Tuesday, July 14, 2015

விசுவம் எங்கும் அவன்நாதம்


கருவி இசைத்துக் கற்றானா
கருவில் இருந்தே பெற்றானா
சரிகம பதநி சுரங்களெல்லாம்
சுடர்விரல் நுனிகளில் உற்றானா
வரிகளில் இசையைக் கண்டானா
வானின் அமுதம் தந்தானா
ஒருமுறை வந்த இசை மன்னன்
உலகுக்கு மீண்டும் வருவானா

ஆர்மோனியத்தின் ஆளுமையாய்
அமர கவியின் தோழமையாய்
வேறொன்றெதுவும் அறியாமல்
வேர்விட்டிருந்த மேதைமையாய்
தாரா கணமாய் ஒளிர்ந்தானே
தன்னிகர் இல்லா எம்.எஸ்.வி
பாரோர் அழுது கேட்டாலும்
பரமன் மீண்டும் தருவானா

நாடக உலகில் நுழைந்தவனை
நாளும் பாடுகள் பட்டவனை
மூடச் சிலபேர் முயன்றாலும்
முடக்க முடியாச் சூரியனை
பாடகர் பலபேர் வயிற்றினிலே
பாலை வார்த்த புண்ணியனை
ஆடகப் பொன்னாய் ஒளிர்ந்தவனை
அந்தோ மறுபடி காண்போமோ

விசுவம் என்றால்  உலகமன்றோ
விசுவம் எங்கும் அவன்நாதம்
விசும்பி அழுபவர் இதழ்களிலும்
வெளிப்படும் அஞ்சலி அவன்கீதம்
விசுவ நாதன் சென்றடைந்தான்
விஸ்வநாதனின் மலர்ப்பாதம்
இசையாய் என்றும் வாழ்ந்திருப்பான்
இனியென் செய்ய...அதுபோதும்