Monday, January 23, 2012

உயிரினில் நிறைபவன்


 எத்தனை சாலைகள் இருந்தாலென்ன
எல்லாம் ஒருவழிப் பாதை
பித்தனும் சித்தனும் முக்தனும் சொல்லும்
வார்த்தைகள் எல்லாம் கீதை
கணபதி அவனே கர்த்தனும் அவனே
ககனத்தின் மூலம் அவனே
உருவம் இல்லாத் திருவும் அவனே
உயிரினில் நிறைபவன் சிவனே

ஏற்றிய சுமைகள் எத்தனை வினைகள்
எல்லாம் சுமந்திட வேண்டும்
மாற்றிட நினைத்து மண்ணுக்கு வந்தால்
வழியினில் சுமைபெறத் தூண்டும்
காற்றினை இழுத்து கடுஞ்சுமை குறைத்து
கனம்விழ குருவருள் வேண்டும்
தேற்றவும் ஆற்றவும் தெளிவுள்ள குருவின்
துணைபெறத் திருவருள் வேண்டும்



இதுவுந்தன் பாதை இதுவுந்தன் பயணம்
என்பதை வகுப்பவன் இறைவன்
எதிர்வரும் பகைமை எல்லாம் விலக்கி
இதுவழி என்கிற தலைவன்
புதியதோர் ஒளியில் புரிதலின் தெளிவில்
பொலிந்திட அவனே வருவான்
விதியினை வகுத்து விலக்குகள் கொடுத்து
விந்தைகள் பலவும் புரிவான்

திரைகடல் அலைகள் தினம் இடித்தாலும்
துறைமுகம் திடமாய் இருக்கும்
வரையறை கடந்து கடலெழும்போது
கரையையும் அள்ளிக் குடிக்கும்
வரைகளின் மேலே உறங்கிடும் முகில்கள்
வாரிதி வாரிக் குடிக்கும்
ஒருநொடி அவனின் திருவிழி பதிந்தால்
ஒளிச்சுடர் வினைகளை எரிக்கும்

Sunday, January 22, 2012

சூட்சுமமாய் அவள்சொல்லும் சேதி

Saturday, January 21, 2012

சிவாஜி கணேசனின் முத்தங்கள் - இசையின் இன்னொரு தொகுப்பு


அதிகபட்ச அவமானத்தில்,. நிராசையின் நிமிஷங்களில், ஒரு மனம் தேடக்கூடியதெல்லாம் குறைந்தபட்ச ஆறுதலைத்தான். ஆனால் ஆறுதல் சொல்லும் அக்கறையினூடாக உண்மை நிலையை உணர்த்தும் நேர்மையும் இருந்துவிட்டால் அதைவிடவும் ஆதரவான நம்பகமான தோழமை வேறேது?

"ராஜகிரீடம்
உன் சிரசில் பொருந்தாததற்கு
யார் என்ன செய்ய முடியும் நண்பா?
இந்த வாயிற்காப்போன் உடையில்
நீ எவ்வளவு மிடுக்கு தெரியுமா?"

என்றெழுதும் இசையின் கவிதைகளில் ஒலிக்கிறது நேர்மையான, நம்பகமான குரல்.

இசையின் மூன்றாவது கவிதைத் தொகுப்பின் தலைப்பு "சிவாஜி கணேசனின் முத்தங்கள்". முத்தக்காட்சிகளிலும் சிவாஜியாகவே இருக்கும் சிவாஜி, முத்தத்துக்கான மறைப்புக் காட்சிக்குப் பின்னர் உதடு துடைக்கும் போதுகூட சிவாஜியாகத்தான் இருக்கிறார்.



ஆனால் மூன்று தொகுதிகளிலும் இசை இசையாகவே இருப்பதில் நாம் மகிழ்ச்சியும் ஆறுதலும் கொள்ள முடிகிறது.

விட்டுவிட முடியாதவற்றை விட முயல்வதும் விட்டு விட்டவற்றை திரும்பத் தருவிக்க முயல்வதும் ஒன்றுக்கொன்று சளைக்காத அபத்தங்கள். அத்தகைய அபத்தங்களின் ஆக்கிரமிப்பல்லவா வாழ்க்கை!!

"ஒரு பறவையை வழியனுப்புதல்"என்ற கவிதையில் இதைக்குறித்து நுட்பமாகப் பேசுகிறார் இசை.

"ஒருபறவை கூட்டை விட்டு
வெளியேறும் விருப்பத்தைத் தெரிவிக்கையில்
நீங்கள் அதற்குத் தகுந்த காலநிலையைத்
தெரிவு செய்து கொடுக்க வேண்டும்.

அதன் சிறகுகளை ஒருமுறை
சோதித்துக் கொள்வது நல்லது.
தேவையெனில் அதன்
வலிமையைக் கூட்டும் வழிகளையும் கற்பிக்கலாம்"

என்று சொல்லிக் கொண்டு வருகிற கவிதை இப்போது வேறு திசையில் வாளை  சுழற்றத் தொடங்குகிறது.

