Sunday, July 10, 2011

தத்துவம் கூட சிறிசு

 
 
 
 உனக்கும் எனக்கும் தெரியலைன்னாலும்
ஒலகம் ரொம்பப் பெரிசு-அட
உண்மை தெரிஞ்ச ஞானிகளுக்கோ
உள்ளங்கை போல் சிறிசு
தனக்குன்னு எதையும் நினைக்கற வரைக்கும்
தலையில பாரம் பெரிசு-ஒரு
கணக்குல எல்லாம் நடப்பது தெரிஞ்சா
கவலைங்க ரொம்ப சிறிசு



தோணுற போது எழுதற வரிதான்
தலைமுறை தாண்டியும் பெரிசு-அட
தள்ளிப்போட்டு சொல்லிப் பாத்தா
தத்துவம் கூட சிறிசு
ஆணும் பொண்ணும் ஆடுற வாழ்க்கை
அவரவர் போக்கில பெரிசு-அட
ஆடி முடிஞ்சு கணக்குப் பார்த்தா
அத்தனை கூத்தும் சிறிசு

வானம் தனியா வெளியே தெரிஞ்சா
வெய்யிலும் மழையும் பெரிசு-நீ
வாழ்க்கையின் அர்த்தம் தேடித் திரிஞ்சா
வருவதும் போவதும் சிறிசு
தானம் தருமம் எனதுன்னு நெனச்சா
தலைக்கனம் ரொம்பப் பெரிசு-நாம
தந்தது யாரோ தந்தது தான்னு
தெளிஞ்சா எல்லாம் சிறிசு

வீதியில் இறங்கிப் போகிற வரைக்கும்
வீட்டு விஷயம் பெரிசு-அந்த
வெட்ட வெளியப் பொட்டுல பார்த்தா
வானும் மண்ணும் சிறிசு
ஜோதியும் உள்ளே கிளம்புற வரைக்கும்
சூரியன் சந்திரன் பெரிசு-அட
சுடரா நிக்கற சுந்தரி முன்னே
சர்வ லோகமும் சிறிசு

2 comments:

சு.கி.ஞானம் said...

சுடரா நிக்கற சுந்தரி முன்னே
சர்வ லோகமும் சிறிசு
---
எளிமையான வார்த்தைகள்
அருமையான உதாரணங்கள்
இரண்டுமே பெருசு

Murugeswari Rajavel said...

தோணுற போது எழுதற வரிதான்
தலைமுறை தாண்டியும் பெரிசு
தத்துவம் கூட சிறிசென்றாலும் மனசு தொடும் வார்த்தை பெரிசு.