என்னை எழுதெனச் சொன்னது வான்

பாவேந்தர் பாரதிதாசனின் கம்பீரமான வரிகளில் இதுவும் ஒன்று. உண்மையில் மனிதனிடம் ஆகாயம்,பூமி காற்று,நெருப்பு,கடல், கதிர், நிலா எல்லாமே பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. பிரபஞ்ச பாஷை மனிதனுக்குப் புரிபடுவதில்லை. பாவேந்தரின் இந்த வரிக்கு நெருக்கமாக் வைத்துப் பார்க்கத் தக்க வரி, கவிஞர் வைரமுத்துவின் "வானம் எனக்கொரு போதிமரம்,
நாளும் எனக்கது சேதிதரும்"என்ற வரி.

பூமியைப் பரிச்சயப்படுத்திக் கொண்ட அளவுக்கு மனிதன் ஆகாயத்துடன் அறிமுகமாகவில்லை. மனிதன் சலனங்களையும் சப்தங்களையும் சார்ந்தே இருக்கிறான். விரிந்து கிடக்கும் வான்வெளியின் நிர்ச்சலனம் மனிதனை ஒருவித அச்சத்தில் ஆழ்த்துகிறது. உண்மையில் ஆகாயத்தின் அமைதி தூங்கும் குழந்தையின் முகம் போல் நிர்மலமானது. தூங்கும் குழந்தையின் முகத்தைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தான் சிறிது நேரத்தில் அந்தப் பளிங்குமுகம் உங்களை என்னவோ செய்யும்.இதே நிர்ச்சலனமும் நிர்மலமும் நமம்மிடம்கூட குழந்தைப்பருவத்தில் குடிகொண்டிருந்ததே என்று நீங்கள் துணுக்குறும்போது சொல்லிவைத்தது போல் அந்தக் குழந்தை சிரிக்கும்.இந்த அவஸ்தையைத் தவிர்க்கத்தான் தூங்கும் குழந்தையை உற்றுப் பார்க்கலாகாதென்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். அப்படிப் பார்ப்பதால் குழந்தைக்கொன்றும் ஆகப்போவதில்லை. பார்க்கிற மனிதன்தான் முதலில் ரசிக்கத் தொடங்கி, பின்னர் கசியத் தொடங்கி கரைந்தே போவோமோ என்ற கலக்கத்தில் அதன் கன்னத்தைக் கிள்ளி விட்டு சரேலென நகர்ந்து விடுகிறான்.

தூங்கும் குழந்தை தூக்கத்திலேயே சிணுங்குவதும் சிரிப்பதும் போலத்தான் ஆகாயத்தில் அவ்வப்போது முகில்கள் நகர்வதும் பறவைகள் பறப்பதும்.தூங்கும் குழந்தை சிரித்தால் "சாமி பாப்பாவுக்கு பூ காமிக்கிறார்" என்றும், சிணுங்கினால் "சாமி பூவை மறைச்சுக்கிட்டார்" என்றும் மனிதர்கள் சொல்லத் தொடங்கினார்கள். தூங்கும் குழந்தை பிரபஞ்சத்தின் பெரும்சக்தியுடன் தொடர்பிலிருக்கிறது.ஆகாயமும் அப்படித்தான். சமுத்திரத்தின் பேரலைகள் சப்தமிட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆகாயத்தின் நுண்ணலைகளோ அரும்பொன்று மலரும் அதிர்வின்அலைவரிசையை மட்டுமே கொண்டிருக்கின்றன.

ஆகாயத்தின் மௌன சங்கீதத்தில் பறவைகள் சுருதி சேர்க்க, ஆலாபனை தொடங்கும் அழகிய தருணங்களில்,அபசுரமாய் அலறிப் பறக்கின்றன ஆகாய விமானங்கள். ஆனாலும் தன்னை யாசிப்பவர்கள் வாசிக்க வேண்டிய செய்திகளை அரூபமாய் மிதக்க விட்டுக் கொண்டேயிருக்கிறது ஆகாயம்.