"அடிக்கடி அதைத் தடவிக் கொடுப்பதை
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் கண்களைத் தவிர்த்துவிட வேண்டும்"

என்றெல்லாம் ஆங்காங்கே செருகுகிற வாள் ஒரு கட்டத்தில் முகமாகவே மாறிவிட்ட முகமூடியின் தோலைக் கிழிக்கிறது..  

"பிறகு,
வானத்தைப் பார்க்கும் சாக்கில்
அண்ணாந்து பார்க்காதிருக்க வேண்டும்".

"தம்பி அந்தக் கல்லை எடு" என்கிற கவிதை தொந்தியைப் பற்றிப் பேசுகிறது.

"ஆடைக்குள் மறைத்து எடுத்துச் செல்லப்படும்
திருட்டுப் பொருள்போல்
அது என்னை உறுத்தும்போதெல்லாம்
நான் அனாதை இல்லங்களுக்கு
மதிய உணவு வழங்கினேன்"

என்கிறார் இசை.

ஒரு மனிதன் தன்னைத்தானே அசௌகரியமாய் உணரும் தருணம் ஒரு தவறை முதன்முதலாகச் செய்யும் தருணம்தான். மற்றவர்களுக்கு ஒன்றை நிரூபிப்பதும் தனக்குத் தானே ஒன்றை நிரூபித்துக் கொள்வதும் அடிப்படையில் வெவ்வேறு. தன்னைத் தனக்கே நிரூபிக்கும் கணம் எவ்வளவு அற்புதமானதோ அவ்வளவு அசௌகரியமானது, தன்னிடம் தானே பிடிபடும் தருணம்.

இந்த உணர்வை மீட்டும் இசையின் கவிதை ஒன்று. அந்தக் கவிதையின் ஒரே துரதிருஷ்டம் அதன் தலைப்பு. ஆகவே அந்தத் தலைப்பைத் தவிர்த்துவிட்டு அந்தக கவிதையைப் பார்க்கலாம்.

"அறவுணர்ச்சி
என் கசாப்புக்கடையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்
ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆடு.
அதை நிலத்தில் கிடத்தி அமுக்குகையில்
அது தெரிந்து கொண்டு
ஓலமாய் ஓலமிடும்....."

என்று நீள்கிற கவிதையில்,குற்றவுணர்ச்சி ஓர் அமெச்சூர் அறங்கொல்லியை எப்படி வதைக்கிறது என்று அழகாகச் சொல்கிறார்.

"நான் முதன்முதலாக ஒரு ஆட்டை வெட்டியபோது
அது குதிரையைப் போலக் கனைத்தபடி
கால்களைத் தூக்கிக் கொண்டு
என் கனவில் வந்தது.
நான் தலையணைக்கடியில்
மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து
அதைக் கனவில் ஒரு போடு போட்டேன்.
மகா கொடூரனின் முன்னால்
நீதிகேட்டுப் போவது மடமையென்று
தன் இனத்திற்கு அறிவித்துவிட்டு
அது மடிந்து போனது."

இந்தக் கவிதையின் நிறைவு வரியும் முக்கியமானது.

"ஒரு நீதிமான் முதல் ஆட்டை வெட்டும் போது
தயவுசெய்து நீங்கள் அவனைக்
காணாததுபோல் நடந்து கொள்ளுங்கள்"

மனித மனம் மிகவும் நுண்ணியது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வை எவ்வளவு தூரம் இயந்திர கதியில் இயக்கினாலும் எங்கோ ஓரிடத்தில் அல்லது யாரேனும் ஒருவரிடம் தன் நுண்ணுணர்வுகள் வெளிப்படும் விதமாய் நடந்து கொள்கிறான். நுண்ணுணர்வுகள் போல் அற்புதமும் கிடையாது . அபத்தமும் கிடையாது. இந்த உணர்வை உறுதி செய்யும் விதமாய் இசையின் கவிதை ஒன்று.

 "நாம் கதைகளில் மட்டுமே படித்திருக்கிற
பொன்நிறப் பறவையொன்று அவன் வீடு தேடி வந்தது.
கண்கூசி முகம் ஜொலித்தது அவனுக்கு.
100 முறை ஸ்பரிசித்துவிட்டால்
ஓடிவிடும் பறவை அது.
அவன் முதல் நாளே 74 முறை தடவிக் கொடுத்தான்.
பிறகு விவரம் அறிந்து பதறியவன்
இனி தொடவே மாட்டேன் என்று சொல்வதற்காக
நூறாவது முறை தொட்டான்."

இந்த வாழ்க்கை உற்சாகமானதென்று சொல்வதற்கோ நம்புவதற்கோ பலருக்கும் பெரிதாகக் காரணங்கள் இல்லை. ஆனால் தன்னையே தூண்டி உற்சாகப்படுத்திக் கொண்டுதான் அவர்கள் பலரும் வாழ்கிறார்கள். தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொள்ள சில எளிய பிரயத்தனங்களே போதும் என்பதும் இசையின் வரிகள் உணர்த்தும் உண்மை.

