Saturday, November 2, 2013

-ஜெராக்ஸின் அசல் ஹீரோக்கள்


" இந்த பேப்பரை ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க"என்று நாம் சொல்லாத நாட்களே இல்லை.நகலெடுப்பதை ஆங்கிலத்தில் ஜெராக்ஸ் எடுப்பதென்றுதான் பலரும் சொல்கிறோம்.நியாயமாகப்
பார்த்தால் "ஃபோட்டோ காப்பி எடுத்து வாங்க" என்றுதான் சொல்ல வேண்டும்.நகலெடுக்கும் எந்திரத்தை
உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் ஜெராக்ஸ். இந்த டிசம்பர் மாதம் 19ஆம்தேதியுடன் ஜெராக்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஹீரோவுக்கு வயது 103.

ஜே.சி.வில்சன்
நியூயார்க் அருகிலுள்ள ரோசஸ்டர் என்னும் இடத்தில்,1909 டிசம்பர் மாதம் 19ஆம்தேதி பிறந்தார்ஜோசஃப் சேம்பர்லெய்ன் வில்சன்.இவரை செல்லமாக ஜே.சி.வில்சன் என்றே அழைப்போம். இவர்அசலா ஜெராக்ஸா என்று பார்த்தால் அசலென்றும் சொல்லலாம்.ஜெராக்ஸ் என்றும் சொல்லலாம்.
ஏனென்றால் இவருடைய தாத்தா பெயரும் ஜோசஃப் சேம்பர்லெய்ன் வில்சன்தான்.ஆனால் தாத்தாஅரசியல்வாதி.அவர்களுக்கு அரசியலை பரம்பரைத் தொழிலாய் செய்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும் என்ற
சூட்சுமம் புரியவில்லை.அதனால் அவருடைய மகன் ஜோசஃப்.ஆர்.வில்சன் ஹெலாய்ட் என்ற நிறுவனத்தைநிர்வகித்து வந்தார்.அவருடைய மகன்தான் ஜெராக்ஸின் அசல் ஹீரோ ஜே.சி.வில்சன்.
புகைப்படங்களை டெவலப் செய்வதற்குத் தேவையான ரசாயனங்களைத் தயாரித்து வந்தது ஹெலாய்ட்நிறுவனம்.தன் 21ஆவது வயதில் குடும்பத் தொழிலுக்கு வந்த ஜே.சி.வில்சன்,நகலெடுத்தலை எளிமையாக்க
சில ஆராய்ச்சிகளை ஆர்வமுடன் செய்து வந்தார்.இதன் விளைவாக 1930ல் அறிமுகமானதுதான் ஹெலாய்ட் ரெக்கார்ட். இது அந்தக் காலத்தில் நகலெடுக்கப் பயன்பட்ட காகிதத்தை விட மேம்பட்டதாய்
இருந்தது.அறிமுகமானதுமே அபார வெற்றியைப் பெற்றது ஹெலாய்ட் ரெக்கார்ட்.ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.படித்தது வீணாகவில்லை என்று குடும்பம் அவரைக் கொண்டாடியது.
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். உலகம் ரெண்டுபட்டாலும் சாமர்த்தியசாலிகளுக்குக் கொண்டாட்டம்தானே தவிர திண்டாட்டம் அல்ல.  இரண்டாம் உலக யுத்த காலத்தில் நகலெடுத்தல் தொடர்பான உற்பத்திகளில் அப்பாவும் பிள்ளையும் சுறுசுறுப்பாக
வேலை பார்த்து நல்ல காசு பார்த்தார்கள்.ஆனாலும் புதிய தலைமுறையில் பூத்த ஜே.சி.வில்சன்புதிய தொழில்நுட்பமே எதிர்காலத்திலும் தாக்குப்பிடிக்கும் என்று தீர்க்கமாக நம்பினார்.
"எங்கே?எங்கே?" என்று தேடலுடன் காற்றில் அலைந்த அவருடைய கைகளைப் பற்றிக் கொள்ள வேண்டிய ஒரு சாதனைக்கரமோ வாழ்க்கைச் சுழலிலிருந்து தன்னைக் கரை சேர்க்கக்கூடிய
ஆதரவுக் கரத்தைத்தேடி தத்தளித்துக் கொண்டிருந்தது.1906 பிப்ரவரி மாதம் எட்டாம் தேதிபிறந்த செஸ்டர் ஃபிலாய்ட் கார்ல்சன் (இனி செல்லமாய் கார்ல்சன்) நகலெடுப்பதை விரைவாகவும்
எளிதாகவும் ஆக்கும் முறைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டிருந்தார்.
போராடித்தான் வாழ்வை நடத்தியாக வேண்டும் என்பது கார்ல்சனுக்குக் காலம் கற்றுத் தந்தபாடம்.17 வயதில் தன் தாயையும் 27 வயதில் தன் தந்தையையும் இழந்த கார்ல்சன் பள்ளிமாணவராய் இருக்கும்போதே குடும்பத்துக்கான சம்பாத்தியத்தை ஈட்டித் தர வேண்டியவர்
ஆகிவிட்டார்.பத்து வயதிலேயே பத்திரிகை நடத்திய கார்ல்சன்,அத்தை கொடுத்த பொம்மை டைப்ரைட்டரில்தான் விளையாடுவார்.இயற்பியல் பட்டப் படிப்பு முடித்த கார்ல்சன்வேலை கேட்டு விண்ணப்பித்தார்...விண்ணப்பித்தார்...விண்ணப்பித்துக் கொண்டேயிருந்தார்.
