Thursday, April 9, 2015

மும்மத வேழமாய் இங்கிருந்தான்



மூடிக் கிடந்த குளிர்பெட்டி-அதில்
மூச்சினைத் தொலைத்துக் கிடந்தானே
பாடி முடிந்த கீர்த்தனையாய்- எங்கள்
பாட்டுடைத் தலைவன் தெரிந்தானே
மேடுகள் ஏறிய ஜீவநதி -நெடும்
 மௌனத்தில் தூங்கிய தருணமிது
கூடு கிடத்தி சிறகடித்தான் -ஒரு
கனல்பறவை கொண்ட மரணமிது

 மீசை வருடும் இருகரங்கள்-அவன்
 மார்புக் கூட்டினில் கோர்த்திருக்க
வீசும் வெளிச்ச விழியிரண்டும் -ஒரு
விடுகதை போலத் துயின்றிருக்க
பேசி  உலுக்கிய இதழிரண்டும் -ஒரு
பிரளய முடிவென ஓய்ந்திருக்க
ஆசைத் தமிழன் ஜெயகாந்தன்- அங்கே
 அமைதி பருகிப் படுத்திருந்தான்

சந்தடி இல்லா ஆகாயம் -என
சலனமில் லாமல் கிடந்தானே
வந்தவர் போனவர் ஆயிரமாம்-அவன்
வரவேற்காமல் துயின்றானே
வந்தவன் வானத் தமரனல்ல-ஆனால்
வழக்க மாய்வரும் மனிதனல்ல
சொந்தச் சுவடால் பாதைசெய்தான் -அதில்
சூரியப் பயணம் செய்திருந்தான்
 

மேடைகள் அவனது ஆடுகளம்-அதில்
மேன்மைக் குணங்கள் வளர்த்திருந்தான்
ஏடுகள் அவனது தாய்மடியாம்-அதில்
எத்தனை வித்தகம் காட்டிநின்றான்
நாடகத் திரைப்படம் சிவதனுசு-அதை
நாயகன் அவன்தான் வளைத்துநின்றான்
மூடர்கள்  அகந்தை மிதித்தெறியும் -நல்ல
மும்மத வேழமாய் இங்கிருந்தான்