடியினில் நடந்துவந்தாய்

கல்லாய்க் கிடந்த அகலிகையும்-உன்
கால்துகள் பட்டதும் பெண்ணானாள்
முள்ளாய் முளைத்த தாடகையும்-உன்
மோதுகணை பட்டேன் மண்ணானாள்?

நாத மொழிகேட்ட சபரியுமே-உனை
நேர்கொண்டு பார்த்ததில் வீடுபெற்றாள்
காதல் மொழிசொன்ன சூர்ப்பநகை-உன்
கண்களில் பட்டென்ன பாடுபட்டாள்

காதல் நெருப்பில் சிலகாலம்-கொடுங்
காட்டு நெருப்பினில் சிலகாலம்
ஆதரவில்லாமல் தென்னிலங்கை- மண்ணில்
அச்ச நெருப்பினில் சிலகாலம்

கற்பின் பெருங்கனல் சானகியும்-அய்யோ
கண்ட துயரங்கள் பார்த்துவிட்டாய்
அற்புதப் பெண்ணவள் வாடும்படி-நீ
அக்கினி யில்இட்டு வாட்டிவிட்டாய்



வாலியை மட்டுமா?யாரையும்நீ
வாழ்வினில் நேர்படக் கொல்வதில்லை
கால்ன் எனுமம்பை ஏவுகிறாய்-எவர்
கண்களின் முன்னும்நீ செல்வதில்லை

எல்லாம் மறைபொருள் உன்னிடத்தில்-உனை
எல்லா மறைகளும் தேடிவரும்
சொல்லால் அளக்கிற கம்பன்தமிழ் -உனை
சிக்கெனப் பிடித்துக் காட்டிவிடும்

காலக் கணக்குகள் நீத்தவன்நீ-என்று
காரியம் யாவிலும் காட்டிக் கொண்டாய்
சீலக் கவிமன்னன் கம்பன்வைத்த-ஒரு
செந்தமிழ்க் கண்ணியில் மாட்டிக் கொண்டாய்

ஜீவநதியொன்று....

திருவடித் தாமரை மலர்ந்தது
தேன்துளி என்னுள் நிறைந்தது
குருவடிவாக அருளுருவாக
குளிர்மழை இங்கு பொழிந்தது-என்
கொடும்வினை எல்லாம் கரைந்தது
  
சுடுமணல் வழியினில் தினம்நடந்தேன்-ஒரு
தருநிழல் தேடியே தினம்நடந்தேன்
திருமுகம் அறிந்ததும் மனம் குளிர்ந்தேன்-உன்
அருளெனும் சுனையினில் உயிர்நனைந்தேன்



தாவரம் ஒன்றின் தவிப்படங்க
ஜீவநதியொன்று தரையிறங்க
அடடா...இதுஎன்ன அதிசயமோ
அதுதான் அதுதான் ரகசியமோ


வினைகளின் வலையினில் நேற்றின்சுகம்
புதிரென்று விரட்டிடும் பார்த்த சுகம்
கதவுகள் திறந்ததும் காற்றின்சுகம்
குழலினில் மிதந்திடும் பாட்டின் சுகம்

ஏங்கிடும் வாழ்வினில் ஏதுசுகம்
தாங்கிடும் உன்கரம் தேவசுகம்
உணர்ந்தேன்... உனது பாதசுகம்                          
உடைந்தேன் அதுதான் ஞானசுகம்

ஆடலில் பேசிடுவான்

கீற்று நிலாவினில் பாலினை ஊற்றிக்
கிறுக்கன் தலைசுமந்தான்
ஊற்றி விடுமென்ற அக்கறை இன்றி
ஊர்த்துவம் ஆடுகிறான்
ஈற்றினை அறியா வான்வெளியெங்கும்
ஈசன் ஆடுகிறான்
போற்றி யிசைக்கிற விண்மீன் திரள்களின்
பாட்டினுக் காடுகிறான்

நாதம் இவனது நாபியில் பிறந்தது
நாளும் புதிய ஸ்வரம்
பாதம் அசைந்திட பூமி சுழலுது
பொழுதுகள் இவனின் வரம்
வேதம் இவனது வார்த்தையில் மலர்ந்தது
வானம் இவனின் தவம்
மோதி அலைகிற பேரலை யோசிவன்
மூச்சினில் உருண்டு வரும்



சாத்திரம் கிரியைகள் சார்புகள் அனைத்தையும்
சாய்ப்பது இவனின் வெறி
தோத்திரம் உகக்கிற தோடுடை செவிகளில்
தோய்வது கவிதை வரி
ஆத்திரம் ஆனந்தம் அத்தனை யும்இவன்
ஆடலில் பேசிடுவான்
மாத்திரைப் போதினில் கோள்களை விழுங்கி
மீண்டும் படைத்திடுவான்

ஊன்றிய திருவடி ஒருமுறை சுழல்கையில்
ஊழ்வினை முடிந்துவிடும்
தோன்றிய பால்வெளி துலங்கிடும் படியவன்
தாண்டவம் நிகழ்ந்துவிடும்
ஈன்றவர் என்றிங்கு யாருமில் லாதவன்
ஈசனின் பிள்ளைகள் நாம்
மான்திகழ் கையினன் மழுவுடை நாயகன்
மலரடி சலங்கைகள் நாம்

லிங்க பைரவி

பைரவி வந்தாள் பைரவி வந்தாள்
பத்துத் திசையதிர
ஷங்கரி வந்தாள் ஷாமளை வந்தாள்
எங்கள் உளம் குளிர
கண்ணொரு மூன்றிலும் மின்னும் நெருப்புடன்
அன்னை உருவெடுத்தாள்
எண்ணிய காரியம் யாவும் நடத்திட
இங்கு குடிபுகுந்தாள்

யோகத் தலமல்லவா-இது
தியானத் தலமல்லவா
மோகத்திருவுருவாய்- எங்கள்
பைரவி வந்தமர்ந்தாள்
லிங்க வளாகத்திலே-ஒரு
ரௌத்திரக் கோலத்திலே
பொங்கும் ஒளியாக-அன்னை
பேரருள் செய்ய வந்தாள்


கேட்ட வரம் கொடுப்பாள் -அன்னை
கேடுகள் நீக்கிடுவாள்
ஆட்டங்கள் ஆடிடுவாள் -அன்னை
அச்சந் தொலைத்திடுவாள்
ஊட்டங் கொடுத்திடுவாள்-அன்னை
ஊக்கங் கொடுத்திடுவாள்
வாட்டங்கள் போக்கிடுவாள்-அன்னை
வேண்டும் நலங்கொடுப்பாள்

ஆசையுடன் தொழுதால்-அவள்
ஆனவினை துடைப்பாள்
ஓசைதரும் எதிலும் -அவள்
ஓங்காரம் ஆகிடுவாள்
பேச இனியவளாம்-லிங்க
பைரவி வந்துவிட்டாள்
ஈஷாவில் இன்னும்பல
அற்புதம் செய்ய வந்தாள்


மந்திர தேவியன்றோ-அன்னை
தந்திர ராணியன்றோ
எந்திரம் ஆளுபவள்- இங்கு
என்னென்ன செய்ய வந்தாள்
முந்தி அருள் கொடுக்கும்-தியான
லிங்க வளாகத்திலே
வந்தவள் பைரவியாம்-அவளை
வந்தனை செய்திடுவோம்

சத்குரு பிறந்தநாள்-செப்டம்பர் 3

நீவந்த நாளின்றுதானோ-இதை
நீசொல்லி நான்நம்புவேனோ
வான்வந்த நாள்தானே நீவந்தநாள்-மலரில்
தேன்வந்த நாள்தானே உன் பிறந்தநாள்

ஆதார சுருதிக்கு ஆண்டேது நாளேது
அய்யாநீ அதுபோன்ற சங்கீதமே
பேதங்கள் ஏதொன்றும் பாராத திருவேநீ
பிரபஞ்சங்கள் முழுமைக்கும் பூபாளமே

முடிவேதும் இல்லாத ஆகாயமே-உன்
மடிமீது நான்கூடப் பூமேகமே
படியாத என்னெஞ்சம் படிகின்ற இடமாகும்
மலராக அசைகின்ற உன்பாதமே-

உன்பார்வைஒளியாக என்னெஞ்சம் அகலாக
என்னுள்ளே ஒருஜோதி உருவானதே
என்மோகப் புயல்வீச என்தேகம் அலைபாய
நீதந்த ஒளிமட்டும் நிலையானதே

நீதந்த பாதைதான் நான்செல்வது-அதில்
நான்வீழும் பள்ளங்கள் நான்செய்தது
நீவந்து கைதந்து நடைபோடச் சொல்லாமல்
இனியெங்கு நான்செல்வது

நெரூர்-சதாசிவ பிரம்மேந்திரர் சந்நிதியில்

முன்பொரு பிறவியில் முகம்பார்த்தேன் -உன்
மோன நெருப்பிலென் வினை தீர்த்தேன்
பின்னரும் பிறவிப் பிணிசேர்த்தேன் -உன்
பொன்னிழல் சேர்ந்திடும் வழிகேட்டேன்

கருவூர் குடிபுகும் உயிருக்கெல்லாம்- நல்ல
கதிதர உனக்குத் திருவுளமோ
நெரூரில் அமர்ந்த நல்லொளியே- உன்
நெஞ்சினில் எனக்கும் ஓரிடமோ

திக்குகள் அம்பரம் என்றிருந்தாய்-கொண்ட
தேகத்தின் எல்லைகள் தாண்டிநின்றாய்
பக்கபலமே சதாசிவமே-எங்கள்
பிரம்மேந்திரனே அருள்தருவாய்

மின்னல் தெறிக்கும் அருள்நாதம்-அன்று
மணலில் எழுதிய உன்கீதம்
நின்று நிலைக்கும் அவதூதம் -உன்
நிசப்தம் தானே சதுர்வேதம்

2

ஞான சதாசிவமே நானிந்த வையகத்தில்
ஊனில் சதாஅவமே ஓர்வதனால்-தானாய்த்
தெளியவழி யில்லை தயாபரனே உந்தன்
ஒளிவழியை ஏதென் றுணர்த்து.

சீர்த்த மலர்ப்பாதம் சிந்தை இருத்தவோ
கீர்த்தனைகள் பாடிக் களிக்கவோ-வேர்த்தடமே
இல்லா திருவினைகள் எல்லாம் களையவோ
சொல்லாய் சதாசிவமே


கற்றவழி செல்லுங்கால் கர்வந் தடுக்கியது
பற்றுவழி பாரம் பெருக்கியது-மற்றுவழி
காணாச் சிறுவன் கலக்கந் தனைதீர்த்து
பேணாய் சதாசிவமே பார்த்து

நல்லா ருடன்சேர்ந்தும் நானேன் துலங்கவில்லை
பொல்லா மனமேன் படியவில்லை-எல்லாரும்
உய்யவே மண்ணில் உலாவும் சதாசிவமே
பையவே என்னையும் பார்

வரமா சாபமா வார்த்தைகள்??