"மேல்சட்டையைக் கால்சட்டைக்குள் செருகி
பெல்ட் வைத்துக் கட்டி
ஒரு நாளை புத்தம் புதிதாக்கினேன்.
முகத்தின் கருங்காட்டை வழித்தெடுத்ததில்
நெகுநெகுவென்று திறந்தது ஒருநாள்.
சப்பென்றிருக்கும் நாளின்மீது
கொஞ்சம் உப்பையும் மிளகாய்ப்பொடியையும்
தூவிவிடுவேன்.
இப்போது இது ஒரு சுவையான வெள்ளரிப்பிஞ்சு".

இன்னாதம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே"

என்கிறான் சங்கப் புலவன். இசையும் இன்னாத வாழ்வில் இனிமை காண்கிறார். இந்தக் கவிதையின் கடைசி வரிகளைப் பாருங்கள்.

"எம் கே டி எத்தனை நாட்களைத்தான்
வெளுத்துத் தருவார்..
வாயில் ஊறும் இது,
இந்த நாளில் இருபத்திமூன்றாவது கம்பர்கட்"

இந்தத் தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த கவிதை, "விகடகவி மட்டையை உயர்த்துகிறார்". வாழ்வின் நொம்பலங்களை சிரித்து மழுப்ப நேரும் அவலத்தை அழகாகச் சொல்லும் இந்தக் கவிதையின் சில பகுதிகள்:
  
"முதன்முதலாக நான் செருப்படி வாங்கியபோது
  வானத்தில் போன பறவைகள் அப்படியே
   நின்றுவிட்டன.
   கடலில் எழும்பிய அலைகள் அந்தரத்தில்
    ஸ்தம்பித்து விட்டன.
   இரண்டாவது முறையாக செருப்படி வாங்கியபோது
    பறவைகள் அதுபாட்டுக்குப் பறந்தன
     அலைகள் அதுபாட்டுக்கு அடித்தன...
...........................................................................
...........................................................................
எல்லோரும் என்னை விகடகவி என்பதால் நான் எல்லாவற்றையும் விளையாட்டாக்கிக் காட்ட வேண்டியுள்ளது. எனவே 100 ஆவது செருப்படியின் போது இந்த உலகத்திற்கு முன்னால் நான் ஒரு மட்டையை உயர்த்திக் காட்டினேன்.

ஆனால் 101 ஆவது செருப்படி ரொம்பவும் வலுவாக நடு மொகரையில் விழுந்தது. நான் ஒரு விகடகவியாதலால் வாயை இளிப்பிற்குக் கொண்டுவர முயன்றேன். அதற்குள் கண்ணிரண்டும் கலங்கிவிட்டன."

இந்தக் கடைசிவரியைப் படித்தபின் கவியும் அதிர்ச்சியும் மௌனமும் அடர்த்தியானது.ஒரு கவிதை தரக்கூடிய அதிகபட்ச அனுபவமும் அதுவே.
"சிவாஜி கணேசனின் முத்தங்கள்"

-இசை
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.70


Friday, January 20, 2012

வேளாங்கண்ணி தரிசனம்

உன்கையில் ஒருபிள்ளை இருக்கின்ற போதிலும்
உலகத்தைப் பார்க்கின்ற மாதா
தன்கையில் உள்ளதை தருகின்ற யாருக்கும்
துணையாகும் மேரி மாதா

கடலோரம் குடிகொண்ட மாதா
கனவோடு கதைபேசும் மாதா

கல்வாரி மலையிலே சொல்மாரி தந்தவன்
கருவாக நீதானே கோயில்
பொல்லாத உலகிலே நில்லாத நீதியும்
நிலையாக நீதானே வாயில்



மலரோடு மலரான மாதா
மதம்தாண்டி மணம்வீசும் மாதா


ஆனந்த வானிலே ஓர்மின்னல் வந்ததே
அம்மாநீ கருவான நேரம்
ஏனிந்த நாடகம் வான்செய்த சாகசம்
அருள்கொஞ்ச உருவான ராகம்

சுதியோடு லயமான மாதா
சுகமான இசையாக நீவா

மன்றாடும் நெஞ்சிலே நின்றாடும் தென்றலே
மரியேஉன் திருவாசல் வந்தேன்
ஒன்றாகும் அன்பிலே உன்கோல வடிவிலே
என்தேவி ஒளிரூபம் கண்டேன்

ஒளிவீசும் மெழுகோடு நீவா
உலகெங்கும் நலம்காண நீவா



Thursday, January 19, 2012

புரிதலின் பிராவாகம்

அது அங்கே இருக்கிறது என்று சொல்வதில் எந்தப் புகாராவது இருக்கிறதா என்ன? மேலோட்டமாகப் பார்த்தால் இதுவொரு சாதாரண வாக்கியம். அதன் அடியாழத்திலோ "அது அது அப்படித்தான்" என்கிற புரிதலின் பரிவு நீண்டு கிடக்கிறது.புரிதல், பக்குவத்தின் ஆரம்ப நிலை.புரிதலின் பரிவு,பக்குவத்தின் ஆனந்த நிலை.

அப்படியோர் ஆனந்த நிலையின் பிரவாகமாய்ப் பெருகுகிறது கல்யாண்ஜியின் "மணல் உள்ள ஆறு" கவிதைத் தொகுப்பு.


