Wednesday, October 31, 2012

எது சுதந்திரம்.....எது நிர்ப்பந்தம்?

"தெற்கிலிருந்து சில கவிதைகள்"என்னும் நூலில் என் கல்லூரிப்பருவத்தில் ஒரு கவிதை படித்தேன். எத்தனையோ முறை மேற்கோள் காட்டியும் அந்த வரிகளின் தாக்கம் மாறவேயில்லை.


"பறவையான பிறகுதான்
தெரிந்தது...
பறத்தல் என்பது
சுதந்திரம் அல்ல...
நிர்ப்பந்தம் என்று"






இதை எழுதியவர் கவிஞர் சமயவேல் என்று ஞாபகம். சரியாகத் தெரியவில்லை. வீட்டிலிருந்து பத்து நிமிட நடைத்தூரத்தில் இருக்கிறது, பந்தயச்சாலை. நடைப்பயிற்சிக்கு மிகவும் உகந்த இடம். பந்தயச்சாலைக்கு நடந்துபோய் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். காலைப்பொழுதில் கால்வீசி நடந்து பந்தயச்சலையின் இரண்டரை கிலோமீட்டர் சுற்றையும் நடக்கும் நிமிஷங்கள் புத்துணர்வும் சுதந்திரமும் ததும்பும் விதத்தில் இருக்கும். ஆனால் திரும்ப வீடு நோக்கி நடக்கும்போது சிலசமயம் அலுப்பாக இருக்கும். விரும்பி நடப்பது சுதந்திரமாகவும் கடந்தே தீர வேண்டிய தூரம் நிர்ப்பந்தமாகவும் தோன்றுகிறது போலும்!!

இந்தச் சிந்தனையுடன் நடக்கிறபோது இராமனின் வாழ்க்கை நினைவுக்கு வந்தது. இராமன் வனத்துக்குப் போனது விரும்பி ஏற்ற விஷயமா, நிர்ப்பந்தமா என்றொரு கேள்வி எழுகிறது. இராமன் விரும்பித்தான் வனம் சென்றான் என்று தொடக்கம் முதலே அடித்துச் சொல்கிறான் கம்பன். ஆனால் கம்பன் வரிகளிலேயே வெளிப்படும் இராமனின் வாக்குமூலம் வேறொரு நிலைப்பாட்டையும் சொல்கிறது.

இராமன் விரும்பித்தான் வனம் போனான் என்று கம்பன் நிறுவுகிற இடங்கள் மிகவும் சுவாரசியமானவை. "பரதன் உலகை ஆளட்டும். நீ நீண்ட சடாமுடி தாங்கி, செயற்கரிய தவம் செய்ய புழுதி பறக்கும் வெங்காட்டுக்குப் போய் பதினான்கு ஆண்டுகள் கழித்து வா என அரசன் சொன்னான்" என்கிறாள் கைகேயி. இது பலரும் அறிந்த பாடல்தான்.

"ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீபோய்
தாழிருஞ் சடைகள் தாங்கி தாங்கரும் தவம் மேற்கொண்டு

பூழிவெங் கானம் நண்ணி புண்ணிய நதிகள் ஆடி
ஏழிரண்டாண்டில் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்."

நீண்ட சடை வளர்த்துக் கொள். கடுமையான தவம் செய். புழுதி பறக்கும் காட்டில் வசி என்கிற வரிகளில் வன்மமும் வெறுப்பும் தெரிகிறது. இதைச் சொன்னவன் உன் தந்தை என்று சொன்னால்

அப்பாவிடம் இராமன் சலுகை பெறுவான் என்று நினைத்தாளோ என்னவோ, "இயம்பினன் அரசன்" என்றாள்.

ஆனால் இராமனின் எதிர்வினை வேறுமாதிரி இருக்கிறது. அரசன் இதைச் சொல்ல வேண்டும் என்று அவசியமா என்ன? நீங்களே சொல்லியிருந்தாலும் அதைத் தட்டப் போகிறேனா என்ன? என் தம்பி அரசாள்வது நான் செய்த பாக்கியமல்லவா? மின்னல்களின் வெளிச்சம் படரும் வனம் நோக்கி இப்போதே போகிறேன்" என்கிறான்.

"மன்னவன் பணி அன்றாகில் நும்பணி மறுப்பனோ?என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற பேறு
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்" என்கிறான்.

வனத்தை பூழிவெங்கானம் என்று சொல்லி "அரச கட்டளையை ஏற்று நீ போகத்தான் வேண்டும்" என்பது கைகேயி விதிக்கிற நிர்ப்பந்தம். நீங்கள் சொன்னாலே போதுமே, மின்னல்கள் ஒளிரும் அழகிய வனத்துக்கு இப்போதே போகிறேன் என்பது இராமனின் சுதந்திரம். ஒரு நிர்ப்பந்தத்தை சுதந்திரமாகப் பார்த்தான் இராமன் என்று நமக்குத் தெரிகிறது.

இதே எண்ணத்தை மீண்டும் நினைவுபடுத்துவான் கம்பன். அசோகவனத்தில் இருக்கும் சீதையின் நினைவில் மின்னுகிறது இராமனின் ஆசைமுகம். நீதான் அரசன் என்ற போதும், ஆட்சி இல்லை காட்டுக்குப் போ என்ற போதும் வரைந்து வைத்த செந்தாமரையை ஒத்து மலர்ந்திருந்த திருமுகம்.



"மெய்த்திருப்பதம் மேவு எனும் போதிலும்
இத்திறத்தை விட்டு ஏகு எனும் போதிலும்
சித்திரத்து அலர்ந்த செந்தாமரையினை
ஒத்திருக்கும் முகத்தை உன்னுவாள்"

என்கிறான் கம்பன்

வனத்துக்குப் போவதை மகிழ்ச்சியாக ஏற்றது இராமனின் சுதந்திரம் என்கிற கருத்துருவாக்கம் வேறோர் இடத்தில் கேள்விக்குரியதாகிறது. சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்து கொண்ட வாலியை வதம் செய்து கிஷ்கிந்தைக்கு மன்னனாக சுக்ரீவனுக்கு முடிசூட்டினான் இராமன். அப்போது சுக்ரீவனுக்கு உபதேசம் செய்து கொண்டே வருகிறபோது, "பெண்களால் மனிதர்களுக்கு மரணம் வரும். வாலியின் வாழ்க்கை இதைத்தான் சொல்கிறது. வாலியை விடு. பெண்களால்தான் துன்பமும் அழிவும் வரும் என்பது எங்கள் வாழ்விலிருந்தே தெரிகிறதே!இதைவிடவா ஆதாரம் வேண்டும்" என்கிறான்.

மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல்
சங்கையின்றி உணர்தி; வாலி செய்கையால் சாலும்;இன்னும்
அங்கவர் திறத்தினானே,அல்லலும் அழிவும் ஆதல்
எங்களில் காண்டியன்றே; இதனின் வேறுறுதி உண்டோ?

என்கிறான்.

கைகேயியிடம் நீங்கள் சொன்னாலே வனத்துக்கு மகிழ்ச்சியாகப் போவேனே.என்று உற்சாகமாகப் போகிறான் இராமன். நடைப்பயிற்சிக்குக் கிளம்புவதுபோல. ஆனால் நடக்க நடக்க ஒரு கட்டத்தில் சோர்வு வருகிற போது உள்ளத்தில் இருந்த உண்மையான அபிப்பிராயம் வெளிப்பட்டு விடுகிறது.

ஓர் எல்லைக்குப் பிறகு தான் விரும்பி ஏற்றுக் கொண்டதே பாரமாய் அழுத்துவதை தன்னையும் மீறி இராமன் வெளிப்படுத்துகிறான். நிர்ப்பந்தம் என்பதும் சுதந்திரம் என்பதும் சூழல்களிலும் இல்லை, சம்பவங்களிலும் இல்லை. மனதில்தான் இருக்கிறது

Sunday, October 28, 2012

ஸ்ஸாப்பிடணும்

மின்கம்பிகளில் இறங்கி, கம்பிமேல் நேர்க்கோட்டில் ஓடி, சர்வ ஜாக்கிரதையாய் தரையிறங்கிக் கொண்டிருந்த மழைத்தாரைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கடந்து போன இருசக்கர வாகனமொன்றை இயக்கிய வண்ணம், ஜெர்கினில் புதைந்த கையை வீசிப்போன வில்லியம்ஸை எனக்கு அடையாளம் தெரிந்தது.

அவன் என் பள்ளித் தோழன். பக்கத்து வகுப்பில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அன்று ஏதோ காரணத்தினால் பள்ளி மூன்று மணிக்கெல்லாம் விட்டுவிட்டார்கள். பள்ளிக்கு அருகிலிருந்த நாஸி காபி பாரில் சமோசாவும் டீயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நாலு சமோசா இரண்டு மசால்வடை எல்லாம் விழுங்கிவிட்டு டீயை உறிஞ்சிக் கொண்டிருந்த வில்லியம்ஸ் "ஸ்ஸாப்பிடணும்...ஸ்ஸாப்பிடணும்" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

"இத்தனை தின்னுட்டியேடா ! இன்னும் என்னடா சாப்பிடணும்"என்ற வேலுமயிலின் கேள்விக்கும் வில்லியம்ஸ் சொன்ன பதில் "ஸ்ஸாப்பிடணும்.. ஸ்ஸாப்பிடணும்"தான். எனக்கு உடனே விஷயம் புரிந்தது. 'பரதேசி"என்று தலையில் தட்டினேன். தேநீர் புரைக்கேறியதில் அவனுக்குக் கோபம் வந்தாலும் "அடிக்காதே மாப்ளே" என்று சமாதானக் குரலில் இழைந்தான். அவன் "மாப்ளே"என்று எங்கள் வகுப்பு மாணவர்களை அழைப்பதில் உள்ளுறை உவமம் இறைச்சி எல்லாம் இருந்தன. ஒருமுறை பள்ளி பிரார்த்தனைக் கூட்டத்தில் தலைமையாசிரியர் "ஆல் இண்டியன்ஸ் ஆர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்" சொன்னதைக் கடுமையாக ஆட்சேபித்து "ஆல் இண்டியன்ஸ் ஆர் பிரதர் இன் லாஸ் அண்ட் சிஸ்டர் இன் லாஸ்" என்று மாணவர்கள் கழிப்பறையில் எழுதிய பெருமை அவனையே சாரும்.  

வேலுமயிலுக்கு விஷயம் புரியவில்லை.வேறொன்றுமில்லை.எங்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த சுதாவின் மீது வில்லியம்சுக்கு "வாசமில்லா மலரிது". (ஒருதலைக் காதலுக்கு எங்கள் பள்ளிப் பருவத்தில் இருந்த பட்டப் பெயர்). மதிய உணவு இடைவேளையில் அவசரம் அவசரமாய் அள்ளி விழுங்கிவிட்டு வில்லியம்ஸ் அவர்கள் வகுப்புக் கதவில் சாய்ந்தபடி சுதாவுக்காகக் காத்திருப்பான். அவன் வகுப்பைத் தாண்டித்தான் எங்கள் வகுப்புக்குப் போகவேண்டும்.




எனவே ஒற்றைக்காலை  சுவரில் பதித்துக் கொண்டு இடதுபக்கம் பார்த்தபடியே கொக்கைப் போல் நின்று கொண்டிருப்பான் வில்லியம்ஸ். வராண்டாவின் இடது கோடியில் சுதா வருவது தெரிந்ததும் பரபரப்பாகிவிடுவான்.
 
அவனைத் தாண்டி சுதா போகும் போது தலையை வலது புறமாகத் திரும்பி அவள் வகுப்புக்குள் போகும்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஏதோ டூயட் பாடிக் களைத்ததுபோல வெற்றிப் புன்னகையுடன் வகுப்புக்குள் நுழைவான். டிபன் பாக்ஸிலிருந்து கழித்துப் போடும் கறிவேப்பிலை அளவுக்குக் கூட வில்லியம்ஸை சுதா கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. வில்லியம்ஸ் எங்கள் வகுப்பைக் கடந்து போகும்போது நாங்கள் கோரஸாக "வாசமில்லா மலரிது" பாடும்போதும் அதில் தனக்கு சம்பந்தம் உண்டு என்பதுகூட சுதாவுக்குத் தெரியாது.

அன்று இடது பக்கமாகப் பார்த்துக் கொண்டேயிருந்த வில்லியம்சுக்கு சுதா இன்னும் சாப்பிடவே போகவில்லை என்பது தெரியாது. ஆனால் அவனுக்குள் இருந்த பட்சி மிகச்சரியாக சுதா டிபன் பாக்சுடன் வகுப்பை விட்டு வெளியே வரும்நேரம் பார்த்து அவன் தலையை வலதுபுறம் திருப்பியது. தன் மானசீகக் காதலியுடன் முதல்முறையாய் தன் உரையாடலை அந்த விநாடியில் தொடங்கினான் வில்லியம்ஸ். "சாப்பிடலையா?" என்பதுதான் அந்த உரையாடலின் ஆரம்பம். அந்த வார்த்தையை அவன் உச்சரித்த நேரம் கொழுத்த ராகுகாலம் என்பது வில்லியம்சுக்குத் தெரியாது.

சுதா மிக இயல்பாக அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு "ஸ்ஸாப்பிடணும்"என்று பதில் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுக்கு "சா" எப்போதுமே ஸ்ஸா தான்.அந்த ஒருவார்த்தையை ஏதோ மந்திர தீட்சை பெற்றவனைப்போல் நாள் முழுவதும் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தான் வில்லியம்ஸ். இது வேலுமயிலுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.




ஆனால் இதுவரையில் சுதாவுடனான உரையாடலை எப்படித் தொடங்குவது என்று சதா யோசித்துக் கொண்டிருந்த வில்லியம்சுக்கு பிடி கிடைத்து விட்டது. அன்று தொடங்கி விடுமுறை நாட்கள் நீங்கலாய் சுதா விடுப்பெடுத்த நாட்கள் நீங்கலாய் அனுதினமும் சுதா சாப்பிட்டுவிட்டுத் திரும்பும் வரை காத்திருந்து, அவள் தன்னைக் கடந்துபோகும் நொடியில் "சாப்பிட்டாச்சா?" என்று கேட்கத் தொடங்கினான் வில்லியம்ஸ். முதலில் சில நாட்கள் "ஸ்ஸாப்டாச்சு" என்று பதிலையும் சில சமயங்களில் உதிரியாய் ஒரு புன்னகையையும் தந்து போன சுதாவுக்கு நாளாக நாளாக எரிச்சல் வரத் தொடங்கியது. விஷயம் என்னவென்றால் இதைத்தாண்டி வேறெதுவும் கேட்க வில்லியம்சுக்கு துணிச்சல் இல்லை.

ஒரேயொரு முறை சுதாவுக்காக என்று ஒரு ஃபைவ் ஸ்டார் வாங்கி காலையில் அவள் வரும் வழியில் காத்திருந்தான் வில்லியம்ஸ். அவள் தூரத்தில் நடந்து வருவது தெரிந்து "சுதா !ஒருநிமிஷம்" என்று சொல்ல மனசுக்குள் பத்துமுறை ஒத்திகை பார்த்து அவள் கடந்து போவதை மட்டும் வேடிக்கை பார்த்தபடி நின்றான். ஒரு நல்ல வாய்ப்பை கோட்டைவிட்டதில் தன்மீதே கோபம் கொண்டு அந்த ஃபைவ் ஸ்டாரை ஆவேசமாய் விட்டெறிந்தான்......வேறெங்குமில்லை வயிற்றுக்குள்தான்!!

இதற்கிடையில் "வாசமில்லா மலரிது " விவகாரம் சுதாவுக்குத் தெரிந்து வில்லியம்ஸ் மீது ஏகக் கடுப்பிலிருந்தாள். காய்ச்சல் காரணமாய் இரண்டு நாட்கள் விடுப்பிலிருந்த வில்லியம்சுக்கு இந்த விபரம் தெரியாது. பெரும்பாலும் தனியாக வரும் சுதா அன்று தோழியருடன் வருவதையோ அவள் வகுப்புத் தோழர்களாகிய நாங்கள் வெளியில் நிற்பதையோ கவனிக்காமல் இரண்டு நாள் பிரிவுத் துயரில் இருந்த வில்லியம்ஸ் சுதாவைப் பார்த்து கொஞ்சம் சத்தமாகவே கேட்டான்.."சாப்பிட்டாச்சா?"

படீரென்று டிபன்பாக்ஸைத் திறந்து காட்டிய சுதா சொன்னாள்..'முழுக்க ஸ்ஸாப்பிட்டேன. என்னைக்காவது மீந்தா போடறேன்" அன்று மதியமே வில்லியம்சுக்கு மீண்டும் காய்ச்சல் கண்டது. ஒருவாரம் வரவில்லை. அவன் அப்பா ஒருநாள் வந்து மருத்துவ சான்றிதழ் தந்துவிட்டுப் போனார்.

அதன்பிறகு பொதுத்தேர்வு நெருங்கியதில் நாங்கள் வில்லியம்ஸை மறந்தே போனோம். அவனும் எங்களை கவனமாகத் தவிர்த்து வந்தான். இருபத்தியிரண்டு வருஷங்களுக்குப் பிறகு நாங்கள் படித்தபள்ளி வழியாகப் போக நேர்ந்தது. அந்த நாஸி கடையைக் காணோம். புதிது புதிதாக எத்தனையோ கடைகள் முளைத்திருந்தன. அங்கே ஒரு கடையின் கல்லாவில்... வில்லியம்ஸேதான்!!

மருந்துக்கடை முதலாளிக்கான எல்லா சாமுத்திரிகா லட்சணங்களும் இருந்தன. வண்டியின் வேகத்தை மட்டுப் படுத்தினேன். எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தவன் முகம் மலர்ந்து "டேய்" என்றான். வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன்."மாப்ளே! எப்படியிருக்கே! கொஞ்சமிரு" என்றவன் மருந்து வாங்க அப்பாவுடன் வந்திருந்த சிறுமியிடம், "நல்லா கேட்டுக்க பாப்பா! இந்த மருந்தை காலையிலே வெறும் வயித்தில ஸ்ஸாப்பிடணும். இந்த மாத்திரையை ராத்திரி ஸ்ஸாப்பிட்டப்புறம் ஸ்ஸாப்பிடணும்" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

வெளியேபோய் வண்டியை ஓரங்கட்டி நிழலில் நிறுத்திவிட்டு மறுபடியும் உள்ளே நுழையும் போதுதான் கடையின் பெயரை கவனித்தேன்.."சுதா மெடிக்கல்ஸ்".

Saturday, October 27, 2012

என்னை எழுதெனச் சொன்னது வான்

பாவேந்தர் பாரதிதாசனின் கம்பீரமான வரிகளில் இதுவும் ஒன்று. உண்மையில் மனிதனிடம் ஆகாயம்,பூமி காற்று,நெருப்பு,கடல், கதிர், நிலா எல்லாமே பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. பிரபஞ்ச பாஷை மனிதனுக்குப் புரிபடுவதில்லை. பாவேந்தரின் இந்த வரிக்கு நெருக்கமாக் வைத்துப் பார்க்கத் தக்க வரி, கவிஞர் வைரமுத்துவின் "வானம் எனக்கொரு போதிமரம்,
நாளும் எனக்கது சேதிதரும்"என்ற வரி.

பூமியைப் பரிச்சயப்படுத்திக் கொண்ட அளவுக்கு மனிதன் ஆகாயத்துடன் அறிமுகமாகவில்லை. மனிதன் சலனங்களையும் சப்தங்களையும் சார்ந்தே இருக்கிறான். விரிந்து கிடக்கும் வான்வெளியின் நிர்ச்சலனம் மனிதனை ஒருவித அச்சத்தில் ஆழ்த்துகிறது. உண்மையில் ஆகாயத்தின் அமைதி தூங்கும் குழந்தையின் முகம் போல் நிர்மலமானது. தூங்கும் குழந்தையின் முகத்தைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தான் சிறிது நேரத்தில் அந்தப் பளிங்குமுகம் உங்களை என்னவோ செய்யும்.



இதே நிர்ச்சலனமும் நிர்மலமும் நமம்மிடம்கூட குழந்தைப்பருவத்தில் குடிகொண்டிருந்ததே என்று நீங்கள் துணுக்குறும்போது சொல்லிவைத்தது போல் அந்தக் குழந்தை சிரிக்கும்.இந்த அவஸ்தையைத் தவிர்க்கத்தான் தூங்கும் குழந்தையை உற்றுப் பார்க்கலாகாதென்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். அப்படிப் பார்ப்பதால் குழந்தைக்கொன்றும் ஆகப்போவதில்லை. பார்க்கிற மனிதன்தான் முதலில் ரசிக்கத் தொடங்கி, பின்னர் கசியத் தொடங்கி கரைந்தே போவோமோ என்ற கலக்கத்தில் அதன் கன்னத்தைக் கிள்ளி விட்டு சரேலென நகர்ந்து விடுகிறான்.

தூங்கும் குழந்தை தூக்கத்திலேயே சிணுங்குவதும் சிரிப்பதும் போலத்தான் ஆகாயத்தில் அவ்வப்போது முகில்கள் நகர்வதும் பறவைகள் பறப்பதும்.தூங்கும் குழந்தை சிரித்தால் "சாமி பாப்பாவுக்கு பூ காமிக்கிறார்" என்றும், சிணுங்கினால் "சாமி பூவை மறைச்சுக்கிட்டார்" என்றும் மனிதர்கள் சொல்லத் தொடங்கினார்கள். தூங்கும் குழந்தை பிரபஞ்சத்தின் பெரும்சக்தியுடன் தொடர்பிலிருக்கிறது.ஆகாயமும் அப்படித்தான். சமுத்திரத்தின் பேரலைகள் சப்தமிட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆகாயத்தின் நுண்ணலைகளோ அரும்பொன்று மலரும் அதிர்வின்அலைவரிசையை மட்டுமே கொண்டிருக்கின்றன.

