Sunday, July 24, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 13

புதியமுத்தூரிலிருந்து ஒருவர் என்னைச் சந்தித்தார். தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்ட விதமே அலாதியானது."வணக்கம் சார்! என் பேரு கணேசன். தமிழாசிரியர். எங்க ஊர்லே பெரிய ஆளுங்ககிட்டே நன்கொடைகள் வாங்கி, எலக்கிய விழாக்கள் விடாம நடத்தறேன். எங்கூர்லே கூட கேப்பாங்க..உம்ம பேரு கணேசனா? டொனேசனான்னு".

நன்கொடை வாங்கப் போகிறவர்கள் கையில் எலுமிச்சம்பழம் கொண்டு போவது வழக்கம். அதற்குக் காரணம் மரியாதை மட்டுமல்ல. அங்க இலக்கண சாஸ்திரமும் அதிலே இருக்கிறது. சந்திக்கப்படும் பெரிய மனிதர் எலுமிச்சம்பழத்தை கைநீட்டி வாங்கும்போது மணிக்கட்டின் உட்புறத்தில் மூன்று கோடுகள் இருந்தால் போன காரியம் பழம் என்று அர்த்தம்.தைரியமாக பத்தாயிரம் ரூபாய் ரசீது நோட்டைத் திறக்கலாம். கோடுகள் கம்மியாய் இருந்தால் எலுமிச்சம்பழம் நஷ்டம். துணிவிருந்தால் தில்லானா மோகனாம்பாள் வைத்தி போல, "அந்தப் பழத்தைக் கொஞ்சம் தரேளா"என்று வாங்கி வந்து விடலாம்.

நாம் எய்யும் அஸ்திரம் சரியான இடத்தைச் சேர்கிறதா என்று பார்ப்பது நன்கொடை வாங்கவே அவசியம் என்றால் விளம்பரத்தில் அதன் பங்கு மிக மிக முக்கியம். எந்த நுகர்வோரை மனதில் கொண்டு அந்தத் தயாரிப்பு சந்தைக்கு வருகிறதோ, அந்த நுகர்வோரின் வாழ்க்கை முறையை ஆராய்வதும், அவர்களுக்குப் பரிச்சயமான ஊடகங்களில் அவர்கள் மனதில் பதியும் விதமாக விளம்பரங்களை இடம்பெறச் செய்ய வேண்டும். இதற்கு மீடியா பிளானிங் என்று பெயர். இந்த ஊடகப்புரிதல் விளம்பர உலகில் பெரும் பங்கை வகிக்கிறது. பெரும்பாலான நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரக் கட்டணம் 100% அதிகம். முதல் பக்கத்தில் வெளிவருவதால் மட்டுமே விளம்பரம் ஜெயிக்கும் என்று பொருளல்ல.

அதையும் தாண்டி ஊடகப் புரிதலில் எத்தனையோ அம்சங்கள் உண்டு. கயிலாய யாத்திரை விளம்பரத்தை கனாக்காணும் காலங்கள் தொடரில் போடுவதில் எந்தப் பயனும் இல்லை. அதேபோல தயாரிப்பின் மார்க்கெட்டிங் உத்திகளுடன் ஒத்துப் போகிற விதமாக விளம்பர உருவாக்கமும் மீடியா பிளானிங்கும் இருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம்.

"ஃபிராஞ்ச் ஆயில் எங்கேப்பா" என்றொரு விளம்பரம் நினைவிருக்கிறதா? அவர்கள் துணிச்சலாய் ஒரு முடிவெடுத்தார்கள். சந்தைக்கு ஃபிராஞ்ச் ஆயில் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா ஊடகங்களிலும் விளம்பரங்களை வெளியிட்டு விட்டார்கள். நுகர்வோர்கள் கடை கடையாக ஏறி "ஃபிராஞ்ச் ஆயில் எங்கேப்பா" என்று அலைமோதினார்கள். கிடைக்கவில்லை என்றதும் விற்றுத் தீர்ந்ததாக நினைத்துக் கொண்டு இன்னும் தீவிரமாகத் தேடினார்கள். இரண்டு நாட்களில் சந்தைக்கு வந்ததும் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்தது.

எனவே விளம்பரங்கள் என்பவை வெற்றுக் கற்பனைகளின் விளையாட்டுக் கூடமல்ல. கள ஆய்வை வேராகக் கொண்டு வளரும் பணப்பயிர். படைப்பாக்கப் பிரிவு, வாடிக்கையாளர் சேவைப்பிரிவு ஊடகப் பிரிவு என்று விளம்பர நிறுவனத்தின் விரலுக்கேற்ற வீக்கங்கள் பல பிரிவுகளாக உண்டு.

இதில் ஊடகப் பிரிவு ஊடகங்களுடன் உறுதியான உறவை உருவாக்கிக் கொள்ளும். நாளிதழ்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பர சேகரிப்பாளர்கள் எல்லோருமே விளம்பர நிறுவனங்களின் ஊடகப்பிரிவு அலுவலர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். சிலசமயம் அந்த நெருக்கமே நெருக்கடி ஏற்படுத்திவிடும்.

