Saturday, August 28, 2010

குகைப்பெருமான் - 3

முருகனுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவமும்,முருக வழிபாட்டின் இருவேறு எல்லைகளும் மிகவும் சுவாரசியமானவை. ஒருபுறம் பாமரர்கள் வாழ்வில் விளையாடும் நெருக்கத்தில் கண்கண்ட தெய்வமாய், கலியுக வரதனாய் இருக்கிறான். இன்னொரு புறம், வேதங்கள் அவனுடைய பெருமைகளைச் சொல்லமுடியாமல். "சுப்ரமண்யோஹம்" என்று மூன்று முறை சொல்லிவிட்டு பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு தள்ளி நிற்கின்றன. இன்றளவும், பள்ளி கல்லூரி மாணவிகள், சாஃப்ட்வேர் யுவதிகளின் கைப்பையில் லேமினேட் செய்யப்பட்ட படமாய் இருக்கிறான்.இன்னொரு புறம், எல்லா தெய்வங்களும் தங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடும் "தெய்வ-சிகா-மணி"ஆகவும் இருக்கிறான்.



தேவர்களின் தலைவன் இந்திரன் மகளுடன் நிச்சயிக்கப்பட்ட திருமணம். வேடுவர்களின் தலைவன் நம்பிராஜன்மகளுடன் காதல் திருமணம். தந்தைக்கே பிரணவத்தை போதிக்கும் ஞானம் ஒருபுறம். ஞானப்பழம் கிடைக்காமல்கோபித்துக் கொள்ளும் குழந்தைத்தனம் மறுபுறம். முருகனை, கந்தபுராணம் போன்றவை மூலமாகவும், அருணகிரிநாதர்-சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் போன்ற அருளாளர்கள் மூலமாகவும் அறிந்து கொண்டிருந்த எனக்கு, செஞ்சேரிமலை குகை பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் எளிய மனிதர்களின் அப்பழுக்கற்ற பக்தி பிரம்மிப்பாக இருந்தது.

வாழ்வை நடத்தவென்று உழவோ தொழிலோ அவர்களுக்குண்டு. ஒவ்வொரு நாள் விடியலையும் குகைப்பெருமான் வழிநடத்துகிறான் என்ற அப்பழுக்கற்ற நம்பிக்கை, அவர்களை வாழ்வெனும் பெருவெள்ளத்தைக் கடக்க வைக்கிறது.

அந்த குகைப்பெருமானுக்கு நான் எழுதிய துதிமலர்களின் இரண்டாவது பாடல் இது:

ஆகமம் நான்மறை யாவுமே வேலவன்
அருமையைப் பேசி வாழும்
ஆலய மணிதரும் நாதமும் "ஓம்"என
அருளிசை பாடி யாடும்
தேகமும் எண்ணமும் தேவானை நாதனின்
தளிர்க்கழல் தேடி ஓடும்
திசையெட்டில் தென்றலும் வள்ளி மணாளனின்
திருப்புகழ் பாடல் பாடும்
போகமாம் இல்லறம் கந்தனின் அருளுக்குப்
பாதைகள் போடலாகும்
பார்மிசைப் பற்றுகள் பின்னாளில் சண்முகன்
பார்வையில் மாறலாகும்
ஏகன் அநேகனின் எழில்வளர் புதல்வனே
ஏற்றங்கள் தரும் தெய்வமே
தென்சேரி அடிவாரம் உறைகின்ற குகைபால
தண்டாயுத பாணியே



No comments: