விரிவாய் கதைகள்
பலபேச-அடி
வேறொரு தெய்வம்
வாய்ப்பதுண்டோ
பரிவாய் கேட்டு
பதில்பேச-அந்தப்
பரம சிவனுக்கு
நேரமுண்டோ
திருவாய் மலர்வாள்
பராசக்தி-அதில்
தீர்ந்து தொலையும்
நம்கவலை
கருவாய்த் திரண்ட
நாள்முதலாய்-நாம்
கண்டிருக்கின்றோம்
தாயவளை
எந்தக் கணமும்
நம்பின்னே-அவள்
ஏனோ ஏனோ தொடர்கின்றாள்
சந்திப்போம் எனத்
திரும்புகையில்-அட
சடுதியில் ஓடி
மறைகின்றாள்
வந்த படியே இருக்கின்றாள்-என
வீசி நடந்தால்
தொல்லையில்லை
சந்தேகங்கள் வந்தாலோ-அந்தச்
சுந்தரி அதன்பின்
வருவதில்லை
வெண்பனி மூடிய
முகடுகளில்-அவள்
வெய்யில் கீற்றென
விழுகின்றாள்
தண்ணெனக் குளிரும்
வைகறையில்-அவள்
தாவரப் பச்சையில்
சிரிக்கின்றாள்
மண்ணில் நதியென
நடக்கின்றாள்-அலை
மோதிடும் பாறையில்
தகிக்கின்றாள்
கண்ணில் நேராய்
தெரிவதில்லை-ஆனால்
காட்சிகள் பலவிதம்
கொடுக்கின்றாள்
நேற்றின் சுமைகளை இறக்கச்சொன்னாள்-இந்த
நொடியினில் தன்னுடன்
இருக்கச் சொன்னாள்
ஏற்றிய சுடரில்
படபடத்தே –அவள்
என்னென்ன கதைகள்
எனக்குச் சொன்னாள்!
மாற்றங்கள் நேர்கையில்
மனதுக்குள்ளே –ஒரு
மெல்லிய துணிவாய்
அவளெழுவாள்
தேற்றும் மழலைச்
சொல்லாக –எந்தத்
திசையினில் இருந்தோ
பதில்தருவாள்
தாக்குவதாகச் சொன்னவர்கள்-மெல்லத்
தளர்ந்து விழுவதைக்
காட்டிடுவாள்
ஏக்கம் எழுகிற
பொழுதெல்லாம்-அவள்
ஏதோ ஒருவழி காட்டிடுவாள்
கூக்குரல் கேவல்கள்
பொறுப்பதில்லை-ஒரு
கண்ணீர்த் துளிக்கே
கனிந்திடுவாள்
பாக்கிகள் வைத்துப்
பழக்கமில்லை-என்
பவவினை முழுதாய்
போக்கிடுவாள்