Sunday, October 25, 2015

பன்முகங்கள்

 
ஒரு பாரதிக்கு தேசம் பிடிக்கும்
ஒரு பாரதிக்கு தெய்வம் பிடிக்கும்
ஒரு பாரதிக்கு காக்கை குருவி எல்லாம் பிடிக்கும்
ஒரு பாரதிக்கு எழுதுகோல் பிடிக்கும்
ஒரு பாரதிக்கு சிறுமை கண்டால் வெறிபிடிக்கும்
ஒரு பாரதிக்கு வறுமையிலும் வாழப் பிடிக்கும்..
இந்த எல்லா பாரதிகளையும் காளிக்கு ரொம்பப் பிடிக்கும்

Thursday, October 22, 2015

அந்த மூன்று பெண்கள்


 அந்த மூன்று பெண்களுக்கும்
  அன்புமட்டும் தெரியும்
அந்தமூன்று பெண்களாலே
அற்புதங்கள் நிகழும்
அந்தமூன்று பெண்கள் பார்க்க
அவதி யாவும் அகலும்
அந்த மூன்று பெண்களாலே
உலகம் இங்கு சுழலும்


கலைமகளின் கருணை கொண்டு
கல்வி கற்பான் சிறுவன்
அலைமகளின்ஆசிபெற்று
ஆட்சி கொள்வான் இளைஞன்
மலைமகளும் மனது வைத்தால்
மேன்மைகொள்வான் மனிதன்
விலையிலாத இவர்வரங்கள்
வாங்கியவன் தலைவன்


சாத்திரங்கள் இவர்கள்புகழ்
சாற்றிநிற்கும் நாளும்
ராத்திரிகள் ஒன்பதுமே
ரஞ்சிதமாய் ஜாலம்
மாத்திரைப் பொழுதுகூட
மறந்திடாமல் நாமும்
காத்துநிற்கும் அன்னையரை
கருத்தில்வைத்தால் போதும்


மங்கலங்கள் சூழ்கவென்று
மூவருமே அருள
இங்குமங்கும் எந்தநாளும்
இன்பமெல்லாம் நிறைய
சங்கடங்கள் அத்தனையும்
சடுதியிலே அகல
எங்கள் மூன்று அன்னையரே
எங்கள் இல்லம் வருக

Wednesday, October 21, 2015

பிரபஞ்சம் இவளால் வாழும்

 
சுழலுது சூலம் சுடுங்கனல் வேகம்
சுந்தரி சினங்கொண்ட கோலம்
மழுதொடும் தேவி மலைமகள் முன்னே
மகிஷன் விழுகிற நேரம்
தொழுதிடும் தேவர் துயரமும் தீர்வர்
தொல்லைகள் தீர்கிற காலம்
தழலெனச் சீறும் ரௌத்திரம் மாறும்
தாய்மையின் விசித்திர ஜாலம்

மர்த்தனம் என்றால் வதைப்பதா? இல்லை
மென்மை செய்வது தானே
அத்திரம் சத்திரம் ஆடிடும் நாடகம்
அரக்கனும் அருள்பெறத்தானே  
நர்த்தனத் திருவடி சிரசினில் பதிந்திட
நடுங்கிய அரக்கனும் விழுவான்
எத்தனை யுகங்கள் அன்னையின் பதங்கள்
ஏந்தும் பெருமையில் தொழுவான்

 சீற்றமும்சினமும்  ஜெகதீஸ்வரிக்கு
சிற்சில கணங்கள் தோன்றும்
கூற்றென குதிக்கும் குளிர்மலர் அடிகள்
கீழவன் தலைமேல் ஊன்றும்
ஆற்றல் தொலைந்தவன் அருளில் திளைப்பான்
அதுவே அவள்குணம் ஆகும்
நேற்றும் இன்றும் நாளையும் எங்கள்
நாயகி தயையே ஆளும்

நள்ளிருள் என்கிற நறவம் பருகிடும்
நங்கையின் ரௌத்திரம் மீறும்
வெள்ளக் கருணையில் வெகுளியும் வேகமும்
வருமொரு நொடியினில் ஆறும்
கள்ள மனத்தினில் கருணையின் வெளிச்சம்
குலவிட வினைகளும் தீரும்
பிள்ளைகள் பலவிதம் பெற்றவள் ஒரேவிதம்
பிரபஞ்சம் இவளால் வாழும்

