மணிகர்ணிகை
எனக்கேது தடையென்று எல்லார்க்கும் சொல்வதுபோல்
கணக்கேதும் இல்லாமல் கங்குகரை காணாமல்
கைகால்கள் விரித்தபடி கங்கை வருகின்றாள்:
நெய்து முடியாத நீள்துகிலாய் வருகின்றாள்

நிசிகாட்டும் மையிருளின் நிறம்நீங்கி, செம்பழுப்பாய்
அசிகாட்டில் இருந்தவளும் ஆர்ப்பரித்து வருகின்றாள்;
புடவைக்குள் குழந்தைகளைப் பொத்துகிற தாய்போல
படித்துறைகள் மூழ்கடித்து பாகீரதி வருகின்றாள்;

பாம்புச் சீறலுடன் புரண்டெழுந்து காசியெங்கும்
தாம்பு வடம்போலத் தான்நெளிந்து வருகின்றாள்

வானமகள் வரும்வழியில் வழிபடவே தான்வாழ்ந்த  
மேனியையே சிலரெரிக்கும் மணிகர்ணிகைவழியே
கால்சதங்கை அதிர்ந்தபடி கண்ணெடுத்தும் பாராமல்
மேல்விழுந்த சாம்பலுடன் மாதரசி நடக்கின்றாள்:

காதணியைத் தவறவிட்ட காசிஅன்னபூரணியின்
பாதங்கள் தொடஏங்கி பேரழகி நடக்கின்றாள்
சம்பு சடைநீங்கி சமுத்திரத்தை சேரும்முனம்
செம்புகளில் பிடித்தாலும் சலனமின்றிப் போகின்றாள்

பத்துக் குதிரைகளை பலியிட்ட பூமியிலே
சக்திக் குதிரையென சீறி நடக்கின்றாள்

தொன்னையிலே சுடரேற்றி துணையாக மலர்வைத்து
அன்னையவள் மேனியிலே அர்ப்பணிக்கும் வேளைகளில்
"களுக்"கென்று சிரித்தபடி குளிர்ந்திருக்கும் கனல்பெருக்காய்
தளுக்கி நடக்கின்றாள்; திசையெல்லாம் அளக்கின்றாள்


மூட்டை வினைகரைய மூன்றுமுறை தலைமூழ்க
சாட்டைபோல் பேரலைகள் சொடுக்கி நடக்கின்றாள்;

"கொண்டுவந்த சுமையெல்லாம் கொடு"வென்று கைநீட்டி
அண்டமெல்லாம் ஆள்கின்ற அருளரசி நடக்கின்றாள்;

நதியென்று பார்ப்பவர்க்கு நதியாகத் தெரிந்தாலும்
விதிவிழுங்கும் விதியாக வீறுகொண்டு செல்கின்றாள்

தொட்டால் நீர்வடிவம் தொழுதாலோ தாய்வடிவம்
பட்டாலே மோட்சம்தரும் பேரழகி நடக்கின்றாள்;

எத்தனையோ பிரார்த்தனைகள் ஏந்தி மடியிலிட்டும்
சித்தன்போக்காய் சிவன்போக்காய் செல்லுகிறாள்

ஆதியந்தம் இல்லாத அன்னையிவள் பாதம்தொட
ஜோதி விளக்காயென் சுடர்க்கவிதை மிதக்கிறது;
கோதி விரித்த குழல்போன்ற அலைகளெங்கும்
மோதி மிதந்தபடி அவள் முகம்பார்க்கத் தவிக்கிறது