சுழலுது சூலம் சுடுங்கனல் வேகம்
சுந்தரி சினங்கொண்ட கோலம்
மழுதொடும் தேவி மலைமகள் முன்னே
மகிஷன் விழுகிற நேரம்
தொழுதிடும் தேவர் துயரமும் தீர்வர்
தொல்லைகள் தீர்கிற காலம்
தழலெனச் சீறும் ரௌத்திரம் மாறும்
தாய்மையின் விசித்திர ஜாலம்
மர்த்தனம் என்றால் வதைப்பதா? இல்லை
மென்மை செய்வது தானே
அத்திரம் சத்திரம் ஆடிடும் நாடகம்
அரக்கனும் அருள்பெறத்தானே
நர்த்தனத் திருவடி சிரசினில் பதிந்திட
நடுங்கிய அரக்கனும் விழுவான்
எத்தனை யுகங்கள் அன்னையின் பதங்கள்
ஏந்தும் பெருமையில் தொழுவான்
சீற்றமும்சினமும் ஜெகதீஸ்வரிக்கு
சிற்சில கணங்கள் தோன்றும்
கூற்றென குதிக்கும் குளிர்மலர் அடிகள்
கீழவன் தலைமேல் ஊன்றும்
ஆற்றல் தொலைந்தவன் அருளில் திளைப்பான்
அதுவே அவள்குணம் ஆகும்
நேற்றும் இன்றும் நாளையும் எங்கள்
நாயகி தயையே ஆளும்
நள்ளிருள் என்கிற நறவம் பருகிடும்
நங்கையின் ரௌத்திரம் மீறும்
வெள்ளக் கருணையில் வெகுளியும் வேகமும்
வருமொரு நொடியினில் ஆறும்
கள்ள மனத்தினில் கருணையின் வெளிச்சம்
குலவிட வினைகளும் தீரும்
பிள்ளைகள் பலவிதம் பெற்றவள் ஒரேவிதம்
பிரபஞ்சம் இவளால் வாழும்