சத்குருவின் ஞானோதயத் தலம்..சாமுண்டி மலையில்... |
பார்க்க நினைத்துத் தவித்திருப்பேன் -உனைப்
பார்த்ததும் கண்கள் பனித்துவிடும்
கேட்க நினைத்த கேள்விகளை -மனம்
கணப்பொழு துக்குள் தொலைத்துவிடும்
மூர்க்கத் தினவுகள் அவிந்தடங்கி-ஒரு
மழலையைப் போலெனைக் குழைத்துவிடும்
தீர்க்க முடியாப் புதிர்களையோ- உன்
தீட்சண்யப் பார்வை எரித்துவிடும்
அத்தன் அன்னை உடன்பிறந்தோர்-என
அத்தனை உறவுகள் இருந்துமென்ன
எத்தனை காதல் உன்னிடத்தில்-இது
எப்படி மலர்ந்தது என்னிடத்தில்
சித்தன் யோகி என்றெல்லாம் -உனை
சிமிழுக்குள் அடைக்க முடியாதே
பித்து மனதின் புலம்பலைப்போல்-நல்ல
பிரார்த்தனை பிரபஞ்சத்தில் கிடையாதே
சாமானியன் போல் தோன்றுவதும்-பல
சாகச விந்தைகள் பேசுவதும்
நாமம் தன்னைச் சொன்னாலே-அடி
நாபியில் புயலைக் கிளப்புவதும்
பூமி அண்டம் தனக்குள்ளே-எனும்
புனித அனுபவம் பெருக்குவதும்
ஆமாம் உனக்கே சாத்தியமாம்-நீ
ஆச்சரியங்களின் களஞ்சியமாம்
குவிந்த உன்னிரு கைகளிலே-இந்தக்
குவலயம் அடைக்கலம் ஆகிவிடும்
சிவம்தான் கனிந்த சுடர்விழியில்-ஒரு
சின்னப் புன்னகை கோலமிடும்
தவம்தான் எழுந்து நடந்தாற்போல்-மெல்லத்
திருவடி பதிக்கும் சத்குருவை
இவன்தான் பாடிட இயன்றிடுமோ-அந்த
இமயம் கைகளில் அடங்கிடுமோ
உன்னை குருவாய் அடைந்தவர்கள்-இந்த
உண்மைக்கு சாட்சியம் ஆகிடுவார்
உன்னை நன்றாய் உணர்ந்தவர்கள்-நீ
உலவும் உன்னதம் என்றறிவார்
ஜன்னல் பார்வை பார்ப்பவர்கள்-இந்த
ஜன்மத்தில் வானை உணர்வதில்லை
தன்னில் கதவுகள் திறக்காமல்-குளிர்
தென்றலை உணர்ந்தவர் எவருமில்லை