ஆகாயத்தின் மௌன சங்கீதத்தில் பறவைகள் சுருதி சேர்க்க, ஆலாபனை தொடங்கும் அழகிய தருணங்களில்,அபசுரமாய் அலறிப் பறக்கின்றன ஆகாய விமானங்கள். ஆனாலும் தன்னை யாசிப்பவர்கள் வாசிக்க வேண்டிய செய்திகளை அரூபமாய் மிதக்க விட்டுக் கொண்டேயிருக்கிறது ஆகாயம்.

பெரும்பாலான மனிதர்கள் ஆகாயத்துடன் அறிமுகமாகவே இல்லை. ஆகாயம் பார்க்க அவர்களுக்கொரு காரணம் வேண்டியிருக்கிறது. வானவில்,பறவை, நட்சத்திரம் நிலா என்று ஏதேனும் ஒன்றை முன்வைத்துத்தான் மனிதன் ஆகாயம் பார்க்க ஆயத்தமாகிறான்.
   
"நிலாப்பார்க்க என்றுபோய் நிலாப்பார்த்து நாளாயிற்று"என்பார் கல்யாண்ஜி.ஆகாயம் பார்க்கவென ஆகாயம் பார்த்து, நாள்கணக்கல்ல, பிறவிக்கணக்கே ஆகியிருக்கும். மொட்டை மாடியில் பாய்விரித்தோ கடற்கரை மணற்பரப்பிலோ கால்நீட்டி மல்லாந்து ஆகாயம் பார்க்கவென்று  நேரம் ஒதுக்குங்கள். வானத்தின் நீலத்தில் ஏதேனும் ஒரு புள்ளியில் பார்வை குத்திட்டு நிற்கும். அந்த காட்சிப் பிடிமானத்தில் நம்பிக்கை பெற்று கண்கள் அங்குமிங்கும் அலைபாயும். அடர்ந்து கிடக்கும் அமைதியில் மனசு ரங்கராட்டினத்தில் சுற்றுவதுபோல் சுற்றத் தொடங்கும்.

நிச்சயமாய்...மிக நிச்சயமாய்.. உள்ளே ஓர் அமைதி படரும். அந்த அமைதி நீங்கள் நெடுநாட்கள் தேடிய அமைதியாய் இருக்கும்.அதன் திடீர் வருகை உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். அலைவீசும் அதிர்சிரிப்பாகவோ பீறிட்டு வரும் அழுகையாகவோ உங்கள் எதிர்வினை இருக்கும். சங்கோஜமில்லாமல் என்ன வருகிறதோ அதை வெளிப்படுத்துங்கள்.

வெளிப்படுத்த வெளிப்படுத்த மனசு லேசாகும். லேசாகும் மனசில் இதுவரை பாரங்களாய் அழுத்திய கவலைகள்,மேகங்களாய் மிதக்கும்.உங்களை அதுவரைஅதட்டிய அச்சங்கள் பூனைபோல் வால்குறுக்கி உங்கள் கால்களைஉரசி முனகும். உங்களையும் அறியாத சமநிலையில் உங்களுக்கு நீங்களே சாட்சியாய் எல்லாஉணர்ச்சிகளையும்,எல்லா எண்ணங்களையும் தள்ளியிருந்து பார்ப்பீர்கள்.

அப்புறம்,உங்களுக்குள் ஓர் ஆகாயம் விரியும். அந்த ஆகாயம் ஏற்கெனவே உள்ளே இருந்ததுதான் என்பதையும் உணர்வீர்கள்.அந்த ஆகாயத்தை பத்திரப்படுத்துவீர்கள். பத்திரப்படுத்துவது என்றால் வேறொன்றுமில்லை.உங்கள் ஒவ்வொரு சிந்தனைக்கும் ஒவ்வொரு செயலுக்கும் அந்த ஆகாயம் சாட்சியாய் இருப்பதை உணர்வீர்கள்.

ஆகாயம் பார்ப்பதோர் உபாசனை. ஒரு போதை வஸ்துவைப்போல் நீங்கள் ஆகாயத்தை சுவைப்பீர்கள். உங்களுக்குள் ஆகாயம் நிரம்ப நிரம்ப ஆகாயத்தை சுகிப்பீர்கள். முதல் பார்வையில் உங்கள் பார்வைக்குப் பிடிமானமாய் சிக்கிய ஆகாயத்தின் நீலப்புள்ளி, உங்கள் நெற்றிப் பரப்பின் மையத்தில் விரிந்து கொள்ளும் அற்புதத்தில் கலந்து கரைந்து காணாமல் போகவேனும் ஆகாயம் பாருங்கள்.ஆகாயம் ஆகுங்கள்.

Friday, October 26, 2012

தட்சிணாமூர்த்தி மாடம்



"உங்கள் அலுவலக அறையில் தென்முகமாக தட்சிணாமூர்த்தி படம் வைத்து தீபமேற்றுங்கள்". பாலரிஷி ஸ்ரீ  விஸ்வசிராசினி சொன்னதுமே செய்ய வேண்டுமென்று தோன்றிவிட்டது. எங்கள் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடக்கும். நான் வழிபாட்டுக் கூடத்துக்குப் போகும் முன்னரே தீப தூபங்கள் தயாராக இருக்கும்.

இது தெரிந்தோ என்னவோ,"இந்த தீபத்தை நீங்கள்தான் ஏற்ற வேண்டும்,நீங்கள் ஊரில் இல்லாதபோது மற்றவர்கள் ஏற்றலாம் என்று சொல்லியிருந்தார் பாலரிஷி. முதல் வேலையாய் தட்சிணாமூர்த்தி படத்துக்கேற்ற மாடம் வாங்கப்பட்டது. விசேஷ காலங்களில் நெய்தீபமும், மற்ற நாட்களில் எண்ணெயும் இட்டு தீபம் ஏற்றலாம் என்று முடிவானது.

தீபத்திற்கான பித்தளை விளக்கு டெரகோட்டா விளக்கு இரண்டுமே வாங்கப்பட்டன.மெல்ல மெல்ல விளக்கிலுள்ள திருகாணி திறந்து திரியிடவும் எண்ணெய் ஊற்றவும் பழகினேன். எண்ணெய் பட்டால் திரி நனைந்து தொய்ந்து போவதும், எண்ணெய் படாவிட்டால் திரி சுடர்பெறாமல் "சுர்"ரென்று கருகுவதுமான கண்ணாமூச்சிகளைக் கடக்கப் பழகினேன். ஒரே உரசலில் பிளாஸ்டிக் மெழுகு பற்றுமா மரக்குச்சி பற்றுமா என்ற பட்டிமண்டபத்தில் தீர்ப்புச் சொல்லும் விதத்தில் தகுதி பெற்றேன்.

திரி பற்றும்வரை பொறுமையாயிருக்கவும் விரல் சுடும்முன் குச்சியை உதறி அணைத்து வீசவும் தட்டுத் தடுமாறி முயற்சிப்பதை நமட்டுச் சிரிப்புடன் அலுவலகத்தில் பிரதாப் பர்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பிரதாப்புக்கு பிப்ரவரியில் கல்யாணம் என்பதால் அந்தப் பையனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதை இந்தப் பதிவில் குறிப்பிடப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அழகான திரிகளைப் பார்த்தாலும் சின்னச் சின்ன அகல்களைப் பார்த்தாலும் வாங்கத் தோன்றிற்று. நேற்று எல்.எம்.டபிள்யூ நிறுவனத்தில் தந்த மலர்ச்செண்டில் இருந்த ரோஜாக்களைக் கத்தரித்து மாடத்தை நானாக அலங்கரித்தேன்.யோகா தியானம் என்று வந்த பிறகு பூஜை பழக்கங்கள் வெகுவாகக் குறைந்து பத்தாண்டுகள் இருக்கும். இப்போது கொம்பில்
படரும் கொடிபோல பூஜா மனோபாவம் சிகரங்களில் படியும் முகில் மாதிரி படர்ந்தது. விடுமுறையில் கூட அலுவலகம் திறந்து விளக்கேற்றி வைத்துவிட்டுத் திரும்பும் அளவு அதில் ஆர்வமும் ஈடுபாடும் வளர்ந்தது.




இதனால் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றிய எதிர்பார்ப்புகளைக் கடந்து, தீபமேற்றிய சில நிமிடங்களில் அந்த அறையில் பரவும் அமைதியும் மெல்லதிர்வுகளும் மனதுக்குப் பிடிபட்டன. மாடத்தை நெருங்கும் போதே மனம் மலரத் தொடங்கிற்று. தளும்பல்கள் தடுமாற்றங்களிலிருந்து  மீண்டு "சட்"டென்று தெளிவின் பாதையில் வெளிச்ச நடை நடப்பது போல் உணரத் தலைப்பட்டேன்.

இந்தப் பின்புலத்தில்தான் எனக்கு குங்கிலியக்கலய நாயனாரைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு நாளில் சில நிமிடங்கள் தீபமேற்றுவதில் செலவிடும்போதே இத்தனை நுட்பமான அனுபவங்கள் வாய்க்குமென்றால் வாழ்வையே திருக்கோவிலில் குங்கிலியமிட அர்ப்பணித்த அவரின் அனுபவம் எத்தனை அற்புதமாய் இருந்திருக்க வேண்டும்!!

இறை சந்நிதியில் ஒருநாளிட்ட குங்கிலியம், அந்த நறுமணப்புகையை எழுப்பி, நமஸ்கரித்து எழுந்ததும் புகைநடுவே தெரிந்த பரமன். அந்த நிர்ச்சலமான இலிங்கத் திருவுருவைக் கண்டவுடன் உள்ளே எழுந்த அசைவு, அந்த அசைவில் உணர்ந்த ஆனந்தம் என்று, அந்தப் பேரனுபவத்தில் லயித்திருப்பார் கலயர். ஒவ்வொரு முறை குங்கிலியமிடும் போதும் அந்தப் பரவசம் புதிய புதிய அனுபவமாய் புகைபுகையாய் அலையலையாய் புறப்பட்டு அவரை அள்ளிச் சென்றிருக்கும்.தன்னைக் கடந்த அந்த அனுபவத்தில் குங்கிலியத்திலிருந்து நறுமணப் புகையாய் தானேயெழுந்து அமிர்தலிங்கத்தை ஆரத் தழுவும் தவிப்பு அவரை நாயன்மாராய் உயர்த்தியிருக்கும். செயலும் நினைவும் முற்றாகப் பொருந்துதலே யோகம். இதை எனக்கு உணர்த்திற்று தட்சிணாமூர்த்தி மாடம்.

Tuesday, October 23, 2012

யானை தப்பித்து வந்தால்.....




"மிருகக்காட்சி சாலையில் இருந்து ஒரு யானை தப்பித்து விட்டது. அங்கே ஒரு பள்ளிக்கூடம் வேறு. இப்போது யானையைப் பிடிக்க என்ன செய்வீர்கள்?" அந்த இளைஞர்கள் மத்தியில் இந்தக் கேள்வியை விசியபோது யானைகள் பற்றிய எத்தனையோ எண்ணங்கள் எனக்குள் ஓடத் தொடங்கின.