உதாரணமாக, வாடிக்கையாளர்களை நாளிதழ்களின் விளம்பர அலுவலர்களும் சென்று பார்ப்பார்கள். சிறப்பிதழ் ஷாப்பிங் ஸ்பெஷல் என்று சில திட்டங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்வார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பினால், தங்களுடைய விளம்பர நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, விளம்பரம் வெளியிடச் சொல்வார்கள்.இதுதான் நடைமுறை.

ஒரு பிரபல விளம்பர நிறுவனத்திற்கு வாடிக்கையாளரின் அலுவலகத்தில் இருந்தபடியே நாளிதழின் விளம்பர அலுவலர் தொலைபேசியில் அழைத்தார். அந்த வாடிக்கையாளரின் பெயர் குப்புசாமி என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அந்த வாடிக்கையாளருக்கு சேவை செய்யும் அலுவலரிடம் பேசினார்."அப்படியா! குப்புசாமி சார் கிட்டே பேசீட்டீங்களா? சார் அப்ரூவ் பண்ணீட்டா விளம்பரம் தயார் பண்ணிடலாம்" என்று பேசினார். பிறகு தொலைபேசி அழைப்பு விளம்பர நிறுவனத்தின் ஊடகப் பிரிவு அலுவலருக்கு மாற்றப்பட்டது.

அவர் உற்சாகமாக, "யோவ்! நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. அந்த குப்புசாமியை கோழி அமுக்கு அமுக்கி ஆர்டர் வாங்கீடு!" என்றார். அடுத்த விநாடியே அந்த விளம்பர ஆர்டர் ரத்து செய்யப்பட்டதுடன் அந்த விளம்பர நிறுவனத்துடனான தொடர்பையும் அந்த வாடிக்கையாளர் முறித்துக் கொண்டார்.

ஏனென்றால் குப்புசாமி எப்போது  எப்போது தொலைபேசியில் பேசினாலும் ஸ்பீக்கரில் போட்டுத்தான் பேசுவார். அவருடைய தொலைபேசியிலிருந்து தான் நாளிதழின் விளம்பர அலுவலர் அழைத்திருக்கிறார். தொலைபேசி ஸ்பீக்கர் ஆன்னாகி இருக்கும் விஷயம், அவரை விடாமல் சந்தித்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் சேவை அலுவலருக்குத் தெரியும். எனவே மரியாதையாகப் பேசி தப்பித்துக் கொண்டார். அந்த வாடிக்கையாளரை சந்தித்தே இராத ஊடகப் பிரிவு அலுவலர் விபரம் தெரியாமல் விளையாட்டாகப் பேசி மாட்டிக் கொண்டார்.

நானறிந்த விளம்பர நிறுவன அதிபர் ஒருவரின் இயல்பு என் நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு வாடிக்கையாளரை சந்திக்கப் போனால், அந்த வாடிக்கையாளருக்குத் தருகிற அதே மரியாதையை அங்கிருக்கும் ஒவ்வோர் அலுவலருக்கும் தருவார். குறிப்பாக டெலிபோன் ஆபரேட்டரை சந்தித்து நலம் விசாரித்து நட்புடன் பேசி பிறகுதான் நகர்வார். காரணம் கேட்டால், "சார்! கிளையண்ட் நம்மை கூப்பிடச் சொல்லி அபரேட்டர் கிட்டே சொல்வார். அவங்களுக்கு நம்மை பிடிக்காட்டி என்ன வேணும்னாலும் சொல்லீட முடியும்! கூப்பிட்டேன் - பிசியா இருக்கேன்னு சொல்லீட்டாரு, இப்ப வர முடியாதுன்னு சொல்லீட்டாருன்னு எது வேணும்னாலும் சொல்லி நம்ம உறவை வீணாக்க முடியும் சார்!' என்பார்.

வாடிக்கையாளர்களுடனான உறவையும் ஊடகங்களுடனான உறவையும் பேணிக்காப்பதில் விளம்பர நிறுவனங்கள் எப்போதுமே விழிப்பாக இருக்கும்.

(தொடரும்)

Sunday, July 17, 2011

சங்கல்பம்

பயணம் என்பதுன் சங்கல்பம்
பாதையின் திருப்பம் அவள்விருப்பம்
முயற்சிகள் யாவுமுன் மனபிம்பம்
முடித்துக் கொடுப்பது அவள்விருப்பம்
துயரங்கள் உனது வினைபந்தம்
துடைப்பதும் எரிப்பதும் அவள்வழக்கம்
உயரங்கள் பள்ளங்கள் உன்கலக்கம்
உடனிரு என்பதே அவள்விளக்கம்

நாளும் நிமிஷமும் உன்கணக்கு
நொடிகளில் மாறிடும் அவள்கணக்கு
கோள்களின் அசைவினில் வாழ்வுனக்கு
கோயிலில் நுழைந்தால் விதிவிலக்கு
நீள்வதும் தொடர்வதும் உன்னிருட்டு
நீக்கிட வருமவள் திருவிளக்கு
தாள்களைத் தொடும்வரை உன்னிருப்பு
தொட்டதும் தொலைந்திடும் ஏழ்பிறப்பு





எவரெவர் வடிவினில் எதிர்ப்படுவாள்
என்னென்ன வார்த்தைகள் உரைத்திடுவாள்
எவருக்கும் இதுவரை தெரியாது
எதிர்வந்து நிற்பதும் புரியாது
தவறென்றும் சரியென்றும் தடமிருக்கும்
தர்மத்தின் சக்கரம் சுழன்றிருக்கும்
அவளிடம் சூட்சுமம் ஒளிந்திருக்கும்
அவளால் நம்திசை ஒளிர்ந்திருக்கும்