முக்திச் சுடராய் சிரிப்பவள்


மேற்கே பார்க்கும் அமுத கடேசன்
முழுநிலா பார்ப்பான் தினம்தினம்
ஆக்கும் அழிக்கும் ஆட்டிப் படைக்கும்
அவள்தரி சனமோ சுகம் சுகம்
பூக்கும் நகையில் புதிர்கள் அவிழ்க்கும்
புதிய விநோதங்கள் அவள்வசம்
காக்கும் எங்கள் அபிராமிக்கு
கண்களில் காதல் பரவசம்


செக்கச் சிவந்த பட்டினை உடுத்தி
செந்தழல் போலே ஜொலிப்பவள்
பக்கத் திருந்து பட்டர் பாடிய
பதங்கள் கேட்டு ரசிப்பவள்
தக்கத் திமியென தாளம் கொட்டத்
தனக்குள் பாடல் இசைப்பவள்
முக்கண் கொண்டோன் மோகக் கனலாய்
முக்திச் சுடராய் சிரிப்பவள்


சின்னஞ்சிறிய சந்நிதி அதுதான்
ஜெகத்தின்   மூலக் கருவறை
மின்னல் எறியும் மந்திரவிழிகள்
மெல்லப் படுமோ ஒருமுறை
இன்னும் இன்னும் பிறவிகள் இங்கே
எடுக்கும் அவதிகள் எதுவரை
பொன்னெனும் மொழியால் பிரம்மனைக் கடிவாள்
பிறவிகள் தொடரும் அதுவரை


சிந்துர நிறத்தின் சிங்காரங்களை
சொல்லப் போமோ தமிழிலே
முந்திடும் கருணை முறுவல் கண்டபின்
மயக்கம் தங்குமோ மனதிலே
தந்தவள் அவளே தருபவள் அவளே
திடீரென வருவாள் கனவிலே
எந்த நேரமும் எதிர்ப்படு வாள் அவள்
எத்தனை எத்தனை வடிவிலே    

Tuesday, October 20, 2015

பைரவி பேரருள்






ஒய்யாரக் கண்களில் மையாடும் சாகசம்
ஒருநூறு மின்னல் வனம்
வையத்து மாந்தரை வாழ்விக்கும் அற்புதம்
வினைதீர்க்கும் அன்னைமனம்
கைநீட்டி ஆட்கொளும் கருணையின் உன்னதம்
காளியின் சாம்ராஜ்ஜியம்
நைகின்ற நெஞ்சோடு நலமெலாம் தந்திடும்
நீலியின் நவவைபவம்

பொன்மஞ்சள் பூச்சோடு பேரெழிலின் வீச்சோடு
பைரவி அருள்செய்கிறாள்
தென்றலின் வழியாக தெய்வீக மொழியாக
தயாபரி ஆட்கொள்கிறாள்
சின்னங்கள் நின்றூத சிவிகையதன் மேலேறி
சிங்கார உலாப்போகிறாள்
என்றென்றும் துணையாக ஏக்கத்தின் முடிவாக
எப்போதும் துணையாகிறாள்

தீவிரத் தன்மையாய் திகழ்லிங்க பைரவி
திருக்கோலம் அருட்கோலமே
தேவியின் சந்நிதி தேடினால் நிம்மதி
தேவைகள் ஈடேறுமே
ஓவியம் காவியம் உயர்தனிக் கலைகளின்
உயிரெல்லாம் அவள்ஜாலமே
மேவினள் ஈஷாவில் மேதினி ஈடேற
மேன்மைகள் நமதாகுமே

Sunday, October 18, 2015

பாற்கடல் தந்தாளாம்




அமுதம் பிறந்த அதேநொடியில்- அட
 அவளும் பிறந்தாளாம்
உமையாள் மகிழும் அண்ணியென- அவள் 
உள்ளம் மலர்ந்தாளாம்
சுமைகள் அகற்றும் கருணையினாள்- நல்ல 
சுபிட்சம் தருவாளாம்
கமலந் தன்னில் அமர்ந்தபடி- நம்
 கவலைகள் களைவாளாம்

 மாதவன் முகுந்தன் மணிமார்பில்- எங்கள் 
மலர்மகள் அமர்வாளாம்
கோதை ஒருத்தி குடிசையிலே- தங்கக்
கனிகளைப் பொழிந்தாளாம்
ஆதி சங்கரர் தோத்திரத்தில்- அவள்
 அகமிக மகிழ்ந்தாளாம்
பாதம் பதிக்கும் கருணையினால்- நல்ல 
பயிர்கள் வளர்ப்பாளாம்

