Friday, January 31, 2014

பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-3(மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)


பட்சி சொன்னதில் ஒன்று மட்டும் தவறிப்போய் விட்டது.மகாத்மா காந்தி நிறுவனத்தின் புல்வெளி அழகைப் பார்த்து,பசுமை பார்த்து,குளிர்சாதன வசதி இல்லாமலே சமாளித்துக் கொள்ளலாம் என்னுமெண்ணம் பொய்த்து விட்டது. அதிகாலை ஏழு மணியளவில் தொடங்கும் கடும் வெய்யில் மாலை வரை பின்னியெடுக்கிறது.எனவே ஓய்வு நேரங்களை புல்வெளி மரத்தடிகளில் போடப்பட்டிருக்கும் மர பெஞ்சுகளில் செலவிடத் தொடங்கினேன்.

ஆனாலும் பரந்து விரிந்த அந்தப் புல்வெளிகளில் காலை நடை மற்றும் மாலைநடை மேற்கொள்வதொரு சுகமான அனுபவம்.துளி கூட மாசில்லாத காற்று. அப்பழுக்கில்லாத அழகான தார்ச்சாலைகள்.
அங்கே சுத்திகரிப்புப் பணியிலும் தோட்டப் பராமரிப்பிலும் இருக்கும் ஒவ்வொருவரிடமும் எல்லையில்லாத அர்ப்பணிப்புணர்வைப் பார்க்க முடிந்தது. தொடர்ந்து தூய்மை செய்து கொண்டே இருக்கிறார்கள். தார்ச்சாலைகள் பளபளப்பதன் ரகசியத்தை அறியவே முடியவில்லை.


இரண்டாம் நாள் மகாத்மா காந்தி நிறுவனத்தின் தலைமை இயக்குநர், இயக்குநர் ஆகியோருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு நிகழ்ந்தது.
இந்தியவியல் கல்விப்புலத்தின் தலைவராக விளங்கும் முனைவர் சொர்ணம் அவர்களையும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

அதிதியன் விடுதியில் இருக்கும் இன்னொரு சின்னக்குறை,அங்கே உணவகமில்லை. காலை ஏழரை மணிக்கு பேராசிரியர் ஜீவன் தானே காபி கலந்து வீட்டிலிருந்து கொண்டுவருவார்.ஒன்பது மணியளவில் அவரே காலை சிற்றுண்டியும் கொண்டு வந்துவிடுவார்.அதனால் சிரமமில்லாது போயிற்று.

அங்கிருக்கும் ஆண்கள் அனைவருக்குமே பெரும்பாலும் சமையல் தெரிந்திருக்கிறது. அங்கிருந்த பேராசிரியை ஒருவர் இதனை உறுதிப்படுத்தினார். " வேலை முடிந்து வீட்டுக்குப் போகத் தாமதமானால் எங்கள் கணவர் சமையல் செய்து வைத்திருப்பார். உங்கள் ஊரில் எப்படி?"

நான் விளையாட்டாகச் சொன்னேன்,"எங்கள் ஊரில் மனைவி சமையல் செய்து தராமல் வேலையிலிருந்து தாமதமாக வந்தால் கணவர் வேறொரு திருமணம் செய்து கொள்வார்".அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்மணி  அதன்பிறகு என்னை ஆணாதிக்கத்தின் மொத்த வடிவமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.

மகாத்மா காந்தி நிறுவனத்தின் பேராசிரியைகளையும் சந்தித்தேன்.அவர்களுடனான ஓர் உரையாடலை பேராசிரியர் ஜீவன் ஏற்பாடு செய்திருந்தார். அவர்களுக்கு பேச்சுத்தமிழ் என்ற ஒன்றில்லை. செந்தமிழிலேயே உரையாடுகிறார்கள். தமிழ் பயிலும் மாணவர்களும் அவ்வாறுதான் பேசுவார்களாம். எழுத்துத் தமிழ் பேச்சுத் தமிழ் என்கிற வேறுபாட்டைக் காண்பித்தால் அவர்கள் குழம்பிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் இந்த ஏற்பாடாம்..

திருமதி மகேஸ்வரி தன் பெயரனைப் பற்றி பேராசிரியரிடம் செந்தமிழில் சொன்னது கேட்க சுவையாக இருந்தது."அய்யா !எனக்குப் பல்வலி என்று என் பெயரனிடம் சொன்னேன்.அதற்கு அவன் சிரிக்கிறான்.எனக்குப் பல் வலிக்கிறது என்கிறேன்,நீ சிரிக்கிறாயே என்றேன்!அதற்கும் சிரிக்கிறான்"
என்றார். பாட்டியின் பல்வலிக்காக வருந்தாமல் சிரிக்கிற அந்தப் பெயரனுக்கு என்ன வயதென்று நினைக்கிறீர்கள்? ஐந்து மாதங்களாம்!!

அடுத்தநாள் தைப்பூசம்.அத்தனை தமிழர்களும் அதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.பெரும்பாலும் எல்லோருமே விரதமிருக்கிறார்கள். பலரும் காவடியோ  பால்குடமோ எடுக்கிறார்கள்.  Wish you a happy and pious Kavadi என்று குறுஞ்செய்திகள் பறக்கின்றன. மாலையில் எங்கேனும் வெளியே போய்வரலாம் என்றார் பேராசிரியர் ஜீவன். அதற்குள் நல்ல நண்பர்களாகியிருந்தோம். ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் சென்றார். அவர் அங்கே அழைத்து வரக் காரணம்,அங்கிருந்த பிரம்மாண்டமான புத்தகக் கடை மட்டுமே!அங்கிருக்கும் ஆங்கிலப் புத்தகங்கள் எல்லாமே இங்கும் கிடைப்பவைதான். இந்தியாவில் கிடைக்கும் புத்தகங்களை மொரீஷியஸ் விலைகளில் வாங்க வேண்டாமென்று வந்து விட்டேன்.

ஜீவன் சமீபமாகத்தான் பால் கோஹியோவின் அனைத்து நூல்களையும் வாசித்து முடித்திருந்தார். Eleven minutes  பற்றியும்The Alchemist பற்றியும் விவாதித்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு அறைக்குத் திரும்பினோம்.
காலையில் அவர் வீட்டிலேயே சிற்றுண்டி.அதன்பிறகு தைப்பூசம் நிகழ்ச்சிக்காக கைலாசம் என்கிற கோவிலுக்கு செல்லலாம் என்றார் பேராசிரியர்.

மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் மிக அழகாக அமைந்திருக்கிறது.
சுகமான தரிசனம். காவடி ஊர்வலத்தைப் பார்க்க வசதியாக இருபது முப்பது பேர் அமரக் கூடிய சிறு மேடையும் பிரகாரத்தைச் சுற்றியிருக்கும் மண்டபங்களில் இருக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கிருந்த சிறுமேடையில் சென்றமர்ந்தோம்.அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில்அமர்ந்து ஊர்வலத்தைக் காணத் தயாரானோம்.

கோவையின் தொழிலதிபர்களை நினைவுபடுத்தும் முகஜாடையில் நீலக்கலர் சட்டையை கறுப்பு நிறக் கால்சட்டையில் டக் இன் செய்து ஒருவர் வந்தார். இரண்டொருவர் அவரை வரவேற்று முன்வரிசையில் அமரச் செய்தனர்.
சற்று நேரத்தில் ஆரஞ்சு குர்தா அணிந்து சற்றே மூத்த ஒருவர் தன் மனைவியுடன் வந்தார்.அவரையும் ஒருசிலர் வரவேற்று முன்வரிசையில் அமரச் செய்தனர். அங்கு தர்மகர்த்தாக்களை கோவில் தலைவர் என்கிறார்கள். அப்படி யாரேனும் கோவில் தலைவர் போலும் என்று நினைத்தேன். அதற்குள் பேராசிரியர் என் காதில் கிசுகிசுத்தார். "நீலச்சட்டை போட்டிருக்கிறாரே, அவர்தான் எங்கள் பிரதமர். குர்தா அணிந்திருப்பவர் எங்கள் ஜனாதிபதி".எனக்கு தூக்கி வாரிப்போட்டது.நம்மூரில் ஒரு வார்டு கவுன்சிலர் கூட இப்படி பிளாஸ்டிக் நாற்காலியில் அமரச் சம்மதிப்பார்களா என்று தோன்றியது.
பிளாஸ்டிக் நாற்காலிகளில் ஜனாதிபதியும் பிரதமரும்


அதற்குள் திரும்பிப் பார்த்த பிரதமரின் முகம் பேராசிரியர் ஜீவனைக் கண்டதும் மலர்ந்தது.ஜனாதிபதியும் பிரதமரும் அவரை அருகே அழைத்துப் பேசினர்.பின்னர் ஜீவன் என்னை அறிமுகம் செய்ய,இருவரும் அன்புடன் நலன் விசாரித்தனர்.பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம்,மொரீஷியஸின் இரண்டாவது பிரதமர். இதற்கு முன் பிரதமராக இருந்தவர் இவருடைய தந்தை. மொரீஷியஸின் ஜனாதிபதி,ராஜ்கேஸ்வர் புர்யாக்.இருவருக்கும் இந்திதான் தாய்மொழி.ஜனாதிபதி என்னிடம்"உங்கள் உரை மகாத்மா காந்தி நிறுவனத்தில் இருப்பதாக சொன்னார்கள்.ஆங்கிலத்தில் பேசுவீர்களா?தமிழிலா?"என்றார்.

"ஆங்கிலத்தில்தான் பேச இருக்கிறேன்"என்றதும் "அடடா! நான் வர வேண்டுமே!எப்போது தொடங்கி எப்போது முடிப்பீர்கள்"என்று ஆர்வமானார்.பேராசிரியர் ஜீவன் நெளியத் தொடங்கினார். ஏனெனில் ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கென்று சில ஏற்பாட்டு மரபுகள் உண்டு.
சில நிமிடங்களிலேயே தன் உதவியாளரிடம் மறுநாள் நிகழ்ச்சி நிரலைக்கேட்டவர் வர இயலாதென்று தன் வருத்தத்தைத் தெரிவித்ததுடன் நிகழ்ச்சி ஒலிப்பதிவை உடனே அனுப்புமாறு பேராசிரியரைக் கேட்டுக் கொண்டார்.


தைப்பூசம் காண வந்த குழந்தைகள்,பிரதமரை தங்கள் அப்பாவின் செல்ஃபோன்களில் படம் பிடிக்க போஸ் கொடுத்த பிரதமர் அந்தப் பிள்ளைகளை அழைத்து மடியில் அமர்த்திக் கொண்டு    அரசு புகைப்படக் கலைஞரை படமெடுக்கச் சொன்னார். அந்த மேடைக்கருகே இரண்டு பாதுகாவலர்கள். இரண்டாவது வரிசையில் ஒரு பாதுகாவலர்.அவ்வளவுதான்.இதில் சிலரை பிரதமர் அருகே அழைத்துப் பேசினார். முதிய பெண்மணி ஒருவர் பேசிக்கொண்டே பிரதம்ர் தோள்களில் கைபோட, பின்னால் அமர்ந்திருந்த பாதுகாவலர் அந்தக் கையை மெல்ல விலக்கிவிட்டார்.

அப்போதுதான் அந்த சுவாரசியமான சம்பவம் நடந்தது.சற்றே மனநிலை குன்றியவராய், சிகப்பு டீ ஷர்ட்டும்,அரைக்கால் சட்டையும் கையில் ஒரு பையுமாய் திரிந்து கொண்டிருந்த ஒருவர்,பிரதமருடன் புகைப்படம் எடுக்க
வேண்டுமென அடம் பிடித்தார்.அதை கவனித்த பிரதமர் அவரை உள்ளே அனுமதிக்கும்படி ஜாடை காட்டினார்.

பந்தாவாய் உள்ளே வந்த அந்த மனிதர், பிரதமரின் இடது தொடையிலும் ஜனாதிபதியின் வலது தொடையிலுமாக உட்கார்ந்து இருவர் தோள்களிலும் ஒய்யாரமாகக் கைபோட்டு உட்கார்ந்தாரே பார்க்கலாம்!கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் ஜனாதிபதியும் பிரதம்ரும் போஸ் கொடுத்தார்கள்

(தொடர்வோம்)

Wednesday, January 29, 2014

குறிஞ்சி மலர்விழும் பாதையிலே....

தொலைபேசியில் ஒரு நண்பர் அழைத்து வாழ்த்தினார்."சார்! கவிஞருக்கு பத்மபூஷண் கிடைச்சிருக்கு.ரொம்ப சந்தோஷம்.என் வாழ்த்துகளை சொல்லுங்க!"

"நன்றிங்க! கண்டிப்பா சொல்லிடறேன்!"

"சார்..ஒரு சந்தேகம்.
"அவருக்கு பத்மபூஷண் எத்தனாவது தடவையா தர்றாங்க?"

நான் அதிர்ந்து போய்....."அதெல்லாம் ஒருதடவை தாங்க தருவாங்க"

"ஓஓ...அப்ப பத்மஸ்ரீதான் நெறைய தடவ வாங்கியிருக்காரு!இல்லீங்களா?"

"இல்லீங்க ! அதுவும் ஒருமுறைதான் தருவாங்க!"

எதிர்முனையில் இருப்பவர் குழம்பிப்போய்,"இல்லீங்க! பலமுறை வாங்கியிருக்காருன்னு நீங்களே மேடைகள்லே சொல்லியிருக்கீங்க!மறந்துட்டீங்கன்னு நெனைக்கறேன்.எதுக்கும் ஒருதடவை கவிஞர்கிட்டேயே கேட்டு சொல்லுங்க!"

"ஹலோ! ஹலோ!" நான் மீண்டும் விளக்குவதற்குள் வைத்துவிட்டார். அவரைச் சொல்லி பயனில்லை.சிறந்த திரைப்பாடலாசிரியர் என்னும் விருதை கவிஞர் வைரமுத்து பலமுறை வாங்கப்போய் இவர் எல்லா விருதுகளையும் பலமுறை வாங்கியிருக்கிறார் போலும் என்று அந்த நண்பர் நினைத்துவிட்டார்.

அதற்குள் அடுத்த தொலைபேசி."வணக்கங்க சார்!நாங்க திருப்பூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறையிலிருந்து பேசறோமுங்க!"
"வணக்கம்மா! சொல்லுங்க..
"சார்! கவிஞர் வைரமுத்து பத்மபூஷண் வாங்கியிருக்காரில்லீங்களா!அவர எங்க கல்லூரிக்கு அழைச்சு வர்றதா சொன்னீங்களே,எப்ப அழைச்சுட்டு வர்றீங்க சார்!"
"நான் எப்பம்மா சொன்னேன்?"
"சார்! 2003லே நீங்க எங்க கல்லூரிக்கு சிறப்பு விருந்தினரா வந்தப்போ நாங்க கேட்டதுக்கு கவிஞரை அழைச்சுட்டு வர்றதா சொன்னீங்களே சார்!"
'என்னம்மா இது அநியாயமா இருக்கு?பதினோரு வருஷம் கழிச்சு கேட்கறீங்களே! தசரதன் வரம் கொடுத்த கதையால்ல இருக்கு"
"ஓ! தசரதன்ங்கிறவரத்தான் கேக்கோணுங்களா!அவரு நெம்பர் என்னங்க சார்".அசந்து போனவன் சிறிது நேரம் செல்லிடப்பேசியை அணைத்து வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.


 இலக்கியம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான பங்களிப்புக்கு அரசின் அங்கீகாரமாய் பத்மபூஷண் விருதுக்கு  கவிஞர் வைரமுத்து அவர்கள் தேர்வாகியிருக்கும் செய்தி ஜனவரி 25 மாலை வெளியானதிலிருந்து எனக்கு ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள்.ஜனவரி 26 காலை கவிஞரை அவர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

பத்மபூஷணை வாழ்த்தும் பத்மபூஷண்



சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்மபூஷண் விருது பெற்ற அருட்செல்வர் டாக்டர்.நா.மகாலிங்கம் அவர்கள் அப்போதுதான் நேரில் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றிருந்தார்."என் மகிழ்ச்சியை மறைக்க விரும்பவில்லை"என்று பேட்டியளித்திருந்த கவிஞர் உள்ளபடியே உற்சாகமாயிருந்தார். கூட்டத்தில் தயங்கித் தலைமறைவாய் நின்றவர்களையும் பெயர் சொல்லி அழைத்து நலம்  விசாரித்தார்.

கவிஞருக்கு இதேபோல் 2003 ஜனவரி 25 மாலையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டபோது நான் திருவண்ணாமலையில் விழா மேடையில் இருந்தேன்.மறுநாள் காலை அருணாசலேஸ்வரர் சந்நிதியில் கவிஞர் பேருக்கு அர்ச்சனை செய்து பிரசாதத்துடன் வெளியே வந்தபோது,நாவுக்கரசர் சத்தியசீலன் அவர்கள் எதிரே வந்தார்கள்.கவிஞர் விருது பெற்றிருக்கும் செய்தியை சொன்னதும்,"அவருக்கெல்லாம் நேரடியா பத்மபூஷண் கொடுத்திருக்கணும்"என்றார் பேராசிரியர்.பதினோரு ஆண்டுகள்..இடையறாத,நிதானமான,அழுத்தமான பங்களிப்புக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்.

நண்பர் கோவை ரமேஷ் வாழ்த்துகிறார்



வெளியே கலைஞர் தொலைக்காட்சியினர் கவிஞரின் நேர்காணலுக்குக் காத்திருந்தனர். கவிஞர் வரும்முன்பு அறிவிப்பாள்ர் தன் முன்னுரையை பதிவு செய்து கொண்டிருந்தார்.
ஒரு குரல் குறுக்கிட்டது."ஏங்க தயங்கித் தயங்கி பேசறீங்க! தடுமாறாதீங்க! இன்னும் சிரிச்ச முகமா பேசுங்க!" திகைத்துப் போன அறிவிப்பாளர் குரல் வந்த திசையைத் தேடிப் பார்த்தார்.
இயக்குநர் சீனு ராமசாமிதான் குரல் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்ததும் பரவசமானார். காமிராவுக்குப்பின்னால் இயக்குநர் சீனு ராமசாமி நிற்க,அவரின் "இடம் பொருள் ஏவல்"படத்தின் கதாநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டு விட்டவர் போல் மேலும் பரவசமாகி மேலும் தடுமாறினார்.ஆனால் கவிஞர் வந்ததும் கேள்விகளைத் துல்லியமாகக் கேட்டார்.