காற்று கலைக்கிற நந்தவனம்
கொட்டும் மலர்களின் சிலிர்ப்பினில்பார்
ஊற்றில் பெருகும் நீரலைகள்
உத்தமி பின்னே ஓடுதல்பார்
மாற்றுப் பொன்னெனும் கதிரொளியும்
மாதுமை அருளெனப் பரவுதல்பார்
ஏற்றிய சூரியச் சுடரொளித்தே
ஏறும் இருளினில் அவளெழில் பார்

ஒவ்வொரு கணமும் உடன்வருவாள்
உனக்கென சுவாசமும் கடன்தருவாள்
கவ்விடும் வலிகளில் கலந்திருப்பாள்
காயத்தின் பரப்பிலும் உலர்ந்திருப்பாள்
எவ்விதம் உனையவள் மறந்திடுவாள்
இவளா உன்னைக் கைவிடுவாள்
செவ்வியள் திருவுளம் வைத்துவிட்டால்
செகமே உனக்கெனத் தந்திடுவாள்

என்ன கேட்பதோ ? தெரியவில்லை
எதையவள் இதுவரை வழங்கவில்லை
சொன்ன வார்த்தையோ சொன்னதுதான்
சிறிதும் அவள்சொல் பிறழவில்லை
தன்னைப் பெரிதாய் நினைக்கையிலே
தென்படமாட்டாள் பார்வையிலே
தன்னை அவளிடம் தந்தபின்னே
தனியாய் நாமில்லை வாழ்வினிலே 

Saturday, July 16, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 12

காட்சி பூர்வமாக சிந்தித்தல் என்பது விளம்பர உலகத்துக்கான வேத வாக்கியங்களில் ஒன்று. காட்சி ஊடகங்களுக்கு மட்டுமின்றி அச்சு ஊடகங்களுக்கும் இது பொருந்தும். திரையிசையில் மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்பது போலத்தான் இதுவும். சிலசமயம் நீங்கள் எழுதுகிற விளம்பரத்திலேயே காட்சி அமைப்புக்கான தூண்டுதல் இருக்கும். சில சமயம் வரைகலையாகவோ புகைப்படமாகவோ தரும் விஷுவல் உங்களை எழுதத் தூண்டும்.

எய்ட்ஸ் தடுப்பு நிறுவனத்துக்கு சசியில் இருந்த போது எழுதிய விளம்பர வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது. தரப்பட்டிருந்த புகைப்படம் இதுதான். ஒரு சதுரங்கப் பலகை. காய்களுக்கு பதிலாக போதை மருந்து ஊசிகள் மாத்திரைகள். ஒரு மனிதக்கை. எதிர்ப்புறம் ஓர் எலும்புக்கூட்டின் கைக்கூடு.




 இதற்குக்கீழே நான் எழுதித்தந்த வாசகம் இடம் பெற்றது."இந்த சதுரங்க விளையாட்டு சாவிலே முடியும்....எல்லாக் காய்களுமே எமதூதர்கள்". இது மெட்டுக்குப் பாட்டு வகையறா.

பெரிய மரப்பலகைகளில் சுத்தியல் கொண்டு ஆணி அடிப்பது பெரும் சப்தத்தையும் இடைஞ்சலையும் ஏற்படுத்தும். இதற்கும் ஒரு கருவி வந்தது. மின்சாரத்தில் இயங்கும் அந்தக் கருவியின் முனையில் நிறைய ஆணிகள் இருக்கும்.கோலத்துக்குப் புள்ளி வைப்பதுபோல வரிசையாக ஆணிகளைப் பொருத்திக் கொண்டே போகலாம். யு.எம்.எஸ் நிறுவனம் இந்தக் கருவியைத் தயாரித்திருந்தது.

நிறுவனங்களுக்குப் பெரிதும் பயன்படக் கூடிய இந்தக் கருவிக்கான விளம்பரத்தை சுவாரசியம் மிக்கதாய் ஆக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வாழைப்பழத்தில் குண்டூசி குத்தியிருப்பது போல் ஒரு புகைப்படம் எடுக்கச் செய்து, அதையே விஷுவலாக அமைத்து, "இனி பேக்கிங்குகளில் ஆணியடிப்பது இத்தனை எளிது" என்கிற பொருளில் ஒரு வாக்கியம் அமைத்திருந்தேன்.

வாசகத்துக்கு விஷுவலோ அல்லது விஷுவலுக்கு வாசகமோ ஒன்றுக்கொன்று பொருத்தமாக இருந்தால் போதாது. யார் அந்த விளம்பரத்தின் இலக்கோ அவர்கள் கவனத்தை ஈர்ப்பது போல் அமைவதும் அவசியம். இதை, Appealing to the target segment  என்று சொல்வார்கள்.