உண்ணும் உணவில்அவளிருப்பாள்- நல்ல
 உறைவிடம் தருவாளாம்
எண்ணும் காரியம் ஈடேற -அவள்
 என்றும் அருள்வாளாம்
வண்ணப் பட்டாடை தனம் பெருக-அவள்
 வரங்கள் தருவாளாம்
கண்ணில் நிறையும் பேரழகி -மனம் 
கசிந்தால் கனிவாளாம்

பாலைத் திருடிய கண்ணனுக்கு- அவள்
 பாற்கடல் தந்தாளாம்
காலைவருடிக் காதல்செய்து -அந்தக்
 காரிகை மகிழ்ந்தாளாம்
வேலை சாடும் விழிமலர்ந்தே -அவள் 
வினைகள் களைவாளாம்
கோலங்கள் காட்டும் திருமகளே- நமை
 கடைக்கண் பார்ப்பாளாம்

Friday, October 16, 2015

எங்கள் மூலஸ்தானம்


காலத்தின் மடிகூட சிம்மாசனம்-எங்கள்
கவிவேந்தன் கோலோச்சும் மயிலாசனம்
கோலங்கள் பலகாட்டும் அருட்காவியம்-அவன்
கருத்தினிலே வந்ததெல்லாம் கிருஷ்ணார்ப்பணம்
நீலவான் பரப்பிலவன் நாதம்வரும்-நம்
நெஞ்சோடு மருந்தாகப் பாடம் தரும்
தாலாட்டும் மடியாக தமிழின்சுகம்-இங்கு
தந்தவனை கைகூப்பும் எங்கள் இனம்


சிறுகூடல் பட்டிவிட்டு சிக்காகோவிலே-அவன்
சிறகுதனை விரித்ததுவும் இந்நாளிலே
மறுமாசு இல்லாத மனக்கோவிலே-வாணி
மலர்ப்பதங்கள் வைத்ததுவும் அவன் நாவிலே
நறும் பூக்கள் உறவாடும் வனமாகவே-இங்கு
நம்கண்ண தாசனும் விளையாடவே
குறும்பான ஞானியென நடமாடியே-சென்ற
கவிவாணன் புகழிங்கு நிலையாகவே!


என்னென்ன சந்தங்கள் தந்தானம்மா-அவன்
இசையென்னும் தேரேறி வந்தானம்மா
பொன்னென்று மண்மிசையே பொலிந்தானம்மா-பல
புதையல்கள் அவனள்ளித் தந்தானம்மா
கன்னங்கள் பலதொட்டுக் கலந்தானம்மா-மதுக்
கிண்ணத்தில் காயங்கள் மறந்தானம்மா
என்றென்றும் நிலையாக இருப்பானம்மா-அவன்
இல்லாமல் என்போன்றோர் இங்கேதம்மா

பொய்யாத வான்முகில்


அவள்மடியில் ஒருவீணை அவள்தந்த ஸ்வரம் பாடும்
அவள் விழியில் மலர்கருணை அடியேனின் கவியாகும்
அவள் துகிலில் நிறைவெண்மை அது கலையின் மடியாகும்
அவள்வரையும் ஒருகோடு அதுகோலம் பலபோடும்

வாணியவள் வகுத்தபடி வையமிது சுழல்கிறது
பேணியவள் காப்பவையே பூமியிலே நிலைக்கிறது
காணிநிலம் கேட்டவனை கம்பனெனும் மூத்தவனை
ஏணியென ஏற்றியவள் எனக்கும்கூட இடமளித்தாள்

களிதொட்ட இசையெல்லாம் கலைமகளின் குரலாகும்
உளிதொட்ட கல்லையெல்லாம் உயிர்ப்பதவள் விரலாகும்
வளிதொட்ட நாசியிலே வரும்சுவாசக் கலைதந்தாள்
தெளிவுற்ற தத்துவங்கள் தேவதேவி அருள்கின்றாள்

பொய்யாத வான்முகிலாய் புவிகாக்கும் பேரரசி
கொய்யாத மலர்களிலும் கண்சிமிட்டும் பேரழகி
கையாலா காதவனை கவிஞனென வாழ்வித்த
மையாரும் வேற்கண்ணி மலரடிகள் தொழுகின்றேன்

