Thursday, August 21, 2014

வண்ணதாசனாய் வாழுவது.....



எவரோ நீட்டும் கரம்பார்த்தும்
என்கரம் பற்றிச் சிரிக்கின்றீர்
தவமே அன்பாய் ஆனதனால்
தானாய் மகானாய் இருக்கின்றீர்
தவறோ சரியோ எனக்கேட்டால்
தவறும் சரியும் ஒன்றென்பீர்
திவலை நீர்த்துளி பட்டாலும்
தேன்குளம் என்றே கொள்கின்றீர்

வண்ண தாசன் என்பவர்க்கோ
வண்ணங்கள் எல்லாம் ஒன்றேதான்
வண்ண தாசனைப் படித்தவர்க்கோ
விரியும் உலகம் வேறேதான்
வண்ண தாசனை வாழ்த்துவது
விரியும் மொட்டை வாழ்த்துவது
வண்ணதாசனாய் வாழுவது
வாழ்வை புதிதாய்க் காணுவது

தந்தை பதித்த தடமிருக்க
தமையன் விட்ட இடமிருக்க
முந்தும் தமிழே திசைநிரப்பும்
மெல்லிய மனதை இசைநிரப்பும்
சிந்தை இன்னும் இலகுவாக
செய்பவை எல்லாம் நிறைவாக
எந்தை!! வாழிய பல்லாண்டு
ஏழு சுரம்போல் சொல்லாண்டு..

கம்பனில் தவம்

சென்னை அம்பத்தூர் கம்பன் கழகத்தில் "கம்பனில் தவம்"என்று பேசவும்,அவர்கள் அன்புடன் வழங்கும் "தமிழ்ச்சுடர்" விருது பெறவும் வருகிறேன்.24.08.2014 ஞாயிறு மாலை 6.15 மணி திருமால் திருமண மண்டபம் அம்பத்தூர் சென்னை. வாய்ப்பிருப்போர் வருகை புரிய அழைக்கிறேன்..


Monday, August 18, 2014

அந்தச் சிறுமி

அங்கே நிற்கிறாள் அந்தச் சிறுமி
அடமாய் அடம்பிடித்து
"இங்கே வாயேன்"என்றே திசைகள்
எல்லாம் குரல்கொடுத்து
எங்கே என்ன நடக்கிற தென்றே
எல்லாம் அறிந்தவளாம்
பொங்கும் குறும்பை மறைத்தபடி ஒரு
மூலையில் ஒளிந்தவளாம்


பத்துக் கைகள் போதாதாம் அவள்
"பரபர" சேட்டைக்கு
சித்திர வேலைப் பாடுகளாம் அந்த
சிறுமியின் கோட்டைக்கு
தத்துவப் பாம்பின் தலையின்மேல் அவள்
தாண்டவக் கூத்துக்கு
சித்தர்கள் கைகளைத் தட்டினர் நந்தியின்
மத்தளப் பாட்டுக்கு


ஒளிரும் தீபங்கள் எல்லாம் அவளிடம்
ஒவ்வொரு கதைகூறும்
புலரும் விடியலின் பூக்கள் அவளிடம்
புன்னகை கடன்வாங்கும்
நிலவின் பூரணம் நிகழ்கையில் வருவாள்
நயமாய் அசைந்தாடி
வலமோ இடமோ தெரியா லஹரியில்
விழுபவர் பலகோடி


உருட்டிய புளியும் தேங்காய் பாகும்
உண்ணத் தருவாளாம்
திரட்டிய வினைகள் மிரட்டிய நொடியில்
துணையாய் வருவாளாம்
மருட்டிய துயரை விரட்டும் சூலினி
முன்னே தெரிவாளாம்
வெருட்டும் வாழ்வின் கசப்புகள் தீர
வேப்பிலை கொடுப்பாளாம்

கயலே போன்ற விழிகள் மூன்றிலும்
கனலே ஏந்துகிறாள்
வெயிலை வீசி மழையாய்ப் பேசி
வித்தைகள் காட்டுகிறாள்
உயிருன் இருளில் ஒருதுளி சுடரை
உத்தமி ஏற்றுகிறாள்
பைரவி என்னும் பேர்கொண்ட சிறுமி
 பவவினை மாற்றுகிறாள்





Friday, August 15, 2014

கொடிகாக்கும் கோவை

 
 
பந்தயச் சாலை முழுவதும் பார்த்தால்
பச்சைப் பிள்ளையாய் இருந்தது
முந்தானை கொண்டு பாரத மாதா
மூடி அணைத்தது தெரிந்தது
வந்தவர் போனவர் கண்களில் எல்லாம்
வியப்பின் கண்ணீர் நிறைந்தது
"வந்தே மாதரம்" வந்தே மாதரம்"
வெய்யிலும் கானம் பொழிந்தது

கண்ணன் கொடுத்த சேலையின் நீளம்
கோவையின் கொடிமுன் சிறியது
எண்ணம் தோய்ந்து இழையிழையாக
ஏந்திய கொடிதான் பெரியது
வண்ணங்கள் மூன்றிடை வெற்றிச் சக்கரம்
விரிந்த காட்சி அரியது
"கிண்"ணெனநின்றனர் குழந்தைகள் பெரியோர்
கண்முன் வானகம் மலர்ந்தது


கொடியைக் காத்த குமரனின் வழியில்
கூடிய மனிதர்பல் லாயிரம்
துடிக்கும் மனதில் தேசபக்தியின்
தீச்சுடர் எழுதும் காவியம்
படையாய்த் திரண்டு  பாரத நேசம்
புலப்படச் செய்த காரியம்
முடிவே இல்லா மாண்புகள் தொடரும்
முன்னேறும்நம் தாயகம்


Friday, August 1, 2014

சொல்லும் நன்றி போதாது


பிறந்ததினம் என்பதொரு நினைவூட்டல்தான்
பிறந்தபயன் என்னவென்று தேடச் சொல்லும்
பிறந்ததினம் என்பதுமே உணர்வூட்டல்தான்
பிரியமுள்ள இதயங்கள் வாழ்த்துச் சொல்லும்
திறந்தமனம் கொண்டவர்கள் நல்கும் வாழ்த்து
தினம்புதிதாய் கனவுகளை வளர்க்கச் செய்யும்
சிறந்தபல இலக்குகளை வகுக்கச் செய்யும்
சிலிர்ப்போடு வேலைகளைத் தொடரச் செய்யும்

வான்பிறந்த தேதியினை அறிந்தாரில்லை
விரிகடலும் வந்ததினம் உணர்ந்தாரில்லை
கான்பிறந்த நாளெதுவோ?அறிந்தாரில்லை
காலத்தின் பேரேடோ கொஞ்சமில்லை
நான்பிறந்த சேதியொரு துகளின் தூசு
நேசமுள்ளோர் வாழ்த்துவதோ அன்பின் ஊட்டம்
ஏன்பிறந்தோம் எனும்நோக்கம் தேடிச் செல்ல
இந்ததினம் கைகொடுக்கும் உந்தித் தள்ளும்

உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நல்ல
உவகையுடன் வாழ்த்தியவர் தமக்கு நன்றி
உள்பெட்டி தனில்வந்து வாழ்த்துச் சொன்ன
உலகத்து நட்புகளே உமக்கு நன்றி
தள்ளிநின்று பார்த்தவரும் கேள்விப்பட்டு
தாமாக வாழ்த்தவந்தார் அவர்க்கும் நன்றி
கள்ளமிலா உறவுகளைப் பெற்றேன் என்ற
களிப்புதனைப் பரிசளித்தீர் மிக்க நன்றி