"பலமுறை தேசிய விருதுகள்.பிறகு சாகித்ய அகாதமி,மூன்று டாக்டர் பட்டங்கள்.பத்மஸ்ரீ விருது.இப்போது பத்மபூஷண்.அடுத்து எதை நோக்கிப் போகிறீர்கள்"என்ற கேள்விக்கு கவிஞர் தந்த பதில்,
"நான் மானுட மேம்பாடு என்னும் இலக்கை நோக்கிப் பயணம் போய்க்கொண்டிருக்கிறேன். வழியில் சில மரங்கள் என்மேல் பூக்களை உதிர்க்கின்றன.அவை உயர்ந்த பூக்களாகவும் இருக்கின்றன.அவை மேலே விழுந்ததில் மகிழ்ந்து மேலும் பயணம் தொடர்வேனே தவிர மரத்தடியிலேயே படுத்து உறங்கிவிட மாட்டேன்".

இந்தத் தெளிவும் நிதானமுமே இவரை இவ்வளவு தொலைவு அழைத்து  வந்திருக்கிறது. இன்னும் நெடுந்தூரம் அழைத்துச் செல்லவும் இருக்கிறது.
கவிஞர் பத்மஸ்ரீ விருது பெற்றபோது "சிகரங்கள் உனக்கு சமவெளிச்சாலை1 சாதனை உனக்கு தினசரி வேலை"என்றெழுதினேன்.

"மதுரை" கவிதையில் கவிஞர் பட்டியல் போட்டதுபோல்

"மல்லிகை மௌவ்வல் அரவிந்தம்-வாய்
  மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தியோடு"



சிகரங்களில்எப்போதோ பூக்கும் குறிஞ்சிப்பூக்களும் மேலே விழுந்து இவரின் இலக்கியப் பயணத்தில் மேலும் இதமும் மணமும் சேர்க்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.வாழ்த்துகள் கவிஞர்!!



--

Sunday, January 26, 2014

பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-2(மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)

மும்பை விமான நிலையத்தில் குடியேற்றம் பகுதியில் இருந்த இளம் அலுவலர், என் கடவுச்சீட்டைப் பார்த்தபடி, "விஸா ஆன் அரய்வல்?" என்று கேட்டார். நானும் ஆமென்று சொன்னேன். ஆனால் மொரீஷியஸில் இந்தியர்களுக்கு விஸா தேவையில்லை என்று அங்கே சென்ற பின்தான் தெரிந்தது.


என்னை அழைத்திருக்கும் மகாத்மா காந்தி நிறுவனம் எவ்வளவு செல்வாக்குள்ள நிறுவனம் என்று மொரீஷியஸில் இறங்கி சில நிமிடங்களிலேயே புரிந்தது.அவர்களின் கடிதத்தைக் காண்பிட்தவுடன் குடியேற்றம் பகுதியில் தொடங்கி, சுங்க இலாகா வரை எல்லோருமே மரியாதையுடன் வழியனுப்பினர் MGI என்ற சொல் மந்திரம் போல் வேலை செய்தது.

விமான நிலைய வாயிலில் பல்வேறு ஓட்டுநர்கள் கைகளில் பெயர்ப்பலகையுடன் நடத்திய பிரம்மாண்டமான அணிவகுப்பு மரியாதையை கம்பீரமாகப் பார்வையிட்டேன்.ஒன்றில் கூட என்பெயர் இல்லை.பேராசிரியர் ஜீவேந்திரனை நான் பார்த்ததும் இல்லை. ஒருவேளை விமானநிலையத்துக்குள் காத்திருக்கிறாரா என்று பார்க்க உள்ளே வந்தேன்.குறுந்தாடியும் கழுத்துப் பட்டியுமாக ஒருவர் வேகவேகமாய் உள்ளே வந்தார்."இவர்தான் ஜீவேந்திரன்"என்று பட்சி சொல்லியது. "வணக்கம்" என்ற என் குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினார்.உற்சாகமாய் வரவேற்றவருடன் வெளியே வந்தேன். என் எடை தெரியாததாலோ என்னவோ,எதற்கும் இருக்கட்டுமென்று எட்டுப்பேர் அமரக்கூடிய வேன் ஒன்றை அனுப்பியிருந்தார்கள்.

பரிசுக்குலுக்கலில் குலுக்குவது போல் வேன் குலுக்கி எடுக்க,
விமானக் களைப்பும் சேர்ந்து கொள்ள அரை மயக்கத்தில் பயணம் செய்தேன். "மதிய உணவு வேண்டாம்"என்றதும் பேராசிரியர் குழம்பினார். மகாத்மா காந்தி நிறுவனம் என்பதால் உண்ணாவிரதம் ஏதும் தொடங்கிவிட்டேனோ என்கிற கலக்கம் அவருக்கு. அறைக்கு வந்து சேரும்போது மதியம் ஒன்றரை மணியிருக்கும்.நிறுவன வளாகத்திலேயே உள்ள அதிதியன் விருந்தினர் விடுதியில் அறை.  "மூன்று மணிக்குத் தயாராகி விடுவீர்களா" என்று தயக்கத்துடன் கேட்டு விடைபெற்றார் ஜீவன்.

அறையைக் கூட சரியாய்ப் பார்க்காமல் படுக்கையில் விழுந்தவனை பட்சி மிகச்சரியாய் இரண்டரை மணிக்குஎழுப்பி விட்டது. குளித்துத் தயாராகி வெள்ளை வேட்டி சட்டையில் வந்தமர,பேராசிரியர் கதவைத்தட்ட சரியாக இருந்தது.(பதிவின் இந்தப் பகுதியை வழங்குவோர்,ராமராஜ் வேஷ்டிகள் சட்டைகள் மற்றும் வேட்டிக்கான பிரத்தியேக வெள்ளை பெல்ட்டுகள்).

அருகிலேயே தமிழ்க்கோயில்களின் கூட்டமைப்பு வளாகம் இருந்தது. பசிய புல்பரப்பின் நடுவே அழகான திருவள்ளுவர் சிலை. அருகிலேயே விழா அரங்கம்.பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் அருகே வந்து வரவேற்றனர்.அரங்கிற்குள் நுழைந்தால் இன்ப அதிர்ச்சி.பேரூராதீனத்தைச் சேர்ந்த சைவப்பற்றாளர் திரு.ஜெயப்பிரகஷ் மற்றும் சிரவையாதீனம் திரு.ஜெகந்நாத ஓதுவார் உட்பட சில ஓதுவாமூர்த்திகளும் வாத்தியக் கலைஞர்களும் வந்திருந்தனர்.

மொரீஷியஸ் நட்டின் அமைச்சர்கள் மூவரும் அரங்கிலிருந்தனர். ஓதுவார்கள் கடவுள்வாழ்த்து பாடினர். திருக்குறள் பாடினர்.மற்றபடி விழா முழுவதும் ஆங்கிலத்தில்தான். ஆமாம் .மொரீஷியஸில் வாழ்கிற தமிழர்கள் பலருக்கு தமிழ் தெரியாது. விழா நிறவில் அமைச்சர்களும் விருந்தினர்களும் தமிழமைப்புகளின் உறுப்பினர்களும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினோம்.

அதன்பின் விழா அரங்கில் தேநீர் விருந்து. இன்னும் சகஜ நிலைக்கு வராததால் அந்த சிற்றுணவே போதுமென்று  சொல்லி மதிய உணவைத் தவிர்த்து விட்டேன். பேராசிரியர்   ஜீவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.மீண்டும் ஒருமணிநேர ஓய்வு.மாலையில் குட்லாண்ட்ஸ் என்ற பகுதியில் உள்ள  ஆலயம் ஒன்றிற்கு செல்வதாய் ஏற்பாடு. உடலும் மனமும் தெளிந்திருந்தது.



ஏறக்குறைய நாற்பது ஏக்கர்கள் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் மகாத்மா காந்தி மையம் மொரிஷியஸ் அரசு மற்றும் இந்திய அரசின் கூட்டு முயற்சியில் உருவானது.1970 ல்  இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மொரீஷியஸின் முதல் பிரதமர்சீவுசாஹர் ராம்கூலன் ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டினர்.இந்த நிறுவனத்திற்காக 1970 ல் மொரீஷியஸ் பாராளுமன்றம் பிரத்யேகமாய் ஒரு சட்டமே இயற்றியது.பள்ளிகள் நுண்கலைக் கல்லூரிகள் இந்தியவியல் கல்விகள் என்கிற வரிசையில் தமிழ்த்துறையும் இயங்குகிறது.இவைதவிர பள்ளிகளும் இயங்குகின்றன.

மகாகவி சுப்பிரமணிய பாரதி பெயரில் ஓர் அரங்கமும் அமைந்துள்ளது. வளாகத்துக்கு வெளியே சுப்பிரமணிய பாரதி பெயரில்  கண் மருத்துவமனை ஒன்றையும் பார்த்தேன்.இவைதவிர மகாத்மா காந்திநிறுவனத்தின் முக்கிய அங்கம்,அங்கிருக்கும் ஆவணக்காப்பகம். மகாத்மா காந்தி நிறுவன வளாகத்தின் பெரும்பகுதி பசுமையின் பிடியில் இருக்கிறது. இங்கே அமைந்திருக்கும் புல்வெளிகளும் நந்தவனங்களும் கண்ணும் கருத்துமாய் பராமரிக்கப்படுகின்றன.இதில் அமைந்திருக்கும் அதிதியன் விருந்தினர் விடுதியில்தான் அறை.

