Thursday, November 29, 2012

அதிகாலையில் ஓர் அர்த்தஜாமம்



29.11.2012.காலையில் ஆறரை மணியிருக்கும். பள்ளியறையில் செல்லக் கொட்டாவியுடன்காத்திருந்தசிவகாமசுந்தரிக்கு,பம்பை,உடுக்கை,தாளவாத்தியங்களின் ஓசைகள் கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது.தீட்சிதர்கள் உள்ளே நுழைந்து நடராஜப் பெருமானைப் பள்ளி சேர்த்துத் திரும்பும்வரை சிலைபோல்
பாவனை செய்தவள், அவர்கள் வெளியேறித் திருக்கதவம் காப்பிட்டதும் குறுநகை தவழ பெருமானின்பக்கம் திரும்பினாள்."என்ன சுவாமி!அதிகாலையில் ஓர் அர்த்தஜாமமா?"


நமட்டுச் சிரிப்போடு நாயகி கேட்டதும் நடராஜப்பெருமானின் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பு."நேற்று உன் மகன் கந்தனின் கார்த்திகைத் திருநாள்ஆயிற்றே!பஞ்ச மூர்த்திகளுடன் திருவீதியுலா வரச்சொல்லி அடம்பிடித்து அழைத்துச் சென்றுவிட்டான்ஆறுமுகன்.நான்கு வீதிகளிலும் சொக்கப்பனை கொளுத்தி கோலாகலமாகக் கொண்டாடி விட்டார்கள்.
அனைத்தும் முடிந்து ஆலயம் திரும்பும் முன் நள்ளிரவாகிவிட்டது. பன்னிரண்டுமணி கடந்தால் பள்ளியறைக்கு அனுப்ப மாட்டார்களே!கனகசபையிலேயே காத்திருந்து உன் கனிந்த முகத்தைக்கனவில் கண்டு விடிந்தவுடனே விரைந்தோடி வந்துவிட்டேன்".விநயமாய்ப் பேசிய வண்ணம்நெருங்கிய வித்தகனின் திருத்தோள்களை வளைக்கரங்களால் வளைத்த வண்ணம் சிணுங்கினாள் அம்பிகை.


"சரிசரி! போதும் உங்கள் சிருங்காரம்.சாஸ்திரத்துக்காகத்தான் உங்களைப் பள்ளி சேர்த்திருக்கிறார்கள்.புறப்படுங்கள். பள்ளி நீங்கச்செய்ய பிள்ளைகள் வந்துவிடுவார்கள்". தேவியின் திருவாக்கு கேட்டு சபாபதி சொன்னார்,"ஆமாம்!ஆமாம்!ஒவ்வொரு வைகறையிலும் தில்லையே திரண்டு வந்துவிடுகிறது. நம் மகள்கள் பிரகாரம் முழுவதும் அமர்ந்து மலர்ச்சரங்கள் தொடுப்பதென்ன! நம் மகன்கள் பல்லக்கை சரிசெய்து,பஞ்சணைகள் தட்டிப் போட்டு சீர்செய்யும் நேர்த்தியென்ன. பம்பை,உடுக்கை,எக்காளம் தாளம் என்று போட்டி போட்டுக்கொண்டு ஆளுக்கொன்றை கைகளில் வைத்துக் காத்திருக்கும்
கோலமென்ன! பள்ளி சேர்ப்பதிலும் பள்ளி நீக்குவதிலும் பிள்ளைகள் தினமும் காட்டும் பரவசம் தினசரித்திருவிழா ஆயிற்றே"! தில்லை நாயகனின் திருவிழிகளில் வாஞ்சையும் நிறைவும் மின்னின.


"அதுசரி!நம்மைப் பள்ளி சேர்ப்பதும் பள்ளி நீக்குவதும் சடங்குபோல் இல்லாமல் உயிர்ப்போடும் உணர்வோடும் நிகழ்கிறதே,அத்தருணங்களில் என்ன நிகழ்கிறதென்று அவர்கள் அறிவார்களா?"அர்த்தபுஷ்டியுடன் அம்பிகை கேட்டதன் ஆழம் ஆளுடைநாயகனுக்குப் புலப்பட்டது.

"புவனேஷ்வரி!மூலத்தானத்தில் இருக்கும் என்னுடைய அம்சம், திருப்பள்ளிக்குப் புறப்படும்வேளையில்,உற்சவத் திருமூர்த்தத்தில் செலுத்தப்படுகிறது. அந்தத் திருவுரு பிரகாரத்தைச் சுற்றி
பள்ளியறை சேருகையில் அதனிருந்து வெளிப்படும் அருளதிர்வுகள் ஒளிச்சிதறல்களாய்,அதிர்வுகளாய் திசைகளெங்கும் பரவிவழிபட்டு நிற்பவர்களின் உடலிலும் மனதிலும் உயிரிலும்தெய்வாம்சத்தைத் தருகிறது. பள்ளி நீங்கும்போதும் திருவீதியுலா செல்லும்போதும் இதுவே
நிகழ்கிறது.இல்லறமும் தெய்வீகமே என்பதை எல்லோரும் உணரும்
தருணமது.
அவர்கள் இதனை அறிந்திருக்க வேண்டுமென்ற அசியமில்லை.அவர்களுக்கு பக்தி பாவமே பிரதானம். திருப்பல்லக்கில் நான் ஆரோகணித்ததும்,"அய்யா புறப்பட்டு விட்டார்" என்கிறார்கள்.
எதிர்ப்படும் மற்றவர்களிடம் "அய்யாவைப் பார்த்துவிட்டீர்களா"என்கிறார்கள். கூடும் அன்பால் கும்பிட மட்டுமே செய்பவர்கள் நம் அருளதிர்வுகளைப் பெற்றுக் கொண்டிருப்பதை
அறிந்தாலும் சரி, அறியாவிட்டாலும்சரி,அவர்களுக்கு நடக்க வேண்டிய நன்மைகள் நடந்தேதீரும்".நாதன் சொல்லி முடிக்கும் முன் வாத்தியங்களின் முழக்கம் மீண்டும் கேட்கத் தொடங்கியது.

திருத்தோள் தழுவிய தளிர்க்கரங்களை நெகிழ்த்தி,மெல்ல நகர்ந்த மாதரசி, திருக்கதவம் காப்புநீங்கும் ஒலிகேட்டு மறுபடியும் சிலைபாவம் காட்டினாள். மகாதேவன் மவுன விடைபெற்றுப் புறப்பட,
வடமேற்கெல்லையில் இருக்கும் தன் ஆலயம் சேர ஆயத்தமானாள் சிவகாமசுந்தரி.



Wednesday, November 28, 2012

அற்புதர்-15


                                  
அற்புதரின் முதன்மை விருந்தினர் உருவமற்றவர். அவரை அருவமானவர் என்றும் சொல்லிவிடமுடியாது. அருவமுமாகி உருவமுமான அந்த நபரின் வருகைக்காகவே தான் வந்திருப்பதாய் அற்புதர் சொன்னபோது பலருக்கும் புரியவில்லை. ஆனால் அந்த முதன்மை விருந்தினருக்கான கூடாரத்தை அமைக்கத் தொடங்கியதுமே அற்புதரின் தீவிரத்தைக் கண்டு அருகிலிருந்த அத்தனைபேரும் அதிசயித்தனர். வரப்போகிறவர் எல்லா வகையிலும் முழுமையானவர் என்றும் அவரின் வருகை நிகழ தன்னையே அர்ப்பணிக்கவும் தயாரென்றும் அற்புதர் சொல்லச் சொல்ல அச்சம் கலந்த பரவசத்தில் அனைவரும் அமிழ்ந்தனர்.

ஒரு விண்கலம் தரையிறங்கும்போது செய்யப்படும் ஏற்பாடுகளைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு நுட்பமான ஏற்பாடுகளில் இறங்கினார் அற்புதர்.வரப்போகும் விருந்தினர் தங்கப் போகும் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமென்பதால் அதிசூட்சுமமான முறையில் அற்புதர் இயங்கினார்.விரியத் திறந்த வாசல்வழி அந்த விருந்தினர் வரவில்லை. உண்மையில் அவர் வெளியிலிருந்து உள்ளே வந்த விருந்தினரல்ல.உள்ளிருந்து வெளிப்பட்ட விந்தை விருந்தினர்.அவர் வெளிப்பட்ட வாசல்கள் ஒவ்வொன்றையும் பூட்டுவதே அவர் வருகையை உறுதி செய்கிற வரவேற்பு என்றார் அற்புதர்.அந்த வாசல்களுக்கான திறவுகோலாகவும் பூட்டாகவும் அற்புதரின் சக்திநிலையே செயல்பட்டது.

எழுநிலை மாடங்களில் ஏற்றிவைத்த உயிர்ச்சுடராய் வந்த விருந்தினர் நிலைகொண்டபோது விரைந்தோடிச் சென்று கட்டியணைத்து வரவேற்ற அற்புதர் செயலற்று விழுந்தார். விருந்தினருக்காக அற்புதர் முன்னரே வரையறுத்த உபசாரங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன.எழுபத்தியிரண்டு மணிநேரங்களில் முழு நலனுடன் மீண்டெழுந்தார் அற்புதர். பலர் சேர்ந்து தூக்கிச் சென்ற அற்புதர் பாதம் பதித்து நடந்து வந்து கொண்டிருந்தார்.

ஆனந்தக் கண்ணீருடன் தன்னைப் பணிந்தவர்களிடம் சொன்னார் அற்புதர்."நான் நலமுடன் மீண்டது ஓரற்புதமென்றால் இங்கே நிகழ்ந்திருப்பது பேரற்புதம். சக்திநிலையின் உச்சமாய் இந்த சந்நிதிவடிவம் கொண்டுவிட்டது. எந்த உயிரிங்கே வந்து நின்றாலும் ஆன்மீகத்தின் விதையை விதைக்கும் கற்பக விருட்சம் இங்கே கோவில் கொண்டுள்ளது.

இங்கே நம்முடன் இருக்கும் விருந்தினரின் வடிவமே அகன்றாலும் அவரின் வீரியம் அகலாது.கோலம் மறைந்தாலும் காரியம் மறையாது.இந்த விருந்தினரின் விருந்தினர்கள் உலகம் முழுவதிலும்
இருந்து ஓடோடி வருவார்கள். இந்த விருந்தினருக்கு சடங்குகள் தேவையில்லை. சங்கீதம் தேவை.
                                                         
நாளொன்றுக்கு இரண்டுமுறை நாமிங்கேஉணவுகொள்வோம். நாளுக்கு இரண்டுமுறை இவர் நாதத்தை உட்கொள்வார்.எப்போதும் ஈரமாய் இவர்பரப்பும் அதிர்வுகள் எல்லோருக்குள்ளும் தியானம் மலர்த்தும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் அதிர்வுகள் இவரிடம் புறப்படும்.

