எடுத்தெடுத்துக் கோர்க்கும்
இளம்விரல்கள் லாவகமாய்
அடுத்தடுத்த ராகத்தில்
அநாயசமாய் சஞ்சரித்து
அத்தனைபேர் அதிர்ந்திருக்க
அடாணா வாசித்தான்
குழல் இவனில் இசைகிறதா
குழல் இவனை இசைக்கிறதா
அழலெழும்பும் நினைவுகளே
அபூர்வசுரம் ஆகிறதா
மழைநடுவே வனமாக
மனோதர்மம் சிலிர்க்கிறதா
இழையிழையாய் தேன்பிலிற்றி
இனந்தெரியா லஹரியிலே
கடவுள்தந்த கனவைப்போல்
கல்யாணி வாசித்தான்
நேற்றுவரை இசைஞனில்லை
நிமிடமொன்றில் சித்தித்து
ஊற்றெடுக்கும் தேனிசையை
உளமுருகி உபாசித்து
காற்றாய் மிதக்கின்றான்
கண்கிறங்கி இசைக்கின்றான்
வேற்றாவி புகுந்ததுபோல்
விசித்திரமாய் ஒளிர்ந்தபடி..
ராக மாலிகையில்-அவன்
ராஜாங்கம் நடத்துகிறான்
இந்தக் கணம் பிறந்த
இவன் இசையில் லயித்தபடி
வந்த மனவிரிவின்
விசுவரூபம் பார்த்தபடி
அந்தர சக்கரங்கள்
அனைத்திலுமே கனலெழும்ப
உந்துகிற மௌனத்தில்
உள்முகமாய் தொலைந்தபின்னும்
சித்தன்போல் நெடுந்தொலைவில்
சஹானாவில் கரைகின்றான்
தேய்பிறையின் ஒலியிதுவோ
திசைமுடியும் ஓரிடமோ
வேய்குழலின் தொலைநாதம்
வேதத்தின் பூரணமோ
பாய்ந்துவந்த பேரருவி
போய்மறையும் சமுத்திரமோ
போயடைய முடியாத
பரம்பொருளோ?பூரணமோ?
காட்டாதன காட்டி
ககனமெங்கும் இசையூட்டி
காட்டாதன காட்டி
ககனமெங்கும் இசையூட்டி
கற்பூரப் புகைபோல
குழல்வழியே கரைகின்றான்