உதாரணமாக யு.எம்.எஸ் நிறுவனத்தின் ஆணிகள் பொருத்தும் கருவி குறித்து இந்தக் கட்டுரையில் எழுதும்போது இயல்பாக வந்த விஷயம், "கோலத்துக்குப் புள்ளி வைப்பது போல" என்கிற வரி. இதையே விளம்பரத்துக்கான காட்சியாகவும் வாசகமாகவும் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று யோசிக்கிறேன். முடியாது என்றே தோன்றுகிறது. ஏனெனில் தொழில்நுட்பம்
சார்ந்த மனிதர்கள் இந்த விளம்பரத்தின் இலக்கு. கோலத்துக்கு புள்ளி வைப்பது சுலபமா சிரமமா என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் சொன்னால்தான் சரிப்படும்.


கோவையின் புகழ்பெற்ற கே.ஜி.மருத்துவமனையில், மூளைச்சாவு நிகழ்ந்த ஒருவரின் உடல் உறுப்புகள் சில இரண்டு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. இதற்காக அஞ்சலி விளம்பரம் ஒன்றினை ஆங்கில நாளிதழ் ஹிந்துவில் வெளியிட அந்த மருத்துவமனை எண்ணியது. பொதுவாக அஞ்சலி விளம்பரம் என்றால் ஒரு புகைப்படத்தை நடுவில் போட்டு இரண்டு  புறங்களிலும் விளக்குகளை வைத்து விடுவார்கள். அதே போல லே அவுட் செய்து இறந்தவரின் புகைப்படம் வைக்கும் இடத்தில் அணைந்து புகை கிளம்பும் தீக்குச்சி ஒன்றின் படத்தைப் பெரிதாக அமைத்தேன். அதன் கீழ் The matchstick is gone.But the  light which it left beind is.....matchless!! என்று எழுதி அதன்கீழ் இறந்தவரின் புகைப்படமும் உறுப்புதானம் பற்றிய விபரங்களும்
இடம்பெறுமாறு செய்தேன்.

மேற்குறித்த இரு விளம்பரங்களுமே ராகா ஆட்ஸ் என்ற பெயரில் இயங்கிய ராகவேந்திரா அட்வர்டைசிங் நிறுவனம் உருவாக்கியவை.

வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையில் புகழ்பெற்ற  விவேக் & கோ நிறுவனத்திற்கு பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் புத்தாண்டு விற்பனைக்கான விளம்பரங்களை வெளியிடும். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்று சகல ஊடகங்களையும் பயன்படுத்துவார்கள்.

பத்து பத்து விநாடிகளாக விதம்விதமான விளம்பரங்களை வெளியிட முடிவு செய்து அதற்கான கருத்துருவாக்கங்களை விவாதித்துக் கொண்டிருந்த போது ராதிகா சொன்ன ஒரு யோசனை இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது. மலையுச்சியிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து தரையில் விழுவதை ஏழு நொடிகள் காட்ட வேண்டும். கடைசி மூன்று நொடிகள் கொட்டை எழுத்தில் Rock Bottom Prices..only @ Viveks என்ற வாசகம் போட வேண்டும் என்றார் ராதிகா.

ஆனால் விஷயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட விளம்பரங்களில் எய்ட்ஸ் சதுரங்கம், வாழைப்பழ ஊசி தவிர வேறெவையும் கிளையண்ட் ஒப்புதலைப் பெறவில்லை !!

(தொடரும்)

Sunday, July 10, 2011

தத்துவம் கூட சிறிசு

 
 
 
 உனக்கும் எனக்கும் தெரியலைன்னாலும்
ஒலகம் ரொம்பப் பெரிசு-அட
உண்மை தெரிஞ்ச ஞானிகளுக்கோ
உள்ளங்கை போல் சிறிசு
தனக்குன்னு எதையும் நினைக்கற வரைக்கும்
தலையில பாரம் பெரிசு-ஒரு
கணக்குல எல்லாம் நடப்பது தெரிஞ்சா
கவலைங்க ரொம்ப சிறிசு



தோணுற போது எழுதற வரிதான்
தலைமுறை தாண்டியும் பெரிசு-அட
தள்ளிப்போட்டு சொல்லிப் பாத்தா
தத்துவம் கூட சிறிசு
ஆணும் பொண்ணும் ஆடுற வாழ்க்கை
அவரவர் போக்கில பெரிசு-அட
ஆடி முடிஞ்சு கணக்குப் பார்த்தா
அத்தனை கூத்தும் சிறிசு

வானம் தனியா வெளியே தெரிஞ்சா
வெய்யிலும் மழையும் பெரிசு-நீ
வாழ்க்கையின் அர்த்தம் தேடித் திரிஞ்சா
வருவதும் போவதும் சிறிசு
தானம் தருமம் எனதுன்னு நெனச்சா
தலைக்கனம் ரொம்பப் பெரிசு-நாம
தந்தது யாரோ தந்தது தான்னு
தெளிஞ்சா எல்லாம் சிறிசு

வீதியில் இறங்கிப் போகிற வரைக்கும்
வீட்டு விஷயம் பெரிசு-அந்த
வெட்ட வெளியப் பொட்டுல பார்த்தா
வானும் மண்ணும் சிறிசு
ஜோதியும் உள்ளே கிளம்புற வரைக்கும்
சூரியன் சந்திரன் பெரிசு-அட
சுடரா நிக்கற சுந்தரி முன்னே
சர்வ லோகமும் சிறிசு

Tuesday, July 5, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 11

கோவைக்கும் சென்னைக்கும் மாறி மாறிப் பயணம் செய்து கொண்டேயிருந்தேன். சில சமயங்களில் முதல்நாள் சென்னையிலிருந்து வந்து இறங்கி சில மணி நேரங்களிலேயே மீண்டும் அழைப்பு வரும். கையில் இரண்டு மூன்று பாட்டில்கள் சிறுவாணித் தண்ணீருடன் மீண்டும் புறப்படுவேன். பிஃப்த் எஸ்டேட்டில் புதிதாகச் சேர்ந்திருந்த ஆங்கில விளம்பர எழுத்தாளர் ராதிகாவிடம் நீலம் என்னை இப்படித்தான் அறிமுகம் செய்தார்.