அதிதியன் விருந்தினர் விடுதி

காந்தி சில சமயங்கள் தங்கும் பிர்லா மாளிகையை விட பலமடங்கு பெரிதாக மகாத்மா கந்தி நிறுவனம் அதிநவீன வசதிகளுடன் உருவாகியிருந்தாலும் அதிதியன் விருந்தினர் விடுதி கட்டும் போது மட்டும் அவர்களுக்கு காந்தியின் எளிமை ஞாபகத்துக்கு வந்து குளிர்சாதன வசதி செய்யாமல் விட்டு விட்டார்கள். நான் விரும்பினால் ஏதேனும் விடுதி ஒன்றில் குளிர்சாதன வசதி கொண்ட அறை ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார் பேராசிரியர் ஜீவன்.ஆனால் இந்தப் பசுமையும் ஏகாந்தமும் வேறெங்கும் கிடைக்காது என்றார். சூழல் எனக்கு மிகவும் பிடித்ததால் அங்கேயே தங்க ஒப்புக் கொண்டேன். விசாலமான் அறை.வெள்ளையர்கள் காந்தி பெயரைச் சொன்னாலே சூடாவார்கள் என்பதைக் குறிக்கும் விதத்திலோ என்னவோ,குளியலறையிலிருந்த தண்ணீர் சூடேற்றும் சாதனத்தில் Made in England  என்றிருந்தது.

வளாகத்தில் அமைந்திருக்கும் காந்திசிலை
குட்லாண்ட்ஸ் நோக்கி மீண்டும் குலுங்கும் பயணம். ஏறக்குறைய முக்கால் மணிநேரப் பயணத்தில் குட்லாண்ட்ஸ் சென்றடைந்தோம்.ஆங்காங்கே ஆகாயம் நோக்கி சுட்டுவிரல் உயர்த்தும் பாவனையில் மேல்நோக்கி நிற்கும் ஒற்றைப் பாறைகளுடன் குன்றுகள்
ஊருக்கு நடுவே அழகான சிவன் கோவில் ஒன்று. உள்ளே நுழையும்போது,ஆண்களும் பெண்களும் பதின்வயதினரும் குழந்தைகளுமாய் நானூறுக்கும் அதிகமானவர்கள் திரண்டிருந்தனர். தைப்பூச விழா அங்கே பத்து நாட்கள் கோலாகலமாக நிகழ்கிறது. வயது பேதமில்லாமல் எல்லோரும் விரதமிருக்கிறார்கள். காவடி,பால்குடம் எடுக்கிறார்கள். அலகு குத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் உண்மையான பக்தியுடன் அங்கிருந்தவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதத்தினர் தமிழைப் புரிந்து கொள்ள சிரமப்படுபவர்கள். மொரீஷியஸில் நான் கலந்து கொண்ட ஐந்து கூட்டங்களில்,தமிழ் மாணவர்களிடையே பேசிய ஒரு கூட்டம் தவிர மற்ற நான்கு கூட்டங்களில் ஆங்கிலத்தில்தான் பேசினேன். குட்லாண்ட்ஸ் கோவிலில் நாங்கள் நுழைந்தபோது ஒருவர் ஆறெழுத்து மந்திரம் குறித்தும் முருகன் என்னும் மூர்த்தத்தின் குண்டலினித் தத்துவம் குறித்தும் ஆங்கிலத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.அவரைத் தொடர்ந்து நான் அழைக்கப்பட்டேன்.
சுப்ரமண்யா குன்று பற்றிய செய்திகளுடன் தொடங்கினேன். பின்னர் கற்பனைக்களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகளின் பாடல் ஒன்றின் பொருளை ஆங்கிலத்தில் முதலில் விளக்கினேன்

You know, once Shiva was in deep meditation at Kailash.suddenly he could hear Lord Ganesha crying." என்ற போது பட்டுப்பாவாடை சட்டையிலிருந்த சிறுமிகள் கண்களை அகல விரித்துக் கேட்கத் தொடங்கினர்.
கல்லூரி மாண்வனாக இருந்தபோது ஒருமுறை தனிப்பட்ட உரையாடலில் திரு.சுகிசிவம், கி.வா.ஜ.விடமிருந்துதான்  கற்றுக் கொண்ட உத்தி ஒன்றைச் சொன்னார். முதலில் பாடலின் பொருளை விளக்கிவிட்டு பிறகு பாடலைச் சொல்வது.தமிழகத்தில் தமிழில் பேசும்போது நான் பின்பற்றும் இந்த உத்தி என் ஆங்கில உரைகளிலும் கைகொடுத்தது.

கூட்டம் முடிந்து கோவில் நிர்வாகத்தில் ஆர்வமுடன் ஈடுபடும் தொழிலதிபர்களான திரு.சுப்பிரமணியம் தம்பதியர் திரு.சொக்கலிங்கம் தம்பதியர் ஆகியோரின் அன்பான உபசரிப்பில் இரவு உணவு.நான் விளையாட்டாக பேராசிரியர் ஜீவனிடம்"நான்கூட இன்று விரதமிருந்துதான் சாப்பிடுகிறேன்" என்று சொல்ல அவர் சங்கடத்தில் நெளிந்தார்.
நாகை மாவட்டம் தரங்கம்படி பக்கமுள்ள பெரம்பலூரில் இருந்து இரண்டாண்டு ஒப்பந்தத்தில் அழைத்து வரப்பட்டிருந்த வாத்தியக் கலைஞர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அதிதியன் விடுதி திரும்பினேன். மிச்சமிருந்த களைப்பையும் உறிஞ்சிக் குடிக்கும் உத்வேகத்துடன் கவ்விக் கொண்டது உறக்கம்.

(தொடர்வோம்)

Friday, January 24, 2014

பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-1(மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)


"மொரீஷியஸில் இருந்து ஒரு பெண்மணி வந்துள்ளார். ஆர்ய வைத்திய சாலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அவருடைய ஆங்கிலக் கவிதைகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமாம்.உங்களால் அவரை சந்திக்க முடியுமா?"டாக்டர் லஷ்மி தொலைபேசியில் அழைத்துச் சொன்னபோதே "ஒத்துக்கொள்"என்று பட்சி சொல்லியது."இன்று மாலை ஆறு மணிக்குப் பார்க்கலாம்"என்றேன்.

கோவையில் எங்கள் வீட்டிலிருந்து நடந்து போய்விடுகிற தொலைவில்தான் ஆர்ய வைத்திய சாலை அமைந்துள்ளது.அங்கேதான் பிரசித்தி பெற்ற தன்வந்த்ரி கோவில் அமைந்துள்ளது.நான் பள்ளி மாணவனாக இருந்த போது  மாலை நேர பூஜையின் அடையாளமாக பம்பை செண்டை மற்றும் கொட்டு வாத்தியங்கள் கேட்கும்.எதிர்வீட்டுப் பையன் "சஜ்ஜி'யும் நானும் கோவிலுக்கு ஓடுவோம்.ஐந்து நிமிட ஓட்டத்தில் கோவிலைப்போய் அடைந்தும் விடுவோம்.

 சஜ்ஜி எனும் ச்ஞ்சீவ் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவன்.தன் பாட்டி ,பெரியம்மா,சித்தி என்னும் முக்கோணப் பராமரிப்பில் கோவையில் படித்துக் கொண்டிருந்தான்.பேய்க்கதைகள் சொல்வதில் கைதேர்ந்தவன். கையில் மண்டை ஓடு பொறித்த மோதிரம் அணிந்திருப்பான். ஆனால் பேய்க்கதைகளை அவன்தான் சொல்ல வேண்டும்.நாங்கள் சொன்னால் பயந்து கொள்வான்.தனக்கு மட்டும் கெட்டகனவுகள் வராது என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.ஏனென்றால்  ஆலத்தூர் ஹனுமானிடம் கெட்ட கனவு வந்தால் வாலை ஆட்டி எழுப்புமாறு பிரார்த்திக்கும் சுலோகத்தை அவகுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார்கள்.மூன்று பபிள்கம்கள் வாங்கிக் கொடுத்ததால் அவன் எனக்கும் அந்த சுலோகத்தைக் கற்றுக் கொடுத்திருந்தான்.

"ஆலத்தூர் ஹனுமானே! பேடிச் சொப்னம் காணரதே
  பேடிச் சொப்னம் கண்டாலே,வாலை ஆட்டி உணர்த்துதுதே "
என்பது போல என்னவோ வரும்.அப்போது கிரிக்கெட்டில் பிஷன்சிங் பேடி என்றொருவர் புகழுடன் இருந்தார்.மற்ற பையன்கள்,"பேடி சொப்னம் கண்டால் உங்களை ஏன் எழுப்பணும்?அனுமாரைக் குழப்பாதீங்கடா" என்று எங்கள் இருவரையும் கிண்டல் செய்வார்கள்.

