Sunday, October 28, 2012

ஸ்ஸாப்பிடணும்

மின்கம்பிகளில் இறங்கி, கம்பிமேல் நேர்க்கோட்டில் ஓடி, சர்வ ஜாக்கிரதையாய் தரையிறங்கிக் கொண்டிருந்த மழைத்தாரைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கடந்து போன இருசக்கர வாகனமொன்றை இயக்கிய வண்ணம், ஜெர்கினில் புதைந்த கையை வீசிப்போன வில்லியம்ஸை எனக்கு அடையாளம் தெரிந்தது.

அவன் என் பள்ளித் தோழன். பக்கத்து வகுப்பில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அன்று ஏதோ காரணத்தினால் பள்ளி மூன்று மணிக்கெல்லாம் விட்டுவிட்டார்கள். பள்ளிக்கு அருகிலிருந்த நாஸி காபி பாரில் சமோசாவும் டீயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நாலு சமோசா இரண்டு மசால்வடை எல்லாம் விழுங்கிவிட்டு டீயை உறிஞ்சிக் கொண்டிருந்த வில்லியம்ஸ் "ஸ்ஸாப்பிடணும்...ஸ்ஸாப்பிடணும்" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

"இத்தனை தின்னுட்டியேடா ! இன்னும் என்னடா சாப்பிடணும்"என்ற வேலுமயிலின் கேள்விக்கும் வில்லியம்ஸ் சொன்ன பதில் "ஸ்ஸாப்பிடணும்.. ஸ்ஸாப்பிடணும்"தான். எனக்கு உடனே விஷயம் புரிந்தது. 'பரதேசி"என்று தலையில் தட்டினேன். தேநீர் புரைக்கேறியதில் அவனுக்குக் கோபம் வந்தாலும் "அடிக்காதே மாப்ளே" என்று சமாதானக் குரலில் இழைந்தான். அவன் "மாப்ளே"என்று எங்கள் வகுப்பு மாணவர்களை அழைப்பதில் உள்ளுறை உவமம் இறைச்சி எல்லாம் இருந்தன. ஒருமுறை பள்ளி பிரார்த்தனைக் கூட்டத்தில் தலைமையாசிரியர் "ஆல் இண்டியன்ஸ் ஆர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்" சொன்னதைக் கடுமையாக ஆட்சேபித்து "ஆல் இண்டியன்ஸ் ஆர் பிரதர் இன் லாஸ் அண்ட் சிஸ்டர் இன் லாஸ்" என்று மாணவர்கள் கழிப்பறையில் எழுதிய பெருமை அவனையே சாரும்.  

வேலுமயிலுக்கு விஷயம் புரியவில்லை.வேறொன்றுமில்லை.எங்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த சுதாவின் மீது வில்லியம்சுக்கு "வாசமில்லா மலரிது". (ஒருதலைக் காதலுக்கு எங்கள் பள்ளிப் பருவத்தில் இருந்த பட்டப் பெயர்). மதிய உணவு இடைவேளையில் அவசரம் அவசரமாய் அள்ளி விழுங்கிவிட்டு வில்லியம்ஸ் அவர்கள் வகுப்புக் கதவில் சாய்ந்தபடி சுதாவுக்காகக் காத்திருப்பான். அவன் வகுப்பைத் தாண்டித்தான் எங்கள் வகுப்புக்குப் போகவேண்டும்.




எனவே ஒற்றைக்காலை  சுவரில் பதித்துக் கொண்டு இடதுபக்கம் பார்த்தபடியே கொக்கைப் போல் நின்று கொண்டிருப்பான் வில்லியம்ஸ். வராண்டாவின் இடது கோடியில் சுதா வருவது தெரிந்ததும் பரபரப்பாகிவிடுவான்.
 
அவனைத் தாண்டி சுதா போகும் போது தலையை வலது புறமாகத் திரும்பி அவள் வகுப்புக்குள் போகும்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஏதோ டூயட் பாடிக் களைத்ததுபோல வெற்றிப் புன்னகையுடன் வகுப்புக்குள் நுழைவான். டிபன் பாக்ஸிலிருந்து கழித்துப் போடும் கறிவேப்பிலை அளவுக்குக் கூட வில்லியம்ஸை சுதா கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. வில்லியம்ஸ் எங்கள் வகுப்பைக் கடந்து போகும்போது நாங்கள் கோரஸாக "வாசமில்லா மலரிது" பாடும்போதும் அதில் தனக்கு சம்பந்தம் உண்டு என்பதுகூட சுதாவுக்குத் தெரியாது.

அன்று இடது பக்கமாகப் பார்த்துக் கொண்டேயிருந்த வில்லியம்சுக்கு சுதா இன்னும் சாப்பிடவே போகவில்லை என்பது தெரியாது. ஆனால் அவனுக்குள் இருந்த பட்சி மிகச்சரியாக சுதா டிபன் பாக்சுடன் வகுப்பை விட்டு வெளியே வரும்நேரம் பார்த்து அவன் தலையை வலதுபுறம் திருப்பியது. தன் மானசீகக் காதலியுடன் முதல்முறையாய் தன் உரையாடலை அந்த விநாடியில் தொடங்கினான் வில்லியம்ஸ். "சாப்பிடலையா?" என்பதுதான் அந்த உரையாடலின் ஆரம்பம். அந்த வார்த்தையை அவன் உச்சரித்த நேரம் கொழுத்த ராகுகாலம் என்பது வில்லியம்சுக்குத் தெரியாது.