சொல்லால் கனத்தமனம் சூனியத்தால் இன்பமுறும்
நில்லா நினைவுகள் நின்றுவிடும்-பொல்லாக்
குரங்கு மனமிதுவுங் குன்றேறி நிற்கும்
விரல்பறிக்கும் ஞானக் கனி.

சச்சரவுக் கிச்சையாய் சாடுகிற சாட்டையும்
உச்சரிக்கும் சொல்லென் றுணர்வோமே-நச்சரிக்கும்
வார்த்தைகளைச் சாடி வரிசையிலே வாவென்று
சீர்த்தமதி சொன்னால் சுகம்

பாலை சுடுமென்றல் பழையகதை: மௌனத்தின்
சாலையிலே சூளையும் சோலைதான் - லீலையிதை
ஆக்குபவள் யாரென் றறியாமல் ஆடினால்
பாக்குவைக்க நேரும் பழிக்கு.

நாவு புரள்கையிலே நாமும் புரள்கின்றோம்
கோவில் புறாபோலக் கூச்சலிட்டு-ஆவலாய்
சேர்த்துவைத்த சொந்தம் சுடுதணலாய் ஆவதும்
நீர்த்துவிட்ட வாழ்வின் நிலை.

தானாய் விழுந்தமழை தேனாய் கனிந்தகனி
ஆனால் அதுதானே ஆனந்தம்- ஏனாம்
அமிலமழை வார்த்தை அழுகிவிட்ட வாழ்க்கை
திமிர்தானே நாக்குத் திமிர் .

Friday, February 19, 2010

நவராத்திரி கவிதைகள் (14)

1.குமரித் தெய்வம்

சின்னஞ் சிறுமியிவள்- நம்
செல்வக் குமரியிவள்
என்னில் நிறைந்திருக்கும்-ஓர்
இன்பக் கவிதையிவள்
தன்னந் தனிமையிவள்-உயர்
தாய்மைக் கனிவு இவள்
பொன்னில் எழுதிவைத்த -ஒரு
புன்னகை ஜோதியிவள்

வாலைக்குமரியிவள்- நம்
வாழ்வின் பெருமையிவள்
மூலக் கனலாகி- நிற்கும்
மந்திர ரூபம் இவள்
நீலக் கடலருகே-வாழும்
நித்திய கன்னியிவள்
காலம் உணராத -பெரும்
காதல் கனவு இவள்

மூன்று கடல்கள் தொழும்-ஒரு
மோனத் தவமும் இவள்
நான்கு மறைகளுக்கும்-நல்ல
நாயகத் தெய்வம் இவள்
தோன்றும் புலனைந்தும் -நின்று
தோயும் சிவமும் இவள்
ஈன்ற உலகுதனைக் -காக்கும்
எங்களின் அன்னை இவள்

செஞ்சுடர் வண்ணமிவள்-அருள்
செங்கயல் கண்ணியிவள்
அஞ்சு கனல் நடுவே-தவம்
ஆற்றிடும் தேவியிவள்
பஞ்செனும் பாதம் வைத்து-மனப்
பீடத்தில் ஏறுபவள்
நெஞ்சினில் கள்ளம் கொண்டால்-கண
நேரத்தில் மாறுபவள்

கங்கைச் சடை இறைவன் -நெஞ்சில்
கொஞ்சிடும் தாகம் இவள்
மங்கல ரூபம் இவள்-அட
மாபெரும் மோகம் இவள்
தங்கத் திருவுடலில்-கனல்
தாங்கிடும் யாகம் இவள்
கங்குல் இருளகற்றும்-இளங்
காலை உதயமிவள்

ஆலம் விழுங்கியவன் -கண்டம்
ஆள்கிற நீலியிவள்
கோலம் அழகெனினும்-கொள்ளும்
கோபத்தில் காளியிவள்
சேலெனக் கண்சிரிக்கும்-இளம்
சிற்றாடைச் செல்வியிவள்
ஓலமிடும் கடலில் -வரும்
ஓங்கார நாதமிவள்

2.ஆசையுடன் சொல்லுந்தமிழ் கேட்பாள்

சக்திக்குக் கவிதைமொழி சங்கேத பாஷை
சந்நிதியின் கிளிகளுக்கும் சுரம்பாடஆசை
பக்தியுடன் இசைப்பதெல்லாம் சங்கீதமாம்-இந்தப்
பேதைசொல்லும் உளறலெல்லாம் புதுவேதமாம்!

எத்தனையோ நியமங்கள் மறைசொல்லிக் காட்டும்
பித்துமனம் அன்னைக்குப் பிடிமண்ணை ஊட்டும்
தத்துவங்கள் மண்டைக்குத் தகராறுதான் -அந்தத்
தாய்நினைத்தால் என்வாழ்வு வரலாறுதான்

அரக்கரினம் அழிக்கத்தான் அவள்சீறி எழுவாள்
இரக்கமுடன் சிறுவன்முன் பாலாகப் பொழிவாள்
விரதமெல்லாம் என்னுள்ளம் அறியாதது-அவள்
விழிபட்டு வினையெல்லாம் பொடியானது

அல்லுக்குள் இருளாக அவள்நின்று முறைப்பாள்
சொல்லுக்குள் ஒளியாக சுடர்வீசிஜொலிப்பாள்
கல்லைவிட என்னுள்ளம் கரும்பாறைதான்-அவள்
கடைக்கண்ணால் இன்றதுவும் கனிச்சோலைதான்

வேள்வியிலே விழுந்தாலும் வந்துவிட மாட்டாள்
வேகமுடன் வந்தவளே என்பாடல் கேட்டாள்
கேள்விக்குள் அவள்கருணை அடங்காதுதான்-என்
கேவலொலி அவளுள்ளம் தாங்காதுதான்

ஆதிசக்தி யாயிருந்தும் அவளெனக்கு அன்னை
நாதியில்லாப் பிள்ளையென்று நாடிநிற்பாள் என்னை
பாதகங்கள் ஒருபோதும் தாளாதவள்-என்
பாவங்கள் ஒருபொருட்டாய்ப் பாராதவள்

பிரபஞ்சங்கள் கருப்பையில் பெற்றெடுத்து வளர்ப்பாள்
பிரியத்தில் ஒருமகனைப் பெற்றவள்போல் இருப்பாள்
நரகத்தில் நான்வீழத் தாங்காதவள்-இங்கு
நான்பிறந்த காரணத்தால் தூங்காதவள்

ஊரெல்லாம் கோயிலுண்டு உள்ளமவள் வீடு
தேரெல்லாம் காத்திருக்க ஏறுவதென் ஏடு
காரெல்லாம் வான்வெளியில் விதைத்தாள் -நான்
கவளமுண்ண தானியங்கள் கொடுத்தாள்

பூசனைக்கு வேதமெல்லாம் போட்டியிட்டு முந்தும்
ஈசனவன் திருவிழிகள் இளங்காதல் சிந்தும்
பாசமுடன் அன்னையென்னைப் பார்ப்பாள் - நான்
ஆசையுடன் சொல்லுந்தமிழ் கேட்பாள்

3.எங்கும் அவள் கோலம்

பொன்னில் குளித்தொரு மின்னலெழுந்தது பொன்னி நதியோரம்-அதன்
கண்கள் இரண்டினில் வெய்யில் பிறந்தது வானம் ஒளிரூபம்
சின்னஞ் சிறுபதம் மெல்ல அசைந்ததில் தென்றல் தடுமாறும்-எங்கள்
அன்னை இவளென விண்ணும் குதித்திட எங்கும் அவள்கோலம்

பண்டொரு நாளவள் பர்வத ராஜனின் பாசச் சிறுபிள்ளை-தனைக்
கொண்டவன் ஆடிடும் கோரச் சுடலையில் கொஞ்சும் கொடிமுல்லை
அண்டம் முழுவதும் தந்தவள் ஆயினும் அன்புக் கவளெல்லை- நீல
கண்டத்தில் கைவைத்த காருண்ய தேவியின் காதலுக்கீடில்லை

தங்க முகத்தினில் குங்குமம் மின்னிடக் கோயிலில் நிற்கிறவள்-ஒரு
பங்கம் எதுவுமென் பாதை வராமலே பார்த்து மகிழ்கிறவள்
சிங்கத்தில் ஏறியே சீறி அசுரர்மேல் சூலம் எறிகிறவள்-அதில்
பொங்குங் குருதியை செஞ்சுடர் வண்ணமாய் வானில் வரைகிறவள்

கும்மிகள்கொட்டியே கும்பிடும்பக்தர்முன் கோலாட்டம் ஆடிடுவாள்-தனை
நம்பிய பிள்ளைகள் நெஞ்சக் கவலையை வேலாட்டம் சாடிடுவாள்
வெம்பிய பட்டரின் வேதனை தீர்த்திட வெண்ணிலவாகி வந்தாள்-எங்கள்
சம்பு தவம் செய்யும் இன்ப வனத்தினில் சங்கமம் காண வந்தாள்

காலை விடியலைக் காட்டும் அவளொளி காண அரியதடா-கடும்
பாலை வழியினில் பாலைத் தருமருள் பாட அரியதடா
வாலை வடிவினள் கோலக் கருணையோ வானில் பெரியதடா-அவள்
காலைப் பிடித்தவர் வாழ்வை ஜெயித்தவர் காலம் உணர்த்துமடா

4 உள்ளத்தில் அவள்நடந்த ரேகை

சொந்தமெல்லாம் அவள்போட்ட கணக்கு-அன்னை
சொக்கட்டான் ஆட்டத்தின் வழக்கு
அந்தமிலாப் பேரழகி அன்புநிறை சந்நிதியில்
ஆசையுடன் ஏற்றுகிற விளக்கு-இந்தப்
பாசமெல்லாம் அவள்கொடுத்த ஜொலிப்பு

எத்தனையோ ரூபமவள் எடுப்பாள்-வந்து
என்வினைகள் அத்தனையும் முடிப்பாள்
கத்தியழுதாலு மெங்கள் சக்தியறியாததென்ன
கேட்டவரம்பொழுதறிந்து கொடுப்பாள்- நம்
பசியறிந்து பாலமுதம் படைப்பாள்

தோழியென்றும் வரத்தெரிந்த தோகை-என்
தோளிரண்டில் அவள்கொடுத்த வாகை
ஊழியினை ஆட்டுவிக்கும் உத்தமியைக் கைதொழுதேன்
உள்ளத்தில் அவள்நடந்த ரேகை-இந்த
உலகமவள் படியளந்த ஈகை

யானெனது என்றுதுள்ளும் உள்ளம்-இவை
யாவையுமே அவள்கருணை வெள்ளம்
ஊனெடுக்கச் சொன்னவளே உள்நிலையில் ஆழ்ந்திருந்து
தேனெடுக்கச் சொன்னதென்ன கள்ளம்!-இந்தத்
தேகமந்த தேன்நிரம்பும் பள்ளம்!

