Friday, January 31, 2014

பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-3(மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)


பட்சி சொன்னதில் ஒன்று மட்டும் தவறிப்போய் விட்டது.மகாத்மா காந்தி நிறுவனத்தின் புல்வெளி அழகைப் பார்த்து,பசுமை பார்த்து,குளிர்சாதன வசதி இல்லாமலே சமாளித்துக் கொள்ளலாம் என்னுமெண்ணம் பொய்த்து விட்டது. அதிகாலை ஏழு மணியளவில் தொடங்கும் கடும் வெய்யில் மாலை வரை பின்னியெடுக்கிறது.எனவே ஓய்வு நேரங்களை புல்வெளி மரத்தடிகளில் போடப்பட்டிருக்கும் மர பெஞ்சுகளில் செலவிடத் தொடங்கினேன்.

ஆனாலும் பரந்து விரிந்த அந்தப் புல்வெளிகளில் காலை நடை மற்றும் மாலைநடை மேற்கொள்வதொரு சுகமான அனுபவம்.துளி கூட மாசில்லாத காற்று. அப்பழுக்கில்லாத அழகான தார்ச்சாலைகள்.
அங்கே சுத்திகரிப்புப் பணியிலும் தோட்டப் பராமரிப்பிலும் இருக்கும் ஒவ்வொருவரிடமும் எல்லையில்லாத அர்ப்பணிப்புணர்வைப் பார்க்க முடிந்தது. தொடர்ந்து தூய்மை செய்து கொண்டே இருக்கிறார்கள். தார்ச்சாலைகள் பளபளப்பதன் ரகசியத்தை அறியவே முடியவில்லை.


இரண்டாம் நாள் மகாத்மா காந்தி நிறுவனத்தின் தலைமை இயக்குநர், இயக்குநர் ஆகியோருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு நிகழ்ந்தது.
இந்தியவியல் கல்விப்புலத்தின் தலைவராக விளங்கும் முனைவர் சொர்ணம் அவர்களையும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

அதிதியன் விடுதியில் இருக்கும் இன்னொரு சின்னக்குறை,அங்கே உணவகமில்லை. காலை ஏழரை மணிக்கு பேராசிரியர் ஜீவன் தானே காபி கலந்து வீட்டிலிருந்து கொண்டுவருவார்.ஒன்பது மணியளவில் அவரே காலை சிற்றுண்டியும் கொண்டு வந்துவிடுவார்.அதனால் சிரமமில்லாது போயிற்று.

அங்கிருக்கும் ஆண்கள் அனைவருக்குமே பெரும்பாலும் சமையல் தெரிந்திருக்கிறது. அங்கிருந்த பேராசிரியை ஒருவர் இதனை உறுதிப்படுத்தினார். " வேலை முடிந்து வீட்டுக்குப் போகத் தாமதமானால் எங்கள் கணவர் சமையல் செய்து வைத்திருப்பார். உங்கள் ஊரில் எப்படி?"

நான் விளையாட்டாகச் சொன்னேன்,"எங்கள் ஊரில் மனைவி சமையல் செய்து தராமல் வேலையிலிருந்து தாமதமாக வந்தால் கணவர் வேறொரு திருமணம் செய்து கொள்வார்".அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்மணி  அதன்பிறகு என்னை ஆணாதிக்கத்தின் மொத்த வடிவமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.

மகாத்மா காந்தி நிறுவனத்தின் பேராசிரியைகளையும் சந்தித்தேன்.அவர்களுடனான ஓர் உரையாடலை பேராசிரியர் ஜீவன் ஏற்பாடு செய்திருந்தார். அவர்களுக்கு பேச்சுத்தமிழ் என்ற ஒன்றில்லை. செந்தமிழிலேயே உரையாடுகிறார்கள். தமிழ் பயிலும் மாணவர்களும் அவ்வாறுதான் பேசுவார்களாம். எழுத்துத் தமிழ் பேச்சுத் தமிழ் என்கிற வேறுபாட்டைக் காண்பித்தால் அவர்கள் குழம்பிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் இந்த ஏற்பாடாம்..