வனப்பகுதிகளை இழந்த யானைகள் நகர்ப்புறப் பகுதிகளில் நுழையத் தொடங்கி நீண்ட காலம் ஆகிவிட்டது. அநேகமாய் அடுத்த தலைமுறைக்குள் இது பழகி விடலாம். "உன் வேலையை நீபார் என் வேலையை நான் பார்க்கிறேன்" என்று யானைக்கும் மனிதனுக்கும் "சக-வாசம்" தொடங்கிவிடலாம்.



வீட்டைச் சுற்றி வளையவரும் பூனைகளைப்போல் யானைகளை மனிதன் ஆக்கிவைத்தாலும் அதிசயமில்லை. சர்க்கஸில் யானைகளை சைக்கிள் ஓட்ட வைத்தவர்கள்தானே நாம்!"பிளிறல் மறந்த சதை எந்திரமாய் வரிசையில் வந்து வணக்கம் சொல்லும்" சர்க்கஸ் யானைகள் பற்றி முன்பொரு கவிதையில் எழுதியிருந்தேன்.

யானைகளை யானைகளாகவே பார்த்தவர்கள் சங்கப் புலவர்கள். அதன்பிறகு பக்திக் கவிதைகள் கடவுளுக்கும் யானைக்கும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தின. ஓங்காரமாகிய "ஓம்" எனும் எழுத்தின் வடிவாய் ஆனைமுகக் கடவுள் இருக்கும் தாத்பர்யத்தை நியாயப்படுத்த சில புனைவுகள் உருவாயின.

கயிலாயத்திலுள்ள சித்திர மண்டபத்தில் ஓங்காரத்தைப் பார்க்கையில் சிவபெருமான் ஆண்யானை வடிவெடுக்க, உமையம்மை பெண்யானை வடிவெடுத்து   கணபதி தோன்ற அருளினர் என்ற புராணக்கதையை திருஞானசம்பந்தர் அழகான தேவாரப் பாடலாய் ஆக்கினார்.

"பிடியதன் உரு உமைகொள மிகு கரி அது
  வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
  கடி கணபதி வர அருளினன் - மிகுகொடை
  வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே"

என்று வலிவலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானைப் பற்றி எழுதினார் அவர்.

பின்னர் கடவுளர் நடைக்கும் காவிய நாயகர் நடைக்கும் யானையின் நடை உவமையாயிற்று.சீதையும் இராமனும் வனத்தில் இருந்தபோது, அன்னத்தின் நடையைக் கண்டு இராமன் சீதையைப் பார்த்து குறிப்பாய் புன்னகைக்க, அங்கே அவர்களைக் கடந்து சென்ற யானைக்கன்றைக் கண்டு சீதை முறுவல் பூத்தாளாம்.

 "ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கிச்சிறியது ஓர் முறுவல் செய்தான்;
மாது அவள்தானும், ஆண்டுவந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப்புதியது ஓர் முறுவல் பூத்தாள்"

என்கிறான் கம்பன்.

இராமாவதாரத்தில் நடந்த அதே நடையை கிருஷ்ணாவதாரத்திலும் நடந்தார் திருமால்.

 "வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
  நாரணன்   நம்பி நடக்கின்றான்"
என்பது ஆண்டாளின் கல்யாணக் கனவு..

இதற்கு உரையெழுத வந்த உரைகாரர்கள் அமர்க்களம் செய்தார்கள். என்னதான் கனவாகவே இருக்கட்டும்.கல்யாண மண்டபத்துக்குள் மாப்பிள்ளை ஆயிரம் யானைகளுடன் நுழைவதாய் சொன்னால் அது சாத்தியமா? கனவு மெய்ப்பட வேண்டுமல்லவா?

கண்ணனின் நடையே யானை நடப்பது போலத்தான் இருக்குமாம். 'மதயானை போன்றதோர் விதமான நடை" என்று ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள். யானை போல் நடக்கும் கண்ணன் தனியாக வந்ததில்லையாம். அதையும் ஆழ்வார்கள்தான் சொல்கிறார்கள். தனக்கு நிகரான நண்பர்கள் ஆயிரம் பேர் சூழ வருவானாம்.

"தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்"

என்கிறார்கள் ஆழ்வார்கள்.அப்படியானால் அந்த ஆயிரம் தோழர்களின் நடையும் யானைநடை என்று தெரிகிறதல்லவா!!

யானைபோல் நடக்கக் கூடிய கண்ணன் தனக்கு நிகரான ஆயிரம் நண்பர்களுடன் வருவதைத்தான் "வாரணமாயிரம் சூழ வலம் செய்து" என்று ஆண்டாள் பாடினாள் என்கிறார்கள் உரைகாரர்கள்.

இதிகாச காலம் தொடங்கி எம் ஜிஆர் காலம் வரை கதாநாயகர்கள் நடைக்கு உவமை சொல்ல யானை பயன்பட்டது.

"தேக்கு மரம் உடலைத்தந்தது
  சின்னயானை நடையைத் தந்தது"

என்றார் கவியரசு கண்ணதாசன். இதற்கு முன்னர் சைவ வைணவ சண்டைக்கும் யானையை வம்புக்கிழுத்தான் காளமேகம். திருமால் இந்த அண்டத்தையே விழுங்கியபோது சிவன் எங்கிருந்தான் என்றொரு வைணவர் சைவரைச் சீண்ட, அதற்கு சைவரோ, யானை ஒரு பெரிய கவளத்தை விழுங்கும்போது பாகன் அதன்மேல் அமர்ந்திருப்பதுபோல் சிவன் இருந்தான் என்றாராம்.காளமேகம் பாடுகிறார்:

"அருந்தினான் அண்டமெல்லாம் அன்றுமால்-ஈசன்
  இருந்தயிடம் ஏதென் றியம்ப- பொருந்திப்
  பெருங்கவளம் யானைகொளப் பாகனதன் மீதே
   இருந்தபடி ஈசனிருந் தான்"

இப்படி காலங்காலமாய் இலக்கியங்களில் இழுபடும் யானைகளின் நலன்கருதி எழுதப்படும் கவிதைகளும் ஏராளம். உடனடியாக நினைவுக்கு வருவது,

"உங்கள் ஆசைக்காகத் தந்தங்களையும்
   அதிர்ஷ்டத்திற்காக ரோமங்களையும்
     இழந்து நிற்கும்
      யானைக்கொருநாள் மதம்பிடிக்கும்"
என்ற இளையபாரதியின் கவிதைகள்தான்.

நேற்று சக்தி எக்ஸலன்ஸ் அகாதமியில் இருபது இளைஞர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.சூழலைக் கையாளும் திறனைப் பரிசோதிக்க ஒரு கேள்வி விவாதிக்கப்பட்டது.

"ஒரு பள்ளி வளாகம் அருகே மிருகக் காட்சி சாலை இருந்து, அதிலிருந்த யானை தப்பித்து வெளியே வந்து விட்டது  என்று வைத்துக் கொள்ளுங்கள். யானையைப் பிடிக்க என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?"

 வெவ்வேறு பதில்களுக்கு நடுவே ஒர் இளைஞர் எழுந்து சொன்னார். "பள்ளி இருக்கிற சாலையில் "நோ-என்ட்ரி" போர்டு வைத்து விடலாம் சார்
.யானை திரும்பிப் போய்விடும்" !!!!

நவராத்திரி கவிதைகள்..........10

அந்தமில்லாச் சுகமடைந்தோம் 

கோட்டைகள் நடுவே ஸ்ரீபுரத்தில்-அவள்
        கொலுவீற்றிருக்கும் சாம்ராஜ்யம்
     மீட்டிடும் வீணைகள் மத்தளங்கள்-இளம்
         மெல்லியர் நடனத்தில் சிவலாஸ்யம் 
     ஏட்டினில் எழுதும் வரியிலெல்லாம்-அவள்
         எழில்திரு வடிகளின் ரேகைகளே
     நீட்டிய சூலத்தின் நுனியினிலே-பகை
         நடுங்கச் செய்திடும் வாகைகளே

    பூரண கன்னிகை திருவருளே-இந்தப்
        பிரபஞ்சம் தோன்றிய கருவறையாம்
    காரண காரியம் யாவையுமே-எங்கள்
        காளி சமைத்த வரைமுறையாம்
    தோரண மாவிலை அசைவுகளில்-அந்தத்
       தோகையின் சுவாசம் தென்படுமாம்
    நாரணி நான்முகி நாயகியாள்-நம்
       நாபிக் கமலத்தில் அமர்ந்தனளாம்

      ஆயிரம் அசுரர்கள் எதிர்ப்படினும்-விழி
             அசைவினில் யாவரும் தவிடுபொடி
        தாயெனத் தொழுது பணிந்தவரை-அள்ளித்
              தாங்கிடும் அவளின் கருணைமடி
        தூயநல் மலரிட்டு தூபமிட்டு-அன்னை
              திருவுளம் மகிழ்ந்திட பூசையிட்டால்
        மாயைகள் விலக்கி மலர்த்திடுவாள்- நம்
               மனங்கொண்ட காயங்கள் உலர்த்திடுவாள்

     சுந்தரி சியாமளை  ஸ்ரீபுரத்தாள்-எழில்
         ஸ்ரீசக்ர நாயகி  திரிசடையாள்
     மந்திர ரூபிணி மலர்ப்பதத்தாள்-எழும்
        மமதைகள் எரிக்கிற விழிநுதலாள்
     தந்திர சாத்திர தாத்பரியம்-தனில்
         தாண்டவம் புரியும் சதுர்மறையாள்
      அந்தரி கதியென சரணடைந்தோம்-ஓர்
          அந்தமில்லாத சுகமடைந்தோம்

நவராத்திரி கவிதைகள்.............9

தெளிவு தந்தாள்



ஒருநாள் கூத்துக்கு நான்வைத்த மீசையை
ஒவ்வொரு நாளும் ஒழுங்குசெய்தேன்
வரும்நாள் ஏதென்ற விபரம் இல்லாமல்
வாழ்வை நானாய் பழுது செய்தேன்
அருகில் இருப்பதை அலட்சியம் செய்துநான்
அங்கே பறப்பதற்கழுது வந்தேன்
திருநாள் மலர்ந்தது தெளிவு பிறந்தது
தாயே உன்னிடம் தொழுது வந்தேன்

வழியில் குத்திய கற்களை உதைத்தேன்
வைரம் அவையென்று தெரியலையே
பழியாய் விழுந்த பேச்சினில் சலித்தேன்
பழவினை அவையென்று புரியலையே
சுழல்கிற நதியில் படகெனப் போனேன்
துடுப்புகள் இரண்டும் இயங்கலையே
அழுதவன் விழிகளில் அம்பிகை தெரிந்தாள்
அதன்பின் இதயம் மயங்கலையே

ஏதோ ஒன்றை இயற்றிடத் தானே
இங்கேஎன்னை அனுப்பிவைத்தாள்
தீதோ நன்றோ எல்லாம் பார்த்து
திரும்புக மகனே எனவிடுத்தாள்
யாதோ என்வழி எங்கோ பயணம்
எல்லாம் அவளே முடிவுசெய்தாள்
வாதை தாங்கி வாடும் நேரம்
வந்தே சக்தி தெளிவுதந்தாள்



பார்த்தவை எல்லாம் பாதை மலர்கள்
பறிக்க நினைப்பது நியாயமில்லை
சேர்த்தவை எல்லாம் செல்வமுமில்லை
சொந்தம் போலொரு மாயமில்லை
கூத்துகள் ஆடி மேடையில் விழுந்தேன்
காளியின் அருளால் காயமில்லை
வேர்த்துக் கிடந்தேன் செம்பட்டுச் சேலை
வந்து துடைத்தபின் சோகமில்லை

Monday, October 22, 2012

நவராத்திரி கவிதைகள்............8

 உன்பாதம் துணையாகுமே


ஆறுகால் கூப்பியே
அழகான வண்டினம்
அன்றாடம்தொழும்தாமரை !