உச்சிப்படையில் உட்கார்ந்து விட்ட சிறுமியை,வீட்டுக்குக் கூட்டிப் போகிற வாழையிலை விற்கிற முதியவளும்,கலர்க்கோலப்பொடி அப்பளம் விற்கிற பெண்ணும் மட்டும் ஆச்சரியமில்லை. அந்தப் பெண்ணுக்காக உள்ளம் கரைகிற ஒரு ஜடப்பொருளும்தான் ஆச்சரியம்.

"வாசலில் ஆட்டோவை நிறுத்தி
வாழையிலை விற்கிற முதியவளும்
கலர்க்கோலப்பொடி அப்பளப்பூ
விற்கிற கடைப்பெண்ணும்
உச்சிப் படையில்
"உட்கார்ந்துவிட்ட " சிறுமியை
வீட்டுக்குக் கூட்டிப் போகிறார்கள்.


இதுவரை அது விற்றுக் கொண்டிருந்த செவக்காட்டுப் பனங்கிழங்குக் கட்டுப் பக்கம் உருகிக் கொண்டிருக்கிறது அப்போதுதான் வாங்கிய ஒரு சேமியா ஐஸ்".
இங்கு வாழையிலையும் கலர்க்கோலப் பொடியும் அப்பளப்பூவும் குறியீடுகளா, உள்ளுறையா இறைச்சியா என்றெல்லாமமந்த முதியவளுக்கும் பெண்ணுக்கும் சிறுமிக்கும் தெரியாது.

இந்த நுட்பமான பார்வைக்குத்தான் இருத்தலின் இருப்பு மட்டுமின்றி இன்மையின் இருப்பும் நன்கு பிடிபடுகிறது.

"என்னைத் தவிர
யாரும் கிடையாது
இந்த வீட்டில்.
என்னைத் தவிர
யாரோ இருப்பதாகத்
தோன்றுவதால்தான்
இதைச்சொல்ல வேண்டியதாகிறது"
என்பதில் இருக்கும் அதே புரிதல்தான்
"இல்லாத ஒரு நான்காவது நாயுடன்
விளையாடுவது போல
புரண்டு கொண்டிருக்கின்றன
காலை வேம்பின் கசப்பு நிழலில்
மூன்று நாய்கள்"
என்ற கவிதையில் புரிதலின் பரிவாக நீட்சி கொள்கிறது..

அந்த நான்காவது நாய், இல்லாததா இல்லாமல் போனதா என்ற கேள்வியை இந்தக் கவிதை உருவாக்குகிறது. முந்தைய நாள்வரை ஒன்றாய்த் திரிந்து, நாய்பிடியாளர்களின் சுருக்குக் கயிற்றுக்கோ பேருந்தின் சக்கரங்களுக்கோ தன்னைத் தந்திருக்கலாம். அந்தப் பிரிவின் கசப்பே காலை வேம்பின் கசப்பு நிழலாகவும் இருக்கலாம்.

"எல்லோரும் காதலியைப் பற்றிக்
கவிதையெழுதிவிட்டு
காதல் பற்றி எழுதியதாகச்
சொல்கிறார்கள்.
இறந்தவரைப் பற்றி
எழுதிவிட்டு
மரணம் பற்றி என்கிறார்கள்.
ஒரு பறவையைப் பற்றி எழுதுவது
பறத்தல் பற்றி அல்ல..
சோப்பைப் பற்றி எழுதுவது
அழுக்கைப் பற்றியது ஆகாது"
என்று நீள்கிற கவிதை,
"எதைப்பற்றியும் எழுதப்படுவது அல்ல
இதைப்பற்றி எழுதுவது என்பது"
 என்னும் "கல்யாண முத்திரை"யுடன் முற்றுப் பெறுகிறது.

நாம் நம் இழிவுகளிலிருந்தே உயர்வுகள் நோக்கித் தாவுகிறோம். நம் பள்ளங்களிலிருந்தே மேடுகள் நோக்கித் தவ்வுகிறோம். தாவவும் தவ்வவும் மாறவும் சிறு விருப்பம் இருந்தாலும் வாழ்க்கை நம்மை உரிய இடத்தில் கொண்டு சேர்க்கிறது.

"அந்த ஆற்றை அடைவதில்
ஒன்ரும் சிரமமில்லை.
ஒரு சாக்கடைப் பெருச்சாளியை
சாக்கடை வழியாகவே துரத்தினேன்.
எந்த அவசரமுமின்றி
என் கால்களையும்
கழுவிக் கொள்ள முடிந்தது
ஆற்றிலேயே"
என்ற கவிதை நம்மைக் கொண்டு சேர்ப்பதும் பெருக்கெடுத்தோடும் இந்தப் புரிதலில்தான்.

கல்யாண்ஜி கவிதைத் தொகுப்புகளில் இருக்கும் சிரமமே, "ஆகச்சிறந்த
கவிதை" என்று தனியாக ஒன்றைச் சுட்ட முடியாமைதான்.ஒவ்வொன்றும் அதன் போக்கில் ஆகச் சிறந்ததாகவே இருக்கும்.

