முக்திச் சுடராய் சிரிப்பவள்


மேற்கே பார்க்கும் அமுத கடேசன்
முழுநிலா பார்ப்பான் தினம்தினம்
ஆக்கும் அழிக்கும் ஆட்டிப் படைக்கும்
அவள்தரி சனமோ சுகம் சுகம்
பூக்கும் நகையில் புதிர்கள் அவிழ்க்கும்
புதிய விநோதங்கள் அவள்வசம்
காக்கும் எங்கள் அபிராமிக்கு
கண்களில் காதல் பரவசம்


செக்கச் சிவந்த பட்டினை உடுத்தி
செந்தழல் போலே ஜொலிப்பவள்
பக்கத் திருந்து பட்டர் பாடிய
பதங்கள் கேட்டு ரசிப்பவள்
தக்கத் திமியென தாளம் கொட்டத்
தனக்குள் பாடல் இசைப்பவள்
முக்கண் கொண்டோன் மோகக் கனலாய்
முக்திச் சுடராய் சிரிப்பவள்


சின்னஞ்சிறிய சந்நிதி அதுதான்
ஜெகத்தின்   மூலக் கருவறை
மின்னல் எறியும் மந்திரவிழிகள்
மெல்லப் படுமோ ஒருமுறை
இன்னும் இன்னும் பிறவிகள் இங்கே
எடுக்கும் அவதிகள் எதுவரை
பொன்னெனும் மொழியால் பிரம்மனைக் கடிவாள்
பிறவிகள் தொடரும் அதுவரை


சிந்துர நிறத்தின் சிங்காரங்களை
சொல்லப் போமோ தமிழிலே
முந்திடும் கருணை முறுவல் கண்டபின்
மயக்கம் தங்குமோ மனதிலே
தந்தவள் அவளே தருபவள் அவளே
திடீரென வருவாள் கனவிலே
எந்த நேரமும் எதிர்ப்படு வாள் அவள்
எத்தனை எத்தனை வடிவிலே