எல்லா நாட்களும் இவர்முன் அமர்ந்தால் தியானத்தின் ஆழம் புலப்படும்.இவர் இங்கே வந்திருக்கும் விருந்தினரல்ல. இந்தப் பிரபஞ்சத்தின் உரிமையாளர். நாம் வந்து வகுத்த இடம் இவருக்குப் பிடித்த இடம்."

அற்புதர் சொன்னதன் அர்த்தமும் அடர்த்தியும் ஆண்டுகள் செல்லச் செல்ல அனைவருக்கும் புரிந்தது.புராதன் முறையில் உருவான வளாகத்தில் திடமான மௌனமாய் திசைகளை உலுக்கும்.
அமைதியாய் எழுநிலை மாடங்களிலும் எழுகின்ற ஒளியலைகளை வாரி இறைத்தவண்ணம் வீற்றிருந்தார் அவர்.உலகின் எந்த மூலைக்குச் செல்ல நேர்ந்தாலும் இருந்த இடங்களில் இருந்து இவரையே பார்த்திருந்தார் அற்புதர்.

உலகெங்கும் அற்புதர் உலாவந்தாலும் அற்புதரின் உலகமாய் அமைந்தது
அந்தக் கூடாரம்.

Sunday, November 25, 2012

"நிறைய வேலை பண்ணுங்கப்பா"


                                                                 


" அந்தக் காலத்துல அந்தம்மா பேச்சைக் கேட்க நாங்கல்லாம் 12 மைல் சைக்கிளில போவோம்.தொ.மு.சி. ரகுநாதனும் அந்தம்மாவும் பேசினா மேடை கிடுகிடுக்கும்.பெரிய புரட்சிக்காரி" கவிஞர்புவியரசு என்னிடம் தொலைபேசியில் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டிருந்த போது 'அந்தம்மா"வைக்கடைசியாகப் பார்க்க தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தேன்.

ஜீவா அவர்களால் மார்க்சீய மார்க்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு,ஆழ்ந்த தமிழறிஞராய் வளர்ந்து,வள்ளலார் நெறியில் வாழ்வை இணைத்து முதிர்ந்த தாய்மையின் கனிந்த வடிவமாய் வாழ்ந்து22/11/2012ல் காலமான முனைவர் சு.சிவகாமசுந்தரி அவர்கள்தான் "அந்தம்மா".

சின்னஞ்சிறு வயதிலேயே அனல்பறக்கும் பேச்சாளராய் அறிமுகமான சிவகாமசுந்தரியின் தந்தை திரு.பழனியப்பர், வள்ளலாரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழிலக்கியம் பயின்ற சிவகாமசுந்தரிக்கும்
வேளாண் பொறியாளர் திரு. சுப்பிரமணியனுக்கும் பழநி முருகன் கோவிலில் திருமணம் செய்துவைத்தவர் அருட்செல்வர்.நா.மகாலிங்கம். கோவையில் அமரர் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார்
அவர்களின் அவிநாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராகஅருட்செல்வர் சேர்த்துவிட்டார்.அப்போதைய முதல்வர் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் விதித்த நிபந்தனை, "சிவகாமசுந்தரி கட்சிக்கூட்டங்களில் பேசக்கூடாது"என்பதுதான்.
              
ஜீவா மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் சென்ற கம்பனையும் பாரதியும் தமிழிலக்கிய மேடைகளில் கனலென முழங்கி,அதன்வழியே தன் மனதில் நீறு பூத்த நெருப்பாயிருந்த சமத்துவக் கொள்கைகளைமக்கள் மத்தியில் கொண்டுசென்ற வண்ணம் இருந்தார் முனைவர் சு.சிவகாமசுந்தரி.

பணிக்காலத்தில் கல்வித்திட்டத்தில் வந்தவொரு மாற்றத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தைநிகழ்த்தி ஒருமாத காலம் சிறையிலிருந்தார் அவர்.போர்க்குணமும் புரட்சிக்கனலும் உள்ளே கனன்றுகொண்டிருந்தாலும் தாய்மை நிறைந்த அன்பைத் தருவதில் தனித்தன்மையுடன் திகழ்ந்தார்.

தஞ்சை பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணிபுரிந்து பணிஓய்வுக்குப் பிறகு தஞ்சையிலேயேகுடியேறிவிட்டார் அவர். பூர்வீகம் தஞ்சைதான் அவருக்கு.தந்தைவழிச் சீதனமாக வந்த வள்ளலார் நெறி ஈடுபாடும் அவருக்கு இயல்பாகவே கைவந்தது. திருவருட்பாவுக்கு இசையமைக்கக்கூடாதென்று கருதிய வள்ளலார் இசையோடு பாடவென்றுதனியாகக் கீர்த்தனைகளை உருவாக்கித் தந்துள்ளார்.அவற்றை மட்டும் இசைப்பதற்கென்று வடலூரில் வள்ளலார்இசைவிழாவை விடாது நடத்திவந்தார் முனைவர் சிவகாமசுந்தரி .

முதுமையாலும் கணவரின் உடல்நலக்குறைவாலும் நீண்டகாலம் தமிழிலக்கிய மேடைகளைத்தவிர்த்துவந்த சிவகமசுந்தரி அவர்களை உரிமையோடும் அன்போடும் கோவையில் நடக்கும் "எப்போ
வருவாரோ" தொடர் நிகழ்ச்சியில் சில ஆண்டுகளுக்கு முன் வள்ளலார் பற்றிப் பேச அழைத்தேன்.
"எல்லாம் செயல்கூடும்" என்ற தலைப்பில் பேசிய அம்மையார், 'வள்ளல்பெருமான் வரிகளைவைத்து என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்தால் ஒரு நிறைவு எனக்குத் தோன்றுகிறது.நான் "ஞானசபை நாதனுக்கு நல்ல பிள்ளை" என்றார். பணிபுரிந்த காலத்தில் சக ஆசிரியைகள் மத்தியிலும் மாணவிகள் மத்தியிலும் அவருக்கிருந்த செல்வாக்கு அத்தனை ஆண்டுகளுக்குப்பிறகும் அப்படியே இருந்ததை அன்று பார்த்தேன்.

விழா நடைபெற்ற கோவை ராம்நகர் ஐயப்ப பூஜா சங்கத்தின் வாயிலில் அம்மையார் வந்திறங்கியதும்நடுத்தர வயதைக் கடந்திருந்த முன்னாள் மாணவிகள் ஓடிச்சென்று அவரைக் கட்டிக் கொண்டு ஆனந்தக் கதறல் கதறியது நெகிழ்வான உணர்ச்சிச் சித்திரம்.

அடிக்கடி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும்போதும் தஞ்சையில் அவர்களை நேரில்சந்திக்கும்போதும்,அவர் தவறாமல் சொல்கிற வாக்கியம்,"இன்னும் நிறைய வேலை பண்ணுங்கப்பா"
என்பதுதான்.

தஞ்சையின் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கிய அவரின் மாப்பிள்ளை
மறைந்த போதும் கணவர் மறைந்த போதும் நிலைகுலைந்த அவரைத்
தூக்கி நிறுத்தியது அவர்கற்ற தமிழும் வள்ளலார் நெறியில் அவருக்கிருந்த ஊற்றமும்தான்.

நான்கு மாதங்களுக்கு முன் "மூன்றாம் உலகப்போர்" அறிமுக விழாவிற்கு தஞ்சை சென்ற போது அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தகவலை அவரது புதல்விமருத்துவர் அமுதச் செல்வி மூலம் அறிந்தேன். "உங்களையும் ஸ்டாலின் குணசேகரனையும் பற்றி
அம்மா அடிக்கடி பேசிக்கிட்டிருப்பாங்க.முடிஞ்சா வந்து பார்த்துட்டு போயிடுங்க" என்றார் அவர்.தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அம்மையாரிடம் சில மணித்துளிகள் பேச முடிந்தது."ரயிலுக்கு நேரமாயிடும்.புறப்படுங்க..நல்லா பண்ணிகிட்டிருக்கீங்க. இன்னும் நிறைய வேலை பண்ணுங்க"என்றார். அதன்பிறகு உடல்நிலை சற்றே சீராகி இல்லம் திரும்பினார்.

ஆகஸ்ட் 12ல், என் ஐம்பதாவது நூல் வெளியீட்டுவிழாவின் போது காலையில் அழைத்து வாழ்த்தின அம்மையார் அப்போதும் சொன்னது
"இன்னும் நிறைய வேலை பண்ணுங்கப்பா".
23/11/2012 முற்பகலில், ஐஸ் பெட்டிக்குள் துயில்நிலையில் இருப்பதுபோல் அமைதியாகப் படுத்திருந்தஅம்மையாரை வணங்கி நிற்கிற போதும் செவிகளில் ஒலித்தது அவருடைய குரல்,"இன்னும் நிறையவேலை பண்ணுங்கப்பா" .அருட்பெருஞ்ஜோதி அகவலை அருட்பா அன்பர்கள்
பாராயணம் செய்து கொண்டேயிருக்க,தமிழ் மேடைகளில் வீறுகொண்டு
முழங்கி ஓய்ந்த அந்த நெடுந்திருவுருவைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.

எழுபத்தாறாம் அகவைவரை வாழ்ந்த அந்தத் தேர்ந்த தமிழறிஞரை,தாய்மையின் பெருஞ்சுடரை வணங்குகிறேன்.அவரை
இழந்து வாடும் அவர்தம் புதல்விகள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்.

http://www.alaikal.com/news/?p=40845
அம்மையாரின் கட்டுரை ஒன்று


Friday, November 23, 2012

கம்பனில் சுழலும் சொற்போர்




                           நடுவர் :"கலைமாமணி"மரபின்மைந்தன் முத்தையா
                 
                         கற்பவர் மனங்களைப் பெரிதும் கவர்பவன்


                      அயோத்தி இராமனே- முனைவர்.குரு.ஞானாம்பிகை

                      ஆரண்ய இராமனே-   முனைவர்.து.இளங்கோவன்

                      கோதண்ட இராமனே- திருமதி மகேஸ்வரி சற்குரு

                            இடம்:அருள்மிகு கோதண்டராமசுவாமி ஆலயம்
                                          ராம்நகர், கோவை -641009

                              நாள்: 24.11.2012  சனிக்கிழமை மாலை 6.00 மணி

                                சொற்போர் வெடிக்கும்!                 சூடு பறக்கும்!