ஒளிசுமந்த புன்னகையில் விழுந்தேன் - அவள்
ஒருபார்வை பார்த்தவுடன் மலர்ந்தேன்
கிளிசுமந்த தோளழகி கண்சிவந்த பேரழகி
கனகமலர்ப் பாதத்தில் கிடந்தேன் -என்
கலிமெலிந்து போனதென எழுந்தேன்

5.பொம்மைகள்

மனதுக்குள்ளே குவியலாக பொம்மைகள் -அதை
மகராசி அடுக்கிவைத்தால் அழகுதான்
கனவினிலே பார்த்தசில பொம்மைகள் - அதை
காளியன்னை வாங்கித்தந்தால் மகிழ்வுதான்
எனதுகையில் எத்தனையோ பொம்மைகள்-அவை
எட்டி எட்டிப் போகும் போது அழுகைதான்
தனிமையிலே மிரட்டுதம்மா பொம்மைகள்- நான்
தணல்நடுவே மாட்டிக் கொண்ட மெழுகுதான்

தொட்டில்கண்ட காலம்முதல் பொம்மைகள்-எனைத்
தொடர்ந்துவந்து விரட்டுவதைக் கூறவா?
பட்டமரம் தன்னில்செய்த பொம்மைகள்-அவை
பூத்துத்தந்த பூக்களைநான் காட்டவா?
விட்டபின்னும் ஒட்டிக்கொண்ட பொம்மைகள்-அதன்
விளையாட்டில் வலியவந்து மாட்டவா?
கெட்டபின்னும் கையில்தொட்ட பொம்மைகள்-அதன்
காயங்களைக் கவிதைகொண்டு ஆற்றவா?

வலுவில்லாமல் வீசிவிட்ட பொம்மைகள்-அவை
வழியினிலே கிடக்குமென்று தேடினேன்
சலித்துக்கொண்டே வாங்கிவந்த பொம்மைகள்-அவை
செய்திருக்கும் உதவிகண்டு ஆடினேன்
நிலவுக்குள்ளே கண்டெடுத்த பொம்மைகள்- அவை
நேரில்வந்து கொஞ்சும்போது பாடினேன்
கொலுவினிலே நாமும்கூட பொம்மைகள்-அன்னை
கொண்டுவந்து வைக்கும்போது வாழுவேன்

தேடித்தேடி வாங்கிவந்த பொம்மைகள்-அவை
தோள்களிலே பாரமாகும் விந்தையே
வாடிவாடி ஏங்குகின்ற மாந்தர்கள்-இந்த
வையகமே பொம்மைவிற்கும் சந்தையே
ஓடிஓடி ஆடுமிந்த பொம்மைகள்-அவள்
உந்துவிசை தந்ததனால் மட்டுமே
ஆடியாடி ஓய்ந்துவிழும் பொம்மைகள்-இது
ஆதிசக்தி போட்டுவைத்த சட்டமே!

6.நாளும் பொழுதுமே தேவிமுகம்

காலைக் கருக்கலில் கன்னிமுகம்-உச்சி
காயும் கதிரினில் காளிமுகம்
நீல இரவினில் நீலிமுகம்-இங்கு
நாளும் பொழுதுமே தேவிமுகம்

நீளும் மலர்களில் அன்னைவிரல்-முகில்
நீந்திடும் வானெங்கள் அன்னை உடல்
கோள்கள் அவளது தாயத் திரள்-அந்தக்
கோயில் மணிச்சத்தம் அன்னை குரல்

வண்டு முரல்வதே மந்திரமாம்-மெல்ல
வீசிடும் தென்றலே சந்தனமாம்
தண்டுவடமே கொடிமரமாம்-இந்தத்
தேகமே அன்னையின் ஆலயமாம்

வேதங்கள் அன்னையின் பாதங்களாம்-அதில்
வண்ணக் குழம்புகள் நாதங்களாம்
போதங்கள் கோயிலின் தீபங்களாம்-அவள்
பார்வையில் பூப்பதே ஞானங்களாம்

அம்புலி சூரியன் சக்கரமாம்-எங்கள்
அன்னைக்கு வான்வெளி வாகனமாம்
அம்பிகை சந்நிதி அண்டமெல்லாம்-அங்கு
அர்ச்சனைப் பூக்களே நம்முயிராம்




7.கரூர் வடிவுடை நாயகி

அப்பிபாளையத்திலே அன்னைக்குப் பிள்ளையாய்
அம்பிகை பிறந்ததென்ன
அப்பனை ஈசனைக் கைப்பிடித் திடுகின்ற
ஆவேசம் வளர்ந்ததென்ன
கற்பனை என்றிதைக் கருதிடா வண்ணமே
காட்சிகள் நிகழ்ந்ததென்ன
பொற்புடை ஈசனும் ஆநிலைக் கருவூரில்
பூவையை மணந்ததென்ன

விடிவுடை வானத்தின் வெளிச்சமாய் வருகின்ற
வற்றாத கருணை ஒளியே
கொடியிடை படர்ந்திடும் கொம்பென ஈசனைக்
கருதிகை பற்றும் எழிலே
அடிமுடி அறிந்திடா அப்பனை மணந்திட
ஆநிலை வந்த அழகே
வடிவுடை அன்னையே!புதிரென்னும் வாழ்வினில்
விடைகளைத் தந்து அருளே!

சந்நிதியின் முன்பாக சொல்லியழ வந்தாலோ
சஞ்சலம் மறக்கின்றதே
அன்னையுன் பொன்முகம் அற்புதச் சுடர்விட
அவதிகள் இறக்கின்றதே
என்னைநான் தொலைத்ததை எண்ணிடும் கவலையும்
இல்லாமல் தொலைகின்றதே
தன்னையே ஈசனும் தந்தவுன் சரிதையால்
திசைகளும் சிலிர்க்கின்றதே

கல்யாண பசுபதி என்கின்ற பேரினைக்
கருவூரில் நாதன் கொண்டான்
சொல்லென்றும் பொருளென்றும் தேவியர் இருவரை
சுந்தரன் தூதன் கொண்டான்
அல்லென்றும் பகலென்றும் பொழுதுகள் சுழல்கையில்
அந்தியாய் வந்துநின்றான்
கல்லென்று சொல்பவர் கருத்தையும் கனிவிக்க
கைத்தலம் பற்றி நின்றான்

மானிடப் பெண்ணாக மண்ணிடை வந்தவள்
மாசக்தி ஆகிநின்றாள்
ஊனுடன் உயிரினை உத்தமன் பாதத்தில்
உறுபொருள் ஆகத் தந்தாள்
வானிடம் பெறுவதே வாழ்கிற உயிர்பெறும்
வாழ்வென்று காட்டி நின்றாள்
தானெனும் ஒன்றினைத் துறந்தவள் பிரபஞ்சமே
தானென்று ஆகிநின்றாள்


8.என்ன செய்வேன்

இல்லாத வல்லமை உள்ளதாய் எண்ணிடும்
இதயத்தை என்ன செய்வேன்
சொல்லாத புகழ்மொழி சொன்னதாய் நம்பிடும்
சிந்தையை என்ன செய்வேன்
கல்லாத நெஞ்சினைக் கல்வியின் மலையென்னும்
கர்வத்தை என்ன செய்வேன்
பொல்லாத மாயையின் நில்லாத லீலைமுன்
பிள்ளைநான் என்ன செய்வேன்

மாற்றங்கள் ஏதொன்றும் ஏற்காமல் தூற்றிடும்
மாயையை என்ன செய்வேன்
நேற்றைக்கோர் நீதியும் நாளைக்கு வேறுமாய்
நினைப்பதை என்ன செய்வேன்
காற்றிலாப் பாலையில் காற்றாடி விடுகின்ற
கோலத்தை எங்கு சொல்வேன்
ஊற்றாகும் வினைகளின் சேற்றிலே மூழ்கிடும்
உயிரைநான் என்ன செய்வேன்

எத்தனை பாடுகள் எத்தனை கேள்விகள்
இவைநீயும் அறியாததா
அத்தனை இருளையும் அகற்றிடும் கடைவிழி
அதுஇன்னும் திறவாததா
பித்தனைப் பித்தாக்கும் பிச்சியே உன்செவி
புலம்பல்மொழி கேளாததா
நித்தமும் புதியதாய் நேர்ப்படும் வானமே
நிலைநீயும் உணராததா

ராகங்கள் பிறக்கின்ற ரஞ்சிதத் தேன்குரல்
ராவினில் ஒலிக்கட்டுமே
யாகங்கள் துதிக்கின்ற யாமளை பாதங்கள்
என்வினை மிதிக்கட்டுமே
பாகமுனைக் கொண்டவன் வேகங்கொண்டாடிடும்
பாட்டினொலி கேட்கட்டுமே
தேகமிதன் உள்ளிலே தேன்மிதக்கும் கள்ளிலே
தாகங்கள் தணியட்டுமே


9.கானமிசைத்தாள் அன்னை


வீணை நரம்புகள் அதிர்ந்தன வாணியின்
விரல்தொடும் முன்னாலே-கானம்
பிறந்திடும் முன்னாலே
ஆணை அவள்தர அரும்பிய கலைகளும்
நடந்தன முன்னாலே-அவள்
பதங்களின் பின்னாலே

நான்முகன் கைத்தலம் நாயகி பற்றிட
நிகழ்ந்தது படைப்பெல்லாம்-இங்கே
பிறந்தது பிறப்பெல்லாம்
தேன்குரல் ஒலித்திட திசைகளும் சிலிர்த்திட
விளைந்தது மொழியெல்லாம் - நம்
செழுந்தமிழ் அழகெல்லாம்

வெண்ணிறத் தாமரை பண்ணிய புண்ணியம்
வீற்றிருந் தாள் அன்னை-தவம்
நோற்றிருந்தாள் அன்னை
கண்கள் திறந்ததும் பண்கள் பிறந்ததும்
கானமிசைத்தாள் அன்னை-முக்
காலமசைத்தாள் அன்னை

சதங்கையின் மணியினை எழுதுகோல் முனையினை
சந்நிதியாய்க் கொண்டாள்-கண்ணில்
செஞ்சுடர் ஒளி கொண்டாள்
விதந்தரும் உளியினை தூரிகை முனையினை
வீடென அவள்கொண்டாள்-கையில்
ஏடொன்றும் அவள் கொண்டாள்

