Wednesday, March 11, 2015

மகாசிவராத்திரியும் சில தேநீர்க் கோப்பைகளும்-யாழி


கைரேகை படிந்த கல்வழியே அறிமுகமான கவிஞர் யாழி,கவிதையின் ரேகை படிந்த தேநீர்க் கோப்பைகளுடன் வந்திருக்கிறார்.பத்துத் தலை கொண்டவன் இராவணன் என்பார்கள்.இன்று நவீன கவிதைக்கு பலநூறு முகங்கள்.யாழியின் இந்தக் கவிதைகளில் நான் காணும் முகம், மரபின் ஆழத்தில் வேரூன்றி நிற்கும் நவீன கவிதைகளின் முகம்.

பல்லாயிரம் ஆண்டுகள் பின்புலம் கொண்ட தொன்மத்தில் ஊடாடி உருண்டோடி வரும் சொற்கள் நவீன கவிதைகளை மேலும் நவீனமாக்குகின்றன என்பதே அதிசயமான உண்மை.

யாழியின் கவிமனம் அத்தகைய தொன்மங்களில் ஊடாடியும் வாழ்வியலின் புத்தம் புதிய தளங்களில் பயணம் செய்தும் வித்தைகள் காட்டுகின்றன.இதை வித்தை என்றும் கொள்ளலாம்.வித்தகம் என்றும் சொல்லலாம்.

"பழைய பைத்தியம் படீரெனத் தொலையுது"என்று பாடியபடியே வருகிற பாரதியின் புதிய கோடங்கியை நாம் அறிவோம்.அவன் அடுக்கடுக்காய் சில உறுதிமொழிகளை சொல்ல வந்த கோடங்கி.நல்ல காலம் ஏற்கெனவே பிறந்து விட்டதாக உறுதியாய் நம்புகிற கோடங்கி அவன்.


யாழி உயிர்ப்பித்து உலவ விட்டிருக்கும் சாமக்கோடங்கி,இரவின் கரிய பக்கங்களை உணர்த்த மட்டுமே வருகிற கோடங்கி.ஞானக்கூத்தனின் கவிதையொன்றில் காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான் வீசிய எச்சில் இலைக்கு சண்டையிடுகிற நாய்களின் குரைப்பொலி கேட்டு வரிசையாய் குரைக்கத் தொடங்கும் நாய்களின் சங்கிலி வரிசை போல  இந்த சாமக் கோடங்கியின் வருகை அப்படியொரு குலைப்பு வரிசையைத் தொடங்கி வைக்கிறது.


அந்த வரிசையில் கலந்து கொண்டு எஜமானியின் அதட்டலுக்கு ஆளாகி வாலைச் சுருட்டிக் கொள்ளும் மணியையும்,நாய்களின் குரைப்பொலியில் தூக்கம் கலைந்து குளிருக்கிதமாய் இன்னொரு கோணிச்சாக்கைப் போர்த்திக் கொள்ளும் கிறிஸ்துவ நடைபாதை வாசியையும் பேரம் பேசுவதில் கலம் கடத்தும் வாடிக்கையாளனை நிராகரித்து காறி உமிழ்ந்து போகும் பெண்ணொருத்தியின் எரிச்சலையும் இனம் காட்ட இந்தக் கோடங்கியின் வருகை உதவுகிறது.


" இரவின் நிசப்தத்தை உடைக்கிறது
   சாமக் கோடங்கியின் குடுகுடுப்பை சத்தம்
    மெல்ல தலைதூக்கி
    சத்தம் வந்த திசைநோக்கி
     குரைக்கிறது ஒரு நாய்....
      குரைப்புச் சத்தம் கேட்டு
       தங்களையும் அத்துடன் இணைத்துக் கொள்கின்றன
        பிற நாய்கள்.."