ஈறிலா இன்பங்கள்
எவருக்கும் தருகின்ற
இணையில்லா செந்தாமரை!

பேறுகள் யாவையும்
தேடியே அருளிடும்
திருமகள் அமர்தாமரை!

கூறுமென் கவிதையின்
வரிகளில் பதியட்டும்
திருவடிப் பொன்தாமரை!

---


பாற்கடல் துயில்பவன்
பாதங்கள் வருடிடும்
பொன்மலர்க் கைகள் நீட்டு

தோற்றவர் வெல்லவும்
மாற்றலர் அஞ்சவும்
தாயேநல் வழிகள் காட்டு

கீற்றெனத் தென்படும்
வாய்ப்புகள் கனியவே
வந்துநீ பாதை காட்டு
----


நேற்றுகள் வலித்ததை
நினைவிலே கொள்ளாத
நிலையினை நெஞ்சில் நாட்டு!

அலைமகள் நீவந்து
அமர்கிற நெஞ்சங்கள்
அலைபாய வழியில்லையே!

நிலைகொண்ட உறுதிகள்
நடுங்காமல் வளர்ந்திட
வேறேதும் கதியில்லையே

தலைகளில் மகுடங்கள்
திகழ்வதும் விழுவதும்
தாயேஉன் முடிவல்லவோ

விலையிலாக் கருணையே
வாழ்வெனும் புதிருக்குன்
விழிகளே விடையல்லவோ !

-------
மாலவன் இதயத்தின்
மையமே வையத்தின்
மங்கலக் கீர்த்திமலரே !

நீலமா மேனியில்
நீந்திடும் மீன்விழி
நளினமே! வண்ண வடிவே!

காலத்தின் சுழற்சிகள்
காக்கின்ற அன்னமே
கனதனச் செல்வ நிலையே

ஓலங்கள் தாங்காத
ஒப்பிலாத் தாய்மையே
உன்பாதம்  துணையாகுமே

இன்னொரு பிளேட் இட்டிலி

சதுரங்கத்தில் சிப்பாய்களும் பிரதானிகளும் சூழ்ந்திருக்க ஆட்டம் தொடங்கி நான்கு நிமிஷங்கள் வரை நகர வழியில்லாமல் மலங்க மலங்க விழித்து நிற்கும் ராஜா ராணி வெள்ளைக் காய்கள் போல், தட்டின் நடுவில் "தின்னு தின்னு" என்று ஆவிபறக்க கெஞ்சிக் கொண்டிருந்தன இரண்டு இட்டிலிகள். நகரத் தொடங்கிய சிப்பாய்கள் போலவும் கலையத் தொடங்கியிருந்த பிரதானிகள் வரிசை போலவும், சற்றே தள்ளி நின்று "வா வாத்யாரே வூட்டாண்ட' என்று கலர் கலராகப் பாடிக்கொண்டிருந்தன, மூன்று வகை  சட்டினிகள்.

ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறங்களில்  இருந்த சட்டினிகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் கிண்ணத்துக்குள் "கிண்"ணென்றிருந்தது சாம்பார். ஆட்டோவிலிருந்து எட்டிப் பார்க்கும் பள்ளிக் குழந்தைபோல்  ஆவலுடன் கிண்ணத்திலிருந்து எட்டிப் பார்த்தது சின்ன வெங்காயம். இந்த இரண்டு வகையிலும் சேராமல் "வழவழ கொழகொழ"என்று எண்ணெய் அப்பிக்கிடந்த மூன்றாம் அணி, இட்லிப்பொடி.தட்டிக் கேட்க ஆளில்லாமல் தட்டில் அங்குமிங்கும் அத்துமீறிக் கொண்டிருந்தது..



தனக்கு கிடைத்திருக்கும் சர்வதேச அந்தஸ்து பற்றி அறிந்தோ அறியாமலோ அமைதியாய் இருந்தன இட்டிலிகள். இரண்டு மெகா பிரபலங்கள் விருந்துண்ட போது இட்டிலியின் சர்வதேச மகத்துவம் அம்பலத்துக்கு வந்ததை உங்களில் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள்.

சென்னையில் இரண்டு பிரபலங்கள் விருந்துண்டு கொண்டிருந்தார்கள். ஒரு பிரபலம் தயிர்சாதத்துக்கு அந்த நட்சத்திர உணவகத்தில் அணிவகுத்து நின்ற ஊறுகாய்களின் அணிவரிசையை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். எல்லாம் பழக்க தோஷம்தான். குடியரசுத் தலைவராக இருந்து முப்படைகளின் கம்பீரமான அனிவகுப்பை பலமுறை பார்வையிட்டவரல்லவா அவர். ஆமாம் .அவரேதான் .அப்துல் கலாமேதான். பார்வையீடதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. மூன்று வகை ஊறுகாய்களை தட்டில் இட்டுக் கொண்டு வந்தார். அருகே இருந்த இன்னொரு பிரபலமோ இட்டிலியைப் போலவே வெள்ளை வெளேரென்று ஜிப்பா அணிந்திருந்தார். ஆமாம்,அவரேதான்.கவிஞர் வைரமுத்துவேதான்.

கலாமிடம் கவிஞர் சொன்னார்,"அமெரிக்காவில் இந்திய உணவுவகைகள் பற்றி ஆய்வு செய்து இரண்டு முக்கிய விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான உணவு எது, மிகவும் ஆபத்தான உணவு எது என்று கண்டறிந்திருக்கிறார்கள்". வெள்ளி ஸ்பூனால் தயிர்சாதத்தின் தலையில் ஆவக்காய்   ஊறுகாயின் சாந்தைத் தடவிக் கொண்டே கேட்டார் கலாம்.

"என்ன சொல்கிறார்கள்?". "இந்தியாவின் மிகப் பாதுகாப்பான உணவு, இட்டிலி என்கிறார்கள். அதில் எல்லா மினரல்களும் உண்டு, கார்போஹைட்ரேட் உண்டு, முக்கியமாக அவிக்கப்பட்டிருக்கிறது. எனவே பாதுகாப்பானது. மிகவும் ஆபத்தான உணவு, உங்கள் தட்டில் முற்றுகையிட்டிருக்கும் ஊறுகாய்" என்றார்.

"தெரியும்சார்! ஆனால் எப்போதாவதுதான் ஊறுகாய் எடுத்துக் கொள்வேன்' என்று சொன்ன கலாம்  கணநேரம் யோசித்து கருணை மனுக்கள் போல் ஊறுகாயை நிராகரித்து விட்டதாக நட்சத்திர உணவுவிடுதி வட்டாரங்களில் இன்றும் பேச்சு நிலவுகிறது.

இன்றும் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் இருந்து இந்தியா வருவதை அங்கே வசிக்கிற இந்தியர்கள் "ஊருக்கு" போவதாகத்தான் சொல்கிறார்கள். அங்கே மருத்துவர்களும் மற்ற நண்பர்களும் சொல்லி அனுப்பும் அறிவுரை என்ன தெரியுமா? "ஊரிலே போய்  ஹோட்டல்களிலே பசியாற    வேண்டி வந்தா இட்டிலி மட்டும் சாப்பிடுங்க !எல்லா இடங்களிலேயும் நம்பி சாப்பிட முடியாது". இதற்குக் காரணம் ஏதேதோ இடங்களில் எக்குத் தப்பாக சாப்பிட்டு வாரம் முழுவதும் வயிற்று வலியோடு போராடி விமானமேறிப் போய்விடுகிறவர்கள் பலர்.



அப்படி அறிவுரை கேட்டு வந்தும் அவஸ்தைப்பட்டுத் திரும்பிய ஒருவரிடம் மருத்துவர் கேட்டிருக்கிறார், "ஊரில போய் என்ன சாப்பிட்டீங்க??" பரிதாபமாகச் சொன்னாராம், "இட்டிலிதாங்க சாப்பிட்டேன்". அவர் வயிற்றை கார் ஹாரன்போல் கண்டபடி அழுத்திப் பார்த்துவிட்டு இன்னொரு கேள்வி கேட்டாராம், "இட்டிலிக்கு சட்டினி தொட்டுக்கிட்டீங்க?" 'ஆமாம்" என்றதும் அட்டகாசமாக சிரித்துவிட்டு ," ஊருக்கு போனா   ஹோட்டலிலேயும் சரி, வீட்டிலேயும் சரி, பசியாறும்போது சட்டினியைத் தொடாதீங்க. பச்சைத் தண்ணி ஊத்தி அரைக்கிறாங்க. அத்தனையும் கிருமிங்க" என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.என்ன அநியாயம்!! ஆனால் இந்தியர்களில் கூட பலர் உணவகங்களுக்குப் போனால் சட்டினி பகிஷ்கரிப்பு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்றும் அயல் நாட்டு நண்பர்கள் பலபேர் இட்டிலியை சாம்பாரில் கதறக் கதறக் குளிப்பாட்டி சாப்பிடுகிறார்கள்.கோவையின் புகழ்பெற்ற அன்னபூர்ணா கௌரிசங்கர் ஹோட்டலில் இட்டிலி என்று பொதுவாகச் சொன்னால் சாம்பாரில் நீந்தும் இட்டிலிகள்தான் வரும். திருச்சியிலிருந்து வந்த சந்துரு மாமா ஒருமுறை என்னிடம் சொன்னார். 'இட்டிலி கேட்டேன். ஒரு பிளேட் சாம்பார் வந்த்து. இட்டிலி எங்கேன்னு கேட்டேன். உள்ளே இருக்குன்னு பதில் வந்தது. மீன் பிடிக்க்ற மாதிரி ஸ்பூன்லே தேடித் தேடி சாப்ப்ட்டு வந்தேன்" என்றார். இத்தனைக்கும் அது மினி இட்டிலிகள் அறிமுகமாகாத காலம்.

கடவுளர் மீதும் அரசர்கள் மீது காதலுற்ற  பெண்களின் தாய் நிலையிலிருந்து ,பாடிய கவிஞர்கள் உண்டு. "நற்றாயிரங்கல்" என்றே இதற்கோர் இலக்கிய வகைமை உண்டு. ஆனால் இட்டிலியின் அம்மா நிலையிலிருந்து ஒரு கவிஞர் பாடியிருக்கிறார். அவர் ஒரு மகத்தான கவிஞர்.