பதில்தருவாள்






விரிவாய் கதைகள் பலபேச-அடி
வேறொரு தெய்வம் வாய்ப்பதுண்டோ
பரிவாய் கேட்டு பதில்பேச-அந்தப்
பரம சிவனுக்கு நேரமுண்டோ
திருவாய் மலர்வாள் பராசக்தி-அதில்
தீர்ந்து தொலையும் நம்கவலை
கருவாய்த் திரண்ட நாள்முதலாய்-நாம்
கண்டிருக்கின்றோம் தாயவளை

எந்தக் கணமும் நம்பின்னே-அவள்
ஏனோ ஏனோ தொடர்கின்றாள்
சந்திப்போம் எனத் திரும்புகையில்-அட
சடுதியில் ஓடி மறைகின்றாள்
வந்த படியே இருக்கின்றாள்-என
வீசி நடந்தால் தொல்லையில்லை
சந்தேகங்கள் வந்தாலோ-அந்தச்
சுந்தரி அதன்பின் வருவதில்லை

வெண்பனி மூடிய முகடுகளில்-அவள்
வெய்யில் கீற்றென விழுகின்றாள்
தண்ணெனக் குளிரும் வைகறையில்-அவள்
தாவரப் பச்சையில் சிரிக்கின்றாள்
மண்ணில் நதியென நடக்கின்றாள்-அலை
மோதிடும் பாறையில் தகிக்கின்றாள்
கண்ணில் நேராய் தெரிவதில்லை-ஆனால்
காட்சிகள் பலவிதம் கொடுக்கின்றாள்

நேற்றின் சுமைகளை  இறக்கச்சொன்னாள்-இந்த
நொடியினில் தன்னுடன் இருக்கச் சொன்னாள்
ஏற்றிய சுடரில் படபடத்தே –அவள்
என்னென்ன கதைகள் எனக்குச் சொன்னாள்!
மாற்றங்கள் நேர்கையில் மனதுக்குள்ளே –ஒரு
மெல்லிய துணிவாய் அவளெழுவாள்
தேற்றும் மழலைச் சொல்லாக –எந்தத்
திசையினில் இருந்தோ பதில்தருவாள்

தாக்குவதாகச் சொன்னவர்கள்-மெல்லத்
தளர்ந்து விழுவதைக் காட்டிடுவாள்
ஏக்கம் எழுகிற பொழுதெல்லாம்-அவள்
ஏதோ ஒருவழி காட்டிடுவாள்
கூக்குரல் கேவல்கள் பொறுப்பதில்லை-ஒரு
கண்ணீர்த் துளிக்கே கனிந்திடுவாள்
பாக்கிகள் வைத்துப் பழக்கமில்லை-என்
பவவினை முழுதாய் போக்கிடுவாள்   

Thursday, October 15, 2015

தேவியின் சிறுவிரல்






மண்ணில் முளைக்கும் எதுவும் நீ
 மனதில் துளிர்க்கும் கவிதை நீ 
விண்ணின் நீல விரிவில் நீ
 விடையில் தொடரும் கேள்வி நீ  
பண்ணில் பொதியும் மௌனம்நீ
 பரவும் காற்றின் பரிவும்நீ       
எண்ணில் எல்லாப் பொருளும் நீ 
எண்ணத் தொலையா எழிலும் நீ 

சூலம் ஏந்தும் கைகள்தான்
 சொக்கட்டானும் உருட்டுதடி      
காலம் உருட்டும் கைகள்தான்
 கவளம் உருட்டிப் போடுதடி 
ஆலம் உண்டோன் பாகத்தில்
 அமுதம் பூத்துச் சிரிக்கிறதே             
தூலம்  ஆடும் ஆட்டத்தை
 தூர நின்று பார்க்கிறதே

வெய்யில் வினைகள் விலகாதோ
 வெள்ளக் கருணை பரவாதோ 
 பொய்யில் தோய்ந்த என் பிழைகள்
 பைரவி நெஞ்சம் மறவாதோ 
 மையாய் மூடும் இருளின்மிசை
 மின்னல் வெளிச்சம் மருவாதோ      
ஐயோ எந்தன் உயிரெல்லாம் 
அம்பிகை பதத்தே மலராதோ

எத்தனை வேடங்கள் போடுவதோ
 எத்தனை பிறவிகள் வாடுவதோ 
  எத்தனை கருவறை மாறுவதோ
 எத்தனை கல்லறை ஏகுவதோ      
வித்தகி பேரருள் விளையாதோ 
வினையின் வேர்களைக் களையாதோ   
தத்தித் தவழ்பவன் நிமிர்ந்திடவே 
தேவியின் சிறுவிரல் நீளாதோ