Wednesday, May 14, 2014

வித்தகக் குழந்தை



ஆவின் மடியில் மாயனின் இதழ்கள்
அமுதம் பருகும் நேரம்
தாவி யணைக்கும் கன்னியருக்கும்
தாய்முலைகனிந்தே ஊறும்
கோவில் சிலையாய் கோதையும் நின்றாள்
கோலினை ஓங்கிய படியே
நாவில் வருடும் பசுவிடம் பெருகும்..
பாலும் ஆயிரம் படியே


பசுவின் காலைப் பற்றிய படியே
பரமன் பருகும் அழகு
கசியும் மடியில் கண்கள் பதித்த
கோபிகை நெஞ்சம் மெழுகு
திசைகள் எல்லாம் சலனம் இன்றித்
தாய்மைத் தவிப்பில் கரையும்
இசைக்கும் குழலும் இதழ்கள் பிரிந்த
 ஏக்கம் பெருகிப் பதறும்

மதுரா நகரில் தேவகி யன்னை
மடியும் அடையா மகிமை
இதமாய் சொரியும் பசுவும் அடையும்
இதுதான் கண்ணன் பெருமை
முதலும்  முடிவும் இல்லா இறைவன்
முட்டும் கன்றாய் ஆனான்
விதியை மாற்றும் விமலன் அழகன்
வித்தகக் குழந்தை ஆனான்