"ராசாமக போலிருந்தே
நாலுபேரு பாத்து ஒன்னை
லேசா எண்ணிப் பேசலாச்சே பெண்மணி-ஒன்
நெஞ்சு கல்லா மாறிப்போச்சே கண்மணி!

வட்டில் எனும் குளந்தனிலே
 வாத்துதனைப் போல் மிதந்த
இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்-நீ
எந்தப்பயல் மீதுகாதல் ஆனாய்"

என்று பாடிய கவிஞர்தான் கே.சி.எஸ்.அருணாசலம் அவர்கள்.

இத்தனையும் இருக்க, இட்டிலி இந்தியப் பலகாரமே இல்லை என்றும் ஒர் இலக்கிய அறிஞர் அடித்துச் சொல்கிறார். அவர் பெயர்கூட, இ.சுந்தரமூர்த்திதான்.இந்தியாவில் பண்டங்களை வேகவைக்கும் பழக்கமே இல்லை என்றும் இராஜேந்திர சோழன் இந்தோனேஷியா பக்கம் படையெடுத்தபோது அங்கே இட்டிலியைத் தின்று பார்த்து இங்கே அந்தக் கலையை இறக்குமதி செய்தானாம். இட்டிலி செய்வது எப்படி என்று மக்களுக்கு விரிவாக விளக்க நேரமில்லாமல் "இட்டு அவி" "இட்டு அவி" என்று சொன்னதே  இட்டிலி என்றாகியதாய் இயம்புகிறார் இ.சுந்தரமூர்த்தி அவர்கள்.


தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராய் இருந்த அந்த அறிஞரின் இந்த ஆய்வுரை கேட்டு அரைகுறையாய் தமிழ் படித்த பண்டிதர் ஒருவர் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்.

"உணவை அவித்துத் தின்னும் பழக்கம் இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளாகவே உண்டு என்பதற்கு திருக்குறளிலேயே சான்று இருக்கிறது."

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்"

என்பது திருக்குறள்.

பொரியைக் கூட வாயில் போடும் போது வறுக்காமல் அவித்துத் தின்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள்" என்று விளக்கவுரை வேறு சொன்ன  அந்தப் பண்டிதருக்கு  ஏதோ விருது கொடுத்து அடக்கினார்கள்.

அடேடே! இட்டிலியைப் பற்றி பேசிக்கொண்டேயிருந்ததில் வந்த இட்டிலி ஆறிப்போனதை கவனிக்கவில்லை பாருங்கள்!! "சர்வர்! சூடா இன்னொரு பிளேட் இட்டிலி கொடுங்க!"

Sunday, October 21, 2012

நவராத்திரி கவிதைகள்............7


 ஏதேதோ செய்கின்றவள்


காலத்தின் முதுகேறிக் கடிவாளம் தேடினால்
                கைக்கேதும் சிக்கவில்லை
   ஓலம்நான் இடும்வண்ணம் ஓடிய குதிரையின்
                 உன்மத்தம் புரியவில்லை
    தூலத்தின் உள்ளிலே தேங்கிய கள்ளிலே
                  தலைகால் புரியவில்லை
      நீலத்தின் நீலமாய் நீலிநின்றாள் அந்த
                  நொடிதொட்டு நானுமில்லை

வந்தவள் யாரென்ற விபரமும் உணருமுன்
                  வாவென்று ஆட்கொண்டவள்
நொந்ததை நிமிர்ந்ததை நிகழ்ந்ததை எல்லாமே
                    நாடகம் தானென்றவள்
அந்தத்தின் ஆதியாய் அத்தனின் பாதியாய்
                    அழகுக்கும் அழகானவள்
எந்தவிதம் என்னையும் ஏற்றனள் என்பதை
                      இன்றுவரை சொல்லாதவள்



ஆசையின் பிடியிலே ஆடிய வதையிலே
                  ஆனந்தம் தரவந்தவள்
  தூசுடைக் கண்ணிலே மீசையின் மண்ணிலே
                     துகிலாகப் படர்கின்றவள்
 ஏசுவார் வாழ்த்தவும் பேசுவார் போற்றவும்
                      ஏதேதோ செய்கின்றவள் 
 காசியை காஞ்சியை கூடல்மா நகரினை
                       கடவூரை ஆள்கின்றவள்

தாமாக வந்திங்கு தரிசனம் தருகின்ற
                  தாய்மனம் என்னென்பதோ
நாமாக முயன்றாலும் நடக்காத அற்புதம்
                   நடத்துதல் என்னென்பதோ
ஊமையின் நாவிலே ஓங்காரம் ஆகிடும்
                    உத்தமி ஆட்கொள்கிறாள்
 மாமயில் வடிவாக மயிலைக்கு வந்தவள்
                     மனைதோறும் சுடராகிறாள்










Saturday, October 20, 2012

நவராத்திரி கவிதைகள் .......6

வாராய் வாராய் 
            மஹாசக்தி...!


பூக்கள் இன்றைக்கு மலருகையில்-உன்
பொற்பதம் சேர்ந்திடத் தவித்திருக்கும்
தேக்கிய தேன்துளி யாவினிலும்-அந்த
தெய்வக் கனவு தெறித்திருக்கும்
பாக்கியம் செய்தோம் பராசக்தி-உன்
பொன்நவ ராத்திரி தொடங்கியது
ஏக்கம் அச்சம் சோர்வெல்லாம்-அட
எப்படி உடனே அடங்கியது

தாங்கிய சூலத்தின் முனைகளிலே-நீ
துணையென்னும் உறுதி மின்னுதம்மா
வாங்கிய வினைகளின் சுமைகளெல்லாம்-உனை
வழிபட வழிபடக் கரையுதம்மா
தூங்கிய பொழுதிலும் சலங்கையொலி-ஒரு
தூரத்தில் தூரத்தில் கேட்குதம்மா
மூங்கிலின் துளைவழி கசியுமிசை-உன்
மூச்சுக் காற்றெனப் பரவுதம்மா



ஆசனம் கொடுப்போம் மலர்தொடுப்போம்-ஓர்
ஆரத்தியெடுப்போம் நமஸ்கரிப்போம்
வாசனை தூபங்கள் வைத்திருப்போம்-நீ
வந்துவிட்டாய் என்று காட்டிவிடு
ஈசனின் பாகத்தில் இருப்பவளே-உன்
ஈடிணையில்லாக் கருணையிலே
நேசனின் துணையுடன் வந்துவிடு-நீ
நேரே நேரே காட்சிகொடு

ஏற்றிய தீபத்தின் அசைவினிலே-நீ
எழிலாய் அசைவது தெரிகிறதே
சாற்றிடும் தோத்திர வரிகளிலே-உன்
சீறடி பதிவது தெரிகிறதே
நேற்றின் வலிகள் இன்றில்லை-இனி
நாளை குறித்தொரு பயமில்லை
காற்றாய் மழையாய் வருபவளே-உன்
கால்நிழல் சேர்ந்தபின் குறையில்லை

பூசனைச் சடங்குகள் தெரியாமல்-நல்ல
புனித மந்திரம் உணராமல்
ஆசை மட்டும் வைத்திருந்தால்-மனை
ஆலயம் ஆக்கித் தருவாயே
பேசப் பேசத் திகட்டாத-நல்ல
பெருமைகள் கொண்ட பராசக்தி
ஓசையில்லாத் தென்றலென -நீ
உள்ளே வந்ததைப் பார்த்துவிட்டேன்

ஓரிடத்தில் நில்லாயோ-அடி
ஓங்காரத்தின் உட்பொருளே
யாரை அழைத்துக் காட்டுவதோ-நீ
இருப்பதை எவ்விதம் உணர்த்துவதோ
பேரும் ஊரும் இல்லாமல்-இந்தப்
பிரபஞ்சம் நிரம்பிய பூரணியே
வாராய் வாராய் மஹாசக்தி-என்
வாசல்கள் சிலிர்ப்பதைப் பார்த்துவிட்டேன்

எங்கே வைகோவின் துண்டு??

 


இந்தக் கேள்வி திருவில்லிப்புதூரில் கூடியிருந்த எல்லோருக்கும் ஒருநாள்
எழுந்தது. அப்போது வைகோ சிவகாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.
திருவில்லிப்புதூர் திருமால் திருக்கோவில் குடமுழுக்கு (சம்ப்ரோக்ஷணம்)
விழாவுக்காக,வருகை தந்திருந்தார் வைகோ. அவருடைய தோள்களைத் தழுவிக் கொண்டு முழங்கால் தொட நீளும் கறுப்புத் துண்டைக்
காணவில்லை . அனைவரும் அவரை வரவேற்று உள்ளே அழைத்துப்
போயினர்.

பிறகு நண்பர்கள் கேட்டபோது வைகோ விளக்கமளித்திருக்கிறார்.
"ஆலயங்களுக்குள் நுழையும்போது ஆன்மீகவாதிகள் தோளில் இருக்கும்
அங்கவஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொண்டுதான் உள்ளே செல்வார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் அவர்கள் நம்பிக்கையை நான் புண்படுத்தக் கூடாது.
நான் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு போகவும் முடியாது. எனவே துண்டு போடாமலே வந்தேன் " என்றாராம் வைகோ.

"நாடாளுமன்றத்தில் வைகோ"என்னுந் தலைப்பில் திரு.மு.செந்திலதிபன்
தொகுத்துள்ள  புத்தகத்தில் இந்தத் தகவலைப் படித்தேன். அப்போது
குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமனின் நினைவு வந்தது, அவர்
பழுத்த ஆத்திகர். தில்லைத் திருக்கோவிலுக்கு தரிசனத்துக்கு வந்தார். அப்போது அவர் குடியரசுத் தலைவர். பொன்னம்பலப் படிக்கட்டுகளில் ஏறி
தரிசனம் செய்ய வேண்டுமென்றால் சட்டை அணியக் கூடாது என்பது விதி.
அதை சட்டை செய்யாமல் ஆர்.வெங்கட்ராமன் படிகளில் ஏற முற்பட்டபோது தீட்சிதர்கள் பணிவோடு நினைவுபடுத்தியிருக்கிறார்கள்,

சற்றே தயங்கிய வெங்கட்ராமன் மேல்சட்டை கழற்ற மனமின்றி கீழே
இறங்கிப் போய்விட்டாராம்.இரண்டு பேர்களில் யார் பக்கம் இறைவன்
இருப்பான் என்ற யோசனையுடன்  சற்றே கண்ணயர்ந்தேன். கனவில்
கடவுளின் குரல்கேட்டதுபோல் இருந்தது....."இறங்கிப் போன ஆத்திகனை
விட இங்கிதம் தெரிந்த நாத்திகனே மேலானவன்".

Friday, October 19, 2012

நவராத்திரி கவிதைகள் .................5

 அபிராமியும்....
அபிராமி பட்டரும்.....