திருமதி மகேஸ்வரி தன் பெயரனைப் பற்றி பேராசிரியரிடம் செந்தமிழில் சொன்னது கேட்க சுவையாக இருந்தது."அய்யா !எனக்குப் பல்வலி என்று என் பெயரனிடம் சொன்னேன்.அதற்கு அவன் சிரிக்கிறான்.எனக்குப் பல் வலிக்கிறது என்கிறேன்,நீ சிரிக்கிறாயே என்றேன்!அதற்கும் சிரிக்கிறான்"
என்றார். பாட்டியின் பல்வலிக்காக வருந்தாமல் சிரிக்கிற அந்தப் பெயரனுக்கு என்ன வயதென்று நினைக்கிறீர்கள்? ஐந்து மாதங்களாம்!!

அடுத்தநாள் தைப்பூசம்.அத்தனை தமிழர்களும் அதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.பெரும்பாலும் எல்லோருமே விரதமிருக்கிறார்கள். பலரும் காவடியோ  பால்குடமோ எடுக்கிறார்கள்.  Wish you a happy and pious Kavadi என்று குறுஞ்செய்திகள் பறக்கின்றன. மாலையில் எங்கேனும் வெளியே போய்வரலாம் என்றார் பேராசிரியர் ஜீவன். அதற்குள் நல்ல நண்பர்களாகியிருந்தோம். ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் சென்றார். அவர் அங்கே அழைத்து வரக் காரணம்,அங்கிருந்த பிரம்மாண்டமான புத்தகக் கடை மட்டுமே!அங்கிருக்கும் ஆங்கிலப் புத்தகங்கள் எல்லாமே இங்கும் கிடைப்பவைதான். இந்தியாவில் கிடைக்கும் புத்தகங்களை மொரீஷியஸ் விலைகளில் வாங்க வேண்டாமென்று வந்து விட்டேன்.

ஜீவன் சமீபமாகத்தான் பால் கோஹியோவின் அனைத்து நூல்களையும் வாசித்து முடித்திருந்தார். Eleven minutes  பற்றியும்The Alchemist பற்றியும் விவாதித்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு அறைக்குத் திரும்பினோம்.
காலையில் அவர் வீட்டிலேயே சிற்றுண்டி.அதன்பிறகு தைப்பூசம் நிகழ்ச்சிக்காக கைலாசம் என்கிற கோவிலுக்கு செல்லலாம் என்றார் பேராசிரியர்.

மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் மிக அழகாக அமைந்திருக்கிறது.
சுகமான தரிசனம். காவடி ஊர்வலத்தைப் பார்க்க வசதியாக இருபது முப்பது பேர் அமரக் கூடிய சிறு மேடையும் பிரகாரத்தைச் சுற்றியிருக்கும் மண்டபங்களில் இருக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கிருந்த சிறுமேடையில் சென்றமர்ந்தோம்.அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில்அமர்ந்து ஊர்வலத்தைக் காணத் தயாரானோம்.

கோவையின் தொழிலதிபர்களை நினைவுபடுத்தும் முகஜாடையில் நீலக்கலர் சட்டையை கறுப்பு நிறக் கால்சட்டையில் டக் இன் செய்து ஒருவர் வந்தார். இரண்டொருவர் அவரை வரவேற்று முன்வரிசையில் அமரச் செய்தனர்.
சற்று நேரத்தில் ஆரஞ்சு குர்தா அணிந்து சற்றே மூத்த ஒருவர் தன் மனைவியுடன் வந்தார்.அவரையும் ஒருசிலர் வரவேற்று முன்வரிசையில் அமரச் செய்தனர். அங்கு தர்மகர்த்தாக்களை கோவில் தலைவர் என்கிறார்கள். அப்படி யாரேனும் கோவில் தலைவர் போலும் என்று நினைத்தேன். அதற்குள் பேராசிரியர் என் காதில் கிசுகிசுத்தார். "நீலச்சட்டை போட்டிருக்கிறாரே, அவர்தான் எங்கள் பிரதமர். குர்தா அணிந்திருப்பவர் எங்கள் ஜனாதிபதி".எனக்கு தூக்கி வாரிப்போட்டது.நம்மூரில் ஒரு வார்டு கவுன்சிலர் கூட இப்படி பிளாஸ்டிக் நாற்காலியில் அமரச் சம்மதிப்பார்களா என்று தோன்றியது.
பிளாஸ்டிக் நாற்காலிகளில் ஜனாதிபதியும் பிரதமரும்


