அமுதம் பிறந்த
அதேநொடியில்- அட
அவளும் பிறந்தாளாம்
உமையாள் மகிழும்
அண்ணியென- அவள்
உள்ளம் மலர்ந்தாளாம்
சுமைகள் அகற்றும்
கருணையினாள்- நல்ல
சுபிட்சம் தருவாளாம்
கமலந் தன்னில்
அமர்ந்தபடி- நம்
கவலைகள் களைவாளாம்
மாதவன் முகுந்தன் மணிமார்பில்- எங்கள்
மலர்மகள் அமர்வாளாம்
கோதை ஒருத்தி குடிசையிலே-
தங்கக்
கனிகளைப் பொழிந்தாளாம்
ஆதி சங்கரர் தோத்திரத்தில்-
அவள்
அகமிக மகிழ்ந்தாளாம்
பாதம் பதிக்கும்
கருணையினால்- நல்ல
பயிர்கள் வளர்ப்பாளாம்
உண்ணும் உணவில்அவளிருப்பாள்-
நல்ல
உறைவிடம் தருவாளாம்
எண்ணும் காரியம்
ஈடேற -அவள்
என்றும் அருள்வாளாம்
வண்ணப் பட்டாடை
தனம் பெருக-அவள்
வரங்கள் தருவாளாம்
கண்ணில் நிறையும்
பேரழகி -மனம்
கசிந்தால் கனிவாளாம்
பாலைத் திருடிய
கண்ணனுக்கு- அவள்
பாற்கடல் தந்தாளாம்
காலைவருடிக் காதல்செய்து
-அந்தக்
காரிகை மகிழ்ந்தாளாம்
வேலை சாடும் விழிமலர்ந்தே
-அவள்
வினைகள் களைவாளாம்
கோலங்கள் காட்டும்
திருமகளே- நமை
கடைக்கண் பார்ப்பாளாம்