கோட்டைகள் நடுவே ஸ்ரீபுரத்தில்- அவள்
கொலுவீற்றிருக்கும் சாம்ராஜ்யம்
மீட்டிடும் வீணைகள் மத்தளங்கள்-இளம்
மெல்லியர் நடனத்தில் சிவலாஸ்யம்
ஏட்டினில் எழுதும் வரியிலெல்லாம்-அவள்
எழில்திரு வடிகளின் ரேகைகளே
நீட்டிய சூலத்தின் நுனியினிலே- பகை
நடுங்கச் செய்திடும் வாகைகளே
பூரண கன்னிகை திருவருளே-இந் தப்
பிரபஞ்சம் தோன்றிய கருவறையாம்
காரண காரியம் யாவையுமே-எங்கள்
காளி சமைத்த வரைமுறையாம்
தோரண மாவிலை அசைவுகளில்-அந்தத்
தோகையின் சுவாசம் தென்படுமாம்
நாரணி நான்முகி நாயகியாள்-நம்
நாபிக் கமலத்தில் அமர்ந்தனளாம்
ஆயிரம் அசுரர்கள் எதிர்ப்படினும்-விழி
அசைவினில் யாவரும் தவிடுபொடி
தாயெனத் தொழுது பணிந்தவரை-அள்ளித்
தாங்கிடும் அவளின் கருணைமடி
தூயநல் மலரிட்டு தூபமிட்டு-அன்னை
திருவுளம் மகிழ்ந்திட பூசையிட்டால்
மாயைகள் விலக்கி மலர்த்திடுவாள் - நம்
மனங்கொண்ட காயங்கள் உலர்த்திடுவாள்
சுந்தரி சியாமளை ஸ்ரீபுரத்தாள்-எழில்
ஸ்ரீசக்ர நாயகி திரிசடையாள்
மந்திர ரூபிணி மலர்ப்பதத்தாள்-எழும்
மமதைகள் எரிக்கிற விழிநுதலாள்
தந்திர சாத்திர தாத்பரியம்-தனில்
தாண்டவம் புரியும் சதுர்மறையாள்
அந்தரி கதியென சரணடைந்தோம்-ஓர்
அந்தமில்லாத சுகமடைந்தோம்