"இவருக்கு சென்னை தண்ணீர் பிடிக்காது. வேலை என்று அழைத்தால் ஏதேனும் ஒரு ரயிலில் தொற்றிக் கொண்டு தண்ணீரும் கையுமாய் வந்து சேர்வார். தண்ணீர் தீரும்முன் வேலையை முடித்துவிடுவார். தண்ணீர் தீர்ந்ததும் கிளம்பி விடுவார்".

பிஃப்த் எஸ்டேட்டில் மட்டுமின்றி சென்னையில் மாபோஸல், கவுன்ட்டர் பாய்ன்ட் போன்ற நிறுவனங்களும் நிறைய வேலை கொடுத்துக் கொண்டிருந்தன. ஒரு காலகட்டம் வரையிலும் எல்லா சென்னை நிறுவனங்களுக்கும் ஃப்ரீலான்ஸ் முறையில்தான் வேலை  பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு சுதந்திரம் என்னவென்றால் ஒரே கிளையண்ட்டுக்கு இரண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்து விளம்பர முன்வைப்புகளை வழங்குவதாக இருந்தால், இரண்டு நிறுவனங்களுக்கும் நீங்கள் எழுதிக் கொடுக்கலாம்.

ஆனால் அப்படிச் செய்வதில்லை என்பதில் நான் உறுதியாகஇருந்தேன். ஒருமுறை சென்னை மாபோஸல் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. எய்ட்ஸ் தடுப்பு விளம்பரத்துக்கான படைப்பாக்க முன்வைப்பை அவர்கள் உருவாக்க உத்தேசித்திருந்தார்கள். பொதுவாக எய்ட்ஸ்தடுப்பு விளம்பரங்களுக்கு தாமாக முன்வந்து பல விளம்பர நிறுவனங்கள் ஸ்பெகுலேடிவ் கேம்பெய்ன்களை வழங்கும். ஒருவேளை பிஃப்த்எஸ்டேட் நிறுவனம் அதில் பங்கெடுத்தால் மற்ற நிறுவனங்களுக்குஎழுதலாகாது என்று தார்மீக அடிப்படையில் முடிவு செய்தேன்.

ராம்கியை அழைத்து விபரம் சொன்னேன். அவர் உடனடியாக, "நாம்இந்தப் பந்தயத்தில் ப்ங்கு பெறப்போவதில்லை. நீங்கள் அந்த நிறுவனத்துக்கு தாராளமாக எழுதலாம்" என்றார். இந்தத் தொலைபேசி உரையாடல் முடிந்து சில நிமிடங்களிலேயே கணேஷ் பாலிகா அழைத்தார், அவருடைய குரல் நெகிழ்ந்திருந்தது. "தாங்க்யூ வெரிமச்முத்தையா" என்று மட்டுமே சொன்னார். அதற்கான காரணம் பிறகுதான் தெரிந்தது.

பிஃப்த் எஸ்டேட்டிலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்த சிலர் வெளியேறி தனியாக விளம்பர நிறுவனம் ஒன்றினைத் தொடங்கும் முடிவுக்கு வந்திருந்தார்கள். அந்தச் செய்தி அப்போதுதான் வெளியாகி கணேஷ் பாலிகா வருத்தத்தில் இருந்த நேரத்தில் நான் ராம்கியிடம் பேசியிருக்கிறேன். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. உடனிருந்தவர்கள் திடீரென்று விலகி நெருக்கடி தருகிற நேரத்தில், ஏற்கெனவே விலகிய ஓர் இளைஞன் தொழில் தர்மத்துடன் நடந்து கொண்டதில் கணேஷ்பாலிகா நெகிழ்ந்திருந்தார். அதன்பிறகு அவர் செய்த காரியம் அபாரமானது.

விலக முற்பட்டவர்களை அழைத்தார்."புதிய நிறுவனம் தொடங்கும் நீங்கள், வரைகலைப் பிரிவுக்கான கருவிகளுக்கு அதிக முதலீடு செய்ய வேண்டிவரும். நம்மிடம் சற்றே பழைய கருவிகள் உள்ளன. நன்கு இயங்கக் கூடியவை. அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார் அவர். பொதுவாகவே விளம்பர உலகில் ஒரு றுவனத்திலிருந்தே பல நிறுவனங்கள்   உதயமாகும். ஒருவர் தனியாக வேறு நிறுவனம்தொடங்கினாலும் அல்லது வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும் அப்போது வேலை பார்க்கும் இடத்திலிருந்து சிலரை அழைத்துச் செல்வார். கணேஷ் பாலிகா இதிலும் விதிவிலக்கு. மா போஸலில் இருந்து விலகும்போது யாரையும் அங்கிருந்து அழைத்து வரவில்லை. எதேச்சையாகநான் தொலைபேசியில் அழைத்துக் கேட்டது, ஏற்கெனவே அவரிடம் எனக்கிருந்த நல்ல பெயரையும் நல்லுறவையும் உறுதி செய்தது.

