Monday, October 22, 2012

இன்னொரு பிளேட் இட்டிலி

சதுரங்கத்தில் சிப்பாய்களும் பிரதானிகளும் சூழ்ந்திருக்க ஆட்டம் தொடங்கி நான்கு நிமிஷங்கள் வரை நகர வழியில்லாமல் மலங்க மலங்க விழித்து நிற்கும் ராஜா ராணி வெள்ளைக் காய்கள் போல், தட்டின் நடுவில் "தின்னு தின்னு" என்று ஆவிபறக்க கெஞ்சிக் கொண்டிருந்தன இரண்டு இட்டிலிகள். நகரத் தொடங்கிய சிப்பாய்கள் போலவும் கலையத் தொடங்கியிருந்த பிரதானிகள் வரிசை போலவும், சற்றே தள்ளி நின்று "வா வாத்யாரே வூட்டாண்ட' என்று கலர் கலராகப் பாடிக்கொண்டிருந்தன, மூன்று வகை  சட்டினிகள்.

ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறங்களில்  இருந்த சட்டினிகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் கிண்ணத்துக்குள் "கிண்"ணென்றிருந்தது சாம்பார். ஆட்டோவிலிருந்து எட்டிப் பார்க்கும் பள்ளிக் குழந்தைபோல்  ஆவலுடன் கிண்ணத்திலிருந்து எட்டிப் பார்த்தது சின்ன வெங்காயம். இந்த இரண்டு வகையிலும் சேராமல் "வழவழ கொழகொழ"என்று எண்ணெய் அப்பிக்கிடந்த மூன்றாம் அணி, இட்லிப்பொடி.தட்டிக் கேட்க ஆளில்லாமல் தட்டில் அங்குமிங்கும் அத்துமீறிக் கொண்டிருந்தது..



தனக்கு கிடைத்திருக்கும் சர்வதேச அந்தஸ்து பற்றி அறிந்தோ அறியாமலோ அமைதியாய் இருந்தன இட்டிலிகள். இரண்டு மெகா பிரபலங்கள் விருந்துண்ட போது இட்டிலியின் சர்வதேச மகத்துவம் அம்பலத்துக்கு வந்ததை உங்களில் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள்.

சென்னையில் இரண்டு பிரபலங்கள் விருந்துண்டு கொண்டிருந்தார்கள். ஒரு பிரபலம் தயிர்சாதத்துக்கு அந்த நட்சத்திர உணவகத்தில் அணிவகுத்து நின்ற ஊறுகாய்களின் அணிவரிசையை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். எல்லாம் பழக்க தோஷம்தான். குடியரசுத் தலைவராக இருந்து முப்படைகளின் கம்பீரமான அனிவகுப்பை பலமுறை பார்வையிட்டவரல்லவா அவர். ஆமாம் .அவரேதான் .அப்துல் கலாமேதான். பார்வையீடதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. மூன்று வகை ஊறுகாய்களை தட்டில் இட்டுக் கொண்டு வந்தார். அருகே இருந்த இன்னொரு பிரபலமோ இட்டிலியைப் போலவே வெள்ளை வெளேரென்று ஜிப்பா அணிந்திருந்தார். ஆமாம்,அவரேதான்.கவிஞர் வைரமுத்துவேதான்.

கலாமிடம் கவிஞர் சொன்னார்,"அமெரிக்காவில் இந்திய உணவுவகைகள் பற்றி ஆய்வு செய்து இரண்டு முக்கிய விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான உணவு எது, மிகவும் ஆபத்தான உணவு எது என்று கண்டறிந்திருக்கிறார்கள்". வெள்ளி ஸ்பூனால் தயிர்சாதத்தின் தலையில் ஆவக்காய்   ஊறுகாயின் சாந்தைத் தடவிக் கொண்டே கேட்டார் கலாம்.

"என்ன சொல்கிறார்கள்?". "இந்தியாவின் மிகப் பாதுகாப்பான உணவு, இட்டிலி என்கிறார்கள். அதில் எல்லா மினரல்களும் உண்டு, கார்போஹைட்ரேட் உண்டு, முக்கியமாக அவிக்கப்பட்டிருக்கிறது. எனவே பாதுகாப்பானது. மிகவும் ஆபத்தான உணவு, உங்கள் தட்டில் முற்றுகையிட்டிருக்கும் ஊறுகாய்" என்றார்.

"தெரியும்சார்! ஆனால் எப்போதாவதுதான் ஊறுகாய் எடுத்துக் கொள்வேன்' என்று சொன்ன கலாம்  கணநேரம் யோசித்து கருணை மனுக்கள் போல் ஊறுகாயை நிராகரித்து விட்டதாக நட்சத்திர உணவுவிடுதி வட்டாரங்களில் இன்றும் பேச்சு நிலவுகிறது.

இன்றும் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் இருந்து இந்தியா வருவதை அங்கே வசிக்கிற இந்தியர்கள் "ஊருக்கு" போவதாகத்தான் சொல்கிறார்கள். அங்கே மருத்துவர்களும் மற்ற நண்பர்களும் சொல்லி அனுப்பும் அறிவுரை என்ன தெரியுமா? "ஊரிலே போய்  ஹோட்டல்களிலே பசியாற    வேண்டி வந்தா இட்டிலி மட்டும் சாப்பிடுங்க !எல்லா இடங்களிலேயும் நம்பி சாப்பிட முடியாது". இதற்குக் காரணம் ஏதேதோ இடங்களில் எக்குத் தப்பாக சாப்பிட்டு வாரம் முழுவதும் வயிற்று வலியோடு போராடி விமானமேறிப் போய்விடுகிறவர்கள் பலர்.