----------------------------------------------
---------------------------------------------
"மேலும் ஒரு கோணிப்பையை
  போர்த்திக் கொள்கிறான்
  நடைபாதை வாசி
 இந்த மார்கழிப்பனி
  அவனை முணுமுணுக்கச் செய்கிறது..
அவன் கீர்த்தனையைக் கேட்டு
 எந்த தேவனும் இதுவரை
  இறங்கி வந்ததில்லை..

..................................
பேரம் பேசுவதில்
அவகாசமெடுப்பவனை
எச்சிலால் நிராகரித்து நடக்கிறாள்
அழகியொருத்தி
நட்சத்திரம் உதிக்கப் போகும் திசை பார்த்து
இப்போது
இன்னும் உரக்கக் கேட்கிறது
குடுகுடுப்பைக்காரனின் சப்தம்
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது..."
(ப-6/7)
 

  

ஒரு படைப்பாளி தன்னைக் கடவுளுக்குப் பக்கத்தில் வைத்தோ அல்லது கடவுளாகவோ கருதுகிற கணங்கள் அதிகம். இந்தக் கடவுள் கூட்டத்தில் தான் மட்டுமே கடவுள் என்று கருதி கொம்பு சீவப்பட்டு கொம்புடைந்து நிற்கும் ஒரு கடவுளை அந்தக் கடவுள் அளவு அறியப்படாத ஒரு சிறுதெய்வமாக நின்று கேலி செய்கிறார் யாழி.
"தான் பெரும் ஆளுமை மிக்கவன்
 தன்னால் பெரும் காப்பியங்கள்
 சிருஷ்டிக்க முடியுமெனவும்
அதனாலேயே தன்னை கடவுளென
அறிவித்துக் கொண்டவர் அவர்'
------------------------------------------------------
-------------------------------------------------------

எதிர்ப்படுபவர்களெல்லாம்
தன்னை வணங்க வேண்டுமென
ஆசைப்படும் அவரின் கனா
பல நேரங்களில் பலிப்பதேயில்லை.
கோபம் கொண்டு மண்ணில்
கொம்பால் குத்துகிறார்.
அவரின் கொம்பு தேய்ந்தபடியிருக்கிறது.
---------------------------------------------------
----------------------------------------------------

தேய்ந்த கொம்போடு
ஒளியிழந்த அவரை
பார்க்கப் பாவமாகத்தான் இருக்கிறது
எல்லோரிடத்திலும்
கடவுளிருப்பதையறியாத அந்தக் கடவுளை"
(ப-12)
அதேநேரம் தனக்குப் பிரியமான ஒருவரை கன்னத்தில் அறைந்து விட்டு,அதற்குக் காரணம் தனக்குள் இருக்கும் கடவுள் தூங்கப் போனதுதான் என்றும் சொல்கிறார் யாழி.
(ப-58)
எப்போதும் விழித்திருக்கும் கடவுள் யாருக்குத்தான் வேண்டும்?

தொன்மங்களை திருப்பிப் போடுதல் என்பது நவீன கவிதையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று.இராமாயணம்,மகாபாரதம் ஆகிய இதிகாசங்களின் உயிர்ப்புத்தன்மைக்கு முக்கியக் காரணம்,ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வின் ஏதொவொரு கணத்திலேனும் தன் வாழ்வின் சூழல்களை அந்த இதிகாச நிகழ்வுகளுடன் இணை வைத்துப் பார்ப்பதற்கு இடமிருப்பதால்தான்.

அத்தகைய நுட்பமான உணர்வுகள் இந்தத் தொகுப்பிலும் இடம்பெறுகின்றன.  
 "அம்புப் படுக்கையில் இப்போது முனகி என்ன பயன்
   நீங்கள் தொடுத்த கணைகளை ரசித்தவன் நான்"
என்று தொடங்கும் இந்தக் கவிதை இன்று பல இளைஞர்களுக்கு தொழில் கற்றுத் தந்து பின் பகைத்துக் கொண்ட பிதாமகர்களைப் பற்றிப் பேசுகிறது.