சென்னை மாபோஸல் நிறுவனத்தின் பொதுமேலாளராக அப்போதுஅபர்ணா தத்தா என்கிற பெண்மணி பொறுப்பேற்றிருந்தார். குள்ளமானஉருவம். இந்திராகாந்தி போலவே மூக்கும், சிகையலங்காரமும். ரேஷன் சிரிப்பு. அறிமுகம் முடிந்த ஐந்தாவது நிமிடமே வேலையைத் தொடங்கிவிட்டார் அவர். ஒரு விளம்பர வரிசையை உருவாக்கும் போதுபிள்ளையார் சுழியாக அமைவது பேஸ்லைன் எனப்படும் முகப்பு வாசகம்.


பெரும்பாலும் அந்த வாசகத்தை மையமாக்கித்தான் மொத்த விளம்பரங்களும் சுழலும். Be aware Take care என்ற ஆங்கில முகப்புவாசகத்துக்கு, "விழிப்புடன் இருப்போம் ! வரும்முன் தடுப்போம்!" என்ற என் மொழியாக்கத்தை அனைவரும் ஒப்புக் கொண்டதும் "மளமள"வென்று வேலைகள் தொடர்ந்தன. அப்போது நான் விளையாட்டாக எழுதிக் கொடுத்த ஒரு டாகுமென்டரி தேசியஅளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.

இப்போது யோசித்தாலும் வெள்ளிப் பதக்கம் வாங்கும் அளவு அந்தத்திரைக்கதையில் என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. விண்ணுலகத்திலிருந்து கோபித்துக் கொண்டு மண்ணுலகுக்கு வருகிறரதியைத் தேடி பூமிக்கு மன்மதன் வருவான். அவனைக் கொல்ல நினைக்கும்வில்லனாக எமதர்மராஜா. சென்னை பல்லவன் பஸ்ஸில் ரதியைப் பார்க்கும் மன்மதன் ஆட்டோவில் துரத்த ஆட்டோ விபத்துக்குள்ளாகும். மன்மதனுக்கு ரத்தம் கொடுக்கும் போது அந்த ரத்தத்தைப் பரிசோதனைசெய்யச் சொல்லி அசரீரி ஒலிக்கும்.

இப்படி விட்டலாச்சார்யா பாணியில் எழுதப்பட்ட அபத்தமான கதை அது. ஆனால் அதற்குக் கிடைத்த அங்கீகாரத்துக்கு என்ன காரணம் என்று யோசித்தபோது என் யூகம் இதுதான். எல்லா நிறுவனங்களும் அச்சமூட்டும் விதமாகவே எச்சரிக்கை அணுகுமுறையில் எய்ட்ஸ் தடுப்பு விளம்பரங்களை செய்து வந்ததால் நகைச்சுவையான அணுகுமுறையை மேற்கொண்ட இந்தத் திரைப்படம்வெற்றி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனமும் சரி, அதற்கு விளம்பரங்கள் உருவாக்கிய நிறுவனங்களும் சரி, "ஒருவனுக்கு ஒருத்தி"என்ற நீதிபோதனையுடன் நின்றுவிடாமல் தகாத உறவுகளுக்கான தற்காப்புமுறைகள் குறித்தும் துணிச்சலாக வலியுறுத்தி வந்தன. உபதேசங்களால் மாற்றத்தை உருவாக்க முடியாது என்கிற உண்மையை உணர்ந்ததால்தான் ஒரு விழிப்புணர்வைப் பெரிய அளவில் உருவாக்கமுடிந்தது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் உருவாக்கிய எய்ட்ஸ் தடுப்பு விளம்பரங்களில் ஒரு விளம்பரத்துக்கு நான் தந்த தலைப்பு வாசகங்களில் சில: "கொஞ்சம் அப்படி இப்படி இருப்பவரா நீங்கள்?எப்படிஇருந்தாலும்ஆணுறை அணியுங்கள்". "ஆணுறைகள்- சபலிஸ்ட்டுகளுக்கான ஸ்பெஷலிஸ்ட்".

ஆணுறை வாங்க கூச்சப்படுகிறார்கள் என்கிற நிலையை எதிர்கொள்ள இத்தகைய அணுகுமுறைகள் தேவைப்பட்டன. மிகச்சில ஆண்டுகளுக்குமுன்னால், இதுகுறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்த ஒரு நிறுவனம் திட்டமிட்டது. ஆணுறைகள் வாங்க மக்கள் தயங்குவது ஏன் என்பது போன்ற கள ஆய்வுக் கண்டறிதல்கள் குறித்து பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களும் நானும் தொலைபேசியில் விவாதித்துக்கொண்டிருந்தோம். வீட்டில் எவ்வளவுதான் கவனமாக ஆணுறைகளை ஒளித்து வைத்தாலும் குழந்தைகள் கண்ணில் பட்டால் எடுத்து விளையாடுகிறார்கள் என்பதுஒரு பிரச்சினையாகக் கண்டறியப்பட்டிருந்தது. பேராசிரியர் ஞான்சம்பந்தன் சிரித்தபடியே கேட்டார்,"அதுக்காக போட்டுகிட்டேவா அலைய முடியும்". நான் சொன்னேன், "போட்டுகிட்டே அலைய முடியாது. ஆனா அலையறவன்லாம் போட்டுக்கணும்".

