நவராத்திரி கவிதைகள்.............9

தெளிவு தந்தாள்ஒருநாள் கூத்துக்கு நான்வைத்த மீசையை
ஒவ்வொரு நாளும் ஒழுங்குசெய்தேன்
வரும்நாள் ஏதென்ற விபரம் இல்லாமல்
வாழ்வை நானாய் பழுது செய்தேன்
அருகில் இருப்பதை அலட்சியம் செய்துநான்
அங்கே பறப்பதற்கழுது வந்தேன்
திருநாள் மலர்ந்தது தெளிவு பிறந்தது
தாயே உன்னிடம் தொழுது வந்தேன்

வழியில் குத்திய கற்களை உதைத்தேன்
வைரம் அவையென்று தெரியலையே
பழியாய் விழுந்த பேச்சினில் சலித்தேன்
பழவினை அவையென்று புரியலையே
சுழல்கிற நதியில் படகெனப் போனேன்
துடுப்புகள் இரண்டும் இயங்கலையே
அழுதவன் விழிகளில் அம்பிகை தெரிந்தாள்
அதன்பின் இதயம் மயங்கலையே

ஏதோ ஒன்றை இயற்றிடத் தானே
இங்கேஎன்னை அனுப்பிவைத்தாள்
தீதோ நன்றோ எல்லாம் பார்த்து
திரும்புக மகனே எனவிடுத்தாள்
யாதோ என்வழி எங்கோ பயணம்
எல்லாம் அவளே முடிவுசெய்தாள்
வாதை தாங்கி வாடும் நேரம்
வந்தே சக்தி தெளிவுதந்தாள்பார்த்தவை எல்லாம் பாதை மலர்கள்
பறிக்க நினைப்பது நியாயமில்லை
சேர்த்தவை எல்லாம் செல்வமுமில்லை
சொந்தம் போலொரு மாயமில்லை
கூத்துகள் ஆடி மேடையில் விழுந்தேன்
காளியின் அருளால் காயமில்லை
வேர்த்துக் கிடந்தேன் செம்பட்டுச் சேலை
வந்து துடைத்தபின் சோகமில்லை