மலைமகள் அலைமகள் மகிமைகள் சொல்லவும்
கலைமகள் அருள் வேண்டும்-சொல்லுங்
கவிதையில் அவள் வேண்டும்
நிலையுயர் வீரமும் நலந்தரும் செல்வமும்
நிறைந்திட மதி வேண்டும்-எங்கள்
நிர்மலை துணை வேண்டும்

நாமகள் அவளது நாட்டியம் நிகழ்கையில்
நாவே பதமென்றார்-அவள்
பாதம் சதமென்றார்
மாமது ரக்குரல் மயங்கிடச் செய்கிற
மந்திரம் இதமென்றார்-அவள்
மாயங்கள் நிஜமென்றார்

சாமரம் வீசிட சந்திர சூரியர்
சந்நிதி சேர்கின்றார்- அவள்
சாநித்யம் காண்கின்றார்
பாமரன் நாவிலும் பாமழை பொழிகிற
பேரருள் உணர்கின்றார்-அந்தப்
பெருமையில் ஒளிர்கின்றார்


10.ஆசனங் கொண்டாள்

அலைநடுவே பிறந்துவந்தாள் அழகுருவாக-அங்கே
அமுதம்கூடப் பிறந்ததுண்டு அவள்நகலாக
விலையறியா வளம் பெருகும் அவளருளாக-உள்ள
வறுமையெல்லாம் விலகிவிடும் ஒருவழியாக

மாலவனின் மார்பினிலே ஆசனங் கொண்டாள்-தன்
மணாளனுக்கு சீதனமாய்ப் பாற்கடல் தந்தாள்
பாலையிலே தவிக்கும்போது பால்மழை பெய்வாள்-ஒரு
பார்வையிலே குடிசைகளை கோபுரம் செய்வாள்

கண்ணன்வாயில் விழுந்த அவல் கரைந்திடும் முன்னே-அவள்
கண்ணசைவில் குசேலர்வீட்டில் நிறைந்தது பொன்னே
மண்ணைத் தின்னும் சிறுவனுக்குக் கவலைகள் என்னே-அந்த
மலர்மகளே மணமகளாய் அமைந்ததன் பின்னே

11.சீக்கிரம் வந்தே அமராயோ

சட்டைப் பைக்குள் கைவிட்டால்
சரஸ்வதி ஆயுதம் தட்டுப்படும்
கட்டி வாசியைக் காணுங்கால்
கயிலைக்காரியின் மூச்சுபடும்
பெட்டி திறந்து வைக்கின்றேன்
பர்ஸிலும் இடங்கள் கொடுக்கின்றேன்
சுட்டிப் பெண்ணே மஹாலஷ்மி
சீக்கிரம் வந்தே அமராயோ

கால்துகள் உனதொன்று பட்டாலும்
காசோலைகள் குவியாதோ
வால்தனம் பார்த்துப் புன்னகைத்தால்
வரைவோலைகள் நிறையாதோ
பாலகன் என்னைப் பார்த்திட்டால்
பணவிடை வந்து சேராதோ
காலத்தில் கூட்டங்கள் அமைந்திட்டால்
கவர்கள் கையில் கிட்டாதோ

அஷ்ட லட்சுமி நீயென்று
ஆராதனைகள் செய்கின்றோம்
இஷ்ட லட்சுமி இவளென்று
எழுதவும் கூடச் செய்கிறோம்
துஷ்டர்கள் சிலபேர் தூண்டிவிட்டு
தாயே உன்போல் வேடமிட்டு
கஷ்ட லட்சுமி அனுப்பிவைத்தார்
கடுகி அவளை விரட்டாயோ

செந்தாமரையில் அமர்ந்தாயே
சுற்றிலும் பொய்கை நாறாதோ
சுந்தரன் நெஞ்சில் அமர்ந்தாயே
சுற்றுலா கிளம்பக் கூடாதோ
சொந்த மனைகள் வாங்காதே
விலைகள் நிலவரம் தெரியாதோ
இந்தப் பிள்ளை இதயத்தை
இடமாய்க் கொண்டால் ஆகாதோ

தனங்கள் தான்யம் கேட்டாலோ
தேர்தலில் கூடத் தருகின்றார்
கனமாய்ப் பதவிகள் கேட்டாலோ
கவர்னர் பதவியே தருகின்றார்
தனியாய் வேறென்ன கேட்டாலும்
தலைவர்கள் இதெல்லாம் தருகின்றார்
மனமாம் சந்தையில் நிம்மதியை
மகிழ்ந்து தருவாய் மஹாலஷ்மி

12.வெண்பாவின் மாலை வடிவாமோ

வெண்கமலம் வீற்றிருப்பாள் வாணி-விருப்புடனே
செங்கமலம் வீற்றிருப்பாள் ஸ்ரீதேவி-கண்குளிர
சிங்கமுது கேறிச் சிரித்திருப்பாள் மாசக்தி
இங்கினிமேல் உண்டோ இடர்.

ஒன்பது ராத்திரிகள் உள்முகமாய்ப் பார்த்திருந்தால்
பொன்பொழியும் கல்வியெனும் பூமலரும்-வன்மையெலாம்
வந்து நிறைந்திருக்கும் வானம் இறங்கிவரும்
முந்திவரும் மேன்மை முகிழ்த்து

காலை இளங்காற்றே கார்முகிலே கண்ணெதிரே
வாலை வடிவாகும் வானகமே -கோலங்கொள்
முப்பெருந் தேவியர் முன்வைத்தே ஆடிடும்
பொற்பதங்கள் எங்கே புகல்.

கண்பாவை பூச்சொரிய காட்சிதரும் தேவியர்க்கு
வெண்பாவின் மாலை வடிவாமோ-பெண்பாவை
கன்னந் தனில்மழலை காதலுடன் தீற்றுகிற
சின்னவிரல் மையென்றே சாற்று.

அல்லி நிறமென்றும் அல்லின் நிறமென்றும்
சொல்லி வழிபாடு செய்யுங்கால்-வல்லியர்
எந்த விதமும் எதிர்ப்படுவர் ஆகையினால்
வந்துநிற்கும் யாவரையும் வாழ்த்து.

பந்தங் கொடுப்பதுவும் பாரமெனக் காட்டுவதும்
சொந்தம் பகையாய்ச் சொடுக்குவதும்-சந்ததமும்
தம்மை நினைத்துத் தமிழ்பாட வேண்டுமென்றே
அம்மையர் செய்யும் அருள்.

உற்ற வினைகள் உயிர்நிரம்பி யேததும்ப
உற்பத்தி செய்வினைகள் ஓங்கிவரும்-கற்றவையோ
உச்சந் தலைகனக்கும்! உத்தமியர் கண்பார்த்தால்
துச்சந்தான் இந்தத் துயர்.

பூங்கமல மாதர் புடைசூழ மாசக்தி
ஓங்கார ரூபமென ஓங்கிடுவாள்-ஆங்கே
அகர உகர மகரமாய் மூன்று
சிகரமாய் நிற்குஞ் சிறப்பு .

வேதங்கள் மீதேறி வஞ்சியிவர் ஆடுகையில்
பாதங்கள் நோகும் பொழுதறிந்து-நாதத்தின்
ஏழு ஸ்வரங்களும் ஏந்தவரும் அக்கணத்தில்
வாழும் இசையின் வளம்.

வையகமே மூவர் விளையாட்டு மைதானம்
பொய்யகலும் நெஞ்சமே பூப்பந்து-கையெடுத்து
வீசிவிரைந் தேந்தி விளையாடுங்கால் வினைகள்
கூசிவிரைந் தோடுங் குதித்து.


13.பொழுது புலர்கிற வேளையிது

புன்னகை எழுதுக பூவிதழே- நல்ல
பொழுது புலர்கிற வேளையிது
மின்னலை எழுதும் கிரணங்களால்-வான்
மிளிர்ந்து மலரும் நேரமிது
தன்னிலை உணர்ந்தநல் ஞானியரும்-ஒளி
தனக்குள் தேடிடும் சாதகரும்
அன்னையின் தளிர்க்கரம் தீண்டியதில்-தம்
ஐம்பொறி அவிக்கும் காலமிது

வெண்ணிற முகில்கள் வான்பரப்பில்-ஒரு
விசித்திர லஹரியில் மிதந்திருக்கும்
பண்ணொலி மிழற்றும் பறவைகளும்-அன்னை
புகழினை எங்கும் ஒலிபரப்பும்
கண்களில் அமுதம் கசிந்திருக்க-தவம்
கனிந்த உயிர்கள் சிலிர்த்திருக்கும்
வண்ணங்கள் விசிறும் தூரிகையால்-கீழ்
வானத்தின் கன்னம் சிவந்திருக்கும்

ஆதவக் கீற்றுகள் அவள்கொடைதான் -அந்த
அருவியின் தாளங்கள் அவள்நடைதான்
மாதவம் புரிபவர் மனக்கதவம்-தொடும்
மலர்க்கரம் அன்னையின் அருளொளிதான்
பாதங்கள் பதித்தவள் பவனிவர-நீலப்
பட்டுக் கம்பளம் வான்வெளிதான்
நாதமிசைக்கிற கடலலைகள்- எங்கள்
நாயகி நகைத்ததன் எதிரொலிதான்

தத்துவம் அவளது கால்விரல்கள்-அன்னை
திருவடி இரண்டும் மறையொளியாம்
வித்தகர் அறிவே பட்டாடை-அவர்
விநயம் அன்னையின் அணிகலனாம்
சித்திரக்காரர்தம் தூரிகைகள்-இன்னும்
சிந்திக்காதது அவள்நிறமாம்
நித்தில நிலவொளி புன்னைகையாய்-மின்ன
நயனங்கள் தருவதே கதிரொளியாம்


14.மூவரின் வாஞ்சையும் பெருகும்

பிரபஞ்சம் என்கிற பல்லாங்குழியில்
பற்பல கோள்களும் காய்கள்
விரலகளில் குலுக்கி விளையாடத்தான்
வாய்த்தனர் மூன்று தாய்கள்

சூரிய அடுப்பினில் செந்தணல் மூட்டிச்
சமைத்துக் கொடுத்தனர் வானம்
காரியக் காரிகள் பாத்திரத் திரள்களைக்
கழுவிக் கவிழ்ப்பதே ஞானம்

அன்னையர் மூவர் அரட்டையில் பிறந்தவை
அறுபத்துநான்கு கலைகள்
மின்னை இடியை மழையை நெய்த
மகிமைக்கு ஏது விலைகள்

பூமிப் பள்ளியில் பிள்ளைகள் படித்திட
பாடம் வகுத்தனர் மூவர்
சாமிகள் எல்லாம் சேர்ந்து படிக்கவும்
செய்தனர் அந்தத் தாயர்

அன்னத்திலேறி ஒருத்தியின் கணவன்
அங்கும் இங்கும் அலைவான்
இன்னோர் அன்னையை இதயத்தில் வைத்தவன்
எல்லா நேரமும் துயில்வான்

மற்றவள் கணவன் மிகுவிடம் பருகி
மோன மயக்கத்தில் இருக்க
பெற்றநம் தாயரே பல்லுயி ரெல்லாம்
படைக்க-காக்க-அழிக்க

அண்டம் என்கிற ஒண்டுக் குடித்தனம்
அன்னையர் மூவரின் இருப்பு
அண்ட விடாமலே பகையை அழிப்பதில்
அடடா மூவரும் நெருப்பு

முத்தீ எனத்திகழ் சக்தியர் அனலில்
மூல வினைகளும் கருகும்
முத்தி என்கிற சொத்தினைத் தருவதில்
மூவரின் வாஞ்சையும் பெருகும்

வாழ்க்கைப் பள்ளியில் வாசிக்கும் பிள்ளைகள்
வரும்வரை அன்னையர் தவிப்பார்
ஊழெனும் புத்தக மூட்டையை இறக்க
உறுதுணை புரிந்து அணைப்பார்

அன்னையர் ஊட்டும் அமுதம் மறுத்து
ஐம்புலன் கேட்கும் தீனி
என்னதந் தாலும் அடம்பிடிக்காமல்
ஏற்கும் பிள்ளையே ஞானி

அதே முகம்......அதேசுகம்.....

