Saturday, October 20, 2012

நவராத்திரி கவிதைகள் .......6

வாராய் வாராய் 
            மஹாசக்தி...!


பூக்கள் இன்றைக்கு மலருகையில்-உன்
பொற்பதம் சேர்ந்திடத் தவித்திருக்கும்
தேக்கிய தேன்துளி யாவினிலும்-அந்த
தெய்வக் கனவு தெறித்திருக்கும்
பாக்கியம் செய்தோம் பராசக்தி-உன்
பொன்நவ ராத்திரி தொடங்கியது
ஏக்கம் அச்சம் சோர்வெல்லாம்-அட
எப்படி உடனே அடங்கியது

தாங்கிய சூலத்தின் முனைகளிலே-நீ
துணையென்னும் உறுதி மின்னுதம்மா
வாங்கிய வினைகளின் சுமைகளெல்லாம்-உனை
வழிபட வழிபடக் கரையுதம்மா
தூங்கிய பொழுதிலும் சலங்கையொலி-ஒரு
தூரத்தில் தூரத்தில் கேட்குதம்மா
மூங்கிலின் துளைவழி கசியுமிசை-உன்
மூச்சுக் காற்றெனப் பரவுதம்மா



ஆசனம் கொடுப்போம் மலர்தொடுப்போம்-ஓர்
ஆரத்தியெடுப்போம் நமஸ்கரிப்போம்
வாசனை தூபங்கள் வைத்திருப்போம்-நீ
வந்துவிட்டாய் என்று காட்டிவிடு
ஈசனின் பாகத்தில் இருப்பவளே-உன்
ஈடிணையில்லாக் கருணையிலே
நேசனின் துணையுடன் வந்துவிடு-நீ
நேரே நேரே காட்சிகொடு

ஏற்றிய தீபத்தின் அசைவினிலே-நீ
எழிலாய் அசைவது தெரிகிறதே
சாற்றிடும் தோத்திர வரிகளிலே-உன்
சீறடி பதிவது தெரிகிறதே
நேற்றின் வலிகள் இன்றில்லை-இனி
நாளை குறித்தொரு பயமில்லை
காற்றாய் மழையாய் வருபவளே-உன்
கால்நிழல் சேர்ந்தபின் குறையில்லை

பூசனைச் சடங்குகள் தெரியாமல்-நல்ல
புனித மந்திரம் உணராமல்
ஆசை மட்டும் வைத்திருந்தால்-மனை
ஆலயம் ஆக்கித் தருவாயே
பேசப் பேசத் திகட்டாத-நல்ல
பெருமைகள் கொண்ட பராசக்தி
ஓசையில்லாத் தென்றலென -நீ
உள்ளே வந்ததைப் பார்த்துவிட்டேன்

ஓரிடத்தில் நில்லாயோ-அடி
ஓங்காரத்தின் உட்பொருளே
யாரை அழைத்துக் காட்டுவதோ-நீ
இருப்பதை எவ்விதம் உணர்த்துவதோ
பேரும் ஊரும் இல்லாமல்-இந்தப்
பிரபஞ்சம் நிரம்பிய பூரணியே
வாராய் வாராய் மஹாசக்தி-என்
வாசல்கள் சிலிர்ப்பதைப் பார்த்துவிட்டேன்