         (அமரர் டி.எஸ்.சங்கர ஐயர் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி)       
                             தங்கள் வருகை........எங்கள் உவகை


   அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!!


அற்புதர்-14


                                                       

ஆண்டின் மிக இருண்ட இரவை அற்புதரின் முன்னிலையில் அணுஅணுவாய் உள்வாங்க பல இலட்சம்பேர் வந்துகொண்டிருந்தனர்.
மிகநீண்ட மலைப்பாம்பாய் வந்து கொண்டிருந்த அந்த வரிசையைப்
பார்த்த அற்புதர் புன்னகைத்த வண்ணம் வணங்கினார்.அவருக்கு
அன்றிரவு முழுவதும் தன் பங்குதாரருடன் ஒரு பணியிருந்தது..

ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கும் உயிர்ச்சுருளை உசுப்பிவிட்டு சீண்டிவிட்டு சீறவிட்டு வேடிக்கை பார்ப்பதில் அற்புதருக்கு அளவிட முடியாதஆனந்தம்.

தங்களுக்குள் இருக்கும் அந்த உயிர்ப்பை உணர்ந்தவர்கள்,உணராதவர்கள் அனைவருக்கும் அற்புதரின் சபையில் ஆசனங்கள் இர்ருந்தன.உலகின்
வெவ்வேறு திசைகளிலிருந்தும் குழலோடும் யாழோடும்முரசுகளோடும்
அங்கமெங்கும் தாண்டவத் துகள்களோடும் வந்துசேர்ந்த வல்லோர் குழு
கவிந்து கொண்டிருந்த இருளின் ஒவ்வோர் அணுவிலும் அதிர்வுகள்
கூட்டின.
                                                                          
அந்த இரவில் அங்கிருந்தோரின் முதுகுத்தண்டுகள் வழியே
மின்னல் வேகத்தில் பாம்புகள் ஊர்ந்து செல்லத் தொடங்கின.
சுருண்டு கிடந்த சாரைகளும் விரியன்களும் ராஜநாகங்களும்
துயில் கலைந்தெழுவதையும்,மெல்ல அசைவதையும் அங்கு வந்தவர்தம்  உடலசைவை வைத்தே உணர முடிந்தது.

அற்புதரின் திருமேனி மாபெரும் மகுடியாய் எழுந்து நின்று அத்தனை
நாகங்களையும் ஆட்டுவித்தது.ஆலமுண்ட கண்டமென்று நீலம்
படர்ந்திருந்த நள்ளிரவில் அற்புதரின் மகாமந்திர உச்சாடனத்தில் அத்தனை நாகங்களும் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாய்
படம்விரித்தன.

உச்சிவரை உயர்ந்தெழுந்த நாகங்கள் உள்ளே நிகழ்த்திய உறியடி உற்சவத்தில் உச்சியிலிருந்த பாற்குடத்தின் துளிகளை பருகின
நாகங்கள். பசிதுயில் மறந்தன தேகங்கள். நெடுந்தொலைவில்
ஒலித்தவொரு சித்தர் பாடல் அந்த வெள்ளிமலையெங்கும் விரிந்து
பரந்தது..

"மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்பவர்க்கு
 தேங்காய்ப்ப்பால் ஏதுக்கடி-குதம்பாய்
 தேங்காய்ப்பால் ஏதுக்கடி "




Wednesday, November 21, 2012

அற்புதர்-13


                                             
அற்புதரின் இரவுகள் ஏகாந்தமானவை.அவரின் அறிதுயில் பொழுதுகளில் அகலத் திறந்த அவரின் ஆன்மவாசல்வழி தங்களுக்கானசொர்க்கவாசல் தென்படுகின்றதா என்று வடிவிலாத் துளிகள் வந்து நிற்பதுண்டு.

பெருவழிக்கான பாதை திறக்க நெடுங்காலமாய் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் மீது அற்புதரின் கண்ணோக்கம் படும்போதே அவர்களின் பயணப் பொழுது முடிவாகிவிடும்.

கையிலிருக்கும் மூட்டை முடிச்சுகளைக் களவு கொடுப்பதே அந்தப்
பயணத்துக்கான அடிப்படைத் தகுதி என்றறிந்தவர்கள் அற்புதர் அவற்றைக் களவாடும் கணத்திற்கென்று ஆவலுடன் காத்திருப்பார்கள்.நெடுங்காலமாய் சுமக்கும் அந்த மூட்டை முடிச்சுகளை அவர்களிடமிருந்து தனியே பிரித்தறியும் அற்புதமே அற்புதருக்குத்தான் சாத்தியம். தங்கள் மூட்டைகளைத் தங்களிடமிருந்து பிரிக்கவும்,தங்கள் முன்னிலையிலேயே அவற்றை எரிக்கவும் அவர்கள் அற்புதரையே பெரிதும் நம்பியிருப்பார்கள்.

கைகளில் இருக்கும் மூட்டைகளை மட்டுமின்றி அவர்கள் பெயரில் பதிவான சரக்குகளையும் கைப்பற்றி எரிப்பதில் கைதேர்ந்தவர்அற்புதர். எனவே அவர்களின் பயணிகள் தங்களின் உடமைகள் பத்திரமாய் களவு போயிருக்கும் என்ற நிம்மதியுடன் காணாமல்போவார்கள்.
                                                   

பலரும் பயணம் போவதாய் நினைத்துக் கொண்டு ரங்கராட்டினத்தில்
ஏறிவிட்டு தொடங்கிய இடத்திற்கே திரும்பத் திரும்ப வந்து கொண்டும் வழியெங்கும் கதறிக் கொண்டும் இருக்கும்போது, அற்புதரின் வாகனத்தில் ஏறியவர்களால் விரும்பிய இடத்திற்கு விரைந்து செல்ல முடிந்தது. ஒருபோதும் திரும்பத் தேவையில்லாதஉல்லாசப் பயணம் அது.

ஒருதிசைக்கும் மறுதிசைக்குமான பயணமா?ஒருகரைக்கும் மறுகரைக்குமான பயணமா? என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருப்பவர்கள் வந்துசேரக் காலம் பிடிக்கும் என்பதை அற்புதர் அறிவார். விரும்பி வரும் பயணிகளே காத்திருப்போர் பட்டியலில்இருக்க ஒருசில பயணிகளுக்காக அற்புதர் காத்திருப்பதும் உண்டு.

செல்ல வேண்டிய பாதையாகவும் சென்று செலுத்தும் வாகனமாகவும் சேர வேண்டிய ஷேத்திரமாகவும் தானேயானதை ஒருபோதும் அற்புதர் அறிவித்ததேயில்லை.செல்பவர்கள் கண்டதில்லை.சென்றவர்கள் சொன்னதில்லை.

Tuesday, November 20, 2012

அற்புதர்-12

                                                        
சின்ன வயதிலிருந்தே சிகரங்கள் என்றால் அற்புதருக்கு மிகவும் பிரியம்.அவரது பாதங்களிலும் பாதுகைகளிலும் வாகனச்சக்கரங்களிலும் மலைவாசனையும் வனவாசனையும்வந்து கொண்டேயிருக்கும்.முன்பொரு காலத்தில் பரமனின் பாதங்கள் பதிந்த மலைத்தடங்களில்
அற்புதர் தன் குருநாதரை தரிசித்தார்.எனவே மலைகளின் தரிசனம், அவருக்கு தாய்முலை கரிசனம்.


அன்று தொடங்கி எல்லாச் சிகரங்களிலும் அவருக்கான பாதைகள் விரியத் தொடங்கின.சமவெளிகளில்அற்புதர் நடந்து வரும்போதெல்லாம் ஒரு சிகரம் நடந்து வருவதைப்போலவே இருக்கும். மலையேறும்
மனிதர்கள் அடிவாரங்களில் இளைப்பாறி அதன்பின் தொடங்குவதுபோல் அவருடைய திருவடிகளில்இளைப்பாறி ஆன்மீகச் சிகரங்கள் நோக்கி ஆயிரமாயிரம்பேர் தங்கள் தேடல்களைத் தொடங்கினர்.

                                                           
ஒரு மலையை நாம் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. கரடு முரடான பாதைகள் கொண்டதென்றுமலைகளைப் புரிந்து வைத்திருப்பவர்களுக்கு அங்கே மெல்லிய மலர்கள் கிள்ளல் பயமின்றி கிளுகிளுத்துச் சிரிப்பதை உணரவே முடியாது. பறவைகளும் விலங்குகளும் தங்கள் இயல்புப்படிமலைகளில் வாழ்வது போல், அற்புதரின் அணுக்கத்தில் ஒவ்வொரு மனிதரும் தங்கள்
உயிரியல்பை உணரத் தொடங்கினர்.ஆனால் அற்புதரின் பிரம்மாண்டம் மட்டும் அவர்களுக்குமுற்றாகப் பிடிபடவில்லை.

                                                             
கரிய பாறைகளின்மேல் கண்ணுறங்கும் முகில்களைப்போல் அற்புதரின் தோள்களில் சுமைகளைவைத்து தாள்களில் துயின்றன பல்லாயிரம் உயிர்கள்.மலையெங்கும் ஆங்காங்கே ஊஞ்சல் கட்டும்வெள்ளி அருவிகளாய் கண்கள் ஊற்றெடுக்க மூடிய இமைகள் மூடியவண்ணம் தியானத்தில் இருந்தனர்மனிதர்கள்.காற்றின் அசைவில் சிலிர்த்தசையும் மரங்களாய் அற்புதரின் சுவாசத்தில் சிலிர்த்தன மனங்கள்.

மலையில் ஆங்காங்கே தென்படும் காட்டு நெருப்பாய் தவத்தின் உச்சியில் அவ்வப்போது சிலரின் வினைக்காடுகள்எரியும்போதும் மௌனசாட்சியாய் அசையாதிருந்தார் அற்புதர். பனிபடர்ந்த சிகரமுகடுகளின் சொல்லொணா வசீகரம்அற்புதர் விழிமூடியமரும்தருணங்களில் கவிவதும், அவரின் விழிகள்மலரும்பொழுதில் உயிர்களெங்கும் வெய்யில் படர்வதும்
அவர் அசலர் என்பதை அடிக்கடி உணர்த்தின.



இருளின் விழுதுகள் பிடித்திறங்கி நட்சத்திரங்களும் நிலவும் மலைகளில் உலவ வரும் இரவுகளின்இரகசியக் குறிப்பை சில்வண்டுகள் பரிமாறிக்கொள்வதுபோல், அற்புதருக்கும் ஆகாயத்துக்கும் நடக்கும்
தகவல் பரிமாற்றத்தை இரவு நட்சத்திரக் கண்கள் மினுங்க கேட்டுக் கொண்டிருக்கும்.