15.10.2009 திருக்கடையூர்


அதே முகம்......அதேசுகம்.....
அன்று தொலைந்ததே அதே இதம்
நெஞ்சில் நிறைந்ததே அவள் பதம்

பிறவி பலவாகப் பார்த்த முகம் -என்
கனவில் பலநேரம் பூத்த முகம்
மறந்து கிடந்தாலும் தேடும் முகம்-ஒரு
மறுமை இல்லாமல் சாடும் முகம்

தீப ஒளியோடு தெரிந்த முகம் -என்
திசைகள் எல்லாமே அறிந்தமுகம்
நாபிக்கமலத்தில் எழுந்தமுகம் - என்
நாடி நரம்பெங்கும் நிறைந்த முகம்

அமிர்தலிங்கத்தில் லயித்த முகம்- அவன்
அருந்தும் நஞ்சோடித் தடுத்த கரம்
குமுத மலர்போலக் குளிர்ந்த முகம்-திருக்
கடவூர் தலம்காக்கக் கனிந்த முகம்

திறந்தும் திறவாத விழியழகும்-அருள்
துலங்கும் இதழோடும் நகையழகும்
நிறைந்த ஒளிபோன்ற நிறத்தழகும்-நின்று
நாளும் கதைபேசும் தேவிமுகம்

இருளில் நிலவொன்றை எழச்செய்தவள்- நான்
ஏந்தும் சுமையாவும் விழச்செய்தவள்
சுருளும் குழலாலே மழைசெய்தவள்-ஒரு
சுகத்தில் தினம்நானும் அழச் செய்தவள்

குருவின் திசைகாட்டிக் குளிர்வித்தவள்-என்
கனவு பலநூறும் மலர்வித்தவள்
கருவில் அன்றென்னை வருவித்தவள்- நான்
கேட்ட பொருள்யாவும் தருவித்தவள்

கோயில் வரும்போது கதிர்காட்டினாள்-உள்ளே
கிளம்பும் சுடர்தூண்டிக் கொடியேற்றினாள்
வாயில் வரும்முன்னர் வெளிகாட்டினாள்-என்
விழிகள் இமைமூட ஒளிகாட்டினாள்.

உதிக்கின்ற செங்கதிர்...

2009 அக்டோபர் 15. திருக்கடையூரை நெருங்க நெருங்க அதிகாலை வேளையில் செந்நிலவாய் எழுந்தது சூரியன்.அங்கேயே நிகழ்ந்தது அபிராமி தரிசனம்




புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை....
கதிரை நிலவாக்கினாள்
அதிரும் மனம் ஓய அருளும் அபிராமி
அகிலம் எனதாக்கினாள்
பதங்கள் அசைந்தாட பட்டர் தமிழ்பாட
இருளை ஒளியாக்கினாள்
இதயம் அவள்கோயில் எதுவும் அவள்பூசை
எனையும் களியாக்கினாள்

அகலின் முனையோடு ஒளிரும் சுடரோடு
அழகு நகைகூட்டினாள்
இகமும் இனியேது பரமும் இனியேது
எல்லை அவள்காட்டினாள்
சுகங்கள் இவன்வாழ்வில்-சுமைகள் அவள்தாளில்
நொடியில் இடம்மாற்றினாள்
தகுதி அறியாத சிறுவன் இவன்வாழ்வை
சிவிகை தனில் ஏற்றினாள்

குழந்தைப் பருவத்தில் கோயில் முன்பாகக்
குதித்து விளையாடினேன்
மழலைக் குரலாலே அவளின் அந்தாதி
மகிழ்ந்து தினம்பாடினேன்
உழலும் வினையோடு வளர்ந்து வாழ்வோடு
உலர்ந்து தினம் ஏங்கினேன்
தழலின் வீச்சோடு தகிக்கும் மூச்சோடு
திரும்ப நிழல்தேடினேன்

காலம் பலசென்று கோயில் நுழைந்தேனே
கைகள் அவள்நீட்டினாள்
"பாலன் இவன்பாலன்" பாவம் என அன்னை
பரிந்து அமுதூட்டினாள்
நீல நயனங்கள் மூன்றில் ஒளிபொங்க
நயந்து கதைபேசினாள்
காலம் எனதென்றும் காவல் அவளென்றும்
காதில் அவள்கூறினாள்

வந்து தொழுமன்பர் சென்ற பிறகென்னை
வாஞ்சையுடன் பார்க்கிறாள்
அந்தம் அறியாத அன்பின் சுடராக
அமுதம் தனை வார்க்கிறாள்
எந்தன் நிலையென்ன? யாவும் அறிந்தாலும்
எனது கதை கேட்கிறாள்
கந்த மலர்ப்பாதம் கமழும் அருள்தந்து
குறைகள் அவள்தீர்க்கிறாள்.

தூரந் தொலைவாகப் போகும் எனைக்கூடத்
தொடர்ந்து வருகின்றவள்
ஈரம் கசியாத பாறை தனில்கூட
இறங்கி இதம்செய்பவள்
ஆரம் அசைந்தாட ஆடும் சிறுபிள்ளை
அசைவில் தெரிகின்றவள்
தாரில் நறுங்கொன்றை வாசம் வரக்கண்டு
தன்னை மறக்கின்றவள்

காலன் அவன்வீழ காலில் கடிகின்ற
கோபம் அவள்கோபமே
பாலில் குளிக்கின்ற பாவை அவள்பார்வை
பாவம்தனைப் போக்குமே
மூலம் நடுஈறு மூன்றும் அவளாக
மூளும் வினை ஓயுமே
கோலம் திருக்கோலம் காணும் விழியோடு
கங்கை நதி தோன்றுமே

குற்றாலக் கதகதப்பில்

நீரலையின் சாட்டைகொண்டு ஆடுகிறாள் அன்னை
நேரவரும் யாவரையும் சாடுகிறாள் அன்னை
பேரொலியின் தாளமிட்டுப் பாடுகிறாள் அன்னை
பாய்ந்துவந்து எனையணைக்கத் தேடுகிறாள் அன்னை

ஆடுகிறாள் அன்னை-அவள் -தேடுகிறாள் என்னை

வான்கருணை அருவியாக வந்து இறங்கும்-அதில்
ஊன்நனைந்து உயிர்நனைந்து உள்ளம் மயங்கும்
நான்தொலைந்து போக அங்கே நேரம் அரும்பும்
தேன்பொழிந்து தேன்பொழிந்து தேங்கி நிரம்பும்

நேரம் அரும்பும்-தேன் -தேங்கி நிரம்பும்

வினைகரைக்கும் கருவியைத்தான் மேனியென்கிறோம்
விரைந்துவிழும் அருவியைத்தான் ஞானியென்கிறோம்
கனவினிலே காணும் இன்பம் கானலென்கிறோம்
கண்னெதிரே விழும் அருவி காளியென்கிறோம்

ஞானியென்கிறோம்-அருவி-காளியென்கிறோம்

நீர்த்திரளின் அற்புதம்தான் நமது குற்றாலம்-சிவன்
ஊர்த்துவத்தின் நடனத்திலே அருவி பொற்றாளம்
கோர்த்துவைத்த வேதமிங்கே கோடி கற்றாலும்
ஆர்த்துவரும் அருவிமுன்னே அறிவு தாம்பூலம்

நமதுகுற்றாலம்-அது சிவனின் பொற்றாளம்

காசிக்காற்று

காசிநகரில் கங்கை வீசும் நதியலைகள்
பேசும் மொழிநமசி வாயம்
கீசுகீசெனவே பூசலிடுங்கிளிகள்
பாஷை அதுநமசி வாயம்
ஆசைவிடும்தருணம் ஆகிவரும் மரணம்
வாசல் வரும்நமசி வாயம்
பாசம் விடும்மனதும் பாரம் சுடும்நொடியில்
ஈசன் குரல்நமசி வாயம்

இமைகள் கதவடைய இதயம் மடையுடைய
அமைதி அதுநமசி வாயம்
சுமைகள் சிறகசைய சுடலை விறகெரிய
சுடரும் ஒளிநமசி வாயம்
இமயம் மனவெளியில் எழும்பும் ஒருநொடியில்
நிரம்பும் பனிநமசி வாயம்
சமயம் அமைந்துவர சுயங்கல் உணர்ந்தவுடன்
கனியும் கனிநமசி வாயம்

கடலில் புயலசைய திசைகள் அதிர்ந்தசைய
நடன கதிநமசி வாயம்
இடர்கள் மனம்கடைய தொடரும் வலிநிறைய
இழையும் சுகம்நமசி வாயம்
தடைகள் உடைந்துவிழ விழிகள் தொடர்ந்துஅழ
நிகழும் அருள்நமசி வாயம்
கடையன் இவன்வினைகள் முழுதும் தகர்ந்துவிழ
படரும் இருள்நமசி வாயம்

சோடா தமிழர் பானமா ?

நண்பர் சுகா எழுதிய கட்டுரை ஒன்றைக் குழுமத்தில் படித்த நண்பர் துகாராம்,
சோடா தமிழர் பானமா என்ற கேள்வியை எழுப்பினார்.அது தமிழர் பானமே,
கோலி சோடாவில் அடைபட்டிருப்பது தமிழர் மானமே என்று நிறுவி நான் எழுதிய ஆய்வுக் கட்டுரை(?).
இது தொடர்பாக வழங்கப்படும் கவுரவ டாக்டர் பட்டங்கள் கண்டிப்பாக ஏற்கப்பட
மாட்டாது


ஓடா நீர்நிலை உலர்மரக் கோடை
பாடாப் புள்ளினம் பயிலாப் புல்வெளி
நீடார் வெம்மை நீங்கிடத் தமிழர்
சோடா பருகிச் சுகம் பெறுவாரே"

என்னும் பழம்பாடல் வழியே, சோடா தமிழர் பானம் என்று நிறுவலாம்.

"ஆயுங்காலை அடர்ந்திடு குடுவையில்
வாயு கலந்த வெற்று நீரினைக்
கோயமுத்தூர்க் கோலி அடைத்து
வாயில் கவிழ்ப்பர் வண்டமிழ் மரபினர்"

என்று கோவைக்கலியிலும் ஒரு பாடல் காணப்படுகிறது

இனி,வருங்காலக் குறிப்புகளை முன்கூட்டியே பாடிய கிளிப்பாணி பித்தர் சுவடிகளில்

"தென்னாட்டவரும் தன்னிலை திரிந்து
தன்னாட்டவரின் தூநீர் மறந்து
பன்னாட்டவரின் பானங்கலந்து
என்னாட்டங்கள் இங்காடுவரோ"
என்று பாடியிருப்பதால்

"பன்னாட்டவரின் பானங்கலந்து" என்பது மதுவில் கலக்கும் சோடா கூட வெளிநாட்டுத் தயாரிப்பாக இருக்கும் என்ற குறிப்பைச் சுட்டுவதாய் உய்த்துணரலாம்.

இன்னுந் தேடினால் சோடா தமிழர் பானமே என்று முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத்தக்க வகையில் தரவுகள் கிடைக்கும் .
மிக முக்கியமான தகவல் என்னவென்றால், சுகா கட்டுரை படித்து துகாராம் இந்தக் கேள்வியை எழுப்புவார் என்பதையும் கிளிப்பாணிப்பித்தர் முன்கூட்டியே பாடியுள்ளார்.

"தகாதன செய்யும் தன்மையன் ஒருவன்
சுகாவெனும் பெயரினன் சுடர்மின் சுவடியில்
மிகாநிலை மிகுந்து முன் புனை உரைக்கு
துகாராம் வினாவுந் துலங்கிடுமாறே"

என்ற பாடல் எதேச்சையாகக் கண்ணில் பட்டபோது இறும்பூது எய்தினேன்

கங்கைக் கரையினிலே

என் வீட்டுக்காரி தீவிரமான மாரியம்மன் பக்தை சார்!"
என்னைப்பார்க்காமல், டைமண்ட் ஹோட்டல் அறையிலிருந்த நிலைக்கண்ணாடியைப்
பார்த்தபடியே மெல்லிய குரலில் சொன்னார் நண்பர். நிலைக்கண்ணாடி மேசையில்
வைக்கப்பட்டிருந்த பையில்தான் அவருடைய மனைவியின் அஸ்தி இருந்தது.காசி
டைமண்ட் ஹோட்டலுக்கு அன்று மதிய விமானத்தில் தான் வந்து
இறங்கியிருந்தோம்.மறுநாள் காலை அஸ்தி கரைக்க ஏற்பாடாகியிருந்தது
காசிக்கு இவ்வளவு விரைவில் மீண்டும் போகக்கூடிய வாய்ப்பு நேருமென்று
எதிர்பார்க்கவில்லை.ஆனால் வருத்தம் கலந்த வாய்ப்பு.நண்பருக்கும் எனக்கும்
ஒரே நாளில் திருமணம் நடப்பதாக இருந்தது.அவருக்குக் கோவையில்-எனக்கு
மதுரையில்.இரு திருமணங்களிலும் கவிஞர் வைரமுத்து கலந்துகொள்ள
வேண்டியிருந்ததால் நான் என் திருமணத்தை ஒருநாள் ஒத்திப் போட்டேன்.
நண்பர் சொந்த மாமன் மகளை மணந்தார். சேலத்தில் பல இடங்களில் புகழ்பெற்ற
இனிப்பகம் நடத்தி வருபவர் அவர்.
2009 ஆகஸ்ட்டில்அவருடைய மனைவி கோவையில் அம்மா வீட்டிற்கு வந்த இடத்தில்
திடீர் மரணமடைந்தார்.காரியங்கள் முடிந்ததும் அஸ்தியைக் கரைக்க காசி செல்ல
விரும்பினார் நண்பர்.

"சேலம் கோட்டை மாரியம்மன் மேலே அவளுக்கு ரொம்ப பக்தி சார்.அவ
அங்கே இருந்த வரைக்கும் அந்த அம்பாள் பார்த்துக்கிட்டான்னு அவ ஃபிரண்ட்ஸ்
எல்லாம் நம்பறாங்க" நிலைக்கண்ணாடியில் தெரிந்த நண்பரின் முகத்தையே
மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தபெண்ணின் மரணம் நிகழ்ந்தது கூட சக்தி நர்ஸிங் ஹோமில்தான்.தன் இஷ்ட
தெய்வத்தின் மடியில்தான் கண்மூடியிருக்கிறார் என்று ஆறுதலாய் சொல்லத்
தோன்றியது.சொல்ல வேண்டாமென்றும் தோன்றியது.
"காசியிலே அஸ்தி கரைச்சா காசியிலேயே மரணமடைந்ததற்கு சமானம்.அந்த
அம்மாவுக்கு மறுபிறவி கிடையாது."
கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் சொன்ன வார்த்தைகள் நண்பருக்கு ஆறுதலாக
இருந்தன.காசியில் வந்திறங்கிய கையோடு கனபாடிகளை சந்தித்தோம். பெரிய
இடத்துப் பரிந்துரையுடன் அவரைக் கோவையிலிருந்தே தொடர்பு கொண்டிருந்தோம்.
"காலமே ஏழரைக்கெல்லாம் வந்துடுங்கோ"என்று சொல்லியிருந்தார்
கனபடிகள்.அவருக்குப் பூர்வீகம் சுவாமிமலை.காசியில் அவர்,அவருடைய அண்ணா
மற்றும் வாரிசுகள் ஒரு வைதீக சாம்ராஜ்யமே நடத்துகிறார்கள்.

அவர் வீட்டு வரவேற்பறையில் உள்ள பெரிய புகைப்படத்தில் சிவாஜி கணேசன்
குடும்பத்துடன் கங்கைக்கரையில் அமர்ந்திருக்க கனபாடிகள்
பூஜை நடத்திக் கொண்டிருந்தார்.மற்ற புகைப்படங்களில்,சங்கர் தயாள் சர்மா,
முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கனபாடிகளுக்குப் பொன்னாடை
போர்த்திக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் சரியாக ஏழரைக்குப் போனபோது கனபாடிகள் வீட்டுத்திண்ணையில்
வீற்றிருக்க நாவிதர் சவரம் செய்து கொண்டிருந்தார்.பூஜைக்கான ஆயத்தங்கள்
செய்யப்பட்டிருந்தன.
கனபாடிகளின் அண்ணா பிள்ளை சிவக்குமார் தலைமையில் புரோகிதர்கள் தயாராக
இருந்தனர்.சிவக்குமார்,அமெரிக்காவில் உயர்பதவியில் இருந்தவர்.
இப்போது காசியில் பலரை உச்ச பதவிக்கு வழியனுப்பும் "காரியத்தில்"
இருக்கிறார்.

கங்கைக்கரையில் மணிகர்ணிகா காட் அருகே புரோகிதர்கள் காரியத்திற்கு
உட்கார்ந்தார்கள்.பெண்குரலொன்று மெல்லென்றொலிக்க திரும்பிப்பார்த்தேன்.
கன்னங்கறுத்த இளம்பெண் ஒருத்தி. மலர்களும் அகல்களும் அடங்கிய
கூடையை இடக்கரத்தால் இடையில் ஒடுக்கிக் கொண்டு அஸ்தி வைக்கப்பட்டிருந்த
பையை நோக்கி வலக்கையை நீட்டி புரோகிதர்களிடம் ஏதோ சொல்லிக்
கொண்டிருந்தாள். மெலிந்த தேகம். கண்கள் இரண்டும்
ஒளித்துண்டுகள்.முக்காடிட்டிருந்தாள்.கால்களில் செருப்பில்லை.அவள் குரலை
புரோகிதர்கள் பொருட்படுத்தவில்லை.கண்களைத் திருப்பிக் கொள்ள முடியாத
ஆகர்ஷம் அவளிடம் இருந்தது.

காரியம் முடியும் வரை அதே பகுதியில் உலவிக் கொண்டிருந்தாள்.சடங்குகளை
மேற்பார்வை பார்க்கும் தோரணை அவளிடம் இருந்தது.நண்பர் முதல்நாள் இரவு
சொன்ன விஷயம் என் நினைவுக்கு வந்தது.
"சேலம் கோட்டை மாரியம்மன் மேலே அவளுக்கு ரொம்ப பக்தி சார்.அவ
அங்கே இருந்த வரைக்கும் அந்த அம்பாள் பார்த்துக்கிட்டான்னு அவ ஃபிரண்ட்ஸ்
எல்லாம் நம்பறாங்க"
எனக்குள் மெல்லிய நடுக்கம் பரவியது.மனதுக்குள் அனிச்சையாய் மலர்ந்தன
வரிகள்:

கைகளிலே மலரேந்தி காளி வந்தாள்
கங்கைநதிக் கரையோரம் நீலி வந்தாள்
மைநிறத்துப் பேரழகி நேரில்வந்தாள்
மலரடிகள் நோகும்படி அருளவந்தாள்

ஓடமெல்லாம் ஓய்ந்திருந்த நதியோரம்
வேதமொழி முழங்குகிற கரையோரம்
தேகந்தனை இழந்தமகள் செல்லும்நேரம்
தேவதேவி அருகிருந்தாள் வெகுநேரம்

மங்கையிவள் வாழ்ந்திருந்த விதம்பார்த்து
கங்கையிலே அவள்கரையும் தினம்பார்த்து
எங்களன்னை நேரில்வந்தாள் இடம்பார்த்து
எங்குமவள் ஆகிநின்றாள் ஒளிபூத்து

காரியங்கள் முடிந்ததும் அந்தப்பையை கங்கையில் நனைத்து அந்தப் பெண்ணிடம்
கொடுத்தேன்.கூடவே நீட்டிய நூறு ரூபாய்த்தாளை அலட்சியமாக வாங்கிக்
கொண்டு,பையை மட்டும் பத்திரப்படுத்திக் கொண்டு சிறு தலையசைப்போடு
நகர்ந்தாள் அவள்.