இப்போதெல்லாம் கட்டிடங்களும் வாகன இரைச்சல்களும் பெருகிவிட்டன.பம்பை செண்டைகள் கோயிலில் ஒலிக்கின்றனவே தவிர எங்கள் வீட்டருகே கேட்பதில்லை.
சஜ்ஜி என்கிற சஞ்சீவ், ஓரிரு வருடங்கள் முன்புவரை சஞ்சீவ் பத்மன் என்ற பெயரில் சுயமுன்னேற்ற வகுப்புகள் நடத்தி வந்தான்.இப்போது அரபுநாட்டில் எங்கேயோ பணிபுரிவதாகக் கேள்வி.
சஞ்சீவ் பத்மன்

அந்தப் பழைய ஞாபகங்களுடன் தன்வந்த்ரி கோவில் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.பதினைந்து நிமிடங்கள் பிடித்தன.கால நடையில் ஓட்டம் நிதானப்பட்டு நடைக்கு வந்துள்ளது. ஆனால் ஆரிய வைத்திய சாலை நோக்கிய அந்த நடை,புதிய ஓட்டம் ஒன்றுக்கு வித்திடும் என்று பட்சி சொல்லியது.

தன்வந்தரி  கோவிலில் கிரமப்படி பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.கேரள பாணி கோவில்களுக்கே உரிய மயக்கும் அதிர்வுகள்.ஆலயத்தை ஒட்டிய அமைதியான சூழலில் சிகிச்சை மையமும் அமைந்திருந்தது.
தரிசனம் முடிந்து,நெற்றியில் சந்தனக் கீற்றும்,கைகளில் பிரசாதமுமாக வெளியே வந்தபோது எதிரே டாக்டர் லஷ்மி வேகவேகமாக வந்து கொண்டிருந்தார்.அவர் மருத்துவரல்ல.ஆனால் மருத்துவ உலகில் ஓர் அதிசயம் நிகழ வேண்டும் என்ற பிரார்த்தனையோடும் கனவோடும் களத்தில் நிற்பவர்.
முனைவர் லஷ்மி
சில ஆண் குழந்தைகளைத் தாக்கும் தசைச்சிதைவு எனும் கொடுமையான நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிகப்படவிலை.நோய்க்கான அறிகுறிகள் பிஞ்சு வயதில் தெரியத் தொடங்கி,குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கி பதின் வயதுகளில் உயிரிழக்கிறார்கள்.அத்தகைய குழந்தைகளின் சிரமம் குறைக்கும் ஆதரவு மையம் நடத்துவதோடு,தம்பதிகளுக்குப் பரிசோதனை நடத்தி வருமுன் காக்கும் பணியில் ஊக்கமுடன் இறங்கி செயலாற்றுபவர் லஷ்மி.

சிகிச்சை மையத்தில் ஆறாம் எண் அறைக்கதவைத் தட்டினோம்.கதவைத் திறந்த அம்மையாருக்கு எழுபது வயதிருக்கும்.சிவந்த பருமனான உருவம்.கழுத்தில் தங்கத்தில் கட்டிய ருத்ராட்ச மாலையில் ஓஷோவின் உருவம் பொறித்த டாலர் மின்னியது.கதவைத் திறந்தவர்,"கம் கம் லஷ்மி!"என்றவர் பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு கேட்ட முதல் கேள்வி,"லஷ்மி! ஃபில்டர் காஃபி எவ்விட?"

"ஆஹா!இவரும் நம் கட்சிதான்!" என்று பட்சி சொல்லியது.இசைக்கவி ரமணன் அடிக்கடி சொல்வார், "முத்தையாவும் நானும் இரண்டு காபிக்கு நடுவில் ஒரு காவி சாப்பிடுவோம்" என்று.
திருமதி சகுந்தலா ஹோவால்தார்,மொரீஷியஸில் பெரும் கல்வி நிறுவனம் ஒன்றில் இணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர்.இப்போது அந்த நிறுவனம் திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகிவிட்டது.அவருக்குப் பூர்வீகம் கேரளா.ஒரு வாசகம் என்னை நோக்கிச் சொல்லப்பட்டால், "அல்லே மோனே" என்றும்,லஷ்மியை நோக்கிச் சொல்லப்பட்டால் "அல்லே மோளே" என்றும்,பொதுவாகச் சொல்லப்பட்டால் "அல்லேம்மா" என்றும் முடிப்பார்.

Roses are Ashes,Ashes are Roses என்ற அவரின் நூலை மொழிபெயர்க்க ஒப்புக் கொண்டேன்.பெரும்பாலும் தன்னுணர்வுக் கவிதைகள்.தன் தந்தையின் ஞாபகங்களையும் தாயின் ஞாபகங்களையும் கவித்துவமாகப் பேசுகிற பதிவுகள்.சின்ன வயதிலேயே கணவனை இழந்த ஓர் இளம்பெண்ணுக்கு எழுதிய கவிதைகள்,யுத்தம் பற்றிய கவிதைகள்.
அடுத்த சந்திப்பிலேயே   சில கவிதைகளை மொழிபெயர்த்து முடித்தோம். முன்னதாக அவருடைய செறிவான முன்னுரையை மொழிபெயர்த்தேன்.

"வார்த்தைகளுக்கும் மௌனத்திற்கும் நடுவே பெரும்பனித்திரளாய் வியாபித்திருக்கும் மௌனத்தை,வாசிக்கும் உங்களுக்கு உணர்த்திட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
எட்ட முடியாததும்,விளக்க முடியாததுமான பேருண்மைகள் பின்புலத்திலிருக்க,எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் இருக்கும் உயரங்களை-ஆழங்களை-உன்னதங்களை-அடர்த்திகளை சுட்டும் கைகாட்டி மரங்களாய் வார்த்தைகள்
எதார்த்தம்,தன் இருப்பினை வார்த்தைகளால் உறுமிக் காட்டுகிறது.சீரற்ற மிருகச் சூழலில்,மனிதராய் இருப்பது கூட முரணானதுதான். என்றாலும்,மனித விழிப்புணர்வின் ஒரு பகுதியாகத் திகழும் அடர்த்தியான மௌனத்தின் தெய்வீகத் தந்திகளை மீட்டிட,வார்த்தைகள் முயலத்தான் செய்கின்றன.
இந்தக் கவிதைகள்,வார்த்தைகளையும் மௌனத்தையும் பற்றியவை."

ஒவ்வொரு முறை சந்திக்கச் செல்லும்போதும் சக நோயாளிகள் யாரேனும் ஒருவரின் அறையிலிருந்து வெளியே வருவார் அம்மையார்.அல்லது அடுத்த அறையிலிருக்கும் ஜெர்மானியருக்கு தேநீர் தயாரித்துக் கொண்டிருப்பார்.மொழிபெயர்ப்பு பணி முடிந்ததும் மொரீஷியஸில் வெளியீட்டு விழா வைத்துக் கொள்ளலாம் என்பது அவருடைய திட்டம்.அடுத்தாற்போல் அவர் சொன்ன வார்த்தைகள்தான் அவர் எவ்வளவு வெள்ளந்தியானவர் என்பதை உணர்த்திற்று.

"மொரீஷியசுக்கு நீங்க டிக்கெட் எடுத்தா மதி. பின்னே என்ட கெஸ்டாயிட்டு ஸ்டே செய்யலாம்.அல்லே மோனே!"!எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. "அம்மணி !  நான் எந்த நாட்டையும் சொந்தச் செலவில் பார்ப்பதில்லைஅம்மணி' என்று மனதுக்குள்ளேயே வில்லத்தனமாய் சொல்லிக் கொண்டேன். முதன்முதலாய் போன குவைத்திலிருந்து ,அபுதாபி,அமெரிக்கா,பாரீஸ்,சுவிட்சர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர்,என்று பல நாடுகளுக்கும்,
விழா அமைப்பாளர்களின் அழைப்பிலும்,அன்பிலும்,செலவிலும்தானே போய்வந்து கொண்டிருக்கிறேன்.

"சகுந்தலா அம்மா கிடக்கிறார்! மொரீஷியசுக்கும் நீ அப்படித்தான் போகப்போகிறாய்"என்று பட்சி சொல்லியது. அவர் ஊருக்குக் கிளம்பும்போது என் நூல்கள் சிலவற்றைப் பரிசளித்தேன்.ஊருக்குப் போய் ஓரிரு முறை பேசினார். பதிப்பு விபரங்கள் முடிவாகட்டும் என்று கொஞ்ச காலம் அவருடைய கவிதைகளை மொழிபெயர்க்கும் பணியை நிறுத்தி வைத்திருந்தேன்.

சில வாரங்கள் சென்றிருக்கும். மொரீஷியஸில் இருந்தோர் அழைப்பு வந்தது."நான் ஜீவன் பேசறேன்.ஒங்க புத்தகங்கள் பார்த்தேன். படிக்கவும் ஆரம்பிச்சுட்டேன்.ஒங்க பயோ டேட்டா அனுப்ப முடியுமா?"என்று கேட்டார். "இவர்தான்!இவர்தான்!" என்று பட்சி சொல்லியது.பட்சி சொல்லும் முன்பே இவரைப்பற்றி சகுந்தலா அம்மையார் சொல்லியிருக்கிறார். "அவிட ஜீவன் உண்டு. தமிழ் அசோசியேஷன்ட சேர்மன். வளர நல்ல பையன்" என்றார். அவருக்கு எழுபது வயதென்பதால் அறுபத்தொன்பதரை வயதுவரை எல்லோருமே பையன்தான்.எனவே அவரை இளைஞர் என்றெல்லாம் நான் கற்பனை செய்யவில்லை. குரலைக் கேட்டபோது என் வயதுக்காரர் என்று யூகிக்க முடிந்தது."அடேடே! இளைஞர்தான் போலிருக்கிறது" என்ற முடிவுக்கு நீங்களும் இப்போது வந்திருப்பீர்கள்.