அந்த இரவுகளின் சூட்சுமக் குறிப்புகளை மொழிபெயர்த்து அற்புதர் என்னும் கருணைச்சிகரத்தின்அடிவாரத்தில் வந்தமரும் வசந்தகாலப் பறவையொன்று வாய்விட்டுப் பாடியது

                                                

"சிகரத்தில் ஏறும் எந்த மனிதனும்
சிகரம் வென்றவன் இல்லை
உயரத்தைத் தொட்டவன் எல்லா நேரமும்
உயரத்தில் நிற்பதும் இல்லை
சிகரம் தீண்டிய முகிலகளும் பனியும்
சுவடே இன்றிக் கரையும்
சிகரம் என்பதே கரையச் சொல்வது
எத்தனை பேருக்குப் புரியும்?"

அந்தப் பாடலின் வரிகள் தோறும் வெளிச்சம் போட்டது,அற்புதரின் புன்னகை,



Monday, November 19, 2012

அற்புதர்-11

                                             


ஆகாயத்தைக் குறிவைப்பவர்களில் அற்புதரும் ஒருவர். ஆனால் அவர் குறிவைப்பது, தான் ஏற்கெனவே வென்றுவிட்ட ஆகாயத்தை. நெற்றிப் புருவங்கள் நடுவே வந்து நின்ற வெட்டவெளியின் விரிவை வெளியிலும் காண்பதால் அவர்பார்க்கும் ஆகாயம், அவருடைய ஆகாயம்.

ஆனால் ஆகாயத்தைக் குறிவைத்து அவர் எய்யும் அம்புகள் எதையும் கிழிக்கும் அம்புகளல்ல.கிழிந்த ஆகாயத்தைத் தைக்கும் அம்புகள்.பூமியை நாணாக்கி மேல்நோக்கி மெல்ல மெல்ல எழும் அம்புகளை அவர் எய்த வண்ணம் இருக்கிறார்.




                                                         
அற்புதரின் படைவீரர்கள் அல்லும்பகலும் அந்த அம்புகளை எய்தவண்ணம் இருக்கிறார்கள். அகஆகாயத்தின் ஆனந்தம் உணர்ந்த அற்புதர் புற ஆகாயத்தின்காயங்களை ஆற்றப் பச்சைப் பசுங்கணைகளை விண்நோக்கி விடுத்தவண்ணம் இருக்கிறார்.

"அம்பு காயத்தை ஆற்றுமா?"என்றொரு விமர்சகர் எழுப்பிய கேள்விக்கு அற்புதரின் படையிலிருந்தொருவர் பதில்சொன்னார். "அன்பு காயத்தை ஆக்குமென்றால் அம்பு காயத்தை ஆற்றாதா என்ன?"

"ஆகாயம் நோக்கிய ஆன்மீகத்தவம், வான்கருணையை வரவழைப்பது போல் ஆகாயம் நோக்கிய தாவரத்தவம், வான்மழையை வரவழைக்கும்" என்றார் அற்புதர். விரல் சொடுக்கியதும் பல இலட்சம் பசிய அம்புகள் வான்நோக்கி எழுந்ததை உலகின் வெற்றி ஆவணங்கள் சாதனை என்று சொன்ன போதுஅற்புதர் சொன்னார்,

"இது சாதனையா என்று தெரியவில்லை. அப்படியிருந்தால் ஒரு வேண்டுகோள். யாரேனும் ஒருவர் இந்த சாதனையை முறியடித்து இந்தசாதனையிலிருந்து மீண்டுவர எனக்கு உதவுங்கள்".

"அப்படியானால் இது சாதனையில்லையா?" அதிர்ச்சியுடன் கேட்டவர்களுக்குஅற்புதர் தந்த பதில் இது. "இந்த அம்புகள் நம் அகிம்சைச் சகோதரர்கள். நம்வெளிமூச்சு இவர்களின் சுவாசம். அவர்களின் வெளிமூச்சு நம் சுவாசம். இவர்களுடன் நமக்கிருப்பது இரத்த பந்தமல்ல. சுவாச பந்தம்"

அற்புதரின் அமைதிப்படை தொடுக்கும் பசிய அம்புகளின் பாய்ச்சலைப் பார்த்த உலகம் ஆகாயம் நோக்கிய இந்த ஆக்கபூர்வமான அம்புகள், கந்தலாகிவிட்ட ஆகாயத்தின் ஆடையைத் தைக்கும் ஊசிகள் என்பதை உணர்ந்தார்கள்.


                                            
அற்புதர்பால் கொண்ட அன்பால், அவரை "மரம் நடும் சாமி'என்று மற்றவர்கள்சொன்னபோது, ஆகாயத்தைக் குறிவைத்துக் கொண்டிருந்த அற்புதர்அவசரமாய்ச் சொன்னார், "நான் வந்தது மரங்களை வளர்க்க அல்ல..உயிர்களை மலர்த்த.. இது காலத்தின் தேவைக்குக் கைகொடுக்கும் வேலை. உலகைக்காக்க ஆகாயத்தின் ஓசோனை உறுதிசெய்ய என்னில் அங்கமாய் இருக்கும் பசுமைக்கரங்களால் மரங்கள் வளரும். ஆனால் என் சொந்த நந்தவனத்தில் காற்றின் அமுதத்தை உள்வாங்கி உயிரென்னும் பூக்கள் மலரும். உயிர்கள் மலர்த்துவதே என் வேலை. மரங்கள் வளர்ப்பது என் லீலை"



தமிழக முதல்வர் ம.கோ.இரா.

                                            
இப்படித்தான் உலகத்தமிழ் மாநாட்டின்போது எம்.ஜி.ஆர்.தனித்தமிழ் ஆர்வலர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். அவருக்கு தமிழறிஞர்களுடன் நெருங்கிய தொடர்பும் பற்றும் இருந்தது.

சில தமிழ்ச்சொற்களைப்பற்றி அவர் வேடிக்கையாகக் கேட்டதையும்
அதற்கு முதல்வர் மனம் புண்படாமல் தான் விடைதந்த விதம் குறித்தும்
அவ்வை நடராசன் அவர்கள் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஓட்டுநரை "காரோட்டி"என்று சொல்வதை எம்.ஜி.ஆர். ஒருமுறை கிண்டல்
செய்தாராம்."அது என்ன காரோட்டி கா..ரோட்டி" என்று கேலி செய்ய உடனே அவ்வை நடராசன்,"எனக்கென்னங்க தெரியும்? எனக்கு படகோட்டிதான் தெரியும்" என்று சொல்ல, ஒருகணம் திகைத்த எம்.ஜி.ஆர்,
வெடித்துச் சிரித்திருக்கிறார்.
                                                         
அவர் முதல்வராக இருந்த காலத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாவதில் காட்டிய அக்கறை,பாரதியார் நூற்றாண்டு கொண்டாடிய
விதம் இவையெல்லாம் மொழி ஆர்வலர்களின் மனங்களில் அவர்மீது
மிகுந்த மதிப்பை ஏற்படுத்தின.

மொழியுணர்வும் இனவுணர்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.
ஆட்சியாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆர்.மொழிக்கொள்கையில் காட்டிய
உறுதி குறித்தெல்லாம் அரசியல் உலகில் ஆழமாய் அகலமாய் விவாதங்கள் நடந்துள்ளன. இந்தி எதிர்ப்பில் தமிழகத்தில் எழுந்த
கொந்தளிப்பின் பின்னால் இருந்த உணர்ச்சு மதிப்பளித்த எம்.ஜி.ஆர்.
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் எடுத்த நிலைப்பாடுகளையும்
தமிழகம் நன்கறியும்.

சமீபத்தில் "நாடாளுமன்றத்தில் வைகோ"என்ற நூலைப் படித்தபோது,
முதலமைச்சராக இருந்தபடி எம்.ஜி.ஆர்.எடுத்த ஒரு முக்கிய நிலைப்பாட்டை நூலாசிரியர் திரு.மு.செந்திலதிபன் மிக செறிவாகப்
பதிவு செய்திருப்பதைப் பார்த்தேன்.
                                                      
இராமேஸ்வரத்திலிருந்து ஈழத்திற்கு ஆயிரம் இளைஞர்களுடன் படகில்
செல்லப்போவதாய் திரு.பழ.நெடுமாறன் அறிவித்தார். அவர் புறப்படும்
இடத்தில் கைதாவார் என்றும் இராமேஸ்வரத்தில் கைதாவார் என்றும்
வதந்திகள் உலவின. இராமேஸ்வரம் கடற்கரைக்கு நெடுமாறன் குழுவினர்
சென்று நின்றபோது கரையில் ஒரு படகைக்கூட காணோம். போராட்டக்
குழுவினர் திரும்ப நேர்ந்தது.

இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தபோது எம்.ஜி.ஆர் தந்த
பதில் இது: " அன்னை இந்திராகாந்திக்கு ஓர் ஆபத்து நேர்ந்தபோது,
அவர் உயிரைக் காத்தவர் மாவீரர் நெடுமாறன்.ஆனால் கடலில் போகும்
வேளையில் அவர் உயிருக்குப் பாதுகாப்பு உண்டா?எதிரிகள் வந்து சுட்டால் அவரால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியுமா? ஒரு நெடுமாறனை இழந்தால் இன்னொரு நெடுமாறனை உருவாக்க முடியுமா?
அதனால்தான் படகுகளை அப்புறப்படுத்தச் சொன்னேன்.

ஆனால் மக்கள் நடுவே இனவுணர்வை மேம்படுத்த அவர் செய்து வரும்
பிரச்சாரம் விலைமதிப்பில்லாதது.ஒரு முதலமைச்சராக இருப்பதால் நான்
செய்ய முடியாத பிரச்சாரத்தை அவர் செய்கிறார்.  எனவே அவரைக் கைது
செய்ய வேண்டாமென்று சொன்னேன்"என்றாராம் எம்.ஜி.ஆர்.

படகோட்டிகளை அப்புறப்படுத்தியதிலும் அந்தப் படகோட்டி
வித்தியாசமாகத்தான்   சிந்தித்திருக்கிறார்.