அப்படி அவர் விண்ணப்பித்த நிறுவனங்களின் எண்ணிக்கை 82!!
கார்ல்சன்
ஒருவழியாக பெல் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தின் காப்புரிமைப் பிரிவில்வேலை பார்த்ததால் தன் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கும் அவசியம் கார்ல்சனுக்குத்தெரிந்தது.வாரம் 35 டாலர்கள் சம்பளத்துக்கு வேலைபார்த்தபடியே தன் குறிப்பேட்டில் 400க்கும்
அதிகமான கண்டுபிடிப்புகளுக்கான யோசனைகளைக் குறித்து வைத்திருந்தார் கார்ல்சன்.
அவருடைய பரிசோதனைகளுக்கு அவர் மனைவி ஆதரவாய் இருந்தார்.பரிசோதனைக்கூடம்அமைக்க வசதியில்லை.தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் சமையலறைதான்
பரிசோதனைக்கூடம்.  சில நேரங்களில் பரிசோதனை ரசாயனங்கள் எசகுபிசகாகி மொத்தக் குடியிருப்பும் "லொக் லொக்" என்று இருமும்படியாக  புகை சூழ்ந்து கொள்ளும்.
அதிவிரைவில் நகலெடுக்கும் தொழில்நுட்பத்தை கார்ல்சன் கடைசியில் 
கண்டறிந்துவிட்டார்.ஆனால் அவர் கண்டுபிடிப்பை முக்கிய நிறுவனங்களுக்கு விற்க முனைந்தபோது,
"போங்க சார்! விளையாடாதீங்க!இதெல்லாம் சாத்தியமே இல்லை"என்று திருப்பிஅனுப்பிய திருவாளர்கள் பட்டியலில்,ஐபிஎம்,ரெமிங்டன்,ஜெனரல் எலக்ட்ரிக் போன்றஜாம்பவான்களும் உண்டு. தன் கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை 1942 அக்டோபர் 6ஆம் தேதி பெற்றார் கார்ல்சன்.
இதற்கிடையே வில்சனின் ஹெலாய்ட் நிறுவனத்தில் ஆராய்ச்சி இயக்குநராகப்பணிபுரிந்த ஜான்.ஹெச்.டெஸாவர், பழைய பேப்பர்களைப் புரட்டிக் கொண்டிருந்த போதுரேடியோ நியூஸ் என்ற பத்திரிகையில் கார்ல்சனின் கண்டுபிடிப்பு பற்றிய செய்திவெளியாகியிருந்தது.  ஹெலாய்ட் நிறுவனம் நகலெடுப்பதற்கான ரசாயனக் கலவை கொண்ட
காகிதத்தைத் தயாரிப்பது பற்றிய ஆய்வில் இருந்தது.ஆனால் கார்ல்சன்  மாற்றி யோசித்திருந்தார்.ஒரு ரசாயனப் பவுடரைக் கொண்ட கருவி போதும் என்றார் அவர்.1938ல் வடிவமைக்கப்பட்ட இந்தக் கருவிக்கு 
ஆறாண்டுகள் தாண்டி விடிந்தது.அதன்பின் இரண்டாண்டுகள் தீவிரமான முன்னேற்பாடுகள் நடந்தன.இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து ஹெலாய்ட் நிறுவனம் 1948ல் இந்த வசதியை மக்களுக்கு
அறிமுகம் செய்தது.
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஜெராக்ஸ் நிறுவனம்,பிரம்மாண்டமாக வளர்ந்தது.1968ல்கார்ல்சன் அமெரிக்காவின் முக்கிய செல்வந்தர்களில் ஒருவராக பார்ச்சூன் பத்திரிகையில்
குறிப்பிடப்பட்டார்.காரணம் 1956 முதல் 1965 வரை காப்புரிமை வழியாக உலகெங்கும் எடுக்கப்படும் ஒவ்வொரு நகலுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கார்ல்சனுக்கு ராயல்டியாகக் கிடைத்தது!!!
தன் வாழ்வின் கடைசிக்காலத்தில் இந்து சமயத்தின் வேதாந்தத்திலும் ஜென் புத்த மார்க்கத்திலும்பேரார்வம் காட்டினார் கார்ல்சன்.முதல் மணமுறிவுக்குப்பின் அவர் வாழ்வில் வீசிய இரண்டாவது வசந்தமாகிய டோரியின் அறிமுகமே இந்த ஆன்மீகம்.1968 செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி கார்ல்சன் மறைந்தார்.
அவருடைய வெளிச்சத்தையும் சுபிட்சத்தையும் பகிர்ந்து கொண்ட ஜே.சி.வில்சன் 1971 நவம்பர் 22ல்மறைந்தார். நம்மூரில் அவர்கள் வாழ்க்கையை விளக்க கவியரசு கண்ணதாசனின் பல்லவி
ஒன்றே போதும்.. "இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர்காலம்! பகைவர்களே ஓடுங்கள்!புலிகள் இரண்டு வருகின்றன!"

(என்னுடைய 51 ஆவது நூலாகிய,"அறிய வேண்டிய ஆளுமைகள்" தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரை.வெளியீடு:விஜயா பதிப்பகம்)