இந்தத்தொலைபேசி உரையாடலை டேப் செய்து யாராவது வெளியிட்டிருந்தால் இன்னொரு வெள்ளிப்பதக்கம் கிடைத்திருக்குமோ என்னவோ!!

(தொடரும்)

Friday, July 1, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 10

ஷோபிகா பட்டுத் திருவிழாவுக்கு ஆடித்தள்ளுபடி போன்ற சொற்களை நேரடியாகப் பயன்படுத்தாமல், வித்தியாசமாக விளம்பரம் வேண்டுமென்று மா போஸல் ராமகிருஷ்ணன் சொன்னார். அந்த விளம்பர வரிசைக்கான கரு, என் மனதில் உருவாகியிருந்தது. புதிதாகத் திருமணமாகியிருந்த என் நண்பர் ஒருவர், பிரசவத்துக்காக பிறந்தகம் சென்றிருந்த தன் மனைவிக்கு
அனுப்ப ஒரு கவிதை கேட்டிருந்தார்.

"வீட்டுக்குள் பகலினிலும் வெளிச்சமில்லை வாசலிலே பளிச்சென்று கோலமில்லை போட்டுவைத்த படுக்கையின்னும் சுருட்டவில்லை படுத்திருந்தேன் இரவெல்லாம்...உறக்கமில்லை"

என்று தொடங்கும் கவிதை ஒன்றினை எழுதிக் கொடுத்திருந்தேன்.அதற்குத் தலைப்பு, "அப்பா வீட்டில் சீதை! அசோக வனத்தில் இராமன்".

தலை ஆடிக்காகவும் கணவன் மனைவியைப் பிரித்து வைப்பார்கள் என்ற விஷயம் நினைவுக்கு வந்தது.அதையே அடிப்படையாகக் கொண்டு விளம்பர வரிசையை உருவாக்க முடிவு செய்தேன். ஒவ்வொரு வாரமும் ஒரு விளம்பரம் வர வேண்டும் என்பது ஒப்பந்தம். சென்னைக்குக் கல்யாணமாகிப் போன பெண் ஆடிக்காக அம்மா வீட்டுக்குக் கோவை வருகிறாள். கணவன் கடிதம் போடுகிறான். இது முதல் வாரம். இந்தப் பெண் எழுதும் கடிதம் இரண்டாவது வாரம்.அவன் போடுகிற கடிதம் மூன்றாவது வாரம். தன்னை அழைத்துச் செல்ல வருமாறு கணவனுக்கு அந்தப்பெண் எழுதுகிற கடிதம்
நான்காவது வாரம்.

படிப்பவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக திரைப்படப் பாடல் வரிகளையே தலைப்பு வாசகம் ஆக்கினேன்.முதல் விளம்பரத்துக்கான தலைப்பு, "அன்புள்ள மான்விழியே !ஆசையிலோர் கடிதம்"! இந்த விளம்பரத்தில் கணவன், வீட்டில் கல்யாண ஆல்பத்தை புரட்டிக் கொண்டிருப்பதாகவும் அழகான ஷோபிகா பட்டில் அவள் ஜொலிப்பதாகவும் குறிப்பிடுவான். "இந்த ஆடியிலும் உனக்குப் பிடித்தமான பட்டுத்திருவிழா ஷோபிகாவில் தொடங்கியிருக்குமே" என்றெல்லாம் விசாரிப்பதாக அந்தக் கடிதம் இருக்கும்.

அடுத்த கடிதத்தை அவள் எழுதுவாள்.அதற்கான தலைப்பு,"காதல் சிறகைக் காற்றினில் விரித்து..."ஷோபிகா பட்டுத் திருவிழாவுக்குக் கிளம்பும் வேளையில் கடிதம் வந்ததாகவும், அவனுக்குப் பிடித்த அந்த ஷோபிகா புடவையை அப்போது அணிந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருப்பாள். அந்தப் புடவை முந்தானையையே காதல் சிறகாகக் காற்றினில் விரித்து ,பறந்துவர விரும்புவதாகவும் அந்தக் கடிதம் இருக்கும்.

மூன்றாவது கடிதம் கணவனின் பிரிவுத் துயரத்தை வெளிப்படுத்தும். "தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்" என்பது அதன் தலைப்பு, ஷோபிகா பட்டுப்புடவைகளை தலைக்கு வைத்துக் கொண்டு
தூங்குவான் பாவம்.