சுதா மிக இயல்பாக அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு "ஸ்ஸாப்பிடணும்"என்று பதில் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுக்கு "சா" எப்போதுமே ஸ்ஸா தான்.அந்த ஒருவார்த்தையை ஏதோ மந்திர தீட்சை பெற்றவனைப்போல் நாள் முழுவதும் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தான் வில்லியம்ஸ். இது வேலுமயிலுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.




ஆனால் இதுவரையில் சுதாவுடனான உரையாடலை எப்படித் தொடங்குவது என்று சதா யோசித்துக் கொண்டிருந்த வில்லியம்சுக்கு பிடி கிடைத்து விட்டது. அன்று தொடங்கி விடுமுறை நாட்கள் நீங்கலாய் சுதா விடுப்பெடுத்த நாட்கள் நீங்கலாய் அனுதினமும் சுதா சாப்பிட்டுவிட்டுத் திரும்பும் வரை காத்திருந்து, அவள் தன்னைக் கடந்துபோகும் நொடியில் "சாப்பிட்டாச்சா?" என்று கேட்கத் தொடங்கினான் வில்லியம்ஸ். முதலில் சில நாட்கள் "ஸ்ஸாப்டாச்சு" என்று பதிலையும் சில சமயங்களில் உதிரியாய் ஒரு புன்னகையையும் தந்து போன சுதாவுக்கு நாளாக நாளாக எரிச்சல் வரத் தொடங்கியது. விஷயம் என்னவென்றால் இதைத்தாண்டி வேறெதுவும் கேட்க வில்லியம்சுக்கு துணிச்சல் இல்லை.

ஒரேயொரு முறை சுதாவுக்காக என்று ஒரு ஃபைவ் ஸ்டார் வாங்கி காலையில் அவள் வரும் வழியில் காத்திருந்தான் வில்லியம்ஸ். அவள் தூரத்தில் நடந்து வருவது தெரிந்து "சுதா !ஒருநிமிஷம்" என்று சொல்ல மனசுக்குள் பத்துமுறை ஒத்திகை பார்த்து அவள் கடந்து போவதை மட்டும் வேடிக்கை பார்த்தபடி நின்றான். ஒரு நல்ல வாய்ப்பை கோட்டைவிட்டதில் தன்மீதே கோபம் கொண்டு அந்த ஃபைவ் ஸ்டாரை ஆவேசமாய் விட்டெறிந்தான்......வேறெங்குமில்லை வயிற்றுக்குள்தான்!!

இதற்கிடையில் "வாசமில்லா மலரிது " விவகாரம் சுதாவுக்குத் தெரிந்து வில்லியம்ஸ் மீது ஏகக் கடுப்பிலிருந்தாள். காய்ச்சல் காரணமாய் இரண்டு நாட்கள் விடுப்பிலிருந்த வில்லியம்சுக்கு இந்த விபரம் தெரியாது. பெரும்பாலும் தனியாக வரும் சுதா அன்று தோழியருடன் வருவதையோ அவள் வகுப்புத் தோழர்களாகிய நாங்கள் வெளியில் நிற்பதையோ கவனிக்காமல் இரண்டு நாள் பிரிவுத் துயரில் இருந்த வில்லியம்ஸ் சுதாவைப் பார்த்து கொஞ்சம் சத்தமாகவே கேட்டான்.."சாப்பிட்டாச்சா?"

படீரென்று டிபன்பாக்ஸைத் திறந்து காட்டிய சுதா சொன்னாள்..'முழுக்க ஸ்ஸாப்பிட்டேன. என்னைக்காவது மீந்தா போடறேன்" அன்று மதியமே வில்லியம்சுக்கு மீண்டும் காய்ச்சல் கண்டது. ஒருவாரம் வரவில்லை. அவன் அப்பா ஒருநாள் வந்து மருத்துவ சான்றிதழ் தந்துவிட்டுப் போனார்.

அதன்பிறகு பொதுத்தேர்வு நெருங்கியதில் நாங்கள் வில்லியம்ஸை மறந்தே போனோம். அவனும் எங்களை கவனமாகத் தவிர்த்து வந்தான். இருபத்தியிரண்டு வருஷங்களுக்குப் பிறகு நாங்கள் படித்தபள்ளி வழியாகப் போக நேர்ந்தது. அந்த நாஸி கடையைக் காணோம். புதிது புதிதாக எத்தனையோ கடைகள் முளைத்திருந்தன. அங்கே ஒரு கடையின் கல்லாவில்... வில்லியம்ஸேதான்!!

மருந்துக்கடை முதலாளிக்கான எல்லா சாமுத்திரிகா லட்சணங்களும் இருந்தன. வண்டியின் வேகத்தை மட்டுப் படுத்தினேன். எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தவன் முகம் மலர்ந்து "டேய்" என்றான். வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன்."மாப்ளே! எப்படியிருக்கே! கொஞ்சமிரு" என்றவன் மருந்து வாங்க அப்பாவுடன் வந்திருந்த சிறுமியிடம், "நல்லா கேட்டுக்க பாப்பா! இந்த மருந்தை காலையிலே வெறும் வயித்தில ஸ்ஸாப்பிடணும். இந்த மாத்திரையை ராத்திரி ஸ்ஸாப்பிட்டப்புறம் ஸ்ஸாப்பிடணும்" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

வெளியேபோய் வண்டியை ஓரங்கட்டி நிழலில் நிறுத்திவிட்டு மறுபடியும் உள்ளே நுழையும் போதுதான் கடையின் பெயரை கவனித்தேன்.."சுதா மெடிக்கல்ஸ்".