அர்ச்சகர் மரபில் வந்தவன்தான் -அன்னை
ஆட்கொள்ளப் போவதை அறியவில்லை
பிச்சியின் பக்தியில் பித்தேறி -வந்த
போதை சிறிதும் தெளியவில்லை
உச்சி வரையில் ஜோதியொன்று-விசை
உந்திச் சென்றதில் சுருண்டுவிட்டான்
நிர்ச்சல நிஷ்டையில் ஆழ்ந்தபடி-அவன்
நியமங்கள் எல்லாம் கடந்துவிட்டான்

செருகிய கண்கள் திறந்துவிட்டால்-அதில்
செக்கச் செவேலெனத் தீயிருக்கும்
பெருகிய பக்திப் பரவசத்தில் -ஒரு
புன்னகை நிலையாய் பூத்திருக்கும்
அருகில் இருந்தவர் உணரவில்லை-அவர்
அகமோ உயிரோ மலரவில்லை
ஒருவகை போதையின் விளைவென்றே-அவர்
உளறலை இவனும் அறியவில்லை


சுந்தரி பாதத்தில் லயித்தபடி-எங்கள்
சுப்பிரமணியன் சுகித்திருந்தான்
அந்தரி அழகி அபிராமி -என்றே
அழுதும் சிரித்தும் ஜெபித்திருந்தான்
வந்தது மன்னனாம் இவனறியான்-அவர்
வினவிய திதியும் இவனறியான்
அந்தமில் நிலவொன்றே அறிந்ததனால்-இவன்
அன்று பவுர்ணமி என்றுவிட்டான்

கடலில் அமாவா சைக்கெனவே-தலை
குளித்து வந்தவன் சரபோஜி
கடவூர்க்காரி சந்நிதியில் -இந்தக்
கூத்தினைக் கண்டதும் குமுறிவிட்டான்
சுடராய் நிலவு வரவிலையேல்-இவன்
சிரத்தைக் கொய்க எனவுரைக்க
இடரே அறியா அவள்பிள்ளை-மெல்ல
இருகண் திறந்தபின் நிலையறிந்தான்




உதித்தாள் நெஞ்சினில் அபிராமி-அவள்
உறுதுணை இருக்கையில் ஏதுபயம்
விதிப்பார் ஆணைகள் விதியாமோ-அவள்
வண்ணத் திருவடி தானபயம்
துதித்தே பாடிய அந்தாதி-அதில்
துள்ளிச் சிரித்தது தமிழழகு
கதியே அருள்வாய் எனத்தொழுதான் -அவன்
கண்களில் நிறைந்தது அவளழகு

கொற்றவன் தூரத்தில் காத்திருக்க-எங்கும்
கடவூர்க்காரர்கள் சூழ்ந்திருக்க
முற்றிய இருளின் வானத்தில் -அன்னை
மோகனத் திருவுரு எழுந்ததடா
ஒற்றைத் தாடங்கம் விட்டெறிந்தாள்-அங்கே
உருண்டு திரண்டது முழுநிலவு
பற்றிய பக்தன் ஒருவன்மட்டும்-விண்ணில்
பார்த்தது மொத்தம் இருநிலவு!

மன்னன் கால்களில் விழுந்ததுவும்-வந்த
மனிதர்கள் விம்மித் தொழுததுவும்
இன்னும் அங்கே நடந்ததுவும்-அவன்
ஏதும் அறியக் கூடவில்லை
அன்னையின் தரிசனம் அமைந்ததிலே-உளம்
அனலிடை மெழுகாய்க் கரைந்ததிலே
என்னென்ன என்னென்ன பாடுகிறான் -அவன்
எங்கும் அவள்முகம் காணுகிறான்

பட்டர் எனும்பெயர் சூட்டியவர்-அவன்
பக்தியின் ஆழம் உணர்ந்து கொண்டார்
சட்டம் பேசிய மன்னவரோ-அவன்
சந்ததிக்கே பெரும் மான்யம்தந்தார்
முட்டி அழுதது ஒருகன்று-பால்
முழுநிலவானது வானத்தில்
கட்டி அமுதமாம் அவன்கவிதை-அவள்
கருணையைப் பேசுது கானத்தில்

Thursday, October 18, 2012

நவராத்திரி கவிதைகள்.....4

பீடமேறினாள்



படிப்படியாய் பதம்பதிய பீடமேறினாள்-வினை
பொடிப்பொடியாய் நொறுங்கும்படி பார்வைவீசினாள்
இடிமழையை முன்னனுப்பி வரவுசாற்றினாள்-பலர்
வடித்தளிக்கும் கவிதைகளில் வண்ணம்தீட்டினாள்

வீடுதோறும் ஏற்றிவைக்கும் விளக்கில் வருகிறாள்-விழி
மூடிநாமும் திறக்கும்முன்னே கிழக்கில் வருகிறாள்
ஏடுதோறும் பத்தர் சித்தர் எழுத்தில் வருகிறாள்-மனம்
வாடும்போது புன்னகையால் வெளிச்சமிடுகிறாள்

இல்லையவள் என்பவர்க்கு எதிரில் தோன்றுவாள்-அட
எல்லையில்லா பக்திவைத்தால் ஒளிந்து கொள்ளுவாள்
மெல்லமெல்ல இதழ்திறந்து மலர்ந்துகொள்ளுவாள்-அவள்
முல்லைஅல்லி மல்லிகையில் மணந்து பொங்குவாள்



வைத்தகொலு பொம்மைகள்தான் கோள்கள் ஒன்பதும்-அவள்
தைத்துத்தந்த பட்டுச்சேலை அந்த வானகம்
வைத்தியச்சி வினைகள்வெட்ட இந்த வையகம்-அவள்
மெய்யைப்போல சொன்ன பொய்தான் வாழ்க்கை என்பதும்

ஒன்பதுநாள் பூசையேற்க ஒசிந்துநிற்கிறாள்-அவள்
கன்னல்போன்ற கவிதைகளில் கசிந்துநிற்கிறாள்
பொன்னைவென்ற பாதம்மின்னப் பொலிந்துநிற்கிறாள்
அன்னையவள் கருணைபொங்கக் கனிந்துநிற்கிறாள்

Wednesday, October 17, 2012

கடைசியில் மனிதன் என்னாகிறான்??


கவிஞர் வைரமுத்து நேற்று மாலை கோவைக்கு வந்தார்.அவருக்கு மிகவும் பிடித்தமான ஊர்களில் கோவையும் ஒன்று. இன்று காலை ஹோட்டல்
விஜய் பார்க் இன் என்னும் புதிய மூன்று நட்சத்திர விடுதியைத் திறந்து வைக்கிறார். அதன் உரிமையாளர் திரு. கோவை இரமேஷ், கவிஞருக்கு
ஏகலைவனாய் இருந்து அர்ச்சுனனாய் மாறியவர். அது தனிக்கதை.

அடிப்படை நிலையிலிருந்து பாடிப்படியாய் முன்னேறியவர் ரமேஷ்.
குண்டு வெடிப்பு கோவையில் நிகழ்ந்தபோது தனிமனிதராய் பலரைக்
காப்பாற்றியவர். அலைந்து திரிந்து ஒரே இரவில் 100 யூனிட் இரத்தம்
சேகரித்தவர். கோவையில் சர்க்கஸ் வந்தால் அனாதை இல்லக்
குழந்தைகளை அழைத்துச் செல்பவர். தொண்டுள்ளம் மிக்கவர்.

தொழிலில் ஏற்பட்ட சில தோல்விகளால் ஒர் ஆன்மீக இயக்கத்தில் முழுநேரப் பயிற்றுநராக விரும்பியவர் கோவை ரமேஷ். பத்தாண்டுகளுக்கு
முன்னர்,இந்தத் தகவலை நான் கவிஞரிடம் அவருடைய
 கோவைப் பயணமொன்றின் போது தெரிவித்தேன்.

ஒரு முன்னிரவுப் பொழுதில் இரவு உணவுக்குப் பின் ரமேஷை அமரவைத்துக் கொண்டு, ஒருசில நண்பர்கள் மட்டும் உடனிருக்க
வாழ்வியல் வகுப்பெடுத்தார் கவிஞர் வைரமுத்து.

அவர் சொன்னவற்றில் முக்கியமான வரி. "ரமேஷ்!லௌகீக வாழ்வில்
இருப்பவர்களுக்கு  ஆன்மீகம் என்பது மின்சாரம் உற்பத்தியாகும் இடம்.
அதிலிருந்து மின்சாரம் எடுத்து வீட்டில் விளக்குகள் ஒளிர விடுங்கள்.
மின்விசிறியைச் சுழல விடுங்கள். உற்பத்தியாகிற இடத்திலேயே போய்
விழுந்து கிடப்பது உங்கள் வேலையல்ல".

மறுநாள் காலை, சில ஆயிரம் ரூபாய்கள் முதலீட்டில் ரமேஷ் தொடங்கிய
விஜய் கார்ஸ் நிறுவனம் இன்று கோவையில் இரண்டு கிளைகளும்,
ஈரோடு ,கரூர் ஆகிய நகரங்களில் கிளைகளுமாய் வளர்ந்தோங்கி நிற்கிறது.
கிடைத்த லாபத்தை வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்தவர்,இன்று
கோவையின் மையப்பகுதியில் மூன்று நட்சத்திர விடுதியை உருவாக்கி
திறப்புவிழா காண்கிறார்.


கவிஞருடன் கோவை ரமேஷ்


இந்தக் கட்டுரையை நான் எழுத நினைத்தது ரமேஷ் பற்றிச் சொல்வதற்காக
அல்ல. கடந்தவாரம் புதுச்சேரியில் சந்தித்தபோதே கவிஞர்,"இந்தமுறை
கோவைப் பயணத்தில் ம.ரா.போ. குருசாமி அய்யா வீட்டிற்குப் போக
 வேண்டும் " என்று என்னிடம் சொல்லியிருந்தார்.

அருட்செல்வர் மகாலிங்கம் அய்யாவும் மருத்துவமனையிலிருந்து சில
நாட்களுக்கு முன்னர்தான் வீடு திரும்பியிருந்தார். முதலில் அவரைக் காணச் சென்றோம் உற்சாகமாக உரையாடிய அருட்செல்வர், அவரை
நேர்காணல் செய்து கவிஞர் க.வை.பழனிச்சாமி எழுதியுள்ள நூலினை
எல்லோருக்கும் தந்தார்.


கோவை தாமுநகரில் இருக்கும் ம.ரா.போ.அய்யாவின் இல்லம் சென்று
அவரின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அங்கிருந்த அவருடைய
மகன் திரு.எழில், மகள் திருமதி மாதவி, பெயர்த்தி செல்வி மாயா ஆகியோருடன் கவிஞர் உரையாடினார். ம.ரா.போவின் நூல்கள் பற்றிப்
பேசினார். அவருடைய ஆய்வுக்கட்டுரைகளின் திண்மை பற்றி வியந்து
பேசினார். விடைபெறும்போது திரு.எழில், ம.ரா.போ அவர்களின்
"பாரதியார் ஒரு பாலம்" நூலினையும்,"பழந்தமிழகம்" நூலினையும்
கவிஞரிடம் தந்தார்.

அந்தப் புத்தகங்களைக் கையில் வாங்கிக் கொண்டு சிந்தனை வயப்பட்டவராய்
காரில் ஏறினார் கவிஞர். கார் புறப்பட்டது. புத்தகங்களையே உற்றுப் பார்த்த
கவிஞர், பெருமூச்சுடன் சொன்னார்,"கடைசியில் மனிதன் சொல்லாகிறான்!!" 