நான்காவது கடிதம்,தன்னை அழைத்துச்செல்ல கணவனை விரைந்து வரச்சொல்லி அவள் எழுதுவது. அதன் தலைப்பு, "பிரிந்தவர் மீண்டும் சேரும்போது"... தான் இம்முறையும் ஷோபிகா பட்டுத் திருவிழாவில் நிறைய புடவைகள் எடுத்திருப்பதாக அவள் குறிப்பிட்டிருப்பாள். பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இந்த விளம்பரம்,விளம்பர நிறுவனங்கள் மத்தியிலும் பிற ஜவுளிக்கடைகள் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஜவுளிக்கடைகளுக்கு விளம்பரங்கள் செய்து கொண்டிருந்த பிற நிறுவனங்கள் என்னை அணுகத் தொடங்கின. ஆரம்பத்திலேயே "காஸ்ட்லி ரைட்டர்" என்ற பெயரை எடுத்திருந்தேன். தங்கள் க்ளையண்ட்டுகளே என்னை வைத்து விளம்பரங்கள் எழுதி வாங்கப் பணித்திருந்ததால் அந்த நிறுவனங்கள் பேரம் பேசவில்லை. கேட்ட  சம்பளத்தைக் கொடுத்தன.

வெற்றிகரமான விளம்பரம் என்பது பார்க்கிறபோதோ படிக்கிற போதோ ஒரு புன்னகையை வரவழைக்க வேண்டும். இதே போல வேல் ஹோட்டல்ஸ் என்றோர் அசைவ உணவகத்துக்கு விளம்பரம் எழுதும்போது ஒரு சுவாரசியம். புரட்டாசி மாதம் விரதம் இருப்பவர்கள் அதிகம்.அந்தக் காலங்களில் அசைவ உணவகங்களுக்கு வாடிக்கையாளர் வருகை மிகவும் குறைவாக இருக்கும். அசைவப் பிரியர்கள் புரட்டாசி முடியும்வரை எப்படி பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருப்பார்களோ அதுபோல உணவக உரிமையாளர்களும் காத்திருப்பார்கள்.

புரட்டாசி முடிந்ததும் ஐப்பசி முதல் தேதியிலேயே தன் உணவக விளம்பரம் ஒன்று வெளிவர வேண்டுமென்று வேல் ஹோட்டல்ஸ் உரிமையாளர் விரும்பினார். அந்த விளம்பரத்துக்கும் அப்போது பிரபலமாக இருந்த திரைப்படப் பாடல்வரி ஒன்றையே கொஞ்சம் மாற்றிப் பயன்படுத்தினேன். "கொக்கு சைவக் கொக்கு..வேல் ஹோட்டல்ஸ் வந்து...விரதம் முடிச்சுடுச்சாம்!!"

என்னைப்பொறுத்தவரை விளம்பரங்களில் புதுமை என்பது வேறொன்றுமில்லை. விளம்பரம் செய்யும் தயரிப்பு பற்றிய அதீதமான புரிதல்தான்.வாடிக்கையாளர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்கிற தெளிவுதான்.இப்போது விஜய் கார்ஸ் என்ற நிறுவனத்தை பல கிளைகளுடன் வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் என் நண்பர் கோவை ரமேஷ், அப்போது நிதி நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். ஐயாயிரம் ரூபாய் முதலீட்டுத் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார்.

அதற்கு நானொரு விளம்பரம் எழுதிக் கொடுத்திருந்தேன். அதற்கு வரைகலை அமைத்தவர் கால்குலேட்டர் ஒன்றை வரைந்திருந்தார் கால்குலேட்டர் ஆன் செய்யப்பட்டிருக்கிறது என்று காட்ட ஒரு காரியம் செய்திருந்தார். கால்குலேட்டர் திரையில் 0 என்ற எண் மின்னிக் கொண்டிருந்தது. அவருடைய யோசனை என்னவோ சரிதான்.ஆனால் நிதிநிறுவனம் ஒன்றிற்கான விஷுவலில் பூஜ்யத்தைக் காட்டுவது அபத்தம். அதற்கு பதில் 5000 என்ற எண்ணை வரைந்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.

சில சமயங்களில் வரைகலையாளர்கள் இப்படி சில அபத்தங்கள் செய்வார்கள். ஒரு தயாரிப்பின் விளம்பர வாசகம் ஒன்று நன்றாக அமைந்துவிட்டால், அந்த வாசகங்களை நிறுவனத்தின் எல்லா இடங்களிலும் பயன்படுத்துவது இயல்பான விஷயம். உதாரணமாக வோடாஃபோன் நிறுவனம், Happy to  help  என்ற வாசகத்தைப் பயன்படுத்துகிற்து. இது விளம்பரத்துக்கு மட்டுமின்றி விற்பனையாளர்கள் தங்கள் டீ ஷர்ட்டுகளில் அணியவோ பேட்ஜாக அணியவோ பொருத்தமான வாசகம்.

ஆனால் கோவையில் புகழ்பெற்று விளங்கிய ஜவுளி நிறுவனம் ஒன்றிற்கான ஆடி விளம்பரம்,T ake advantage என்று ஆங்கில வாசகத்தையும்,"பயன்படுத்திக் கொள்ளுங்கள்"என்ற தமிழ் வாசகத்தையும் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதன் வரைகலையாளர், அதே வாசகத்தை பணியாளர்களுக்கான பேட்ஜாகவும் வடிவமைத்தார்.அவருக்கும் தமிழ் தெரியாது. பெண் பணியாளர்கள் அதிக அளவில் பணிபுரியும் கடையில் Take advantage என்றும்,"பயன்படுத்திக் கொள்ளுங்கள் " என்றும் பேட்ஜ் கொடுத்து குத்திக் கொள்ளச் சொன்னால் குழப்பம் நேராதா?உரிய நேரத்தில் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

தொடரும்...