பெரும்பாலான மனிதர்கள் ஆகாயத்துடன் அறிமுகமாகவே இல்லை. ஆகாயம் பார்க்க அவர்களுக்கொரு காரணம் வேண்டியிருக்கிறது. வானவில்,பறவை, நட்சத்திரம் நிலா என்று ஏதேனும் ஒன்றை முன்வைத்துத்தான் மனிதன் ஆகாயம் பார்க்க ஆயத்தமாகிறான்.
   
"நிலாப்பார்க்க என்றுபோய் நிலாப்பார்த்து நாளாயிற்று"என்பார் கல்யாண்ஜி.ஆகாயம் பார்க்கவென ஆகாயம் பார்த்து, நாள்கணக்கல்ல, பிறவிக்கணக்கே ஆகியிருக்கும். மொட்டை மாடியில் பாய்விரித்தோ கடற்கரை மணற்பரப்பிலோ கால்நீட்டி மல்லாந்து ஆகாயம் பார்க்கவென்று  நேரம் ஒதுக்குங்கள். வானத்தின் நீலத்தில் ஏதேனும் ஒரு புள்ளியில் பார்வை குத்திட்டு நிற்கும். அந்த காட்சிப் பிடிமானத்தில் நம்பிக்கை பெற்று கண்கள் அங்குமிங்கும் அலைபாயும். அடர்ந்து கிடக்கும் அமைதியில் மனசு ரங்கராட்டினத்தில் சுற்றுவதுபோல் சுற்றத் தொடங்கும்.

நிச்சயமாய்...மிக நிச்சயமாய்.. உள்ளே ஓர் அமைதி படரும். அந்த அமைதி நீங்கள் நெடுநாட்கள் தேடிய அமைதியாய் இருக்கும்.அதன் திடீர் வருகை உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். அலைவீசும் அதிர்சிரிப்பாகவோ பீறிட்டு வரும் அழுகையாகவோ உங்கள் எதிர்வினை இருக்கும். சங்கோஜமில்லாமல் என்ன வருகிறதோ அதை வெளிப்படுத்துங்கள்.

வெளிப்படுத்த வெளிப்படுத்த மனசு லேசாகும். லேசாகும் மனசில் இதுவரை பாரங்களாய் அழுத்திய கவலைகள்,மேகங்களாய் மிதக்கும்.உங்களை அதுவரைஅதட்டிய அச்சங்கள் பூனைபோல் வால்குறுக்கி உங்கள் கால்களைஉரசி முனகும். உங்களையும் அறியாத சமநிலையில் உங்களுக்கு நீங்களே சாட்சியாய் எல்லாஉணர்ச்சிகளையும்,எல்லா எண்ணங்களையும் தள்ளியிருந்து பார்ப்பீர்கள்.

அப்புறம்,உங்களுக்குள் ஓர் ஆகாயம் விரியும். அந்த ஆகாயம் ஏற்கெனவே உள்ளே இருந்ததுதான் என்பதையும் உணர்வீர்கள்.அந்த ஆகாயத்தை பத்திரப்படுத்துவீர்கள். பத்திரப்படுத்துவது என்றால் வேறொன்றுமில்லை.உங்கள் ஒவ்வொரு சிந்தனைக்கும் ஒவ்வொரு செயலுக்கும் அந்த ஆகாயம் சாட்சியாய் இருப்பதை உணர்வீர்கள்.

ஆகாயம் பார்ப்பதோர் உபாசனை. ஒரு போதை வஸ்துவைப்போல் நீங்கள் ஆகாயத்தை சுவைப்பீர்கள். உங்களுக்குள் ஆகாயம் நிரம்ப நிரம்ப ஆகாயத்தை சுகிப்பீர்கள். முதல் பார்வையில் உங்கள் பார்வைக்குப் பிடிமானமாய் சிக்கிய ஆகாயத்தின் நீலப்புள்ளி, உங்கள் நெற்றிப் பரப்பின் மையத்தில் விரிந்து கொள்ளும் அற்புதத்தில் கலந்து கரைந்து காணாமல் போகவேனும் ஆகாயம் பாருங்கள்.ஆகாயம் ஆகுங்கள்.