"இங்கே குவிந்திருக்கும் அம்புகளில்
 என் வில்லிலிருந்த் வந்தவையும் இருக்கின்றன.
ஒரு ஓட்கா அல்லது மேன்சன் ஹவுஸ்
அல்லது இன்னும் எனக்குத் தெரியாத
ஒரு உற்சாகப் பாண(ன)த்திற்கான உங்கள் விசுவாசமே
என்னையும் தொடுக்க வைத்தது.
சுட்டுவிரல் உங்கள் வசமிருந்த
ஒரே காரணத்தால் உங்களை
சூழ்ந்த கூட்டத்திற்கு தெரிந்திருக்கிறது
உங்களின் பலவீனம்
அவர்களின் சக்கர வியூகத்தில் சிக்கி
இதோ அம்புப் படுக்கையில் நீங்கள்"


ஆனால் இந்த அர்ச்சுனன் பீஷ்மரை அம்புப் படுக்கையில் அம்போ என விட்டுப் போகிறவனில்லை.


"இன்னும் எனக்கு நம்பிக்கையிருக்கிறது
உங்கள் வித்தையில்
எழுந்து வாருங்கள்
காத்திருக்கிறேன் களத்தில்"
(ப-61)


மஹாசிவராத்திரியன்று திருட வந்து தப்பிக்க முயன்ற திருடன் ஒருவன் மரத்தின் மீது ஏறியமர்ந்து தூக்கம் வராதிருக்க இலைகளை பறித்து போட்டுக் கொண்டெயிருந்தானாம். விடிந்த பின்புதான்,அது வில்வ மரமென்றும்,கீழே ஒரு சிவலிங்கம் இருந்ததும் தெரிய வந்தது.அடுத்த பிறவியில் அவன் பேரரசனாகப் பிறந்தான் என்று தொன்மத்தில் ஒரு கதைஉண்டு.


"பருத்த இரையை விழுங்கிய அரவமென
 நெளிகிறது இரவு
  எத்தனை முறை புரண்டாலும்
  வர இயலாத் தொலைவிலிருக்கும்
  உறக்கத்தைக் கோரும் மனநிலை அற்று
  கோப்பையில் நிறைக்கிறேன் இரவினை
 புத்துணர்வு கொண்ட அச்சம்
 மீண்டும் மீண்டும்
 புரளச் செய்கிறது

-----------------------
----------------------
கோப்பைகள் மாறியபடியே இருக்கின்றன
இரவை நிரப்பிக் குடித்தபடியே இருக்கிறேன்
"சிவராத்திரி அதுவுமா தூங்கல போல
  உனக்கு மோட்சம்தான்"
சொல்லிப் போகிறான் நண்பனொருத்தன்
நான் கோப்பைகளை பார்க்கிறேன்
அவை வில்வ இலைகளாய் தெரிந்தன"
(ப-48)
தொன்மம் நிரம்பிய கோப்பையாய் தெரிகிறார் யாழி.

பட்டினத்தார் மனித வாழ்க்கை என்றால் என்னவென்று சொல் கிறார்.
"   வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதே !"


கவிழ்த்த குடத்தின் நீருக்கு நிகராக விசித்திரப் பாதையில் விருப்பம் போல் நகர்கிறது வாழ்க்கை.
யாழி சொல்கிறார்,
"பயணித்துக் கொண்டிருக்கும் நான்
இளைப்பாறுதலில்
திரும்பிப் பார்க்கிறேன்
ஓடியபடி இருக்கும் மாடு
கழிக்கும்
சிறுநீர் தடமாய் வாழ்க்கை
(ப-69)

தீபாவளிப் பண்டிகையில் ஒரு கையில் சாட்டை கொளுத்தியபடியே பேருந்து நிலையத்தில் பழக்கூடையுடன் திரியும் சிறுவன் போல மின்னல் வரிகளை சொடுக்கியபடியே வாழ்வின் வெளிகளில் திரியும் யாழிக்கு என் இனிய வாழ்த்துகள்