ஒரு குடும்பத்தின் நான்கு உறுப்பினர்கள் மற்றொரு வீட்டின்  வரவேற்பறையில் விருந்தினர்களாக அமர்ந்திருக்கும் தருணமொன்றைச் சுட்டும் கவிதை "வேண்டாம் என்பவர்". வேறொன்றுமில்லை. நான்கு குவளைகளில்  கொண்டுவரப்பட்ட  குளிர்பானங்களை வேண்டாம் என்கிறார் அப்பா  விருந்தினர்.  தனக்குதான்  முதலில்  என்று தாவி எடுக்கிறான்  மகன். அவனுடைய  சகோதரியின்  குவளை குடிக்கக் குடிக்க நிறைவதாய்த் தோன்றுகிறது.அம்மா விருந்தினரோ மிச்சம் வைக்கும் நாகரீகத்துடன் மிச்சம் வைக்கிறார்.

"வேண்டாம் என்றவர்க்கொரு உளவியல் பிரச்சினை.
குடித்துவிடலாம் என இப்போது நினைக்கிறார்.
எழுந்திருந்துபோய் அதை எடுப்பதன் முன்னர்
எடுத்துப் போய்விடுகிறார்கள் அத்தனை குவளையும்.
வாயைத் துடை எனக் கோபப் படுகிற
அப்பாவைப் பார்த்து
மிரள்கிறான் பையன் காரணம் புரியாமல்".

அவரவர் கோப்பையை அவரவர் பருக அவரவர் வாழ்க்கையில் அவரவர் நிறைய பருகாமலும் நிறையாமலும் பரிதவிக்கிறவர்களின் இயலாமையில் எழுகிற ஆத்திரங்களவிந்தப் பிரபஞ்சத்தின் இசைப்பிசகுகளுக்குக் காரணம்..
"ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும்
இடைப்பட்ட உப்புத் தூரம்
வாழ்விற்கும் மரணத்திற்கும்
இடைப்பட்டது என
இறுதியாகப் பொன்மொழிந்து
வலைக்குள் கடலைக்
கடைசியாகப் பார்த்த கண்களுடன்
ஒரு மீனுக்கும் இன்னொரு மீனுக்கும்
இடைப்பட்ட மீன்"

வலிமீன்களின் கண்களைப் புரிந்து கொள்வதும் கடலைப் புரிந்து கொள்வதும் ஒன்றுதான்.அதன் காரணமாகவே கல்யாண்ஜியின் புரிதல் எல்லைக்குள் பிடிபடுகிறது பிரபஞ்சம்.

மணல் உள்ள ஆறு
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை : ரூ.75/    
 புத்தகத்தை ஆன்லைனில் பெற... http://www.vyazashoppe.com/intest-s.php?c=41&p=99

Wednesday, January 4, 2012

முரணிலாக் கவிதை

முடிவிலாப் பாதையில் முகமிலா மனிதர்கள்
இதழிலாப் புன்னகை சிந்திய பொழுது
இரவிலா நிலவினை மழையிலா முகில்களும்
நிறமிலா வெண்மையில் மூடிய பொழுது
விடிவிலாச் சூரியன் வழியிலாப் பாதையில்
தடையிலா சுவரினைத் தாண்டிய பொழுது 
கடலிலாச் சமுத்திரம் கரையிலா மணலினில்
பதிலிலாக் கேள்வியாய் மோதிடும் அழுது

யுகமிலாத் தேதியை நகமிலா விரல்களால்
கரமிலாக் காலமும் கிழிக்கிற நொடியில்
ஜெகமிலா பூமியின் நகர்விலா சுழற்சியை
வடிவிலாக் கோள்களும் மறிக்கிற பொழுதில்
சுகமிலாச் சுகங்களை நிலையிலா நிரந்தரம்
வலியிலா வலியென உணர்த்திடும் நிலையில்
அகமிலா அகந்தனில் விரிவுறா வெளியினில்
குணமிலா இறைநிலை குலவும்நம் உயிரில்

அரணிலாக் காவலின் அசைவிலா விசையினில்
திரையிலா மறைப்புகள் மறைகிற காட்சி
உரனிலா வலிமையின் ஒழுங்கிலா ஒழுங்கினில்
சரியிலா நீதிகள் சரிகிற மாட்சி
தருவிலாக் கனிகளும் திருவிலாச் செல்வமும்
வரைவிலா வரைமுறை வகுக்கிற சூழ்ச்சி
முரணிலாக் கவிதைகள் முள்ளிலா நெருஞ்சியாய்
முன்வரா முதல்வனின் மறைமுக ஆட்சி


.

Monday, January 2, 2012

நாதரூபம்

(02.01.2012  கோவை மாஸ்திக்கவுண்டன்பதி பாலா பீடம் ஸ்ரீ விஸ்வசிராசினி தரிசன அனுபவம்)



ருத்ர வீணையின் ஒற்றை நரம்பினில்
  ருசிதரும் ராகங்கள்
முத்திரை பிடிக்கும் மோன விரல்களில்
தாண்டவக் கோலங்கள்
ரத்தினத் தெறிப்பாய் விழுகிற வார்த்தையில்
  ரூபக தாளங்கள்
எத்தனை பெரிய அற்புதம் இங்கே
எதிர்வரும் நேரங்கள்!!

