Wednesday, January 4, 2012

முரணிலாக் கவிதை

முடிவிலாப் பாதையில் முகமிலா மனிதர்கள்
இதழிலாப் புன்னகை சிந்திய பொழுது
இரவிலா நிலவினை மழையிலா முகில்களும்
நிறமிலா வெண்மையில் மூடிய பொழுது
விடிவிலாச் சூரியன் வழியிலாப் பாதையில்
தடையிலா சுவரினைத் தாண்டிய பொழுது 
கடலிலாச் சமுத்திரம் கரையிலா மணலினில்
பதிலிலாக் கேள்வியாய் மோதிடும் அழுது

யுகமிலாத் தேதியை நகமிலா விரல்களால்
கரமிலாக் காலமும் கிழிக்கிற நொடியில்
ஜெகமிலா பூமியின் நகர்விலா சுழற்சியை
வடிவிலாக் கோள்களும் மறிக்கிற பொழுதில்
சுகமிலாச் சுகங்களை நிலையிலா நிரந்தரம்
வலியிலா வலியென உணர்த்திடும் நிலையில்
அகமிலா அகந்தனில் விரிவுறா வெளியினில்
குணமிலா இறைநிலை குலவும்நம் உயிரில்

அரணிலாக் காவலின் அசைவிலா விசையினில்
திரையிலா மறைப்புகள் மறைகிற காட்சி
உரனிலா வலிமையின் ஒழுங்கிலா ஒழுங்கினில்
சரியிலா நீதிகள் சரிகிற மாட்சி
தருவிலாக் கனிகளும் திருவிலாச் செல்வமும்
வரைவிலா வரைமுறை வகுக்கிற சூழ்ச்சி
முரணிலாக் கவிதைகள் முள்ளிலா நெருஞ்சியாய்
முன்வரா முதல்வனின் மறைமுக ஆட்சி


.

1 comment:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை அருமை!
இப்படித் தான் ஆல்பர்ட் ஹிட்ச்காக் படத்தில் ஒருவர் படு காஷுவலாய்,தலையை கையில் வைத்துக் கொண்டிருப்பார், ஹெல்மட் போல்!

பொங்கல் வாழ்த்துக்களுடன்,


ஆர்.ஆர்.ஆர்.