ஏதோ சொல்கிறது


எங்கோ கேட்கும் காலடி ஓசை
ஏதோ சொல்கிறது
இங்கும் அங்கும் அதிரும் சலங்கை
இரவை ஆள்கிறது
குங்கும வாசம் கமழ்கிற திசையில்
காட்சி மலர்கிறது
அங்கயற் கண்ணி ஆளும் பிரபஞ்சம்
 அவளால் சுழல்கிறது


எத்தனை உயிர்கள் உறங்கவைத்தாளோ
எங்கே மறைத்தாளோ
புத்தம் புதிதாய் உயிர்களைப்  படைத்து
பூமியில் இறைத்தாளோ
வித்தகி அவளின் விருப்பங்கள் தானே
விடியலென் றாகிறது
நர்த்தனம் புரியும் நளின மலர்ப்பதம்
நம்முடன் வருகிறது


பீடங்கள் ஆள்பவள் பீஜங்கள் எல்லாம்
புனிதத்தின் விதையாகும்
மூடங்கள் எரிக்கிற முச்சுடர் விழிகள்
முக்தியின் கதவாகும்
பாடல்கள் ரசிக்கிற பைரவி சந்நிதி
பக்தியின் கடலாகும்
தேடல்கள் அடங்கும் தேவியின் திருவடி
தவிப்புக்கு முடிவாகும்