பாவை விளக்கின் புன்னகைச் சுடரொளி
பொலியும் பார்வையிலே
கூவிய தெய்வக் குயிலின்  சாயல்
மந்திரக் கோர்வையிலே
தேவியின் வாயிலில் தென்றலின் சாமரம்
வெய்யில் வேளையிலே
ஏவல்கள் தாங்கவும் காவல்கள் செய்யவும்
கந்தர்வர் சேவையிலே


காற்றின் விசையாய் கடவுளின் இசையாய்
காட்சி கொடுப்பதுயார்
ஏற்றிய சுடராய் எழுதா மறையாய்
எல்லாம் தருவதும் யார்
நேற்றின் நிழலாய் நாளையின் விடிவாய்
நின்று சிரிப்பதும் யார்
ஆற்றின் அலையாய் அலைமேல் மலராய்
ஆர்த்திடும் அமைதியும் யார்


ஞானியர் வழிவரும் வாணியின்  மந்திர
நாதங்கள் அதிர்ந்துவரும்
வானிலும் மண்ணிலும் வளர்பிறை நிலவிலும்
வாத்சல்யம் நிறைந்துவிடும்
தானெனும் ஒன்றினைத் தேடவே யாவரும்
தரைமிசை வருகின்றோம்
தேனெனும் மந்திரம் திசைகளில் ஒலிக்கையில்
தீர்ந்து விடுகின்றோம்

மவுனத்தின் கருவில் நாதத்தின் ரூபம்
மலர்வதைக் காட்டுகிறாய்
தவமெனும் கனலில் கங்கையின் வேகத்
திமிறலைக் கூட்டுகிறாய்
சிவமெனும் அருளை சுடர்தரும் இருளை
சிந்தையில் நாட்டுகிறாய்
குவலயம் முழுதும் கருணையில் மலரும்
கணமொன்றை ஆக்குகிறாய்



இவரைப் பற்றி இன்னும் அறிந்திட...........
http://www.balarishi.org/

Sunday, January 1, 2012

கடவுளின் சுவடுகள்

 புன்னை வனத்தொரு பூ மலர்ந்தால் -அதை
பிரபஞ்சம் எங்கோ பதிவுசெய்யும்
தன்னை உணர்ந்தோர் உயிர்மலர்ந்தால்-அதை
தெய்வங்கள் தேடி வணக்கம்செய்யும்
முன்னை வினைகளைக் கரைப்பதற்கும்-இனி
மேலும் மூளாதிருப்பதற்கும்
உன்னும் உயிரினில் அருள்சுடரும்-அதன்
உந்துதலால் தினம் நலம் நிகழும்
 
காலத்தின் கறைகள் கழுவவந்தோம்-செய்யும்
காரியம் துணைகொண்டு மலரவந்தோம்
மூலத்தின் மூலம் உணரவந்தோம்-நமை
மூடும் இருளினைத் தாண்டவந்தோம்
தூலத்தின் கூட்டினில் ஒளிப்பறவை-அதன்
தூக்கத்தைக் கலைத்திடும் கனவுகொண்டோம்
நீலத்தின் சுடரினில் நின்றுகொண்டு-வரும்
நேரக் கணக்குகள் கடக்கவந்தோம்
 
 
 தோணிகள் உலவிடும் நதியின்மிசை-சில
துடுப்புகள் கிடைக்கும் தொலைந்துவிடும்
பூணும் விருதுகள் பெருமைகளும்-சில
பொம்மைகள் போல்கையில் வந்துவிழும்
காணும் உயிர்கள் அனைத்திலுமே-அந்தக்
கடவுளின் சுவடுகள் காத்திருக்கும்
வீணாய் வளர்க்கும் பகைமையிலும்-இந்த
வாழ்வின் விசித்திரம் விளங்கிவிடும்
 
பெயரில் இருக்கும் பரவசமும்-அந்தப்
பெயரை வளர்க்கும் பெருவிருப்பும்
பெயரும் நாளொன்று வரும்பொழுதில்-மனம்
பெய்கிற மழைபோல் கரைந்துவிடும்
துயரும் மகிழ்வும் கற்பனையே-எனும்
துல்லிய உண்மை தெரிந்துவிடும்
மயங்கும் மதியின் வித்தையெல்லாம்-ஒளி
மலரடி பற்றிடத் தெளிந்துவிடும்

கண்ணகி குறித்தொரு கலகல சர்ச்சை

டிசம்பர் 2011 ஓம் சக்தி இதழில் கண்ணகி மானுடப்பெண் அல்ல என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. அதனை எழுதியவர் பேராசிரியர் இராம.இராமநாதன் அவர்கள். அந்தக் கட்டுரையில் பேராசிரியர், கண்ணகி மானுடப்பெண் அல்லள் என்பதால் திருமணம் நடந்தாலும் கண்ணகியும் கோவலனும் இல்லற இன்பம் துய்க்கவில்லை என்பதாக ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

அவருடைய வாதங்களை ஓரோவழி தொகுத்து நோக்கலாம்.