அப்படி அறிவுரை கேட்டு வந்தும் அவஸ்தைப்பட்டுத் திரும்பிய ஒருவரிடம் மருத்துவர் கேட்டிருக்கிறார், "ஊரில போய் என்ன சாப்பிட்டீங்க??" பரிதாபமாகச் சொன்னாராம், "இட்டிலிதாங்க சாப்பிட்டேன்". அவர் வயிற்றை கார் ஹாரன்போல் கண்டபடி அழுத்திப் பார்த்துவிட்டு இன்னொரு கேள்வி கேட்டாராம், "இட்டிலிக்கு சட்டினி தொட்டுக்கிட்டீங்க?" 'ஆமாம்" என்றதும் அட்டகாசமாக சிரித்துவிட்டு ," ஊருக்கு போனா   ஹோட்டலிலேயும் சரி, வீட்டிலேயும் சரி, பசியாறும்போது சட்டினியைத் தொடாதீங்க. பச்சைத் தண்ணி ஊத்தி அரைக்கிறாங்க. அத்தனையும் கிருமிங்க" என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.என்ன அநியாயம்!! ஆனால் இந்தியர்களில் கூட பலர் உணவகங்களுக்குப் போனால் சட்டினி பகிஷ்கரிப்பு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்றும் அயல் நாட்டு நண்பர்கள் பலபேர் இட்டிலியை சாம்பாரில் கதறக் கதறக் குளிப்பாட்டி சாப்பிடுகிறார்கள்.கோவையின் புகழ்பெற்ற அன்னபூர்ணா கௌரிசங்கர் ஹோட்டலில் இட்டிலி என்று பொதுவாகச் சொன்னால் சாம்பாரில் நீந்தும் இட்டிலிகள்தான் வரும். திருச்சியிலிருந்து வந்த சந்துரு மாமா ஒருமுறை என்னிடம் சொன்னார். 'இட்டிலி கேட்டேன். ஒரு பிளேட் சாம்பார் வந்த்து. இட்டிலி எங்கேன்னு கேட்டேன். உள்ளே இருக்குன்னு பதில் வந்தது. மீன் பிடிக்க்ற மாதிரி ஸ்பூன்லே தேடித் தேடி சாப்ப்ட்டு வந்தேன்" என்றார். இத்தனைக்கும் அது மினி இட்டிலிகள் அறிமுகமாகாத காலம்.

கடவுளர் மீதும் அரசர்கள் மீது காதலுற்ற  பெண்களின் தாய் நிலையிலிருந்து ,பாடிய கவிஞர்கள் உண்டு. "நற்றாயிரங்கல்" என்றே இதற்கோர் இலக்கிய வகைமை உண்டு. ஆனால் இட்டிலியின் அம்மா நிலையிலிருந்து ஒரு கவிஞர் பாடியிருக்கிறார். அவர் ஒரு மகத்தான கவிஞர்.

"ராசாமக போலிருந்தே
நாலுபேரு பாத்து ஒன்னை
லேசா எண்ணிப் பேசலாச்சே பெண்மணி-ஒன்
நெஞ்சு கல்லா மாறிப்போச்சே கண்மணி!

வட்டில் எனும் குளந்தனிலே
 வாத்துதனைப் போல் மிதந்த
இட்டிலியே ஏனிளைத்துப் போனாய்-நீ
எந்தப்பயல் மீதுகாதல் ஆனாய்"

என்று பாடிய கவிஞர்தான் கே.சி.எஸ்.அருணாசலம் அவர்கள்.

இத்தனையும் இருக்க, இட்டிலி இந்தியப் பலகாரமே இல்லை என்றும் ஒர் இலக்கிய அறிஞர் அடித்துச் சொல்கிறார். அவர் பெயர்கூட, இ.சுந்தரமூர்த்திதான்.இந்தியாவில் பண்டங்களை வேகவைக்கும் பழக்கமே இல்லை என்றும் இராஜேந்திர சோழன் இந்தோனேஷியா பக்கம் படையெடுத்தபோது அங்கே இட்டிலியைத் தின்று பார்த்து இங்கே அந்தக் கலையை இறக்குமதி செய்தானாம். இட்டிலி செய்வது எப்படி என்று மக்களுக்கு விரிவாக விளக்க நேரமில்லாமல் "இட்டு அவி" "இட்டு அவி" என்று சொன்னதே  இட்டிலி என்றாகியதாய் இயம்புகிறார் இ.சுந்தரமூர்த்தி அவர்கள்.


தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராய் இருந்த அந்த அறிஞரின் இந்த ஆய்வுரை கேட்டு அரைகுறையாய் தமிழ் படித்த பண்டிதர் ஒருவர் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்.

"உணவை அவித்துத் தின்னும் பழக்கம் இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளாகவே உண்டு என்பதற்கு திருக்குறளிலேயே சான்று இருக்கிறது."

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்"

என்பது திருக்குறள்.

பொரியைக் கூட வாயில் போடும் போது வறுக்காமல் அவித்துத் தின்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள்" என்று விளக்கவுரை வேறு சொன்ன  அந்தப் பண்டிதருக்கு  ஏதோ விருது கொடுத்து அடக்கினார்கள்.

அடேடே! இட்டிலியைப் பற்றி பேசிக்கொண்டேயிருந்ததில் வந்த இட்டிலி ஆறிப்போனதை கவனிக்கவில்லை பாருங்கள்!! "சர்வர்! சூடா இன்னொரு பிளேட் இட்டிலி கொடுங்க!"