Thursday, June 12, 2014

சத்குரு சத்சங்கம்

ஸ்வரங்களில் எழாத சங்கீதம்-உன்
அருளெனும் ராக சஞ்சாரம்
குரல்கள் அதன்சுகம் காட்டவில்லை-எந்த
விரல்களும் அதன்லயம் மீட்டவில்லை

மேகங்கள் தொடாத முழுவானம்-எந்த
மேதையும்பெறாத திருஞானம்
யோகங்கள் உணர்த்தும் சிவரூபம்-இங்கு
யாரறிவார் உன் முழுரூபம்

உந்திய கருணையில் ஓடுகிறேன் -நான்
உன்பேர் சொல்லிப் பாடுகிறேன்
விந்தைகள்நிகழ்த்தும் விடுகதையே-உன்
விரல்தொடும் போதிலென் விடுதலையே

பன்னிரு திருமுறை பாடுவதை-அருள்
பரமானந்தர்கள் நாடுவதை
உன்னிரு கண்களில் காணுகிறேன் -இந்த
உன்னதம் உயிரினில் பேணுகிறேன்

விந்தியம் இமயம் கைலாயம்-அந்த
வேதவேதன் இருக்குமிடம்
உந்தன் இதயம் அவைபோலே-அந்த
உத்தமன் கோயில் கொள்ளுமிடம்
 


உன்னில் பொங்கிடும் பாற்கடலை-நீ
ஒருதுளி எம்மில் பாய்ச்சுகிறாய்
கன்றின் பசிக்குப் பக்குவமாய்-அதை
குவளைப் பாலாய் காய்ச்சுகிறாய்

சத்குரு உனது சத்சங்கம்-அந்த
சபையில் சத்தியம் அமர்ந்திருக்கும்
தத்துவச் சுடரே உன்னொளியில்-அங்கு
தாமாய் உயிர்கள் மலர்ந்திருக்கும்