1) மாநகர்க்கீந்தார் மணம் என்று கோவலன் கண்ணகி திருமணத்தை இளங்கோவடிகள் சொல்கிறார். எனவே அது ஊர்மெச்ச நடந்த திருமணமே தவிர உள்ளங்கள் கலந்த திருமணம் அல்ல.

2) கோவலனும் கண்ணகியும் சேர்ந்திருந்த காட்சியை கதிர் ஒருங்கிருந்த காட்சி போல என்கிறார் இளங்கோவடிகள். கதிரும் நிலவும் சேராது என்பதைத்தான் இளங்கோ உணர்த்துகிறார்.

3) பள்ளியறையில் கோவலன் அணிந்திருந்த தாரும் கண்ணகி அணிந்திருந்த மாலையும் கசங்கின என்கிறார் இளங்கோ. அப்படியானால் இருவரும் கூடுவதற்கான முயற்சி நடந்து
தோற்றிருக்க வேண்டும்.

4) கூடியிருந்தால் இருவரும் களைத்துப்போய் உறங்கியிருப்பார்கள்.கூடாததால்தான் கோவலன் மாசறு பொன்னே வலம்புரி முத்தே என்று பேசிக்கொண்டேயிருக்கிறான்.

5) சாலினித் தெய்வம் ஆவேசித்து இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி என்பதால் ஊரார் கண்களுக்கு கண்ணகி தெய்வமாகவே தெரிந்தாள்




இது போன்ற "கருத்துக்கள்" அடங்கிய இந்தக் கட்டுரைக்கு நான் எழுதிய மறுப்பு 2012 ஜனவரி மாத ஓம்சக்தி இதழில் வெளியானது.

அன்புள்ள ஆசிரியருக்கு
வணக்கம்.

    பேராசிரியர் திரு.இராம.இராமநாதன் அவர்கள் எழுதிய "கண்ணகி மானுடப்பெண் அல்ல" என்னும் கட்டுரை,பொறுப்பாசிரியரின் பலத்த பீடிகையுடன் டிசம்பர் 2011 இதழில் வெளியாகியுள்ளது.
    
    முன்முடிவுகளுடன் சிலப்பதிகாரத்தை அணுகி, காவிய ஆசிரியரின் இயல்பான வெளிப்பாடுகளுக்கும் கட்டுரையாசிரியர் வலிந்து பொருள் கொண்டிருக்கிறார் "மாநகர்க்கீந்தார் மணம்" என்பது ஊர்மெச்ச நடந்த திருமணம் தானே தவிர ஊருக்காக நடந்த திருமணம் அல்ல.
    
    காரைக்காலம்மையார் வரலாற்றைப் பாடுங்கால் தெய்வச் சேக்கிழார் "தளிரடிமென் நகைமயிலைத் தாதவிழ்தார் காளைக்குக் களிமகிழ் சுற்றம் கூரக் கல்யாணம் செய்தார்கள்" என்று குறிப்பால் உணர்தியிருப்பார். அது பொருந்தாத் திருமணம். கண்ணகி-கோவலன் திருமணம் அப்படியல்ல. அவர்கள் இருவரும் தீவலம் செய்வதைக் காண்பார் கண்கள் தவம் செய்திருக்க வேண்டும் என்கிறார் இளங்கோவடிகள்.  
    
    கண்ணகியின் விருப்பத்திற்குரிய கணவனாகவே கோவலன் இருந்ததை, "கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்" என்னும் சொற்றொடரால் அறியலாம்.
    
    "கையற்று"என்ற சொல்லை கட்டுரையாசிரியர் பொருள்கொள்ளும் விதம் பொருந்தாது என்பதை அப்பாடலின் அடுத்த வரியே புலப்படுத்தும். "தீராக் காதலின் திருமுகம் நோக்கி" என்கிறார் இளங்கோவடிகள்.
    
    "கதிர் ஒருங்கிருந்த காட்சி போல"என்பதோ ஒருபுடை உவமை. கதிரும் நிலவும் சேருமா என்ற கேள்வி இங்கே எழ வாய்ப்பில்லை. அவ்வாறாயின் கண்ணனை,"கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்"என ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் பாடுகிறாரே இது தவறா?
    
    குறியாக்கட்டுரை என்பது துறவியாகிய இளங்கோவடிகளின் கவிக்கூற்றேயன்றி வேறல்ல.
    
    கோவலன் கண்ணகி மாலைகள் கசங்கியது "கூடும் இன்பத்திற்கான முயற்சி"என்று பொருள் கொள்வது விசித்திரத்திலும் விசித்திரம். "மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு?கட்டில் மேலே நசுங்கத்தான்" என்றொரு திரைப்பாடல் கூட உண்டு.
    
    கண்ணகியும் கோவலனும் பேசிக்கொள்ளவில்லையெனில்
    
    " அளிய தாமே சிறு பசுங்கிளியே
     குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின்
    மழலைக் கிளவிக்கு வருந்தின "
    
    என்று கோவலன் கூற்றாக இளங்கோவடிகள் பாட வேண்டிய அவசியமென்ன?
    