பயோடேட்டா அனுப்பிவைத்தேன்.அவரிடமிருந்தொரு மின்னஞ்சல் அடுத்த சில நாட்களிலேயே வந்தது.அரசின் அரவணைப்புடன் இயங்கி வரும் மகாத்மா காந்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்க்கல்வித் துறை தலைவராகவும்,இணைப்பேராசிரியராகவும் விளங்குபவர் முனைவர் ஜீவேந்திரன் சீமான்.இவர் மொரீஷியஸ் தமிழ் அமைப்புகளில் முக்கியப் பங்கு வகிப்பதோடு "தமிழ் பேசுவோர் ஒன்றியம்" என்னும் அமைப்பின் தலைவராகவும் விளங்குகிறார்.மிக விரைவிலேயே மகாத்மா காந்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் திருவள்ளுவர் திருநாள் உரை நிகழ்த்த முறையான அழைப்பும் மின்னஞ்சல் வழி வந்தது. கூடவே இன்னும் சில நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தார். 

அவர் பல வகைகளில் என்னைப்போலத்தான் என்பது புரிந்தது. நான் நெருங்கிய நண்பர்களை நிகழ்ச்சிக்கு அழைப்பதென்றால் தேதியை சொல்லிவிட்டு மேலதிக விபரங்களை மெதுவாகச் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டு விடுவேன். குறிப்பாக அதிகம் பாதிக்கப்படுபவர் இசைக்கவி ரமணன்தான்."தேதியை முதல்ல சொல்லீடுவீங்க. என்ன பண்ணனும்னு கேட்டா ,பழைய தமிழ் சினிமா வில்லன் மாதிரி 'பல்லாவரம் பாலத்துக்குக் கிழே வந்து ஃபோன் பண்ணு'ன்னுதானே சொல்வீங்க" என்பார்.
பொங்கலுக்கு மறுநாள் அதிகாலை மும்பையிலிருந்து விமானம். பொங்கலன்று மும்பை சென்று சேர்ந்த பிறகு மொரீஷியசுக்கான பயணச்சீட்டு மின்னஞ்சலில் சுடச்சுட-அல்ல- கொதிக்கக் கொதிக்க வந்து சேர்ந்தது.மாட்டுப் பொங்கலன்று பிரம்ம முகூர்த்தத்தில் மும்பை சர்வதேச விமான முனையத்தில் சென்று இறங்கினேன்.நான்கு நாட்களுக்கு முன்னர்தான் பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தாராம்."இதையாவது திறந்தாரே"என்று உள்ளே நுழைந்தால் அதிகாலை மூன்று மணிக்கே பங்கு வர்த்தக நிறுவனம்போல் பரபரப்பாக இருந்தது.போதிய அளவு விசாலமாக இல்லாததால் பயணப்பதிவுக்கான பயணிகள் வரிசை ஆதியும் அந்தமும் இல்லாமல் நீண்டு கிடந்ததுடன் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தும் கிடந்தன.

உள்ளே நுழைந்ததிலிருந்து ஓர் இளைஞர் எல்லோரையும் பார்த்து வலிய புன்னகைத்துக் கொண்டும் கட்டை விரலை உயர்த்திக் காட்டிக் கொண்டும், தானாகப் போய் போய் பேசிக்கொண்டும் இருந்தார்.இமிக்ரேஷன் படிவத்தை ஓடிப்போய் வாங்கிவந்து என்னிடம் தந்தார்.
அதை நான் வாங்கிக் கொண்டதற்காக அவரே எனக்கு நன்றியும் சொன்னார்."ஃபர்ஸ்ட் டைம் டு மொரீஷியஸ்?வெரிகுட் ப்ளேஸ்"என்று சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்."இது சரியில்லையே"என்று பட்சி சொன்னது.

விஷயம் வேறொன்றுமில்லை.அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக அவரிடம் பயணச்சுமைகள். என்னிடம் இருந்தவை குறைவு. பாதியை என் பெயரில் பதிவு செய்துவிட்டால் அவர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வராது.ஆனால் அயல்நாட்டுப் பயணங்களில் அந்நியர் பயண உடமைகளை நம் பெயரில் பதிவு செய்வது கொஞ்சம் அபாயகரமானது.அவர்கள் போதைப்பொருள் கடத்தும் குருவியாக இருந்தால் நம்மைக் கருவியாகப் பயன்படுத்துவார்கள்.

"வேண்டாம்"என்றது பட்சி.எனக்குப் பின்னால் ஏராளமான சுமைகளுடன் வந்து கொண்டிருந்த தம்பதிகளைக் காட்டி "நாங்கள் ஒரே குடும்பம்" என்று ஒரே போடாகப் போட்டேன்.அவர் கண்களில் மின்னிய அவநம்பிக்கையைத் துடைக்க அந்தத் தம்பதிகளிடம் சகஜமாகப் பேசுவது போல் பாவனை செய்ய,அவர்கள் என்னைப் பார்த்து மிரளத் தொடங்கினார்கள்.
பயணப்பதிவு முடிந்து,குடியேற்றம்(குடியிறக்கம்?) கடந்து பாதுகாப்பு சோதனை பகுதியும் ஒண்டுக் குடித்தனம் போல்தான் இருந்தது.ஆனால் பாதுகாப்பு சோதனையைத் தாண்டியதுமே கண்ணெதிரே பரந்து விரிந்து கிடந்தது பூலோக சொர்க்கம்.விசாலமான வசீகரமான வண்ணமயமான வணிகக்கூடங்களும் நட்சத்திர உணவகக்கூடங்களும் ஜொலித்தன. ஆனால் போதிய கழிப்பறைகள் இல்லை.அல்லது கண்ணில் படவில்லை. காத்திருப்பு இருக்கைகளும் குறைவு.


 பிரம்மாண்டமானதொரு வணிக வளாகத்தில் பெரிய மனது பண்ணி விமானங்களை நிறுத்திக் கொள்ள ஓரமாய் யாரோ இடம் கொடுத்திருக்கும் இலட்சணத்தில்தான் இருக்கிறது மும்பை சர்வதேச முனையம்.சமீபகாலமாக இந்தியாவின் சில முக்கியமான விமான நிலையங்களில்
உள்ளூர் முனையம் பிரமாதமாகவும் வெளிநாட்டு முனையம் பரிதாபமாகவும் இருப்பதன் மர்மம் புரியவில்லை.

மொரீஷியசுக்கும் இந்தியாவுக்கும் ஒன்றரை மணிநேரம் வித்தியாசம்.நமது நேரப்படி காலை ஆறரை மணிக்குக் கிளம்பி,மொரீஷியஸ் நேரப்படி முற்பகல் பதினொன்றரை மணிக்கு சென்று சேரும் என அறிவித்தார்கள்.
வயர்ஃப்ரீ எம்பி த்ரீயில் மஹராஜபுரம் சந்தானம் பாடத்தொடங்க,கேட்டபடியே கண்ணயர்ந்தேன்
(தொடர்வோம்) 

Sunday, January 12, 2014

நாலு பேருக்கு நன்றி!

"எப்போ வருவாரோ"
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பாக கடந்த சில ஆண்டுகளாகவே கோவையில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஆன்மீகத் தொடர் நிகழ்ச்சி .இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 14 வரை ஆன்மீக அருளாளர்கள் குறித்து அறிஞர்கள் பலர் உரை நிகழ்த்தினார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு ஆன்மீக அதிர்வுகளில் லயிப்பார்கள்.


ஒவ்வோர் ஆண்டும்,உரைகளின் ஒலிப்பதிவு வேண்டுவோர்,ஒரு சிறு தொகை செலுத்தினால் குறுந்தகடுகள் அவர்கள் இல்லம் தேடி வரும்.இந்தத் தொகை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.இத்தனை ஆண்டுகளாக எப்போ வருவாரோ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் பங்கேற்று வந்தாலும்,குறுந்தகடுகள் உருவாக்குவதற்கான செலவுகள் போக,மீதத்தொகை தொண்டு நிறுவனங்களுக்குத் தரப்பட்டு வருவதாய் தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் குறுந்தகடு வாங்குபவர்கள் சும்மா வாங்கக்கூடாது என்பதற்காக தொகை பெறப்படுகிறதே தவிர,அந்தத் தொகை அப்படியே தொண்டு நிறுவனத்திற்கு தரப்படுகிறது என்பதை அறிந்து   அதிசயித்தேன்.