Saturday, November 17, 2012

அற்புதர்-10





வானம் வைக்கும் வண்ண வண்ண வரவேற்பு வளைவுகளும்
மேகங்கள் தெளிக்கும் பன்னீர்த் துளிகளும் அற்புதரின் குடிலுக்கு
கடவுள் வருவதை உலகுக்கு உணர்த்தின.அற்புதரின் செயல்கள்
அனைத்திலும் அறிவிக்கப்படாத பங்குதாரராகிய கடவுள்,அற்புதரின்
குடிலில் நுழையும்முன் வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த காலணிகளின்
வரிசையில் தன் காலணிகளையும் கழற்றி வைத்தார்.

அப்புறம் அற்புதரின் குடிலில் வரவேற்பறையிலிருந்த விருந்தினர்
பதிவேட்டில் மின்னல் கொண்டு வெளிச்சக் கிறுக்கல் கிறுக்கினார்

எழுத்தேதும் அறியாமல் எல்லாம் அறிந்த பல ஞானியரின் பெருவிரல் ரேகைப்பதிவுகளும் அந்த வருகைப்பதிவேட்டில் இருப்பதைக் கண்ட கடவுள்அந்த ரேகைகளை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார்.

கடவுள் வருகிற தேதியறிந்து கூட்டம் கூட்டமாய் திரண்டிருந்த பல்லாயிரம் மனிதர்கள் வெள்ளாடையணிந்து வரிசையாய் வந்த விதம்
வனம்நடுவே வெள்ளைநதியொன்று புகுந்ததுபோல் இருந்தது.அற்புதரின்
அருகே ஆசனமிட்டமர்ந்திருந்த கடவுள் முன்னர் தலைவணங்கிய
மனிதர்களை அற்புதர் வணங்கினார்.

                                                   


"நம் குடிலுக்கு கடவுளை வெற்றிகரமாய் அழைத்துவந்த உங்களுக்கென்
பாராட்டுக்கள்"என்று அற்புதர் அறிவித்ததும் கடவுள் வாய்விட்டுச் சிரித்தார்.
அவருடைய சிரிப்பு முடிய அரைக்கணம் இடைவெளிவிட்ட அற்புதர்
தொடர்ந்தார்....

"இந்தக் கடவுளை நான்தான் அழைத்து வந்தேனென்று இந்தக் கடவுள்
உட்பட எல்லோரும் கருதிக் கொண்டிருக்கிறீர்கள், உண்மையில் என்ன
நடந்தது தெரியுமா?ஒளிந்திருந்த கடவுளின் கால்களைப் பிடித்தும், வராத போது அவர்
காதுகளைப் பிடித்தும் இழுத்து வந்திருக்கிறேன். தானிருப்பதே தெரியாமல்
இருப்பதுதான் கடவுளுக்குப் பிடிக்கும். எனவே அவர் ஓடி ஓடி ஒளிந்து
கொள்கிறார்" என்றார் அற்புதர்.

"எங்கே ஒளிகிறார்? எங்கே ஒளிகிறார்"என்றனர் மனிதர்கள். இப்போது
அற்புதர் வாய்விட்டுச் சிரித்தார். "யாரும் அணுக முயலாத அளவு
முடைநாற்றம் வீசுகிற இடங்களில் கடவுள் ஒளிகிறார். அந்த இடம்
எங்கே இருக்கிறது என்கிறீர்களா?மனிதர்களின் உயிர்தான் கடவுளின்
உறைவிடமும் மறைவிடமும்.அங்கேதன் பிறவிகள் பலவாய் நீங்கள்
சேர்த்த வினைகளின் மூட்டைகள் முடைநாற்ரம் வீசுகின்றன. நான்
உங்கள் மூச்சுக் காற்றுவழி உள்ளே நுழைந்து, உயிரைத் தூய்மை செய்து
உள்ளே ஒளிந்திருக்கும் கடவுளைக் கண்டுபிடிக்கிறேன். உங்களுக்குள்
இருக்கும் அதே கடவுளின் நீட்சியைத்தான் கோயிலில் இருத்துகிறேன்"
என்றார் அற்புதர்.

கேட்டுக் கொண்டிருந்த மனிதர்களின் கண்களில் இருந்து அலையலையாய் வழிந்த ஆனந்தக் கண்ணீரைக் கண்ட அற்புதர் சொன்னார்."முந்திவருகிற ஆனந்தக் கண்ணீர்தான் உள்ளே உள்ள
கடவுளின் அடையாள அட்டை.உங்களுக்குள் இருக்கும் கடவுளை உணர்ந்த உங்களை வணங்குகிறேன்". 

அற்புதர் - 9


அற்புதரின் பிரதேசத்திற்குள் புதிதாய் வந்தார் அந்த மனிதர். அவர் புதியவர் என்ற எண்ணம் அவருக்கு மட்டுமே இருந்தது. அற்புதரின் அங்க அடையாளங்களை அவர் ஏற்கெனவே விசாரித்தறிந்திருந்தார். அற்புதர் ஆடைகள் அணியும் பாங்கு பற்றி, அவர் கேள்விப்பட்டிருந்தார்.யாரையும் கேட்காமலே அற்புதரை அடையாளம் கண்டுவிட வேண்டுமென்று அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்.

முதிய தோற்றமுள்ள எளிய மனிதர் ஒருவர் அந்த மனிதருக்கு சற்று முன்பாக சென்று கொண்டிருந்தார். சுயதேடலின் பாதையில் செல்வதாலேயே சுடர்பொங்கும் வடிவுடைய இளைஞர்கள் சிலர் அந்த முதியவர் திரும்பிய வளைவில் எதிரே வந்து கொண்டிருந்தனர்.அவர்களுக்குப் பணிவாய் வணக்கம் செலுத்தினார்அந்த முதியவர். அவரை சற்றுத் தாமதமாகவே கண்டு கொண்டஇளைஞர்கள் அதே பணிவுடன் முதியவரையும் புதியவரையும் வணங்கினர். உள்ளார்ந்த பணிவுடன் வணக்கங்களை எதிர்கொண்டு பழகியிராத புதியவர் பதறினார்.

இங்கிருப்பவர்கள் எவ்வளவு தூரம் அற்புதரால் கட்டுப்படுத்தப் பட்டிருந்தால் இப்படி வளைந்து பணிந்து வணங்குவார்கள் என்று நினைத்துக் கொண்டே நடந்தார்.ஆனால் அந்த இளைஞர்களின் வணக்கத்தைப் பெற்றபோது உள்ளே ஏதோ அசைந்ததை உணர்ந்தார்.

முன்னே போய்க்கொண்டிருந்த முதியவர் முன்னே செந்தீயாய் உடையணிந்த சின்னஞ்சிறுவர்கள் வெள்ளைச் சிரிப்புடன் வந்துகொண்டிருந்தனர். நிலம் பார்த்து நடந்து கொண்டிருந்த குழந்தைகளின் நிழல்பார்த்த நொடியிலேயே அந்த முதியவர் பணிந்து வணங்கியதைப் பார்த்தார். புதியவர் மனதில் பச்சாதாபம் பொங்கியது. "குழந்தைகளையும் இப்படி குனிந்து வணங்குகிறார் என்றால் இவர்தான் இங்கிருக்கும் கடைநிலை ஊழியர்களினும் கடைநிலையில் இருக்க வேண்டும்"என்றுஅனுமானித்துக் கொண்ட அவரால் குழந்தைகள் அதே பணிவுடன் பதிலுக்கு முதியவரையும் தன்னையும் வணங்கியதைக்கூட கவனிக்க முடியவில்லை.

அந்த முதியவர் உணவுக்கூடத்தினுள் நுழையக்கண்டு புதியவரும் நுழைந்தார். அங்கே வரிசையாகத் தட்டுகள் வைக்கப்பட்டிருக்கக்  கண்டு தானும் ஒரு தட்டின் முன் அமர்ந்தார். யாரோ ஓர் இளைஞர் அந்த முதியவரின் தட்டருகே தண்ணீர்க்குவளையொன்றை வைத்ததும் குனிந்து கும்பிட்டதைக் கண்டு அனுதாபத்தின் உச்சத்திற்கே போனார் புதியவர்.

ஒருகுவளை தண்ணீருக்கே இப்படி குனிந்து கும்பிடுகிறார் என்றால் அந்த முதியவருக்கு அதைக்கூடத் தராமல் எத்தனைநாள் வாடவைத்தார்களோ என்று நினைத்துக் கொண்ட புதியவர்,
"இந்தக் கொடுங்கோலரின் எல்லைக்குள் இனியும் இருக்கலாகாது"  என்று நினைத்து எழுந்து நடந்தார்.

அந்த முதியவர்தான் அற்புதரென்றும் அந்தப் பணிவு அற்புதரின் முதல் போதனையென்றும் அறிந்திருந்தால் அவர் அப்படி எழுந்து சென்றிருக்க மாட்டார்.ஆயினும் அவர் திரும்பி வருவார் என்னும் பொருள்பட அவர் சென்ற திசைநோக்கிப் பணிவுடன் வணங்கினார் அற்புதர்


Friday, November 16, 2012

அற்புதர் - 8




அற்புதருக்கு வாகனங்கள் ஓட்டப் பிடிக்கும். கரடுமுரடான சாலைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் அடிக்கடி பயணம் செய்யும் முரட்டு சாலையொன்றில் ஒருநாள் ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது.." ஆட்கள் வேலை செய்கிறார்கள்"என்று.அந்தப்பலகையைப் பார்த்ததும் அற்புதரின் இதழ்களில் குறுநகை அரும்பியது.

அடுத்த சில மாதங்களில் கண்ணாடிபோல் வழுக்கிக் கொண்டு போன அதே சாலையில் அற்புதர் வெகுவேகமாக சென்று கொண்டிருந்தார். அந்த நெடுஞ்சாலையில் அவருடைய விரல்கள் மானசீகமாய் ஒரு வரியை எழுதிப் பார்த்தன," ஆட்கள் வேலை செய்தார்கள்".

சிறிது தொலைவிலேயே இன்னொரு சாலை தெரிந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவு குண்டும் குழியுமாய் இருந்த சாலையைக் கண்ட அற்புதரின் இதழ்களில் மீண்டும் முறுவல் மலர்ந்தது. இப்போது மற்றொரு வரியை அவருடைய விரல்கள் மானசீகமாய் எழுதிப் பார்த்தன, "ஆட்கள் வேலை செய்வார்கள்".

அன்றிரவு அற்புதர் தன் நாட்குறிப்பில் எழுதினார். "கரடுமுரடான பாதைகள் சரிசெய்யப்பட வேண்டியவை. யாரோ என்றோ வேலை செய்வார்கள். எல்லா சாலைகளும் சரியாகும். வேலைசெய்யும் விருப்பம் இருப்பின் வாழ்க்கைப்பாதை நேராகும். நீங்களாக செய்ய முடியாவிட்டால் வேலை செய்ய வருபவரை செய்ய அனுமதியுங்கள். உங்கள் வாழ்வை நேர்ப்படுத்தவே ஞானிகள் காலங்காலமாய் வேலை செய்கிறார்கள்.