அமரர்.ம.ரா,போ.குருசாமி அவர்கள்

மனித உடலைக் காயம் என்பார்கள். "காயமே இது பொய்யடா" என்பது சித்தர் பாட்டு. மண்ணில் மனிதர்கள் நிலைபெறுவது காயத்தால்
அல்ல...காரியத்தால் என்பது புரிந்தது. 




நவராத்திரி கவிதைகள்...........3

 பொன்னூஞ்சல்
 
 
 
வீசி யாடுது பொன்னூஞ்சல்-அதில்
விசிறிப் பறக்குது செம்பட்டு
பேசி முடியாப் பேரழகி-அவள்
பாதம் திரும்புது விண்தொட்டு
ஓசை கொடுத்த நாயகிதான்- அங்கே
ஓங்கி அதிர்ந்து ஆடுகிறாள்
கூசிச் சிணுங்கும் வெண்ணிலவை-தன்
கார்குழல் கொண்டே மூடுகிறாள்

பிஞ்சுத் தாரகை கண்திறக்கும்-அவள்
பாதத்தின் கொலுசொலி கேட்டபடி
கொஞ்சும் மின்னல் கண்திகைக்கும்-அவள்
கொடியிடை அசைவதைப் பார்த்தபடி
தஞ்சம் தருகிற தாள்களையே-எட்டுத்
திசைகளும் சூடும்  தொழுதபடி
"அஞ்சேல்" என்றவள் குரல்கேட்க-என்
அகம்மிக உருகும் அழுதபடி

அல்லைப் பழிக்கும் அடர்நிறத்தாள்-என்
அல்லல்கள் தீர்க்கும் அபிராமி
தில்லைக் கரசனின் தாண்டவத்தில்-நல்ல
தாளமென்றானவள் சிவகாமி
சொல்லைக் கள்ளாய் மாற்றித்தரும்-அருள்
சொக்கன் மகிழ்கிற மாதங்கி
தொல்லை வினைகள் தொலைத்தெறிந்தே-உயிர்
துடைத்துக் கொடுக்கும் சாமுண்டி
 
 


விண்வரை அசைகிற பொன்னூஞ்சல்-அந்த
விதியை உதைக்கும் அதிசயமாம்
மண்வரை வந்த உயிர்களுக்கோ-அவள்
மலரடி நிழலே பெரும்சுகமாம்
கண்வரை வந்த துளிகளையே- அவள்
கங்கை தீர்த்தமாய் ஏற்றிருப்பாள்
பெண்வடிவாய் நின்ற பெருஞ்சக்தி-இந்தப்
பிரபஞ்சம் முழுவதும் காத்திருப்பாள்

Tuesday, October 16, 2012

நவராத்திரி கவிதைகள் ............2

சுடர் வளர்ப்பாள்
 
 
 
பக்கத்தில் நடப்பவள் பராசக்தி- நம்
பார்வையில் படுவாள் சிலசமயம்
தர்க்கக் குப்பைகள் எரித்துவிட்டால்-அவள்
திருவடி தெரிந்திட இதுசமயம்
செக்கச் சிவந்த தளிர்விரல்கள்- நம்
சிகையைக் கோதவும் இதுதருணம்
இக்கணம் எழுதும் இந்தவரி -அவள்
இமைகள் அசைந்ததில் முகையவிழும்
 
மூலப் பெருஞ்சுடர் பராசக்தி-விழி
மூன்றும் முச்சுடர் கருவறையாம்
கோலச் சிற்றிடை  கையூன்றி-அவள்
கோவிலில் நிற்பதே பேரழகாம்
வாலை வடிவினள் வரும்தருணம்-எங்கும்
வீசிடும் குங்கும வாசனையாம்
சோலை அரும்புகள் வாய்திறந்தே-அன்னை
சோபனப் பெரும்புகழ் பேசினவாம்
 
மோதிடும் கடல்போல் வரும்வினைகள்-எங்கள்
மோகினி கருணையில் வற்றியதே
பேதையென் கரமோ தூக்கத்திலும் -அவள்
பாதத்தின் பெருவிரல் பற்றியதே
வேதத்தின் நுட்பங்கள் அறிந்ததில்லை-என்னில்
வித்தகி பைத்தியம் முற்றியதே
நாதத்தின் வடிவென அவளெழுந்தாள்-என்
நாபியும் ஸ்ருதியிங்கு கூட்டியதே  
 
காட்டு வெளியினில் சில்வண்டும்-சொல்லிக்
காட்டும் பீஜத்தில் அவளிருப்பாள்
பாட்டு வரிகளின் நடுவினிலே-அவள்
பாதம் பதித்துப் பரிகசிப்பாள்
தீட்டும் வைகறை ஓவியத்தில் -எட்டுத்
திசைகளும் ஒளியாய் அவள்ஜொலிப்பாள்
மூட்டும் மூலாதாரக்கனல்-உச்சி
முட்டிடும் வரையில் சுடர்வளர்ப்பாள்
 
 

நவராத்திரி கவிதைகள்.......1

என்ன வேண்டுவதோ.....?




நீலக் கருங்குயில் பாட்டினொலி- வந்து
நேர்படக் கேட்டிடும் மாலையிலே
வாலைச் சிறுமியின் வடிவெடுத்தே-அவள்
வந்துநின்றாளென் எதிரினிலே
தூல வடிவினில் ஓளிந்துகொண்டால்-இது
தாயென்று சேய்மனம் அறியாதோ
ஜாலங்கள் காட்டிடும் சக்தியவள்-முக
ஜாடை நமக்கென்ன தெரியாதோ?

எந்த வடிவையும் எடுத்திடுவாள்- அன்னை
எதிர்ப்பட நினைத்தால் எதிர்ப்படுவாள்
முந்திப் பறக்கிற முகில்வடிவாய்-அவள்
முத்துக்கள் ஆயிரம் உதிர்த்திடுவாள்
சிந்தை வலிமிகும் வேளையிலே-அவள்
சின்னக் குழந்தையாய் விரல்தொடுவாள்
வந்த சுவடே தெரியாமல்-வந்த
வேலை முடித்துக் கிளம்பிடுவாள்

காட்சி கொடுப்பது அவளெனவே-நம்
கண்கள் உணருமுன் மறைந்திடுவாள்
மீட்டொரு முறைவரக் கெஞ்சுகையில் -அந்த
மாதங்கி எங்கெங்கும் நிறைந்திடுவாள்
நீட்டிய பிறவிகள் நீள்வதனை-அந்த
நிர்மலை பார்த்துக் குறைத்திடுவாள்
ஏட்டில் ஓமென எழுதுகையில்-அந்த
ஏகாக்ஷரமாய் ஒளிர்ந்திடுவாள்

அன்னை இருக்கையில் என்னகுறை-இங்கு
ஆடவும் பாடவும் ஏதுதடை
என்னையும் உன்னையும் கைகளிலே-வந்து
ஏந்திக் கொள்வாளினி ஏன்கவலை
மின்னை நிகர்த்திடும் பேரழகி-சிவ
மோகம் வளர்த்திடும் மோகினியாள்
தன்னை நினைத்தவர் நெஞ்சிலெல்லாம்-வந்து
தாண்டவம் ஆடிடும் வேளையிது

மொத்தப் பிரபஞ்சமும் அவள்வடிவம்-இதில்
மூடனும் மேதையும் அவள்படைத்தாள்
சித்தம் குழைந்தவள் இரங்கிவிட்டால்-முழு
மூடனை மேதையாய் ஆக்கிடுவாள்
அத்தனின்சாபங்கள் நமக்கிருந்தால்-இவள்
அத்தனையும் ரத்து செய்திடுவாள்
வித்தகி சக்தியின் பார்வைக்குள்ளே-நாம்
வந்தபின்னே என்ன வேண்டுவதோ!!

Saturday, October 13, 2012

அற்புதர்-6






அற்புதரின் கைப்பையில் சில பாம்புக் குட்டிகள் இருக்கும். புற்றில் இருக்கும் பாதுகாப்புணர்வைக் காட்டிலும் அங்கேதான் பலமடங்கு பத்திரமாய் உணரும். அற்புதருக்கு பாம்புகளுடன் அறிமுகம் உண்டு.அவரை பாம்புகளுக்கு அற்புதராய்த் தெரியுமோ என்னவோ அவரின் அற்புதங்களை அவையறியும்.




பாம்புகளை இந்தப் பிரபஞ்சத்தின் அதிர்வுகளை உணர்த்தும் கருவிகள்என்பார் அற்புதர். சின்னஞ்சிறு  பாம்புக் குட்டிகள் சில,நேர்க்கோட்டில் நகர்ந்து கொண்டிருந்தபோது அவற்றுக்கு நெளியக்கற்றுக் கொடுத்தார் அற்புதர். சில அங்குலங்கள் மட்டுமே நகர்ந்த சில பாம்புகளை நெளிந்துநெளிந்து நெடுந்தூரம் நகரப் பழக்கினார்.

பாம்புகள் நெளிகையில் ஏற்படும் உராய்வில் பிறக்கும் உயிர்சக்தி, இந்தப் பிரபஞ்சத்தின் உயிர்ப்புக்கான ஆதாரங்களில் ஒன்றென்பதை அற்புதர்அறிந்திருந்தார்.

அடிக்கடி உமிழ்ந்தால் நஞ்சு,அடக்கி வைத்தால் மாணிக்கம் என்பது அற்புதரைப் பொறுத்தவரை ஒரு குறியீடு. சேமிக்கும் உயிராற்றல் செல்வம் என்பதன் நாகோபதேசமே,நஞ்சு-மாணிக்கம் பற்றிய நம்பிக்கை என்பார் அற்புதர் .

சொல்லாத சொல், ஏவாத எண்ணம். எய்யாத ஆயுதம் ஆகியவற்றின்மௌனத்தவம் முதிர்ந்து முதிர்ந்து சக்தி பெறுவதை பாம்புகள் நன்றாய்உணரும் என்பார் அவர்.

சுருண்ட பாம்பை சீண்டும் உத்தியும் நெளியும் பாம்பை நகர்த்தும் வித்தையும் அற்புதருக்குக் கைவந்த கலை. காலப்போக்கில் அற்புதரின் இருப்பிலேயே நகராப் பாம்புகள் நகரத் தொடங்கின. அவரின் சிறிய
கரவொலியிலேயே 'சரசர"வென்று பாம்புகள் நகரத் தொடங்குகையில் அங்கே பெருகும் உயிர்சக்தியைப் பிரபஞ்சம் உள்வாங்கிக் கொண்டது.

அற்புதரின் மௌனத்தில் கிளம்பும் மகுடிநாதம், ராஜநாகங்களை உசுப்பும் ராக ஆலாபனை.அற்புதரின் அசைவில் பிறக்கும் இசையில்,பாம்புகள் ந்கர வேண்டிய திசை உணர்த்தப்பட்டது.

பாம்புச்சீறலில் அமுதம் திரள்வது, அற்புதரின் அற்புதங்களிலேயே ஆகச்சிறந்ததென்பதை  அறிந்து சிலிர்த்தது ஆகாயம்