Wednesday, August 19, 2015

இதுவும் சேர்ந்ததே அது


பிம்பங்கள் எதுவும் பேசவில்லை-உன்
படங்களின் மௌனம் என்ன நிறம்?
நம்மிடை மலர்ந்தது நேசமெனில்-அதன்
நேர்த்தியும் பதமும் என்னவிதம்?
இம்மியும் நெருக்கம் குறையவில்லை-இரு
இதழ்களின் சுழிப்பாய் இந்த இதம்
நிம்மதி தருமுன் தழுவலினை-இந்த
நொடியினில் நினைத்தேன்..என்ன சுகம்!



ஆற்றின் குறுமணல் கைகளிலே-கொஞ்சம்
அள்ளியெடுக்கிற வேளையிலே
கீற்றென உரசும் குறுகுறுப்பில்-மெல்ல
கிளர்கிற புன்னகை உன்நினைவு
 நேற்றின் துவர்ப்பும் தேனினிப்பும்-எந்த
நொடியிலும் வெடிக்கும் கோபங்களும்
ஏற்றிய ஆசையின் தீபத்திலே-அடி
எண்ணெய் எப்படி வார்க்கிறது?



வார்த்தைகள் எத்தனை இறைத்திருப்போம்-அதன்
விளிம்பினில் மௌனங்கள் பூத்திருப்போம்
தீர்த்திடமுடியா  ரௌத்திரத்தை-ஒரு
திருட்டுச் சிரிப்பினில் உடைத்திருப்போம்
வேர்த்து முயங்கிய வேளைகளில் -ஒரு
வெப்பக் குளுமையின் விசித்திரத்தில்
பார்த்தும் தீரா பார்வைகளில்-பல
பாலைகள் சோலைகள் பார்த்துவந்தோம்



எழுதியும் தீரா வரிகளைப்போல் -இது
எத்தனை புதிதாய் இருக்கிறது
விழுவதும் எழுவதும் சகஜமென்றே-அட
விளையாட்டிங்கே தொடர்கிறது
அழுவதும் சிரிப்பதும் சீறுவதும்-இந்த
அவதாரத்தின் அற்புதங்கள்
மழையினில் நனையுது மனப்பறவை -அதன்
மனதினில் ஆயிரம் சித்திரங்கள்