கலசத்தில் இருந்த ஒன்பதுவாசற் பையின் எச்சம் சிறிது நேரத்தில் கங்கையில்
கரைந்தது.எல்லாம் முடிந்தது

Thursday, February 18, 2010

இப்படித்தான் ஆரம்பம்-5

எத்தனையோ குளறுபடிகளுக்கு நடுவிலும் கவியரசு கண்ணதாசன் நினைவு மன்றம் முறையாகவே
கட்டமைக்கப்பட்டிருந்தது.கவியரங்கிற்குக் கோமகனை அழைத்து வந்தவரும், கண்ணதாசன் விழாக்களுக்கு தாராளமாக செலவுசெய்தவரும்/செய்பவருமான அந்த குறுந்தாடிக்காரர் கிருஷ்ணகுமார், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வலம்புரி ஜான் அவர்களை மன்றத்தின் சிறப்புத் தலைவராக விளங்கக் கோரி ஒப்புதலும் பெற்றிருந்தார்.

நான் ஒரு பிரபலத்தை சிறப்பாலோசகராகத் திகழ ஒப்புதல் பெற்றுத் தருவதாக சொன்னதோடு
ஒப்புதலும் வாங்கிவிட்டேன்.அந்தப் பிரபலம்தான் சுகிசிவம் அவர்கள். கோவையில் இராமநாதபுரம் என்றொரு பகுதி.அங்குள்ள வேல்முருகன் கோவிலில் கந்தர் சஷ்டி விழாவில் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்த வருவார்.தொடர்ந்து போய்க் கேட்பேன்.குறிப்புகள் எடுப்பேன்.
இதுமாதிரியான கூட்டங்களுக்குப் போகும்போதெல்லாம்,"நாமொரு பள்ளி மாணவன்.பெரியவர்கள்
சொற்பொழிவைக் கேட்க வந்திருக்கிறோம்"என்று எனக்குள் இருக்கும் அம்பி முனகுவான்."அதெல்லாம் இல்லை!நம் சக பேச்சாளர் வந்திருக்கிறார்.இவரை இங்கிருக்கும் யாருக்கும் தெரியாது.நாம்தான் கவனித்துக் கொள்ள வேண்டும்"என்று எனக்குள் இருக்கும் அந்நியன் முழக்கமிடுவான்.அப்போது என்னிடம் இரண்டு செட் பட்டு ஜிப்பாக்கள் இருந்தன.பட்டு ஜிப்பா குர்தாவில் கிளம்புகிறேன் என்றால் கூட்டம் கேட்கப் போவதாகப் பொருள்.எட்டு முழம் வேஷ்டி,மடித்துவிடப்பட்ட முழுக்கை சட்டையோடு கிளம்பினேன் என்றால் கூட்டம் பேசப்போவதாகப் பொருள்.

கூட்டம் கேட்கப் போகும் இடங்களில் எனக்குள் இருக்கும் அந்நியன் செய்யும் அலம்பல்களைப் பார்த்து,பேச்சாளர்கள்,
என்னை அமைப்பாளர்கள் வீட்டுப் பிள்ளை என்று எண்ணிக் கொள்வார்கள்.அமைப்பாளர்களோ பேச்சாளருக்கு ரொம்ப வேண்டியவர் போலிருக்கிறது என்று நினைத்துக் கொள்வார்கள்.இந்த பில்ட் அப்புக்கு தன்னையும் அறியாமல் பெரிதும் துணை போனவர் சுகிசிவம்தான்.
அவர் பேச்சை ஆர்வமாக ரசித்துக் கேட்பதைத் தொடர்ந்து கவனித்து வந்தவர், தன் வழக்கத்திற்கு மாறாக என்னைப் பார்த்து புன்னகைக்கவெல்லாம் ஆரம்பித்தார்.
அமைப்பாளர்களுக்கே அதெல்லாம் அப்போது கிடைக்காது. எனவே நான் அவருக்கு ரொம்ப வேண்டியவன் என்று எல்லோரும் நினைக்கத் தொடங்கினார்கள்.இரண்டு மூன்று நாட்களிலேயே
மேடையில் அவர் அமர்ந்தவுடன்,கூப்பிடு தூரத்தில் நிற்கும் என்னையழைத்து காதில் ஏதோ சொல்வார்.நான் கம்பீரமாகத் தலையசைத்து விட்டு அவர் காதுகளில் எதையோ சொல்லிவிட்டு மேடைக்குப் பின்னால் போய்விடுவேன்.
உண்மையில்,தனக்கு சோடா வேண்டும் என்றுதான் கேட்டிருப்பார்.ஆனால் நான் செய்யும் தோரணையோ,அவர் ஏதோ கந்தபுராணத்தில் சந்தேகம் கேட்ட மாதிரியும் நான் விளக்கம் தந்த மாதிரியும் இருக்கும்.
இந்தப் பழக்கத்தை வைத்துக் கொண்டு அவரிடம் பேசி சிறப்பாலோசகராக விளங்க ஒப்புதல் வாங்கி விட்டேன்.வலம்புரி ஜானின் ஒப்புதல் கடிதம் வரும்முன்னே இவர் ஒப்புதல் வந்துவிட்டதால் லெட்டர் பேடில் சிறப்பாலோசகர்; சொல்லின் செல்வர் சுகிசிவம் என்று அச்சிட்டிருந்தோம்.வலம்புரி ஜானின் பதில் கடிதத்தில்."நண்பர் சுகிசிவத்தை நலம்கேட்டதாகச் சொல்லுங்கள்"என்றொரு வரியும் இருந்தது.அதைக்காட்டியதும் சுகிசிவம் முகத்தில் ஆச்சரியம்.அதற்கான காரணத்தை அவரே சொன்னார்.
அதற்கு சில ஆண்டுகள் முன்பாகத்தான் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்திருந்தது.அதில்
நடைபெற்ற வழக்காடு மன்றத்தில் இருவரும் நேருக்கு நேராக மோதிக் கொண்டிருந்தார்கள்.அபோதுதான் வழக்காடுமன்றங்களில் அணிக்கு ஒருவர் என்ற நிலை மாறி,
ஒரு வழக்கறிஞர் ,துணையாய் ஒர் இளம் வழக்கறிஞர் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருந்தனர்.ஓரணியில் சுகிசிவம்,பேராசிரியை இளம்பிறை மணிமாறன்.எதிரணியில் வலம்புரிஜான்,புலவர் இந்திரகுமாரி.நடுவர்,பேரறிஞர்.எஸ்.இராமகிருஷ்ணன்.

"கம்பராமாயணத்தில் தமிழுணர்வு இருக்கிறது.மறுப்பவர்கள் குற்றவாளி" என்பது தலைப்பு.வலம்புரிஜான்,தமிழுணர்வு இருப்பதாய் சொல்கிறது.சுகிசிவம் அணி மறுத்துப் பேச வேண்டும்.எனவே
நிகழ்ச்சி அமைப்பின் படியும் வலம்புரி அணியே ஆளுங்கட்சி.அரசியலிலும் அவர் அப்போதுதான் அதிமுக வந்திருந்தார்.
வலம்புரி ஜான் பேசத் தொடங்கினார்.சீதை அன்னம்போல் அசைந்து வருகிறக் ஆட்சியைக் கம்பன் வருணிக்கும் பாட்டை வைத்துக் கொண்டு,அவருடைய பாணியில் "அன்னம் அசைகிறது!
அழகாக அசைகிறது' என்றெல்லாம் வர்ணிக்க அரம்பித்ததும்,சுகிசிவம் எழுந்து,'அது மிதிலாபுரியைச் சேர்ந்த வடநாட்டு அன்னம்!இதிலே தமிழுணர்வு எங்கே இருக்கிறது " என்றதும் ஒரே ஆரவாரம்.உடனே புலவர் இந்திரகுமாரி எழுந்து "சுகிசிவம் நாகாக்க வேண்டும் ! நாங்கள் ஆளுங்கட்சி" என்று இரண்டு அர்த்தங்களில் சொல்ல,அதற்கு சுகிசிவம் ஒரே அர்த்தத்தில்"நீங்கள் இப்போதுதான் அந்தக்கட்சிக்கு வந்திருக்கிறீர்கள்.அங்கே நிலையாக இருப்பீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் ' என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.

போதாக்குறைக்கு சுகிசிவம் அணிக்கு சாதகமாகத் தீர்ப்பளித்த பேராசிரியர் இராமக்கிருஷ்ணன்,
"ஜெயித்திருக்க வேண்டிய தனது கட்சியைத் தோற்கடித்த பெருமை வலம்புரி ஜானையே சாரும்"
என்று வெளிப்படையாகச் சொல,வலம்புரியார் தன்மீது பகை பாராட்டியிருக்கக் கூடும் என்பது சுகிசிவம் அவர்களின் கணிப்பு.ஆனால் வலம்புரியர்,'அரசியலிலே இதெல்லாம் சகஜமப்பா"என்று அந்த சம்பவத்தை அங்கேயே மறந்திருந்தார்.

இத்தகைய பின்புலங்களுடன் உருவான கண்ணதாசன் மன்றம்,தன் வளர்ச்சி நிதிக்காக மை டியர் மாமா நாடகம் நடத்தியது.நாடகம் நடைபெறும் முன்பே,கடும் கருத்து வேறுபாடு காரணமாக ரவி மன்றத்திலிருந்து விலகினார்.அவருடைய அலுவலகத்தில் இயங்கிய மன்றம்,பழையூரில் கல்விச்சங்கம் அருகே பாழடைந்த மாடிக் கட்டிடம் ஒன்றில் புதிதாக வந்த அந்த இரட்டைப்பட்டம் வாங்கியவர் அறையில் இயங்க ஆரம்பித்தது.