    இருவரும் இணைந்து இன்பம் துய்த்ததை -
    
    "தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி
    வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள் "
    
    என்ற வரிகளால் இளங்கோ தெளிவுபடுத்துகிறார். கணவனை சற்றும் மறவாத அன்புடன் இல்லறக் கடமைகளைக் கண்ணகி ஆற்றி சில ஆண்டுகள் குடும்பம் நடத்தினாள் என்பது இளங்கோவடிகள் வாக்கு.

        "மறப்பருங் கேண்மையோ டறப்பரி சாரமும்
        விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
        வேறுபடு திருவின் வீறுபெறக் காண
        வுரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க
        யாண்டுசில கழிந்தன விற்பெருங் கிழைமயிற்
        காண்டகு சிறப்பின் கண்ணகி"
    .
    இந்த வாழ்க்கை நிலையில்லாத்தென்பதால் இருக்கும் போதே அனுபவிக்க வேண்டுமென்பது போன்ற வேகத்தில் இருவரும் இன்பம் துய்த்தனர் என்கிறார் இளங்கோவடிகள்.
    
            "தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
             காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
             தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல்
               நிலையாமை கண்டவர் போல் நின்று.
    
    கூட்டம் நடந்திருந்தால் இருவரும் உறங்கியிருப்பார்களே என்று பேராசிரியர் சொல்வது வேடிக்கை. அது கூட்டத்துக்கு முந்தையதாகிய முன்னிகழ்வின் அங்கம்.(foreplay).
    
    சாலினித் தெய்வம் ஆவேசித்து அவளை "கொங்கச் செல்வி குடமலையாட்டி" என்கிற இடத்தை வைத்துக் கொண்டு, "உலகில் மற்றவர்களுக்கெல்லாம் கண்ணகி தெய்வமாகவே தெரிவதாக அடிகள் சுட்டுவர் என்பது அடிப்படையே இல்லாத தகவல். சாலினித் தெய்வம் மட்டுமே சொல்வது எப்படி உலகத்தவர் எல்லாம் சொல்வதாகும்? கண்ணகி கோபத்துடன் வருவதைப் பார்க்கும் காவலன் பேசுவது அவளுக்குள் இருக்கும் தெய்வாம்சத்தை உணர்ந்ததன் விளைவல்ல.
   
இன்றும் கோபமுற்ற பெண்களை "பத்திரகாளி போல" என்கிறோம். ஊரார் அவளைத் தெய்வம் என்றது அவளுக்குள் இருந்தெழுந்த ஆவேசத்தின் எழுச்சி கண்டுதான். அதுவரை மானிடப்பெண்ணாக இருந்த கண்ணகி தன்னுள் இருந்த தெய்வாம்சத்தைப் படிப்படியாக உணர்கிறாள். அது வஞ்சிக் காண்டத்தில் முற்றுப் பெறுகிறது. கோவலன் இறப்பின் பின்னரே அந்தப் படிநிலை எழுச்சி காணப்படுகிறது. புகாரில் குடும்பம் நடத்தும்போது இயல்பான மானிடப்பெண்ணாகவே கண்ணகி இருக்கிறாள்.
    
    கன்னிப் பெண்தான் கடவுளாக முடியும் என்கிற கருத்து பிற்போக்குத் தனமானது.கன்னிமைக்கும் கடவுட்தன்மைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. வாழ்வாங்கு வாழ்பவர்களை மற்றவர்கள் தெய்வமாக்குவார்கள். கண்ணகி அப்படி வாழ்ந்தவள். மற்றபடி கண்ணகிக்கு பேராசிரியர் செய்து முடித்திருக்கும் கன்னிமைப் பரிசோதனை ஆதாரமில்லாதது. அவசியமில்லாததும் கூட
    
    மரபின்மைந்தன் முத்தையா

*******

    
 இந்தக் கட்டுரை வெளிவந்த பிறகு பேராசிரியர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.அவர் கேட்ட கேள்விகள்:

    1) இளங்கோவடிகள்தான் சிலம்பை எழுதினார் என்று உங்களுக்குத் தெரியுமா?அதற்குக் கல்வெட்டுச் சான்று உண்டா?

    2)இருவரும் கூடினார்கள் என்றால் ஏன் குழந்தை பிறக்கவில்லை?

    3) இருவரும் கூடினார்கள் என்றால் கோவலன் ஏன் பேசிக் கொண்டிருந்தான்?
    
    உரையாடலின் முடிவில்,"சாலமன் பாப்பையா என் மாணவர் தெரியுமா?"என்றார். "அப்படியா?" என்றேன். "நீங்கள் யாரிடம் சிலப்பதிகாரம் படித்தீர்கள்?" என்றார். "இளங்கோவடிகளிடம் படித்தேன்" என்றேன்
    
    "ஓ! அப்படியானால் இது உங்கள் சொந்தக் கருத்து" என்று வைத்துவிட்டார்.
    
    ஆனால் அவர் அதற்குமுன் சொன்ன நிறைவு வாசகம் என் உள்ளத்தைக் குளிர்வித்தது."இது உங்கள் இளமையைக் காட்டுகிறது!!!!"