Monday, June 23, 2014

கண்டதுண்டோ இவன் போலே



கவிதையின் உயரம் ஆறடி-எனக்
காட்டிய மனிதனைப் பாரடி
செவிகளில் செந்தேன் ஊற்றிய கவிஞன்
சேய்போல் வாழ்ந்ததைக் கேளடி

எடுப்பார் கைகளில் பிள்ளைதான் -அவன்
எதிர்கொண்ட தெல்லாம் தொல்லைதான்
தொடுப்பான் சொற்களை சரம்சரமாய் அதில்
நிகராய் ஒருவர் இல்லைதான்

நெற்றியில் நீறுடன் குங்குமம்-அவன்
நிற்கும் கோலமே மங்கலம்
பற்றுகள் ஆயிரம் உற்றிருந்தாலும்
பரம்பொருளுடனவன் சங்கமம்

அழுததும் சிரித்ததும் ஆயிரம்-அவன்
அவஸ்தையும் மகிழ்ச்சியும்காவியம்
பழுதுகள் அறியாப் பாடல்கள் தந்தவன்
பொன்மனம் தமிழின் ஆலயம்

மண்மிசை  கவிஞர்கள் தோன்றுவார்-தங்கள்
மேதைமை மிளிர்ந்திடப் பாடுவார்
கண்ண தாசனைப் போலெவர் இனியென்று
காலங்கள் தோறும் கூறுவார்