சிவகங்கைச்சீமையில் கவியரசு கண்ணதாசன்,"விடியும் விடியும் என்றிருந்தோம்! அது முடியும் பொழுதாய் விடிந்ததடா!"என்றொரு பாடல் எழுதியிருப்பார்.கண்ணதாசன் மன்றத்தைப் பொறுத்தவரை,அந்த நாடகம் நடந்த நாள் அப்படித்தான் விடிந்தது.பெருமளவில் பணக்கையாடல் நடந்தது.லூஸ்மோகன் முழுப்பணம் தந்தாலொழிய மேடையேற மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.நகைச்சுவை நாடகம் தொடங்கும் முன்னால் திரைக்குப் பின்னே ஒரு சோக நாடகமும் கண்ணீர்க் காட்சிகளும் நடந்து கொண்டிருந்தன.என் வகுப்புத்தோழன் விஜயானந்துக்கும்
எனக்கும் இதில் நடந்த ஊழல்கள் பற்றி ஒன்றும் தெரியாது.விஜயானந்தின் அப்பா சில ஆயிரங்களைக் கொடுத்து நாடகத்தை நடத்தச் சொல்லிவிட்டு,தன் மகனையும் என்னையும் அழைத்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறினார். மாலை போட்டு விரதமிருந்த கதாசிரியர் அள்ளித் தெளித்திருந்த ஆபாச வசனங்கள் பார்வையாளர்களை நெளியச்செய்தன.இடைவேளையில் சிறப்பு விருந்தினர்கள் மேடைக்கு வந்தனர்.விஜய திருவேங்கடம்,தன் உரையில்,நாடகத்தின் ஆபாசத்தை நாசூக்காகக் கண்டித்த போது அரங்கம் கரவொலி செய்து ஆமோதித்தது.
புத்திசாலித்தனமாக திட்டமிட்டு இரட்டைப்பட்டக்காரர் எல்லோருக்கும் பட்டை நாமம் சார்த்தியிருந்தார்.ஆளுக்கொரு திசையாகச் சிதறினோம்.அந்த அமைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சிகளும் வீணில் முடிந்தன. அதே நேரம் வழக்கறிஞர் மனோகரன் போன்றவர்கள் ஆர்வமாக நடத்திவந்த கண்ணதாசன் இலக்கியக் கழகம் என்கிற அமைப்பும் வேகம் குறைந்து வந்தது.ஓரிரு வருடங்கள் முடிந்தன.
இதற்குள் நான் கல்லூரியில் சேர்ந்திருந்தேன்.வாசிப்பு,கூட்டங்கள் கேட்பது,கூட்டங்களில் பேசுவது எல்லாம் தொடர்ந்தது.அப்படி நாளிதழில் செய்தி பார்த்துவிட்டு ஓர் அமைப்பின் தொடக்கவிழாவில் கலந்து கொள்ள பீளமேடு ஹோப்காலேஜ் என்ற பகுதிக்கு ஒரு மாலை வேளையில் போனேன்.தேநீரகம் ஒன்று விடுமுறை விடப்பட்டு அங்கே கூட்டம் நடந்து கொண்டிருந்தது.உள்ளே நுழைந்த என்னை அங்கிருந்த அமைப்பாளர்கள் பிரியமுடன் வரவேற்று மேடைக்கு அழைத்துப் போயினர். பேசுமாறும் கேட்டுக் கொண்டனர். அந்த அமைப்பின் பெயர்,"பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை".

தொடரும்

இப்படித்தான் ஆரம்பம்-4

கண்ணதாசன் மறைவுக்காக நடந்த இரங்கல் கூட்டத்தில்,"கண்ணதாசனின் வரிகளுக்கு இதுவரை காணாத பொருள்களையெல்லாம் அவருடைய ரசிகர்கள் காண்பார்கள் "என்று பேசினாராம் ஜெயகாந்தன்.உண்மைதான்.கவிஞரின் வரிகளுக்கு புதிய நயங்களையும் விளக்கங்களையும் தேடித் தேடிச் சொல்லத்தஒடங்கியவர்கள் பலர்.அவர்களில் நானும் ஒருவன்.

"கூடிவரும் மேகமெனக் கூந்தலைத் தொட்டார்-
குவளை போல மலர்ந்ததென்று கண்களைத் தொட்டார்-தொட்டால்
ஒடியுமென்று இடையைமட்டும் தொடாமலே விட்டார்"
என்ற பாடலை
சொல்லிவிட்டு,"இதில் கவிஞர் எவ்வளவு நயமாக ஒரு விஷயம் வைத்திருக்கிறார் தெரியுமா?'
என்று நிறுத்துவேன்.
"மேகத்தை கூந்தலுக்கு உவமை சொன்னார் .கண்களுக்கு குவளை மலர்களை உவமை
சொன்னார்.ஆனால் .இடை தொட்டால் ஒடியுமென்று தொடாமலே விட்டார் என்று பாடியவர்,இடைக்கு ஓர் உவமை கூட சொல்லவில்லை.ஏன்தெரியுமா? அது மெல்லிய இடை.
மிக மெல்லிய இடை.அதை உவமையால்தொட்டால் கூட ஒடிந்துவிடும் என்பதால் தான் கவிஞர் உவமை சொல்லக்கூட இல்லை".என்றதும் கண்ணதாச பக்தர்கள் ஆனந்த பாஷ்பம் சொரிவார்கள்.
இவையெல்லாம் மாலைநேர மன்ற சந்திப்புகளில் அரங்கேறும் விவாதங்கள்.

ராஜ்நாராயண் என்ற வடநாட்டுத்தலைவர் பிரதமராக வேண்டும் என்று ஜனதாவில் ரகளை செய்து கொண்டிருந்த நேரம்.ஆள் தாடியும் மீசையும் தலைப்பாகையுமாய் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்."இந்தாளை கேலி செய்து கவிஞர் பாடியிருக்கார் தெரியுமா?" என்றொரு புதிரை அவிழ்த்துவிடுவார் ரவி."என்ன பாட்டுங்க அது?" என்றதும்,"தப்புத் தாளங்கள்-வழி தவறிய பாதங்கள்"என்ற பாடலைப் பாடிவிட்டு,"பாராளும் கோலங்கள் பரதேசி வேஷங்கள்" என்ற வரிகளை விரல் அபிநயத்துடன் பாடிக்காட்டுவார் ரவி.

இதற்கிடையே கண்ணதாசன் மன்ற வளர்ச்சிநிதிக்கான நாடக ஏற்பாடுகள் சூடுபிடிக்கத் தொடங்கின.பிச்சைக்காரியைப் பணக்கார இளைஞன் காதலிப்பதாகக் கதை.இதில் லூஸ்மோகன்
சில காட்சிகளில் தோன்றுவதாக அமைத்திருந்தார்கள்.

உள்ளூரிலேயே நாடக ஆசிரியர் ஒருவரை ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.அவர் எடுத்த எடுப்பிலேயே "உங்களுக்கு நல்ல நேரம்" என்றார்."என்னை எழுதச் சொன்னா எந்த நாடகமும் சக்ஸஸ்தான்.ஆனா எனக்கு தண்ணி வாங்கிக் கொடுத்து கட்டுப்படியாகாது.உங்க நல்ல நேரம் இப்ப நான் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கேன்.அதனாலே மதியம் சாப்பாடு வாங்கிக் கொடுத்தா போதும்".அவரை தினம் நாடக ரிகர்சலுக்கு அழைத்துப் போவதும்,வாணிவிலாஸில் சாப்பாடு வாங்கிக் கொடுப்பதும் என்னுடைய பொறுப்பு.(செந்தில் உணவு விடுதி அசைவ உணவகம் என்பதால் விரதக்காரர் அங்கே வரமாட்டாராம்).

என் வகுப்புத் தோழன் விஜயானந்த் வீட்டு மாடியில்தான் ரிகர்சல்.பழையூரில் சின்ன உணவுக்கடை வைத்திருந்த ஒருவர்தான் ஹீரோ.கறுப்பாக இருந்தாலும் களையான முகம்.ஆனால் அவர் ஹீரோவாக ஒப்பந்தமாக முக்கியக் காரணம்,நாடக செலவில் பெரும்பகுதியை அவர் தருவதாக ஒப்புக் கொண்டிருந்ததுதான்.பக்கத்தில் எங்கிருந்தோ ஹீரோயின் ரிகர்சலுக்கு வந்த போது பார்த்தேன்.ஹீரோவின் அழகை எல்லோரும் பாராட்டும் படியாக இருந்தார் ஹீரோயின்.

இதற்கிடையே நான் ஊடல்கொள்ளும் விதமாய் ஒரு சம்பவம் நடந்தது.ஹீரோ ஹீரோயின்
முதலிரவுக் காட்சிக்கான பாடல் ஒன்றை சத்தியநாராயணன் எழுதிவிட்டார்.
"இரவு நேரம் உறவுக்காலம்
இளமை தேகம் துடிக்கும் நேரம்" என்பது அந்தப் பாடலின் பல்லவி.
அவர் அய்யர் வீட்டுப் பையன்.சொற்ப சம்பளத்தில் எங்கேயோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அவர் எல்லா கலைகளிலும் கைவைப்பார்.ஒருமுறை எங்கள் வீட்டுக்கு அவர் வந்த போது அடுத்த நாள் ஆயுள் ஹோம பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.எங்கள் பூர்வீக ஊரான திருக்கடையூரிலிருந்து குருக்கள்கள் வந்திருந்தார்கள்."மாமா மாமா "என்று அவர்களுடன் அந்நியோன்னியமான சத்தியநாராயணன்,அடுத்த நாள் அதிகாலையில் பஞ்சகச்சத்தோடு வீட்டுக்கு வந்துவிட்டார்.மந்திரம் சொல்வதிலிருந்து பூஜைப் பொருட்கள் எடுத்துத் தருவது வரை அவர்களுக்கு வெகு ஒத்தாசையாய் இருந்தார்.

அதுவரை,அந்தக் குழுவிலேயே எல்லாம் வல்ல கவிஞனாக என்னை நிலைநிறுத்திக் கொள்ள படாத பாடு பட்டுக் கொண்டிருந்தேன்.கண்ணதாசன் கவியரங்கில் சொதப்பியதை ஈடுசெய்ய நினைத்திருந்த என் கனவில் இடிபோல் இறங்கியது,சத்தியநாராயணன் பாடல் எழுதிவிட்ட செய்தி.மிதமாக என் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தேன்."பள்ளிக்கூடப் பையன்தானே!
சமாளித்துவிடலாம் என்று நினைத்திருப்பார்கள்போல! ஆனால் முடியவில்லை.பிறகு ஒர் ஒப்பந்தம் உருவானது.கதாநாயகியான அந்தப் பிச்சைக்காரி,சந்தோஷமாகப் பாடிப் பிச்சையெடுப்பதுதான் ஒபனிங் ஷாட்.
"சுகம்தரப் புறப்படும் பாடல்
சுமைதரும் துயருடன் ஊடல்!
மகிழ்வென்னும் போதை மனம்காணும்போதே
நிலவோடுதான் உறவாடுமே"
என்று தொடங்கும் பாடலை எழுதிக் கொடுத்தேன்.ஒரு பிச்சைக்காரி இப்படிப் பாடுவாளா என்று யாருமே கேட்கவில்லை.பாடலை எழுதிக்
கொண்டுபோகும்போது மறக்காமல் வெற்றிலை பாக்கெல்லாம் போட்டுக் கொண்டு போனேன்.

ரிகர்சல் மும்முரமாக நடந்தது.ஜனவரி 1ம்தேதி நாடகம்.நாடகத்தின் பெயர் "மை டியர் மாமா'.கோவை வானொலி நிலைய உதவி இயக்குநர் விஜய திருவேங்கடம்,அன்னபூர்ணா உரிமையாளர் கே.தோமோதரசாமி நாயுடு,ஆடிட்டர் சி.ஜி.வெங்கட்ரமணன் அகியோர் சிறப்பு விருந்தினர்கள். ஜனவரி 1ம் தேதி காலை கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினார் லூஸ் மோகன்...தனியாக அல்ல."சிஸ்டரோடு"


(தொடரும்)