உங்கள் பாதையின் குழிகளை மூடி சமன்செய்வதுபோல் உங்கள் மனதின் கோணல்களை நேர் செய்யுங்கள். வாழ்வில் நேர்ந்த வலிகளை யாரோ தந்த விருதுபோல் பொத்தி வைக்காதீர்கள். சாலை மோசமாக ஆக விரைந்து சீர்செய்யும் விவேகம் இருப்பவர்களே!வாழ்க்கை மோசமாக ஆக விரைந்து விழித்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களால் முடியாதென்றால்  கண்மூடிக் கேளுங்கள். உள்ளுக்குள் தேடுங்கள்.அறிவிப்புப் பலகை இல்லாமலேயே ஆட்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள்" என்றெழுதினார் அற்புதர்.

எழுதுகோலைக் கீழே வைத்த அற்புதரின் கண்களில் எழுதி முடித்த களைப்பல்ல...எத்தனையோ சாலைகளில் வேலை செய்யும் களைப்பு!!

Thursday, November 15, 2012

முடிவில்லாத கணங்கள்




எழுதித் தீராக் கணங்களை எல்லாம்
எப்படித் தாண்டுவது
எழுத்தில் சேராக் கணங்களை எல்லாம்
எங்கே தொடங்குவது
பழுதாய்ப் போன பழைய கணங்களை
எங்கே வீசுவது
முழுதாய் வாழ மறந்த கணங்களை
எங்கே தேடுவது

கணையொன்று வில்லைக் கடக்கும் கணத்தின்
கணக்கெங்கு காணுவதோ
இணைப்பறவைகளில் ஒன்றை வீழ்த்தும்
நொடியெங்கு தோன்றியதோ



அணையினைக் கண்ணீர் தாண்டி நடக்கும்
அபூர்வ கணமெதுவோ
கணங்களில் நடக்கும் காலத்தின் கால்களில்
துணைமுள் குத்தியதோ


ஒவ்வொரு நொடியையும் உள்ளே வாங்கி
உயிரில் சேமித்தேன்
கவ்வி இழுக்கும் கவலையை மகிழ்வை
கணக்கில் காண்பித்தேன்
 எவ்விதம் வாழ்க்கை இருந்த போதிலும்
இருப்பை நேசித்தேன்
இவ்விதம் வாழ்ந்திட என்னைப் பணித்த
இறைவனை நேசித்தேன்


நடக்கும் கணம்மேல் நிலைகொண்டு நின்றால்
நகர்வதும் ஒருயுகமே
கடக்கும் முகிலாய் காணத் தெரிந்தால்
கவலையும் ஒருசுகமே
தொடக்கமும் முடிவும் தெரியா நதியெனத்
தொடர்வது காலமன்றோ
முடிக்க முடியாக் கோலம் வரைபவை
மாயையின் விரல்களன்றோ  


Wednesday, November 14, 2012

வெத்தல வெத்தல வெத்தலயோ

மலேசியா வாசுதேவனின் ஆகிருதிக்குப் பொருந்தாத அப்பாவிக் குரலில், சிவக்குமாரின் வெள்ளந்தி முகத்திற்கு மிகவும் பொருந்தும் பாவத்தில் கங்கை அமரனின் வரிகளில் விளைந்த அற்புதமான பாடல் 'வெத்தல வெத்தல வெத்தலயோ".

கிராமத்து மனிதர்களையே சார்ந்து வாழ்ந்து அவர்களுக்குப் பயன்கருதாமல் கைங்கர்யம் செய்யும் எளிய மனிதர்களின் பிரதிநிதியான வண்டிச்சோல செம்பட்டையின் குரல் அந்தப் பாடலில் துல்லியமாய் ஒலிக்கும்.

ஆதுரமாய் அழைத்து வேலைவாங்கும் யாரோ ஒரு பாட்டி,கல்யாணம் முடித்ததும்""மொத ஆசீர்வாதத்துக்கு" அழைக்கும்யாரோ ஒரு தாத்தா,அதட்டி வேலைவாங்கும்போதே அக்கறையை உணர்த்திவிடும் பயில்வான், இவர்களிடம் வேற்றுமுகம் தெரியாத குழந்தைபோல் தாவும் வண்டிச்சோலை செம்பட்டை.எல்லோராலும் ஏவப்படும் செம்பட்டையால் "சோதாப்பயலே" என்று ஏவப்படுவதற்கென்றே அவனுக்குத் துணையாய் ஓர் ஓடும்பிள்ளை.

இவர்களைக்கொண்டு தீட்டப்படும் கிராமத்து உறவுகள்,கிராமப் பொருளாதாரம் பரஸ்பர நேசம் இத்தனையும் இந்தப்பாடலை உயிரோவியமாய் மின்னச் செய்கின்றன.



வெற்றிலை விற்கப்போகும் செம்பட்டையை முதலில் வழிமறிக்கும் பாட்டி வாங்கிவரச் சொல்கிற விஷயங்களை சிட்டையில் குறிக்கும் வழக்கம் செம்பட்டைக்கு இல்லை. அநேகமாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்காது. ஆனால்  பாட்டி கேட்டதை தனக்குத்தானே சொல்லிப் பார்த்துக் கொள்ளும்போது, மனதில் மறுபடியும் பதியலாம்.கூடவரும் சோதாப்பயலுக்கும் அது நினைவில் நிற்கலாம்.

"கேட்டாங்க கேட்டாங்க என்னென்ன கேட்டாங்க
பாட்டியும் ஏலக்கா வேணும்னு கேட்டாங்க
பத்தமடைப்பாயி வேணும்னு கேட்டாங்க
சின்னக் கருப்பட்டி மூக்குப்பொடி டப்பி
வாங்கி வரும்படி கேட்டாங்க"


என்று சொல்லிப் பார்த்துக் கொள்ளும் செம்பட்டை விரசாக நடைபோடும்படி சோதாப்பயலை ஏவும்போதே ஒரு தாத்தா எதிர்ப்படுகிறார்.

தனக்குக் கல்யாணமென்று அந்தத் தாத்தாவிடம் சொல்லிக் கொள்ளும் செம்பட்டையின் குரலில் நாணமும் உரிமையும் கலந்து ததும்புகிறது."ஒன் பொண்டாட்டிக்கு மொதோ ராத்திரியில
மொதோ ஆசீர்வாதம் நாந்தான் பண்ணுவேன்.சம்மதமா"என்று தாத்தா கேட்டதும் செம்பட்டைக்கு உற்சாகம் பிய்த்துக் கொள்கிறது.

"சொன்னாங்க ச்சொன்னாங்க தாத்தாவும் ச்சொன்னாங்க!!
பொண்டாட்டி கட்டிக்க வேணும்னு ச்சொன்னாங்க
முன்னாடி கூட்டீட்டு வாடான்னு ச்சொன்னாங்க
கல்யாணம் செஞ்சா அன்னைக்கு ராத்திரி
ஆசி வாங்கணுமின்னாங்க..
நெசமாக வருவேங்க..
வயசான மனுஷங்க
வாயார மனசார வாழ்த்தணும் நீங்க
வெத்தல வெத்தல வெத்தலயோ
கொழுந்து வெத்தலயோ"
என்று உற்சாகமாக நடைபோடும் செம்பட்டையை அதட்டிக் கூப்பிடுகிறது பயில்வானின் குரல்."ஏய்!இங்கவாடா !ஏழு தோலாவுக்கு பாதாவும் பிஸ்தாவும் மூணு தோலாவுக்கு முந்திரியும் வாடா". அதிகாரக் குரலுக்கு அச்சத்துடன் பதில் கேள்வி கேட்கிறான் செம்பட்டை.""என்னங்க! வழக்கத்தைவிட அதிகமா கேட்கறீங்க.முரட்டு பயில்வானின் மெல்லிய மனசு பதிலில் வெளிப்படுகிறது

""எனக்கில்லடா !ஒனக்கு".

"இப்படி வாடான்னு பயில்வானும் சொன்னாங்க!
ஏழு தோலாவுக்கு பாதாவும் பிஸ்தாவும்
மூணு தோலாவுக்கு முந்திரி திராட்சையும்
வாங்கீட்டு வாடாதின்னுட்டுப் போடா
வந்திடும் ஒனக்கு வீரமுன்னாங்க..
நாந்திங்கப்போறேன்
அப்புறம்பாரு..நம்மூரு காளைய முட்டிப்பாக்கப் போறேன்""ப
யில்வான் முந்திரி பாதம் பிஸ்தா தின்னச் சொன்னது காளையைமுட்டுவதற்காக அல்ல என்று கூடத் தெரியாத செம்பட்டையைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

இப்படி உரிமையும் அன்பும் கொண்ட கிராமத்து மனிதர்கள் நடுவே வெற்றிலை விற்பவனாய் வாழ்ந்து பார்க்கத் தோன்றுகிறது. வெற்றிலை விற்பவனாய்க்கூட இல்லை, அவனிடம் ஏச்சு வாங்கும் சோதாப்பிள்ளையாய் இருந்தால் கூட நல்லதுதான்

அற்புதர்-7



தன் கனவில் அற்புதர்வந்ததாய் பரவசமாகச் சொன்னார் ஒரு சீடர். அற்புதர் தங்கள் கனவுகளிலும் வந்ததுண்டென்று ஏனைய சீடர்களும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். அற்புதரைக் கனவில் காண்பது நனவில் கண்டது போலவே இருந்ததென்று சொன்னார் ஒருவர். நனவில் அற்புதரைக் காண்கிறபோதே அது கனவு போலத்தான் இருக்கிறது என்றார் இன்னொருவர்.

எது கனவு எது நனவு என்ற குழப்பம் பற்றி ஒரு ஜென்கதை உண்டு தெரியுமா என்று தொடங்கினார் இன்னொருவர்.சங்-சூ என்ற ஜென்குரு ஒருநாள் காலையில் குழப்பத்துடன் குடிலின் வாயிலில் அமர்ந்திருந்தாராம்.முந்தைய இரவில் அவர் கண்டவொரு கனவுதான் குழப்பத்துக்குக் காரணம்.


 தான் ஒரு வண்ணத்துப் பூச்சியாய் மாறி மலரில் தேனருந்துவதாய் கனவுகண்டார். அவருடைய குழப்பம் இதுதான். "சங்-சூவாகிய நான் வண்ணத்துப்பூச்சியாக மாறுவதாக நேற்று கனவு கண்டேனா? ஒரு வண்ணத்துப்பூச்சி சங்-சூவாக இருப்பதாய் இப்போது கனவு காண்கிறதா?"

