Wednesday, May 6, 2015

ஏகலைவம்

( இதுவும் முகநூலில் இரண்டிரண்டு வரிகளாய் எழுதியதன் தொகுப்புதான்)

 ஏவிய அம்பை எதிர்கொள்ளும் போது
பீஷ்மர் கொஞ்சம் பதறிப் போனார்
உதறித் திரியும் துரியோதனர்க்காய்
பதறும் விதுரன் பண்ணுவதென்ன..


வார்ப்படம் செய்தது தருமனைப் படைக்க
வார்த்தபின் சகுனி வந்து தொலைக்க...


திருதிராஷ்டிரனுக்கு காட்சிகள் இல்லை
சஞ்சயன் சொல்லுக்கு சாட்சிகள் இல்லை

குருஷேத் திரத்தில் குவிந்த படைகள்
விஜயன் கேள்விக்கு விதியின் விடைகள்

மோதத் துடிப்பவர் மூர்க்கத்தில் இருந்தே
கீதையின் முதல் சொல் கண்ணன் புனைந்தான்

அர்ச்சுனன் மனதை ஆட்டிய கேள்விகள்
துரியோ தனனுக்குத் தோன்றவே இல்லையே

நதியில் போக்கிய பிள்ளையை மறுபடி
விதியில் போக்கவே வந்தாள் குந்தி

கேட்டதைக் கொடுத்தவன் கர்ணன் ஆயினும்
கேட்டதும் கொடுத்தவன் ஏகலைவனே

ஏய்ப்பவருக்கு சிலைவைக்கும் மரபை
ஏகலைவனே முதலில் தொடங்கினான்

ராஜ குமாரர்கள் தந்தது தட்சணை
ஏகலைவன் ஈந்தது பிச்சை