Saturday, October 6, 2012

மூதறிஞர் ம.ரா.போ.குருசாமி மறைந்தார்

மூத்த தமிழறிஞரும் காந்தீய நெறியாளருமான முனைவர் .ம.ரா.போ. குருசாமி (92) இன்று கோவையில் காலமானார். தமிழிலக்கிய உலகில்
நுண்ணிய அறிஞராகவும் தேர்ந்த திறனாய்வாளராகவும் திகழ்ந்தவர் இவர்.
செவ்விலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் சமகால இலக்கியங்களில்
வியப்பூட்டும் வாசிப்பும் கொண்டவர் அவர்.

ஜெயமோகனின் "இன்றைய காந்தி" நூலுக்கு விருது வாங்கித்தர தாமாகவே
கங்கணம் கட்டிக் கொண்டு அதற்கான விண்ணப்பங்களை சிரத்தையுடன்
நிரப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.

பாரதியார் ஒரு பாலம், கம்பர் முப்பால்,கபிலம் உள்ளிட்ட மிக முக்கியமான நூல்களின் ஆசிரியர். மு.வரதராசனாரை
மு.வ. என்று முதன்முதலில் நூல்களில் போடச்செய்தவரும் இவரே.
மு.வ, தெ.பொ.மீ. அ.ச.ஞா போன்றவர்களின் தலை மாணாக்கர்.இவர்
இளைஞராயிருந்த காலத்தில் திரு.வி.க.வுடன் நெருங்கிப் பழகியவர்.
"இந்த இளைஞரின் பணிகளால் தமிழ்நாடு ஏற்றம் பெறும்" என்று
அன்றே திரு.வி.க. எழுதியுள்ளார்.

ஆகஸ்ட் 12ல் என்னுடைய 50 நூல்களின் தொகுப்பு நூலாகிய
"எழுத்துக் கருவூலம் " அவரால் வெளியிடப்பட்டது.   சில நாட்களுக்கு
முன் என்னை ம.ரா.போ.குருசாமி அவர்கள் சந்திக்க விரும்புவதாக
அவருடைய மகன் எழில் தொலைபேசியில் தெரிவித்தார். மிகவும்
தளர்ந்த நிலையில் படுத்திருந்த அவர் என்னிடம் தனிமையில் பேச
விரும்புவதாகச் சொல்லி மற்றவர்களை வெளியேறச் சொன்னார்.

மிகுந்த சிரமத்துடன் இருபது நிமிடங்கள் அவர் பேசினார். அவருக்குக் கிடைத்த ஆன்மீக தரிசனங்கள், அவருடைய வாழ்க்கை
என்று பலவும் பேசினார்.

தேடினாலும் கிடைக்காத தேர்ந்த அறிஞரின் மரணம் தமிழிலக்கிய உலகில்
அதிர்ச்சிச் செய்தியாகப் பரவியுள்ளது. நாளை காலை அவருடைய ஆசிரியர் அமரர் ப.சு. மணியம் அவர்களின் சமாதியருகே ம.ரா.போ.என்று மதிப்புடன்
அழைக்கப்பட்ட அய்யாவின் நல்லுடல் அடக்கம் செய்யப்படுகிறது.

திருச்செந்தூர் முருகனின் தீராக்காதலரின் தனிவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!!