வெளியே போயிருந்த தலைமைச்சீடர் திரும்பினார்.அவருக்கு விஷயம் சொல்லப்பட்டது.ஒரு வாளி நிறைய குளிர்ந்த நீரை குருவின் தலையில் ஊற்றினார்."இப்போது புரிகிறதா? கனவு கண்டது சங்-சூதான்.வண்ணத்துப்புச்சி கனவு கண்டிருந்தால் அது வண்ணத்துப்பூச்சியின் கவலை".

கடைசியில் விவகாரம் அற்புதரின் கவனத்துக்கே போனது. அப்போது அற்புதர் வாழைப்பழ தேசத்தில் இருந்துவந்த தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அவர்கள் கனவு சார்ந்த உளவியல் பயிற்சியில் இருப்பவர்களென்றும்  கனவு வழியாகவே அவர்கள் அற்புதர் அனுப்பும் தகவல்களைப் பெறுகிறார்களென்றும் அவர்கள் உரையாடலின்வழி யூகிக்க முடிந்தது.

அற்புதருக்கு வந்தவர்கள் கேட்க விரும்பியது என்னவென்று புரிந்தது. மெல்லச் சொன்னார்."தூங்கும்போது தூங்குவதால் கனவு வருகிறது. தூங்கும்போது தியானம் செய்யுங்களேன்" வந்தவர்கள் மேலும் குழம்பினார்கள். அதில் ஒருவருக்கு தியானம் செய்யும்போதே தூக்கம்வரும்பாவம்..தூக்கத்தில் அவருக்கெப்படி தியானம் வரும்?



அற்புதர் சொன்னார். "நீங்கள் எட்டுமணிநேரங்கள் தூங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள்.விழிப்பு நிலையிலிருந்து நீங்கள் துயிலுக்குள் நுழையும் விநாடிக்கு முந்தையவிநாடி தூங்கப் போகிறோம் என்பதை உங்கள் விழிப்புணர்வில் பதித்துக் கொள்ளுங்கள். அதேபோல் விழிப்பு வரும் விநாடிக்கு முந்தைய விநாடி, விழிக்கப் போகிறோம் என்று உங்கள் விழிப்புணர்வில் பதித்துக் கொள்ளுங்கள். உறக்கத்துக்கு முந்தைய விநாடியும் விழிப்புக்கு முந்தைய விநாடியும் உங்கள் விழிப்புணர்வுக்குள் வந்தால், எட்டுமணிநேரத் தூக்கம் எட்டுமணிநேரத் தியானமாக மாறும். விழித்தெழும்போது உங்களில் சக்தி நுரைத்துத் ததும்பும்"

அற்புதரை வணங்கி  விடைபெற்றுத் திரும்பும் வழியில் முந்தைய நாள் கனவில் அற்புதரை தரிசித்த சீடர் சொன்னார்,"நேற்றும்  கனவில் அவர் இப்படித்தான் ஏதோ சொன்னதாய் ஞாபகம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது."

அற்புதரின் குரல் அவருக்குள் ஒலித்தது. "நனவுநிலையில் நீங்கள் விழிப்புணர்வின்றி இருந்தால் கனவில் நினைவூட்டல் வரும். கனவில் கண்டதை மறந்திருந்தால் நனவுநிலையில் நினைவூட்டல் வரும். இரண்டு நிலைகளிலும் மறந்தால் அடுத்த பிறவியில் நினைவூட்டல் வரும். விழிப்புடன் இருங்கள். இந்தப் பிறவியிலேயே  கனவு நிலைக்கும் நனவுநிலைக்குமான வரவு செலவுக் கணக்கை முடித்துக் கொள்ளுங்கள்"



Tuesday, November 13, 2012

இரு சம்பவங்கள்....ஒரே படிப்பினை




திரு.சுகிசிவம் அவர்கள் சேலத்தில் ஒருமுறை தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.தொடர்ந்து வருகை தந்த பல்லாயிரம் பேர்களில் ஒருவர் தயங்கித் தயங்கி வந்து திரு.சுகிசிவத்தின் கால் அளவைக் குறித்துக் கொண்டு போனார்.நிறைவுநாளன்று கைகளில் ஒருஜோடி
செருப்புடன் வந்தார்."அய்யா! நான் செருப்பு தைப்பவன்.
உங்கள் பேச்சு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. எனவே
நான் உங்களுக்காக இந்த ஜோடி செருப்பைக் கொண்டு
வந்திருக்கிறேன்." என்றார். அவர் நிலையறிந்து பணம்
கொடுக்கலாம்.கொடுத்தால் மனம் புண்படுவார்.அவர் அன்புக்கு
விலைவைத்ததுபோல் ஆகிவிடும். திரு.சுகிசிவம் சிலவிநாடிகள்
யோசித்தார். தான் எழுதிய புத்தகங்களில்.கையொப்பமிட்டார்.அடுத்து சொன்ன வார்த்தைகள்தான்முக்கியம்.

"நண்பரே! உங்கள் படைப்பை எனக்குப் பரிசளித்தீர்கள்.நான் என்
படைப்புகளை உங்களுக்குப் பரிசளிக்கிறேன்"என்றார். செருப்போடு வந்தவருக்கோ தன் தலையில் மகுடம் சூட்டிய மகிழ்ச்சி.



இன்னொரு சம்பவம். கவிஞர் வைரமுத்துவிடம் செய்தியாளர்
ஒருவர் மிக அற்புதமான கேள்வி ஒன்றைக் கேட்டார்."நீங்கள்
சென்னை வந்தீர்கள்.பச்சையப்பன் கல்லூரியில் தங்கப்பதக்கம்
பெற்றீர்கள்.ஆறுமுறை ஜனாதிபதி விருது பெற்றீர்கள்.சரி..ஒருவேளை எழுதப்படிக்கத் தெரியாதவராய் உங்கள் கிராமத்திலேயே இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?"
கவிஞர் சொன்னார், "எழுதப்படிக்கத் தெரியாமல் கைநாட்டுக்காரனாய் கிராமத்தில் இருந்திருந்தால் அதிகபட்சமாக ஒரு டீக்கடை வைத்திருப்பேன்.ஆனால் ஒன்று... இந்தியாவின் தலைசிறந்த டீக்கடை வைரமுத்து டீக்கடை என்று ஜனாதிபதியிடம் ஆறுமுறை தேசியவிருது வாங்கியிருப்பேன்".


எந்தத் தொழில் செய்தாலும் மனமுவந்து செய்தால் முழுமையாக ஈடுபட்டுச் செய்தால் அதில் முத்திரை பதிக்கலாம் முன்னணியில் இருக்கலாம் என்பதைத்தான் இந்த இரு சிலீர் சம்பவங்களும்  உணர்த்துகின்றன





Saturday, November 10, 2012

விசையைத் தட்டினால் வெளிச்சம் வருமா? நெய்வேலியில் கேள்வி




 நெய்வேலி ஈஷா அன்பர்களின் அன்புமிக்க ஏற்பாட்டில் ஞானத்தின் பிரம்மாண்டம் நூல் விளக்கவுரை நிகழ்த்தினேன். ஒருமணிநேர உரையின் நிறைவில் ஒரு மனிதனின் வாழ்வில் குரு நுழைவதற்கு முன்பும் பின்பும் தெளிவு நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி இப்படிச் சொன்னேன்...

"உங்கள் அறைக்குள்ளேயே இருட்டில் நுழைகிறீர்கள். எது எங்கே இருக்குமென்று தெரியும் என்றாலும் எடுக்க வேண்டியதை எடுக்க நேராகப் போய் நேராக வர முடிவதில்லை.தட்டுத் தடுமாற வேண்டி வருகிறது.

ஆனால் விசையைத் தட்டி வெளிச்சம் அறை முழுவதும் பரவினால் கவலையே இல்லை. எது எங்கே இருக்கிறதென்று தெரிகிறது.  குரு வரும்வரை பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை இருட்டறைக்குள் நுழைந்ததைப் போல்தான் இருக்கிறது. அவர்கள் வாழ்க்கைதான் என்றாலும் அவர்களால் முக்கிய முடிவுகளை எடுக்க முடிவதில்லை.

ஒரு குரு வந்தபிறகு சொந்த அறையில் வெளிச்சம் பரவுவதுபோல் உங்களுக்குள்ளேயே தெளிவு பரவுகிறது. விசையைத் தட்டியதும் வருகிற வெளிச்சம்எல்லாவற்றையும் தெளிவாக துல்லியமாகக் காட்டித் தருவது போல் குருவின் கருணை திடமான தீர்க்கமான முடிவுகள் எடுக்க உதவுகிறது."

ஒரு சிறு இடைவெளி விட்டுச் சொன்னேன். "நெய்வேலியில்தான் இந்த உதாரணத்தைச் சொல்ல முடியும்.இங்குதான் மின்வெட்டே கிடையாதே! தமிழகத்தின் மற்ற  ஊர்களில் விசையைத் தட்டினால் வெளிச்சம் வரும்" என்று சொன்னால் சிரிக்கிறார்கள் "போங்க சார்! எந்த காலத்திலே இருக்கீங்க!" என்றதும் மின்சாரச் சிரிப்பு சிரித்தார்கள் நெய்வேலிக்காரர்கள்



நிகழ்வின் புகைப்படங்கள்
















Friday, November 9, 2012

போகன்வில்லா

தொட்டிக்குள் இருக்கும் பாதுகாப்பை அசல் தாவரங்கள் அங்கீகரிப்பதில்லை.
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
கொட்டிவைத்த மண்ணுக்குள் காலூன்றி நிற்பது மண்கிழிக்கும்
 வித்தையில்லை
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
பூவா இலையா என்று புரியாமல் இருப்பதொன்றும் பெருமையில்லை.
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
பூக்காமல் காய்க்காமல் கனியாமல் உயிர்ப்பற்று உயிர்தரித்தல் தாவர தர்மமில்லை
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
புதராகவும் மண்டாமல் மரமாகவும் திமிராமல் கணக்குப் போட்டு கவிவதில் சாரமில்லை
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
கூர்க்காக்களின் விறைத்த சட்டைநுனி மட்டும் ஸ்பரிசிக்கும் செடியாய் இருப்பதில் அர்த்தமில்லை
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
கத்திரிக்கோல்களின் கட்டுக்குள் கிடந்தபடி தன்னை கற்பகவிருட்சமாய் கருதுவது சரியில்லை
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
வெயிலோ மழையோ தெரியாமல் செயற்கைக்  குளிரில் விறைத்து நிற்பதன்பெயர் செடியில்லை
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
நிழல்தரத் தெரியாமல் நிமிரவும் முடியாமல் நிற்பதற்குப் பெயர் மரமில்லை
போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை
காட்டு விருட்சங்களின் அசைவுகளுக்கு நிகராய் தன்னைக் கருதும் திமிரில் அழகில்லை
போகன்வில்லாவுக்கு தான் போகன்வில்லா என்றே தெரியவில்லை


