Tuesday, August 6, 2013

ஆடிக்கு வந்தாள் அபிராமி


 உற்சவக் கோலத்தில் உலாப்போகும் நேரத்தில்
 உற்சாக அலங்காரமோ
கற்பகத் தாருவாம் கடவூராள் எழில்பார்க்க
கண்கோடி இனிவேண்டுமோ
பொற்பதம் மலர்க்கரம் பூமுகம் எங்கெங்கும்
பூவாரம் எழில்சிந்துமோ
கற்பனைக்கெட்டாத காருண்ய நாயகி
கடைக்கண்கள் எமைத்தீண்டுமோ

மின்னாயிரம் சேர்ந்த மலர்மேனி நிறமென்ன?
மைவண்ணக் கறுப்பல்லவோ
இந்நேரம் உற்சவத் திருமேனி எழில்மட்டும்
இதமான சிகப்பல்லவோ
பெண்ணாகப் பிறந்தார்க்கு புறப்பாட்டு நேரத்தில்
பூச்சொன்றும் புதிதல்லவோ
கண்ணான மாதரசி கவின்மஞ்சள் வண்ணத்தில்
கிளம்புவதே அழகல்லவோ

பெருவீதி நான்கினிலும் பெண்ணரசி வருகின்றாள்
பொன் ஆடிப் பூரத்திலே
ஒருநீதி நிலையாக ஒருகோடி கதிர்போல
ஒளிசிந்தும் மோனத்திலே
திருமாதர் விளக்கேந்த திசையெட்டும் கைகூப்பித்
தொடர்கின்ற நேரத்திலே
அருளாய மழைவீசி அபிராமி வருகின்றாள்
அரசாளும் கோலத்திலே

ஏறுகிற சிவிகையாய் என்னெஞ்சை பாவித்தால்
இந்தவிதி மாறிடாதோ
மாறுகிற விதியுந்தன் மணிவிழியின் சுடர்பட்டு
முற்றிலும் தீர்ந்திடாதோ
கூறுகிற தோத்திரம் குழைசெவியில் கேட்டதும்
கணநேரம் புன்னகைப்பாய்
 தேறும்வகை காட்டவே தேனமுதம் ஊட்டவே
தேரேறி வந்துநிற்பாய்