Monday, May 26, 2014

அன்பும் சிவம்



புவனங்கள் எல்லாமே சிவசந்நிதி
பிரபஞ்சங்கள் முழுமைக்கும் அவனேகதி
தவறென்றும் சரியென்றும் சுழலும்விதி
சுடர்வீசும் மலர்ப்பாதம் சரணாகதி

அன்பேதான் சிவமென்று சிலர்பாடுவார்
அழிப்பேதான் தொழிலென்று சிலர்கூறுவார்
கண்மூன்று கொண்டானை யார்காணுவார்
கண்மூடி அமர்ந்தோரே சிவம்பேணுவார்

அடங்காத இருளோடு அவன்ராஜ்ஜியம்
அலைபாயும் மனதோடும் அவன்நாடகம்
ஒடுங்காத வரைதானே நவகாவியம்
ஒடுக்கத்தில் அசைவில்லா உயிரோவியம்

சங்கீதம் எல்லாமும் சிவன்பாடலே
சங்காரம் உயிர்ப்பெல்லாம் அவனாடலே
ஓங்காரப் பெண்ணோடு அவன் கூடலே
நீங்காத துணையிங்கு அவன்நீழலே

சித்தர்க்கும் முத்தர்க்கும் நெறிசொன்னவன்
பித்தேறும்  நரிதன்னைப் பரியென்றவன்
வித்தோடு உயிராகி விளைவானவன்
அத்தா என்றழுவார்க்கு அருளானவன்

நிலவுக்கு சடைமீது குடில்தந்தவன்
அரவுக்கு உடலெங்கும் இடம்தந்தவன்
கடல்தந்த நஞ்சுக்கும் கதிதந்தவன்
தமிழ்தந்த அம்மைக்குப் பதம்தந்தவன்

வானோடு ஒளியாகி இருளாகினான்
ஊனோடு உணர்வாகி உயிராகினான்
தேனோடு நிறமாகி சுவையாகினான்
தீயோடு காடேகி நடமாடினான்

துயர்மூடும் மருளுக்கு விடிவானவன்
உயிர்போகும் பாதைக்கு முடிவானவன்
உயர்வுக்கும் தாழ்வுக்கும் நடுவானவன்
கயிலாயன் அருளாளன் கருணாகரன்