இந்த ஆண்டு குறுந்தகடு பதிவுகள் வழி வந்த ஒரு இலட்சத்து இருபதாயிரத்து சொச்சம் ரூபாய்களும்  தோழர் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. பத்தாண்டுகள் முன்னர் தொடங்கப்பட்ட தோழர் அறக்கட்டளை,அரசு மருத்துவமனையில் மரணமடைகிறவர்களின் கேட்பாரற்ற சடலங்கள்,சாலையோரங்களிலும் விபத்துகளிலும் அடிபட்டுச் சாகிற அனாதை பிணங்கள் ஆகியவற்றை உரிய இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்கிற அறப்பணிகளை ஆர்வமுடன் செய்கிறது.
இதுவரை இரண்டாயிரம் பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.இந்த அறக்கட்டளையை நான்கு நண்பர்கள் சேர்ந்து தொடங்கியுள்ளனர். "நாலு பேருக்கு நன்றி-அந்த நாலு பேருக்கு நன்றி" என்ற பாடலின் நாயகர்களே இவர்கள்தானோ என்று எண்ணத் தூண்டும் அந்த நண்பர்கள்,திரு.சாந்தகுமார்,திரு.ஜீவானந்தம்,திரு.அண்ணாத்துரை,திரு. சம்பத்குமார் ஆகியோர்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு.கிருஷ்ணன் அவர்களிடமிருந்து தோழர் அறக்கட்டளை சார்பில் திரு.சாந்தகுமார் மேடைக்கு வந்து அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டார்.


இந்த நண்பர்கள் பகுத்தறிவு இயக்கத்தை பின்புலமாகக் கொண்டவர்கள்."எப்போ வருவாரோ" நிகழ்ச்சியோ,பக்தர்களின் சங்கமம். ஆனாலும் தொண்டின் தகுதியறிந்து திரு.கிருஷ்ணன் செய்த இந்த உதவி எல்லோரையும் நெகிழச் செய்தது.

விழாவின் நிறைவில் திரு.சாந்தகுமாரை சந்தித்த சிலர்"உங்கள் தொண்டு சிறக்கட்டும்" என்று வாழ்த்தினர்.பதறிப்போன திரு.சாந்தகுமார்,"இந்தத் தொண்டு சிறக்கக் கூடாது. அனாதையாக யாரும் சாகக் கூடாது" என்றார்.சிகிச்சை பலனளிக்காமல் கைவிடப்பட்டவர்கள் எவ்வளவு பேர் என்றாலும் அவர்கள் அனாதைகள் என்றால் நாட்கணக்கிலோ,வாரக்கணக்கிலோ மாதக்கணக்கிலோ இறுதிவரை பராமரித்து அடக்கம் செய்ய ஓர் இல்லத்தைத் தொடங்குவது தன்  நோக்கம் என்கிறார் சாந்தகுமார். அதற்கும் திரு.கிருஷ்ணன் உதவுவதாக வாக்களித்திருக்கிறார்.
திரு.கிருஷ்ணன் அவர்களுக்கு அவையினரின் நன்றிமடல்

காரேறச் சென்ற திரு.கிருஷ்ணனுக்கும் திரு.சாந்தகுமாருக்கும் ஏதோ உரையாடல் நிகழ்வதை அறிந்து,அருகில் சென்று கவனித்தேன்."எங்கள் அறக்கட்டளைக்கு 80 ஜி வரிவிலக்கு உண்டு. நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே" என்றார் திரு.சாந்தகுமார். "ஏங்க! பொதுமக்கள் பணத்தை அவங்க கிட்டே வாங்கி உங்ககிட்டே கொடுத்திருக்கேன்.அதுக்கு நான் எப்படி 80 ஜி வாங்க முடியும்"என்றார் திரு.கிருஷ்ணன்."என்ன மாதிரியான மனிதர்கள்" என்று நெகிழ்ந்து, "முன்மாதிரியான மனிதர்கள்"என்று மகிழ்ந்து அங்கிருந்து மெல்லக் கிளம்பினேன்

Saturday, January 11, 2014

நூதனமாய் ஒரு நூற்றாண்டு விழா

பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்த அந்த விழாப் பந்தலின் முன்வரிசையில், புன்னகை மாறாத முகத்துடன்,வருபவர்களை வணங்கிக் கொண்டும்,வணங்குபவர்களை வாழ்த்திக் கொண்டும் இருந்தார் அந்தப் பெரியவர்.அவருடைய பிறந்தநாளை அர்த்தமுடன் கொண்டாடும் விதமாக,அவர்தம் குடுபத்தினர் ராயவரம் சு.கதி.காந்தி மேனிலைப்பள்ளிக்குஒன்றரை கோடிரூபாய்கள் மதிப்பில் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்திருந்தார்கள்அந்தக் கட்டிடங்களின் திறப்புவிழா நிகழ்ச்சி அது..அந்தப் பெரியவரின் பெயர் திரு. எம்ஏஎம்.சுப.பழனியப்பச் செட்டியார்.அவர் வயது 100  !



யாருடைய உதவியுமின்றி நிற்பதும் நடப்பதும் கூட ஆச்சரியமில்லை.மிகுந்த தெளிவும் நுணுக்கமும் தேவைப்படும் பங்கு வர்த்தகத்தில் இன்றளவும் அவர் உற்சாகத்துடன் ஈடுபடுகிறார்.

புதிய கட்டிடங்களின் திறப்புவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம்,தியாகராசர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கருமுத்து.திரு.தி.கண்ணன்,
கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்,ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.

முக்கிய விருந்தினர்கள் ஒவ்வொருவராய் பந்தலுக்குள் நுழைய,குறித்த நேரத்தில் மத்திய அமைச்சர் வந்து விடுவார் என்ற தகவல் பரவியது.அமைச்சர் வருவதற்குள் அந்தப் பள்ளியின் சுவாரசியமான வரலாற்றைப் பார்த்துவிடுவோம். சு.கதி.காந்தி மேனிலைப்பள்ளி வைரவிழா கண்டது.இந்தியா சுதந்திரம் பெறும் முன்னர் ராயவரம் திரு.சு.கதிரேசன் செட்டியார் என்பவர் காந்தி பெயரில் ஒரு பள்ளி தொடங்க விரும்பினார். அப்போதிருந்த ஆங்கிலேய அரசு,காந்தி பெயரில் பள்ளி தொடங்கத் தடை விதித்தது.உடனே தன் பெயரின் முதல்பகுதியையும் முதலெழுத்தையும் இணைத்து, தன் பேரனின் பெயர் காந்தி என்று வாதாடி சுகதி.காந்தி மேல்நிலைப்பள்ளி தொடங்கினாராம் அந்தப் பெரியவர்.

மூத்த புதல்வர் திரு.பி.எல்.சுப்பிரமணியம்
பள்ளித் தலைமையாசிரியரின் வரவேற்புரையோடு விழா தொடங்கியது. பழனியப்பச் செட்டியார் அவர்களின் புதல்வரும் கோவையின் பிரபல தொழிலதிபருமான திரு.பி.எல்.சுப்பிரமணியன் நூற்றாண்டு விழா தொடர்பான அறக்கட்டளை குறித்தும் அறப்பணிகள் குறித்தும் அறிமுகவுரை நிகழ்த்தினார்.தன் தந்தையாரின் எளிமை,குணநலன்கள்,விருந்தோம்பல் பண்பு, வயதுக்கும் அப்பாற்பட்ட சுறுசுறுப்பு ஆகிய பண்புகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், கோவையில் தான் வசிக்கும் வீட்டினை தன் காலத்திற்குப் பிறகு விற்று அந்தத் தொகையை அறக்கட்டளையில் சேர்க்கும் விதமாய் ஏற்பாடுகள் செய்திருப்பதாக அறிவித்தார்.அந்த வீட்டின் மதிப்பு பலகோடி ரூபாய்கள்!!
விழாவில் உரையாற்றிய மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ப.சிதம்பரம், "இதுவரை பல நிறுவனங்கள்,அமைப்புகள்,இயக்கங்கள் ஆகியவற்றின் பங்கேற்றிருக்கிறேன்.ஆனால் ஒரு மனிதர் வாழ்வாங்கு வாழும்போதே அவருடைய நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது இதுவே முதல்முறை.இங்கிருக்கும் பலருக்கும் இதுவே முதல்முறையாக இருக்கும்.குறிப்பாக இங்கிருக்கும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள்.
விழா நாயக்ர் திரு.பழனியப்பச் செட்டியார் அவர்களிடம், அவருடைய வாழ்க்கை முறை குறித்துக் கேட்டேன்.அவர் எவ்வித மருந்துகளையும் உட்கொள்வதில்லையாம்.தினமும் காலையில் ஒருமணிநேரம்,மாலையில் ஒருமணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதுதான் தன் ஆரோக்கியத்தின் அடிப்படை என்கிறார்.யாரையும் மனம்நோகவோ மரியாதைக்குறைவாகவோ பேச மாட்டேன்,எனக்கு உடன்பாடில்லாத கருத்தினை யாராவது சொன்னால் அங்கிருந்து நகர்ந்து விடுவேன் என்கிறார்.இவையெல்லாம்தான் இவருடைய ஆரோக்கியத்தின் அடித்தளங்களாக இருக்க வேண்டும்.செல்வத்துப் பயனே ஈதல் என்பதற்கேற்ப அவரும் அவர்தம் வழித்தோன்றல்களும் பல அறக்கொடைகளை வழங்கி வருகிறார்கள்"என்று தன் பாராட்டு மொழிகளைப் பாங்குடன் பதிவு செய்தார்.

