Saturday, November 7, 2015

மரபின் மைந்தன் வலைத்தளம் தொடக்கவிழா : கல்யாண்ஜி வாசித்த கவிதை


 இதயதளம் அனைத்தோடும் இணைப்புள்ள இவனுக்கு
 இணையதளத் துவக்கவிழா இன்றைக்கா?நாள்திறக்கும்
உதயமுதல் அந்திவரை உலகெல்லாம் பொன்னொளிரும்
உற்சாக வெயிலுக்கா புதிதாக ஆரத்தி?

பிணையவொரு பொங்கரவம் பிறைசூடும் விரிசடையோன்
பிள்ளைக்கா இன்றைக்குப் பெயர்சூட்டும் வைபோகம்?
துணைவருவோர் சிலநூறு,தொடர்பவரோ பலநூறாய்
துலங்குகிற ஒருவனுக்கா தொட்டிலிட்டுத் தாலாட்டு?

கங்கையிலே நீச்சலிட்டுக் கரையேறி வந்தவர்க்கா
கணினியிலே படகுவிடக் கற்பிக்கப் போகின்றோம்?
அங்கையிலே திருக்கடையூர் அபிராமி தந்த தமிழ்
அம்பலங்கள் அனைத்திலுமே அரங்கேறி நின்றதன்பின்
இங்கெதற்கு அகரமுதல் எழுதுவிக்கும் முதற்பாடம்?

ஏடெல்லாம் மறையோதி,ஈசனவன் பெயர்பாடி
பொங்கிவரும் நதியெதிர்த்துப் போகையிலா,இணையமெனும்
புல்லுக்கும் ஆங்கே பொசிவதற்குப் பெய்கின்றான்?

இறைவனாய் இதற்குமுன்பு இருந்திருந்தான் என்பதனால்
இன்னுமோர் அவதாரம் இருக்கட்டும் என- இணையத்
துறைவனாய் அவனுக்கோர் தோற்றம் வகுத்தீரோ?

தொட்டதெல்லாம் துலங்குவதால் தொட்டு அவர் இடக்கையால்
 வரைவதற்கு இணையதள வரைசீலை விரித்தீரோ?
வானளக்கும் பறவைக்கேன் மேகம்வரை படிக்கட்டு?
கரைவரைக்கும் அலையடிக்கும் கடலுக்கேன் இணையத்தில்
கரண்டைக்கால் நனைக்கின்ற இளம்பிள்ளை விளையாட்டு?

 பூத்தொடுத்துச் சூடிப் போய்க்கொண்டிருந்தவன் ஏன்
புதிதாக இப்போது வலைவிரிக்க வருகின்றான்?
நாத்தொடுத்து எண்திசையில் நல்லதமிழ் பேசியவன்
நம்மைப்போல் எதற்கிங்கே நடைவண்டி ஓட்டுகிறான்?
காற்றெதிர்த்து அலைநடுவே கட்டுமரம் ஏகினவன்
கரையோரம் நின்றெதற்குக் கைவலையை வீசுகிறான்?
நேற்றுவரை வலைப்பூவில் நிருத்தியங்கள் ஆடியவன்
இன்றைக்கேன் வலைத்தளத்தில் இடதுபதம் தூக்குகிறான்?


அற்புதரும் அற்புதமும் அறிந்திருக்கும் சிந்தைக்கேன்
அறியாரை அறிகின்ற அலகில்லா விளையாட்டு?
நெற்பதமாய்க் கதிராடி நின்றிருக்கும் வயலுக்கேன்
நாற்றங்கால் பச்சையின்மேல் நடமாடும் காற்றுமனம்?
சொற்பதத்தில் ஆன்மீகச் சுடர்மேவி நிற்பவனின்
சுண்டுவிரல் நகத்துக்கேன் வலைத்தளத்து மருதாணி?
நிற்பதுவும் நடப்பதுவும் நிமலனவன் காப்பென்போன்
சொப்பனத்தின் சுடருக்கேன் சுண்ணங்கள் பூசுகிறான்?

உம்மைச் செதுக்குதற்கு உளியெடுத்துத் தந்தகரம்,
உயிரென்னும் பூமலரும் உள்வெளியைக் கண்டமனம்
இம்மைச் சிகரத்தில் ஏறுதற்கு நம்பிக்கை
ஏணிகளை வானம்வரை இட்டுவரும் நல்லமுகம்,
தம்மேல் விழுந்த மழைத்துளியைத் தமிழின்மேல்
தருவித்துப் பொழிகின்ற கடவூரின் அந்தாதி,
நம்மை வலைத்தளத்தின் நடைதிறக்க வருவித்தால்
என்ன இது வேடிக்கை என்றெனக்குத் தோன்றாதா?



இப்படித்தான் எனக்கு எத்தனையோ தடுமாற்றம்;
இன்னதென வகையறியா எண்ண மயக்கங்கள்;
உப்புக்குள் கடலிருக்கும் உண்மையினை அறிந்தமனம்
உண்மைக்குள் இருக்கின்ற உயிர்மெய்யை அறியாதா?
தப்பில்லா மரபுக்குள் தழைத்துவந்த முத்தையா
தமிழின்னும் தழைக்க இடும் தளம்தானே இணையதளம்.
ஒப்பில்லா இணைய ஊடகத்தின் மையத்தில்
உருவாக்க நினைக்கின்ற பல்கலையே வலைக்கழகம்.

தன்னை வைத்திழந்த தர்மர்கதை அறிவோம்நாம்.
தன்னை வைத்து தமிழ்செழிக்க வைக்கின்ற
இன்னைத் தமிழவனை இவண் அறிய மாட்டோமா?
இவன் மரபின் முத்தையா எனக்கூடி வாழ்த்தோமா?
முன்னைப்பூ வழியும் முந்துவலைத் தளம் வழியும்
முனைந்து தமிழ்கூட்ட முயல்வோனைப் பாடோமா?
பின்னைத் தலைமுறையோர் பின்னலிலே தமிழ்சூட
பிச்சிப்பூ பூப்போனின் பெயர்சொல்லிப் போற்றோமா?

எல்லோரும் இணைவதுமே இணையதளம் என்பதனால்,
எவரெவரோ இவ்வலையில் வீழ்வார்கள் என்பதனால்,
பொல்லாரும் நல்லாரும் புழங்கிடுவர் என்பதனால்,
புத்தோரும் பழையோரும் போய்வருவர் என்பதனால்,
புல்லோர்க்கும் நெல்லோர்க்கும் பொழிகின்ற மாமழையாய்,
புறத்துக்கும் அகத்துக்கும் பொலிவூட்டும் ஒளியிழையாய்
நல்லோர்க்கும் நல்லோனாய் நடக்கின்ற முத்தையா
நடத்துங்கள் புதியதளம் .இப்போதும் முப்போதும்.

வெல்லுங்கள்; உலகின் வீதியெல்லாம் உலவுங்கள்;
வெளிச்சத் தமிழின்னும் வீழாத பகுதியெல்லாம்
செல்லுங்கள்.உங்களது சிந்தை மலர்த்துங்கள்.
சிற்றஞ் சிறுகாலே சேர்த்துவைத்த ஞானத்தைச்
சொல்லுங்கள்,அங்குற்ற சுடர்தன்னை நம்முடைய
செப்பு அகல்களிலே சேர்த்தெடுத்து வாருங்கள்.
நில்லுங்கள் சிகரத்தில் நித்தநிதம் எனவாழ்த்தி
வல்லமை தருவாளை வணங்கி,விடை மீளுகிறேன்