Thursday, November 8, 2012

ஜெயமோகன் என்மேல் வழக்கு போடவில்லை

( இணையத்தில் எழுதினாலே வழக்கு பாய்கிற காலமிது. எழுத்தாளர் ஜெயமோகன் பால் கொண்ட நட்புரிமையால் 2009 ஜனவரியில் நான் இதனை எழுதினேன்.அவர் என்மேல் வழக்கேதும் போடவில்லை)

   

 தேமே என்று நடந்து போய்க்கொண்டிருந்த தன்னை ஏன் ஆட்டோவில் கடத்தினர்கள் என்று குழம்பிக் கொண்டே ஆட்டோவில் ஆடியவண்ணம் போய்க் கொண்டிருந்தார் எழுத்தாளர் புயல்வேகன்.கூச்சலிடுவதும் எட்டிக் குதிப்பதும் நவீன எழுத்தாளருக்கழகல்ல என்பதுடன் அவருக்கு குதிக்கத் தெரியாது என்பதும் அவர் வாளாவிருந்ததன் காரணங்கள்.ஆனாலும் அவரின் நுண்மனம் வாள் வாள் என்று கத்திக் கொண்டிருந்தது. கண்கள் இரண்டும் கட்டப்பட்ட நிலையிலும்(அவருக்கு மூன்று கணகள் உண்டென்றுஅவரின் நண்பர் ஒருவர்கட்டங்காப்பியைக் குடித்துக்கொண்டே சொன்னது அவருடைய ஓர்மைக்கு வந்தது) தான் கடத்தப்பட்டபோது கடந்துபோன முட்டுச் சந்துகள்,குறுக்குச் சந்துகள்-அங்கே வசீகரமாய் சிரித்துக் கொண்டிருந்த பல்செட் பாட்டி என்று பலத்த விவரணைகளுடன் தன் வலை மொட்டில்(தன்னடக்கம்) அரைமணிக்கூரில் 500 பக்கங்கள் எழுதப்பட வேண்டிய கட்டுரையை மனதுக்குள் எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தார் புயல்வேகன்.வயது மறந்து சமீபத்தில் "பழய நெனப்புடா பேராண்டி" என்று ஏறியிரங்கிய மலைகள் அவரை சொஸ்த்தாக்கியிருந்தன.பதட்டத்தின் போது தான் வழக்கமாகக் கடிக்கிற மீசையை எட்ட முடியாமல்.மூக்குப்பொடி மணக்கும் கர்ச்சீப்பால் வாயைக் கட்டியிருந்தார்கள்ஆதலால் கடத்தலை நிபந்தனையின்றி ஏற்பது என்ற முடிவுக்கு அவர் வந்த அதே அதீத கணத்தில் ஆட்டோ நின்றது.


நகைச்சுவைத் திருவிழா என்ற பெரிய பேனரின் கீழ் அதிரடி மிமிக்ரி-அட்டகாச கலாட்டா போன்ற விளம்பர வாசகங்கள் மினுமினுத்தன.நடுவர்:
இணையம் புகழ்-சினிமா புகழ் நவீன நாவலாசிரியர் புயல்வேகன் என்று வேறு போட்டிருந்தது.முறைப்படி அழைத்தால் வரமாட்டார் கடத்தி விடுங்கள் என்று பக்கத்தூர் நவீன எழுத்தாளர்" போட்டுக் கொடுத்திருந்த"
திட்டத்தை அமைப்பாளர்கள் நடைமுறைப்படுத்தியிருந்தார்கள்.

என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று தெரியும் முன்னே ஒலிபெருக்கி முன் நிறுத்தப்பட்டிருந்தார் புயல்வேகன்.

"நான் ஆபீஸைவிட்டு எறங்கினப்ப என்னப் பின் தொடர்ந்த நெழலோட குரல நான் கேக்காததால என் குரல இப்ப கேக்கறீங்க" என்று தொடங்கியதுமே எழுந்த கரவொலியில் மிரண்டு போனார் புயல்வேகன்.பேசும்போது கேட்பவர்கள் கைதட்டினால் அது நல்ல பேச்சல்ல என்று தான் முன்னர் எழுதிய இலக்கணத்தைத் தானே மீற நேர்ந்ததில் அவருக்கு வருத்தம்.

அடுத்த விநாடியே சுதாரித்துக் கொண்டு "நகைச்சுவைக்கு நீங்க சிரிக்கறீங்க,ஆனா நகைச்சுவைங்கறது சிரிக்கற விஷயமில்லே!ரொம்ப சீரியஸான விஷயம்.கேரளாவில நெறய மிமிக்ரி கலைஞர்கள் உண்டு.ஆனா அவங்க மிமிக்ரிக்கு அங்க யாரும் சிரிக்கறதே இல்ல.ஏன்னு கேட்டா மிமிக்ரிங்கறதுஉள்ள ஒரு விஷயத்தைத் திருத்தியமைக்கிற முயற்சி.ஆதிப்பிரதியத் திருத்தணும்ங்கிற தவிப்பு மனுஷனுக்குள்ள காலங்காலமா இருக்கிற வேட்கை.தப்பில்லாத பிரபஞ்சம் ஒண்ணு படைக்கணும்னா இருக்கறத பகடி பண்ணனும்.பகடிங்கறதில உள்ள நிதர்சனத்தோட தரிசனத்திலே ஏற்படற வலி தெரியுது. அதனுடைய நீட்சிதான் மிமிக்ரி.ஆனா தமிழ்நாட்டில நகைச்சுவைன்னா சிரிக்கறது,சோகம்னா அழறது,கோபம்னா கோபப் படறதுன்னு நெனக்கறாங்க.அப்படி ஒரு விஷயமே கிடையாது.என்னு கேட்டா விஷயம் அப்படிங்கற ஒண்ணே இல்லைங்கிறதுதான் விஷயம்"

                        
இப்படி உணர்ச்சியல்லாத உணர்ச்சியில் புயல்வேகன் பேசிக்கொண்டே இருந்தபோது அதே ஆட்டோ மேடைக்கே வந்தது.\   ஆட்டோ மேடைக்கருகில் வந்து நின்றதில் புயல்வேகன் பதட்டமைடையவில்லை.தொண்டையை செருமிக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்."உதாரணத்துக்கு இந்த ஆட்டோவை எடுத்துக்குங்க. தமிழ்நாட்டிலெ இதை ஆட்டோன்னு நினைக்கறாங்க. ஆக்சுவலா இது ஆட்டோ கிடையாது.கார்ல போன ஒரு தமிழாளு திருவனந்தபுரத்தில  ஒருத்தர உரசீட்டுப் போனப்போ "ஒன் கால உடைப்பேன்"னுஅவரு சபதம் செஞ்சாரு.எல்லாம் அந்த தமிழரோட கால ஒடைப்பார்னு நெனச்சாங்க.ஆன அவரு காரோட ஒரு சக்கரத்தை ஒடைச்சு ஆட்டோ கண்டுபுடிச்சாரு . அதாவது பயணம் ங்கறது மூன்று காலங்களோட சம்பந்தப்பட்டது.பயணம் கிளம்பினது இறந்த காலம்-பயணம் செய்வது நிகழ்காலம்-போய் சேரக்கூடிய இடம் எதிர்காலம். இதத்தான் அவர் கண்டுபிடிச்ச ஆட்டோ குறியீடா சொல்லுது.
முத முதல்லே ஆட்டோ தோன்றினது கேரளாவிலதான். இந்த முக்காலத் தத்துவத்தை கேட்டீர்களா என்று கேள்வி எழுப்பும் பாவனையில் அதுக்கு முதல்ல கேட்டோ கேட்டோ ன்னு தான் பேர் இருந்தது.அதை நம்ம நாட்டில உச்சரிக்கத் தெரியாம ஆட்டோ- ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.அதனால ஆட்டோங்கறதே காரை மிமிக்ரி பண்ணின விஷயம்தான் "

புயல்வேகனின் இந்தப் போக்கு பெரும்போக்காக இருக்க ஆட்டோ ஓட்டுநர் வேறொரு போக்கின் பெயரைச் சொல்லித் திட்டிவிட்டு வேறோர் ஆட்டோ பிடிக்க தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்.

புயல்வேகனை எதிர்த்து செய்யப்படும் எல்லா வேலகளையும் போலவே இதுவும் பிசுபிசுத்துப் போனதில் பக்கத்தூர் நவீன எழுத்தாளருக்கு வருத்தம்தான்.பேசாமல் புயல்வேகனை பக்கத்துக் காட்டில் விட்டு விட்டு வர நினைத்தார்.

ஆனால் "வாசனை" இதழ் வெளியீட்டு விழாவுக்காக குற்றாலத்தில் தங்கியிருந்தபோது புயல்வேகன் தன் வன அனுபவங்களை
நண்பர்கள் மத்தியிலான தனி சொற்பொழிவில் சொல்லியிருந்தார். 


வனப்பகுதியில் தான் வாங்கி வரும் வர்க்கிகளுக்காகக் காத்திருக்கும் புலிக்குட்டிகள்,தன் பெயர்,முகவரி,செல்லிடப்பேசி எண் போன்றவற்றைத் தெரிந்து வைத்திருக்கும் ஐந்தாறு காட்டானைகள்,தன் பசிக்காக மானடித்து புயல்வேகனுக்காகப் புல்லறுத்து வைத்து குறுஞ்செய்தி அனுப்பும் சிறுத்தைகள் என்று தன் வனசிநேகிதங்கள் பற்றி புயல்வேகன் ஆற்றிய உரையின் சுருக்கத்தை வாசனை இதழ் ஆசிரியர் அறிவின் வேந்தன் சித்தையா ஏற்கெனவே எழுதியிருந்தார்.

எனவே விழா அமைப்பாளர்களுக்குத் தெரியாமல் பக்கத்தூர் நவீன எழுத்தாளர் மெல்ல நழுவ,தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத
விக்ரமாதித்தனாக (விக்ரமாதித்யன் அல்ல) மீண்டும் "தேமே" என்று நடக்கத் தொடங்கினார் புயல்வேகன்