Saturday, March 5, 2011

யார் சொல்வது?

யாருக்கும் தெரியாத திசையொன்றிலே-எந்த
யாழோடும் பிறவாத இசைகேட்கிறேன்
வேருக்கும் தெரியாமல் பூப்பூத்ததே-அதன்
வாசத்தை மறைக்கத்தான் வழிபார்க்கிறேன்
 
நான்மட்டும் என்னோடு உறவாடியே-பல
நாளல்ல,வருடங்கள் கழிந்தோடின
வான்முட்டும் மகுடங்கள் வரும்போதிலும்-அந்த
வலிநாட்கள் மனதோடு நிழலாடின
 
தழும்பில்லாக் காயங்கள் நான்கொண்டது- அவை
தருகின்ற பாடங்கள் யார்கண்டது
எழும்போதும் எங்கேயோ வலிக்கின்றது-அது
எதனாலோ இதமாக இருக்கின்றது
 
இவன்மூடன் எனச்சொன்ன காலமுண்டு-பின்
இளம்மேதை எனச்சொன்ன காலமுண்டு
சிவனென்ன சொல்வானோ அறியேனம்மா-என்
சிறுமைகள் பெருமைகள் உணரேனம்மா
 
 
 பொல்லாத அச்சத்தில் இரவெத்தனை-அட
பொய்யான கனவான உறவெத்தனை
நில்லாத ஏக்கத்தில் நினைவெத்தனை-இதில்
நிஜமாக நான்வாழ்ந்த நாளெத்தனை
 
களிமண்ணாய் மிதிபட்ட காலமுண்டு-சுடும்
கனல்பட்டு திடமான ஞானமுண்டு
ஒளிகொண்டு சுடர்வீச நியாயமுண்டு-அட
ஓமென்று சொன்னவனின் காவலுண்டு
 
ஆனாலும் மனதோடு ஒருஞாபகம்-அது
ஆவேசம் குறையாத ஒருகாவியம்
நானாக எனைமாற்றும் அதன்சாகசம்-பல
நாளாக நாளாக அதன்ராஜ்ஜியம்
 
பாலுக்குத் தவிக்கின்ற சிறுபிள்ளைநான் -ஒரு
பாசாங்கே இல்லாத  புதுப்பாடல்நான்
காலத்தின் கணக்கேதும் அறியாதவன் -மனக்
கேவல்கள் மறைத்துவைக்கத் தெரியாதவன்
 
நதிபாடும் பாட்டுக்குப் பொருளேதம்மா-அது
நடைபோடும் வழியோடு துணையேதம்மா
சுதிபோடும் காற்றுக்கு சுவடேதம்மா-இதில்
புதிர்போடும் பாதைகள் புரியாதம்மா
 
நான்சொல்லும் சொல்லெல்லாம் அரங்கேறலாம்
நான்சொல்லத் தயங்குபவை கவியாகலாம்
வான்சொல்லும் கதைதானே வாழ்வென்பது-இதில்
விருப்பென்றும் மறுப்பென்றும் யார்சொல்வது 
 

2 comments:

Kavinaya said...

இப்போதான் உங்க வலைப்பூவை பார்த்தேன் :)

கவிதை, வாழ்வின் நிதர்சனம். அழகு.

கவிஞர் அஸ்மின் said...

அழகான சந்தங்கள் அசைந்தாடுது-தமிழ்
அதற்கேற்ப கருத்தோடு இசைந்தாடுது
தமிழைத்தான் உணவாகத் தின்கின்றீரா..?-இல்லை
தண்ணீராய் செந்தேனாய் குடிக்கின்றீரா?
அமிழ்தாக கவியாவும் இனிக்கின்றதே-ஐயா
அருந்திவிட இனும்வேண்டு மிருக்கின்றதா..?

கவிஞர் பொத்துவில் அஸ்மின்(இலங்கை)