அடுத்துப் பேசிய தியாகராஜர் கல்வி நிறுவனங்களின் தலைவரும் மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலய அறங்காவலருமான கருமுத்து.திரு.தி.கண்ணன்,"ஆரோக்கியம் குறித்து அதீத அக்கறை கொண்டிருக்கும் எத்தனையோ மருத்துவர்கள் கூட நூறாண்டுகள் வாழ்ந்ததில்லை.வாழ்க்கை முறையாலும் விரிந்த மனப்பாங்கினாலும் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்"என்ற குறளுக்கு பெரியவர் தன் வாழ்க்கை முறையால் உரையெழுதிக் கொண்டிருக்கிறார். ஈகைப்பண்பை உயிருக்கான ஊதியம்  என்கிறார் திருவள்ளுவர்.ஒரு மனிதன் தன் உயிருக்குக் குறைந்தபட்ச ஊதியமாவது வழங்க வேண்டுமென்று சொன்ன ஒரே சிந்தனையாளர் திருவள்ளுவர்தான்.அந்தப் பெரும்பணியை திரு.பழனியப்பச் செட்டியார் குடும்பத்தினர் மிகச் செம்மையாக செய்து வருகிறார்கள்" என்றார்.



கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்,"பெரியவர் பழனியப்பச் செட்டியார் அடிமை இந்தியாவில் 34 ஆண்டுகள் வாழ்ந்தவர். மிகப்பெரிய கால மாற்றங்களைக் கண்கொண்டு காணும் அனுபவக் களஞ்சியமாகத் திகழ்கிறார்.அவரை வாழ்த்துகிற வயது இங்கிருக்கும் யாருக்கும் இல்லை.எனவே நாம் பேசுவதற்கு பதிலாக அவரைப் பேசவிட்டு நாம் அனைவரும் கேட்க வேண்டும். கல்விமுறை மாறினால் பல நல்ல மாற்றங்கள் வரும்.இவருடைய வாழ்க்கை அனுபவங்கள் புத்தகமாக வெளிவந்து பாடமாக வேண்டும்.தன் வாழ்க்கைமுறையை சீராக அமைத்துக் கொண்டால் ஒரு மனிதர் நூறாண்டு கடந்தும் வாழ முடியும் என்பதற்கு பெரியவர் கண்கண்ட உதாரணமாகத் திகழ்கிறார்" என்றார்.

இப்போது என் முறை., "நம்நாட்டில் கலைமகளுக்கு மட்டும் கோயில்கள் மிக அரிதாகவே உள்ளன.ஏனெனில் கோயில் என்பது ஓர் எல்லைக்குள் கடவுளை நிலைநிறுத்தும் ஏற்பாடு. கல்விக்கு எல்லையே இல்லை என்பதால் கலைமகளுக்குக் கோயிலே இல்லை. இதுபோன்ற கல்வி நிறுவனங்கள்தான் கலைமகளுக்கான கோயில்கள்.விழாமேடையில் பெரியவர் பழனியப்பச் செட்டியார் அவர்களின் தம்பி அமரர் காசி அவர்களின் புதல்வர் திரு.இலட்சுமணன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.அப்போது அவர் சுவாரசியமான தகவல் ஒன்றைச் சொன்னார்.
திருச்சியில் வசித்து வந்த திரு.காசி அவர்கள் தன் சகோதரர் பழனியப்பச் செட்டியாருக்கு மாம்பழம் ஒன்றை அனுப்பினாராம்.இவர் தம்பிக்கு ஃபோன் செய்து,"என்ன தம்பி! ஒரு பழம் அனுப்பியிருக்கிறாய்"என்று கேட்க,"அண்ணா! இங்கே நம் வீட்டுத் தோட்டத்திலுள்ள மாமரம் ஒன்றில் இரண்டு கனிகள் பழுத்தன.ஒன்று உங்களுக்கு இன்னொன்று எனக்கு" என்றாராம்.சகோதர பாசத்திற்கும் சரியான இலக்கணமாய் இந்த சம்பவம் திகழ்கிறது.
நூறாண்டுகள் வாழும் ஒருவரைக் காணச் செல்கையில் என்ன சொல்வது என்பதற்கு வைணவ மரபில் ஒரு வார்த்தை உண்டு.வடகலை மரபில் வேதாந்த தேசிகரும் தென்கலை மரபில் மணவாள மாமுனியும் நூறாண்டுகள் வாழ்ந்தனர். அவர்களைக் காணச் சென்றவர்கள் "இன்னுமொரு நூற்றாண்டு இரும்" என்று வணங்கிக் கூறினர்.

"நானிலமுந் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ
மாநகரின் மாறன் மறைவாழ-ஞானியர்கள்
சென்னியணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே!
இன்னுமொரு நூற்றாண் டிரும்"
என்ற பாடலும்,

"அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ-கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னமொரு நூற்றாண் டிரும்"
என்ற பாடலும் இதையே உணர்த்துகின்றன. அதேபோல நூற்றாண்டு காணும் பெரியவர் திரு.பழனியப்பச் செட்டியார் அவர்களை "இன்னுமொரு நூற்றாண்டு இரும்" என்று வணங்கி அவர்தம் ஆசிகளைப் பெறுவோம்" என்றேன்.


விழாநாயகரின் இளைய புதல்வர் திரு.பி.எல்.நாகப்பன்   நன்றி நவின்றார். விழ நிகழ்ச்சிகளை குழந்தைக் கவிஞர் திரு.அழ.வள்ளியப்பா அவர்களின் புதல்வி திருமதி தேவி நாச்சியப்பன் தொகுத்து வழங்கினார்.
வந்திருந்த அனைவருக்கும் அளிக்கப்பட்ட அறுசுவை விருந்தில் பல்லாயிரக்க்ணக்கானவர்கள் சாப்பிடும் பந்தி முழுவதும் பேரனின் தோளில் கைபோட்டு நடந்து பந்தி விசாரணை செய்த பெரியவர் திரு.பழனியப்பச் செட்டியார்,
திரு.பழனியப்பச் செட்டியார் குடும்பத்தினர்
சில நாட்களுக்குப்பின் நடைபெற்ற கனகாபிஷேக வைபவத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ஏழாயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கும் சளைக்காமல் சலிக்காமல் திருநீறு பூசி ஆசீர்வதித்திருக்கிறார்.
இந்தப் பரபரப்பான யுகத்திலும் நெறியான வாழ்வாலும் சரியான மனப்பான்மையினாலும்   வாழ்வாங்கு வாழ முடியும் என்ப்தை உணர்த்தும் பெரியவர் திரு.பழனியப்பச் செட்டியார் அவர்கள் போற்றத்தக்கவர் மட்டுமல்ல...பின்பற்றத்தக்கவரும் கூட.

Friday, January 10, 2014

சென்னை புத்தகக் கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சியில் நமது நம்பிக்கை மாத இதழ், முந்தைய இதழ்களின் தொகுப்புகள்,சந்தா செலுத்தும் வசதியுடன் ஸ்டால் எண் 24 & 25ல்
உள்ளன. என் புத்தகங்களும் கிடைக்கும்.விஜயா பதிப்பகம் மற்றும் ஈஷா ஸ்டால்களில் என் புத்தகங்கள் கிடைக்கும்

Saturday, January 4, 2014

அழுதால்...?

தகுதிகளைச் சொல்லித்தான் பதவிகளையோ சலுகைகளையோ பெறமுடியும்.மணமகள் தேவை விளம்பரங்களில் கூட மாப்பிள்ளையின் மெய்கீர்த்திகளைப் பட்டியலிட்டால்தான் கல்யாண யோகம் கைகூடுகிறது.

ஆனால் தன் தகுதியின்மைகளைப் பட்டியலிடுகிறார் மாணிக்கவாசகர். அவருக்கு சிவபெருமான் வேண்டுமாம்.

"யானே பொய், என் நெஞ்சும் பொய்,என் அன்பும் பொய்"
(இத்தனை தகுதியின்மைகளை வைத்துக் கொண்டு எந்த நம்பிக்கையில் சிவனைப் பெற சிந்திக்கிறேன் தெரியுமா)

"ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே" என்கிறார் மாணிக்கவாசகர்.


திருமுறைச் செல்வர். மு.கணபதி அவர்கள் அருகில் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தேன்.அவர் திருமுறைகளில் தோய்ந்த அறிஞர்.மேடையில் திருவாசகம் பேசிக் கொண்டிருந்த அறிஞரும் சைவத்தில் மிகத் தேர்ந்தவர். கூட்டம் முடிந்ததும் மு.கணபதி  அவர்களிடம் பேசிய அந்த அறிஞரைப் பற்றி பாராட்டிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு,கணபதி அய்யா என்னிடம் சொன்னார், "சார்! நான் சொல்றேன்னு வருத்தப்படாதீங்க. ரொம்ப நல்லாத்தான் பேசினார்.ஆனா, திருவாசகம் பேசறபோது ஒருத்தனுக்கு கண்ணீர் வரலைன்னா அவன் அயோக்கியன் னு அர்த்தம்"

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆண்டு தோறும் ஜனவரி 1 முதல் நிகழும் "எப்போ வருவாரோ" தொடர் உரைகள் வரிசையில் இன்று மாலை 6 மணிக்கு "மாணிக்கவாசகர்" குறித்து உரை நிகழ்த்துகிறேன்.
கோவை ராம்நகரில் உள்ள கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு தங்களை அன்புடன் அழைக்கிறேன்.


நான் அயோக்கியனா இல்லையா என்று அறிந்து கொள்ள உங்களைப்போலவே நானும் ஆவலாய் இருக்கிறேன்.....அவசியம் வாருங்கள் நண்பர்களே!!