அதற்குள் திரும்பிப் பார்த்த பிரதமரின் முகம் பேராசிரியர் ஜீவனைக் கண்டதும் மலர்ந்தது.ஜனாதிபதியும் பிரதமரும் அவரை அருகே அழைத்துப் பேசினர்.பின்னர் ஜீவன் என்னை அறிமுகம் செய்ய,இருவரும் அன்புடன் நலன் விசாரித்தனர்.பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம்,மொரீஷியஸின் இரண்டாவது பிரதமர். இதற்கு முன் பிரதமராக இருந்தவர் இவருடைய தந்தை. மொரீஷியஸின் ஜனாதிபதி,ராஜ்கேஸ்வர் புர்யாக்.இருவருக்கும் இந்திதான் தாய்மொழி.ஜனாதிபதி என்னிடம்"உங்கள் உரை மகாத்மா காந்தி நிறுவனத்தில் இருப்பதாக சொன்னார்கள்.ஆங்கிலத்தில் பேசுவீர்களா?தமிழிலா?"என்றார்.

"ஆங்கிலத்தில்தான் பேச இருக்கிறேன்"என்றதும் "அடடா! நான் வர வேண்டுமே!எப்போது தொடங்கி எப்போது முடிப்பீர்கள்"என்று ஆர்வமானார்.பேராசிரியர் ஜீவன் நெளியத் தொடங்கினார். ஏனெனில் ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கென்று சில ஏற்பாட்டு மரபுகள் உண்டு.
சில நிமிடங்களிலேயே தன் உதவியாளரிடம் மறுநாள் நிகழ்ச்சி நிரலைக்கேட்டவர் வர இயலாதென்று தன் வருத்தத்தைத் தெரிவித்ததுடன் நிகழ்ச்சி ஒலிப்பதிவை உடனே அனுப்புமாறு பேராசிரியரைக் கேட்டுக் கொண்டார்.


தைப்பூசம் காண வந்த குழந்தைகள்,பிரதமரை தங்கள் அப்பாவின் செல்ஃபோன்களில் படம் பிடிக்க போஸ் கொடுத்த பிரதமர் அந்தப் பிள்ளைகளை அழைத்து மடியில் அமர்த்திக் கொண்டு    அரசு புகைப்படக் கலைஞரை படமெடுக்கச் சொன்னார். அந்த மேடைக்கருகே இரண்டு பாதுகாவலர்கள். இரண்டாவது வரிசையில் ஒரு பாதுகாவலர்.அவ்வளவுதான்.இதில் சிலரை பிரதமர் அருகே அழைத்துப் பேசினார். முதிய பெண்மணி ஒருவர் பேசிக்கொண்டே பிரதம்ர் தோள்களில் கைபோட, பின்னால் அமர்ந்திருந்த பாதுகாவலர் அந்தக் கையை மெல்ல விலக்கிவிட்டார்.

அப்போதுதான் அந்த சுவாரசியமான சம்பவம் நடந்தது.சற்றே மனநிலை குன்றியவராய், சிகப்பு டீ ஷர்ட்டும்,அரைக்கால் சட்டையும் கையில் ஒரு பையுமாய் திரிந்து கொண்டிருந்த ஒருவர்,பிரதமருடன் புகைப்படம் எடுக்க
வேண்டுமென அடம் பிடித்தார்.அதை கவனித்த பிரதமர் அவரை உள்ளே அனுமதிக்கும்படி ஜாடை காட்டினார்.

பந்தாவாய் உள்ளே வந்த அந்த மனிதர், பிரதமரின் இடது தொடையிலும் ஜனாதிபதியின் வலது தொடையிலுமாக உட்கார்ந்து இருவர் தோள்களிலும் ஒய்யாரமாகக் கைபோட்டு உட்கார்ந்தாரே பார்க்கலாம்!கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் ஜனாதிபதியும் பிரதம்ரும் போஸ் கொடுத்தார்கள்

(தொடர்வோம்)